செல்போனில் வாலிபர் மிரட்டல்- மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியிடம் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி உள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் சுண்டுப் பள்ளி மண்டலம் குருவப் பள்ளியை சேர்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரது மனைவி அருணா. தம்பதிக்கு ஜோதி என்ற மகள் இருந்தார். இவர் நாராயண வனம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடன் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் ஜோதி கல்லூரிக்கு செல்லாமல் அங்கேயே தங்கி இருந்தார்.
கல்லூரிக்கு சென்ற மாணவிகள் கல்லூரி முடிந்து மாலை மீண்டும் அறைக்கு திரும்பினர். அப்போது அங்குள்ள அறையில் ஜோதி மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
இதுகுறித்து கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் மாணவி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம் நாராயண வனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த அறையில் ஜோதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர் உருக்கமான தகவல்களை எழுதியுள்ளார். கடிதத்தில் உள்ள விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியிடம் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி உள்ளார். அவர் ஜோதியை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஜோதி அழுது கொண்டே இருந்ததை பார்த்ததாக அவருடன் தங்கி உள்ள சக மாணவிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.