சிறப்புக் கட்டுரைகள்

முத்திரிகிணறும், அன்புக்கொடியும்

Published On 2024-12-28 09:09 GMT   |   Update On 2024-12-28 09:09 GMT
  • அய்யாவின் அதிசய கிணற்று நீரின் மகத்துவம் அறிந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் மட்டுமின்றி, மேட்டுச்சாதியினரும், அக்கிணற்று நீரை அருந்த வரலாயினர்.
  • அன்பின் வழியே உயிர்நிலையை கண்ட ஆன்றோர் அன்பையே தெய்வமாகப் போற்றினர்.

சூழவணியாய் சுற்று மதில் போலே நீளவரங்கு வைத்து நெருங்கப் புரைகள் வைத்து வைத்தோர் திசையில் வாயிலொன்றாக விட்டு குடியிருப்பு மனைகள் அமைத்து சமதர்ம குடியிருப்பு ஒன்றினை முட்டப்பதியில் சுவாமிகள் அமைத்தார். சுவாமிகள் அமைத்த குடியிருப்பு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது. மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, அவர்களிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் அறிவுறுத்தி நின்றது. தூய்மையையும், சுகாதாரத்தையும் வலியுறுத்தியது. சுவாமிகளின் சமத்துவப் பணி பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சந்தடியின்றி அமைதியாக அரங்கேறியது.

முத்திரிக்கிணறு

சுவாமிகள் தனது சொந்த ஊரில் கிணறு ஒன்றை ஏற்படுத்தி அனைத்து மக்களும் எவ்வித வேறுபாடுமின்றி அக்கிணற்று நீரினை பயன்படுத்திடச் செய்தார். அக்கிணற்றினை முத்திரிக்கிணறு என சுவாமிகள் வழங்கினார். அக்கிணற்றினை மக்கள் ஓர் அதிசயக்கிணறு எனவே கருதினர். தீண்டாமை நோயில் சிக்கித் தவித்த மக்களுக்கு சுவாமிகள் வழங்கிய அருமருந்தே முத்திரிக்கிணறாகும். பிறப்பின் வழி நின்று உயர்வு, தாழ்வு கற்பித்த சமுதாயத்திற்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் இப்புனித கிணறு மூலமாக சுவாமிகள் புகட்டினார். எல்லா பிரிவு மக்களும் ஒன்றுபட்டு வாழவும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து செயல்படவும் சுவாமிகள் இக்கிணற்றின் வாயிலாக முயற்சி மேற்கொண்டார்.

கிணறுகள், குளங்கள் போன்றவைகள் சாதிமுறையின் கொடூரத்தன்மையினை வெளிக்காட்டுவதாக விளங்கின. யாவர்க்கும் பொதுவாக இருக்க வேண்டிய கிணறு, குளங்கள், மேட்டுச்சாதியாரின் ஏகபோக உரிமையாக இருந்தன. நீர்நிலைகளில் தீர்த்தத்துறைகள் ஒடுக்கப்பட்டோரின் வருகையை அனுமதிக்கவில்லை. சமத்துவ நெறிக்கு சவாலாக கிணறு, குளம், தீர்த்தத்துறைகள், அமைந்திருப்பதை கண்ணுற்ற சுவாமிகள் மாற்று ஏற்பாட்டினை செய்ய முன் வந்தார். சுவாமிகள் உருவாக்கிய முத்திரிக்கிணறு மக்களுக்கு முக்தி அளிப்பதாய் அமைந்தது. எவ்வித வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் அக்கிணற்று நீரைப் பருகிய தன்மை குறித்து அகிலம் பெருமைபடக் கூறுகிறது.

"பதிணெண்சாதிகளும் பண்பாய் ஒரு தலத்தில்

விதிவந்ததென்று மேவிக் குலாவியிருந்தார்

மேவிக் குலாவி மிகவே ஒரு தலத்தில்

ஆவினீருண்டு அகமகிழ்ந்தார் அன்போரே"

ஒரு வீட்டு கிணற்றினை பிறிதொரு வீட்டார் பயன்படுத்தினால் தீட்டுப்பட்டு விடும் என்று கருதிய மேட்டுக்குடி பிற்போக்கு வாதிகளுக்கு பாடம் புகட்டும் விதமாக, எல்லோரும் ஓர் நிறை என்ற சமூக நீதியினை இக்கிணறு வாயிலாக சுவாமிகள் செயல்படுத்தினார். எல்லா பக்கங்களில் இருந்தும் திரள்திரளாக மக்கள் திரண்டு வந்து, முத்திரிக்கிணற்று நீரை குடித்து, குளித்து, தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சமையல் செய்து அய்யாவுடன் அமர்ந்துண்டு இன்புற்று திரும்பினர். அய்யா தன் மக்களுக்கு செய்த தர்ம வைத்தியத்தில் முத்திரிக்கிணற்று நீர் பயன்பட்ட பாங்கினை அகிலம்

"மருந்தாக தண்ணீர் மண் ஈந்து

வைத்தியங்கள் செய்ததுவும்...

எனவும்,

...தொல்புவியில் உள்ளோர்க்கு

தண்ணீரால் எந்த சர்வ வியாதி முதல்

மண்ணில் உள்ளோர் யார்க்கும் வாய்த்த

தர்மமாகவே தான் நோய் தீர்த்து..."

எனவும் குறிப்பிடுகின்றது. அய்யாவின் வைத்திய சேவையில் முத்திரிக்கிணற்று நீர் அருமருந்தாக பயன்படும் விதம் கண்டு, மக்கள் முத்திரிக்கிணற்று நீரை ஆவின்பாலெனவே எண்ணிக் குடித்து மகிழ்ந்தனர். இதனை அருள் நூல்

"அதிசயங்கள் வளரும் அரிய

கிணற்றின் பாலை எவரும்

குடிக்கிறாரே சிவனே அய்யா"

என்று கூறுகின்றது.

அய்யாவின் அதிசய கிணற்று நீரின் மகத்துவம் அறிந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் மட்டுமின்றி, மேட்டுச்சாதியினரும், அக்கிணற்று நீரை அருந்த வரலாயினர். 'பிறர் தீண்டா ஈன சாதிகள் கோதிகுடிக்கும் நீரினை நம் மக்களும் கோதிக் குடிக்கின்றார்களே என மனம் குமுறிய மேட்டுக்கு டியார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பலனளிக்காமல் போகவே முத்திரிக்கிணறு நீரில் விஷம் கலந்தனர்.

"நஞ்சிட்ட பாலை மக்கள்

நற்பால் என்றள்ளி உண்ண

நற்பாலாய் இருந்ததையோ"

என்று நஞ்சிட்ட பாலும் நற்பாலாய் இருந்த விதத்தினை அருள் நூல் உரைக்கின்றது. அய்யாவின் முத்திரிக்கிணறு மக்கள் உடல்நோயை மட்டும் தீர்த்திடவில்லை. சமுதாயத்தை தொற்றிவிட்ட தீண்டாமை நோயையும் அகற்றி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உன்னத கோட்பாடுகளை உணர்த்தி, மக்கள் ஒரே சமூகமாக வாழ வழிகாட்டியது. இன்றும் பல்வேறு இடங்களில் இருந்து சுவாமிகளை வழிபடவரும் அன்பர்கள் முத்திரிக்கிணற்றில், சாதி வேறுபாடின்றி, ஒன்றாய் ஒருமித்து நீராடியும், நோய் நீங்கிச் செல்வதுமான காட்சி கண்கொள்ளா காட்சியாகவே திகழ்கின்றது. அய்யாவின் சமதர்ம நெறிக்கு சான்றுரைப்பதாக இன்றும் இக்கிணறு விளங்குகின்றது.

அன்புக்கொடி

அன்பின் வழியே உயிர்நிலையை கண்ட ஆன்றோர் அன்பையே தெய்வமாகப் போற்றினர். அகிலம் சிறக்க வந்த அய்யாவும் அன்பு வழி ஒன்றே உலகம் முழுவதையும் இன்ப வாழ்வில் திழைக்கச் செய்யும் ஆற்றல் பெற்றது என்று நன்குணர்ந்தார்.

"அறிந்த பல சாதி முதல்

அன்பொன்றுக்குள்ளானால்

பிரிந்து மிக வாழாமல்

பெரியோராய் வாழ்ந்திருப்பார்"

என்று அனைத்து மக்களையும் அன்பெனும் குடைக்குள் வாழ வேண்டினார். தனது இயக்கத்திற்கு அன்புக்கொடி ஏற்றி, தன்னை பின்பற்றும் மக்களை அன்புக்குடி மக்கள் என்று வழங்கினார். அய்யாவின் வாழ்க்கைப் பயணமானது அன்பு அழைத்துச்சென்ற புனித பயணமாகும். அகிலம் அய்யாவின் வாழ்க்கையினை அறிமுகப்படுத்துகையில்,

"அன்பு பார்த்தெடுத்து

ஆளடிமைக் கொண்டது"

எனவே அறிவிக்கின்றது.

அனைத்து மக்களும் அன்பால் பிணைக்கப்பட்டு, ஓர் ஒன்றுபட்ட சமுதாயம் மலர வேண்டும் என்பதில் அய்யா மிக்க நாட்டம் கொண்டிருந்தார். அன்பின் வழியாக மக்கள் பிணைக்கப்படின், ஒப்பிலா சமூகம் உதயமாகிடும் என்ற உயரிய எண்ணத்தில் "அன்பு குடி கொண்ட மக்கள்" என்று ஏற்றி கூறினார். தன் அன்போர்க்கு அறிவுரை வழங்குகையில் கூட "என் பெயர் சொல்லி யாதொருவர் வந்தாலும் 'அன்போடு' அவரை ஆதரிக்கும் மக்களே எனக்குரியவர்கள்" என அறிவுறுத்தினார். சமய வாழ்வில் பூசை, புனக்காரங்களை கைவிடுமாறு வலியுறுத்திய சுவாமிகள் ஒரு

'அன்பு' மலரெடுத்து

அனுதினமும் பூசை செய்வாய்

என்று அன்பால் இறைவனுக்கு பூசை செய்யுமாறு பணித்திட்டார்.

அன்பின் வலிமையை பறைசாற்றும் விதமாக தனது இயக்கத்திற்கு அன்பு கொடியை ஏற்றினார். அன்புக்கொடி காவி நிறத்தில் அமைந்துள்ளது. கொடியின் நீள, அகலங்கள் முறையே மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நீளவாக்கில் நுனிப்பகுதியில் மத்தியில் இருந்து நடுப்பக்கம் ஒருபங்கு நீளத்தில், இரு நுனியில் இருந்தும் முக்கோண வடிவில் வெளி அமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பகுதியின் நடுவில் ஒற்றை நாமம் தீபவடிவில் தூய வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. காவிநிறம் தியாகத்தையும், வெண்மை நிறம் தூய்மை, அன்பு, அமைதி ஆகியவற்றையும், தீபச்சுடர், மெய்யறிவு, ஈகை, நீதி ஆகியவற்றையும் அறிவுறுத்து கின்றது. ஒளிச்சுடராய் திகழும் பரம்பொருள் ஒன்றே என்ற உண்மையினை நாமத்தின் ஒருமை காட்டுகிறது.

கலிமாசற்ற தூய்மையான உள்ளத்தில் தெய்வீக ஒளியினை காண இயலும் என்பதை நாமத்தின் வெண்மை குறிப்பிடுகிறது. அய்யாவின் சீர்திருத்த இயக்கம் நடைபெற்ற அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்நாட்டின் வட பகுதியில் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அறநெறி இயக்கம் கண்ட அருட்பிரகாச வள்ளலார் (1823-1874), தனது இயக்கத்திற்கு தனிக்கொடி கொண்டிருந்த நிகழ்ச்சியினை பற்றி ஊரன் அடிகள் முன்னைய ஞானிகள் எவரும் தம் கொள்கைக்கு தனிக்கொடி கண்டதில்லை. அடிகள் ஒருவரே தமது மார்க்கத்திற்கு தனிக்கொடி கண்டார்கள் என்று குறிப்பி ட்டுள்ளார். மஞ்சள் வெள்ளை நிறத்திலான சன்மார்க்க கொடியினை வள்ளலார் 1873-ம் ஆண்டில் வடலூருக்கு தெற்காக இரண்டு கல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்திருந்த தனது சித்தி வளாகத் திருமாளிகையில் தான் முதன்முதலாக ஏற்றினார். ஆனால் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அய்யா தனது இயக்கத்திற்கு அன்புக்கொடி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்க க்கொடி கண்ட மகான்களுள் வள்ளலாருக்கு முன்னோடியாக அய்யா திகழ்கின்றார். அவர் ஒழுக்கம் கண்டி ப்புக்கு பெயர் போன நிழல் தாங்கல்களையும் அமைத்துள்ளார்.

இதனை அடுத்த தொடரில் காண்போம்.

Tags:    

Similar News