வாழ்வை எளிதாக்கிய மாமனிதர்- காசூமா ததேய்ஷி
- இளமையில் குறும்புக்காரராக இருந்த ததேய்ஷி நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொண்டார்.
- ‘என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. அதற்குப் பதில் அதை நான் எப்படிச் செய்வது’ என்று பார்.
பழைய காலம் போல வங்கியில் கியூ வரிசையில் நின்று காசோலையைக் கொடுத்து பணத்தை வாங்குவது போய், நினைத்த நேரத்தில் நமக்கு மிக அருகில் உள்ள இடத்தில் உள்ள பூத்துக்குப் போய் ஒரு கார்டைச் செருகி வேண்டுமென்ற பணத்தை நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள வழி செய்யும் ஏ.டி.எம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினைப் பெருமளவில் உருவாக்க வழி வகுத்தவர் யார்?
ஆரோக்கியம் பெற ஏராளமான எலக்ட்ரானிக் கண்காணிப்பு சாதனங்களைப் பெருமளவில் தரத்துடன் உற்பத்தி செய்ய வழி வகுத்தவர் யார்? இவற்றை விட ஊனமுற்றவருக்காக வியத்தகும் சேவையைச் செய்தவர் யார்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் காசூமா ததேய்ஷி என்பது தான்!
பிறப்பும் இளமையும்: ஜப்பானில் உள்ள குமாமோடோ என்ற நகரில் 1900ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி குமானோசுகே - ஐ ததேய்ஷி தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் காசூமா ததேய்ஷி. இந்தக் குடும்பம் பாரம்பரியமாக ஜப்பானியர் பயன்படுத்தும் கோப்பைகளைத் தயாரித்து வந்தது. இவைகள் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டு வந்தன.
1908ம் ஆண்டு மார்ச் 26ம் நாள் ததேய்ஷியின் தந்தை மறைந்தார். உடனே குடும்பத்தின் வியாபாரம் குறைய ஆரம்பித்தது. ததேய்ஷியின் தாயார் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பப்பள்ளியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாலும் அவர் குடும்பத்தின் நிலைமையைக் கருதி செய்தித்தாள்களை விநியோகிக்க ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ததேய்ஷியின் பாட்டி குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதோடு அவருக்கு ஒழுக்கம், விஸ்வாசம், சுதந்திரமாக இருத்தல் போன்ற நற்பண்புகளை ஊட்டினார்.
இளமையில் குறும்புக்காரராக இருந்த ததேய்ஷி நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொண்டார். 'இளமைக்கால அனுபவங்கள் பின்னால் எனக்குப் பெரிதும் உதவியது' என்றார் அவர்.
டிரவுஸர் பிரஸ்: ஆரம்பகால தொழில்நுட்பப் படிப்பை குமாமோடோ தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் துறையில் முடித்துப் பட்டம் பெற்ற அவர் ஹையாகோ பிரீபெக்சுரல் அரசு நிறுவனத்தில் மின்னியல் பொறியாளராக வேலை பார்க்கத் தொடங்கினார். அவரது நண்பர் ஒருவர் அவரை இண்டக்ஷன் டைப் ரிலேயைத் தயாரிக்கத் தூண்டினார். இது அவருக்கு மின் சாதனங்களைத் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தது.
1929-ல் அமெரிக்காவில் வால் மார்ட் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இது ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது. ததேய்ஷி தனது ராஜிநாமாவைச் சமர்ப்பித்து தனியாகத் தொழிலைத் தொடங்கினார்.
முதலில் டிரவுஸர் பிரஸ் ஒன்றை அவர் தயாரித்தார்.டிரவுஸர் பிரஸ் என்பது நாம் அணியும் சூட்டில் உள்ள சுருக்கங்களை மின்சார இயக்கத்தால் நீக்கும் மின் சாதனமாகும்.
பின்னர் 1932ல் எக்ஸ் ரே விற்பனையாளர்காக இருந்த தனது நண்பரின் தூண்டுதலால் எக்ஸ் ரே மெஷினுக்கான டைமர் ஒன்றைத் தயாரித்தார்.
தனது தொழில் வளர்ந்து வருவதை உணர்ந்த அவர் ஒஸாகா நகரில் உள்ள ஹிகஷினோடா என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினார். 'ததேய்ஷி எலக்ட்ரிக் மானுபாக்சரிங் கம்பெனி' என்று ஆரம்பிக்கப்பட்ட அது உலகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமான ஓம்ரான் நிறுவனமாக உயர்ந்தது.
ஓம்ரான் கார்பொரேஷன்: கியோடோ நகரில் உள்ள ஒரு பகுதிக்கு ஓமுரோ என்று பெயர். அதிலிருந்து ஓம்ரான் என்ற வார்த்தை உதித்தது. இயந்திரங்கள் தனது வேலையைச் செய்யட்டும்; மனிதனோ இன்னும் அதிகம் படைப்பாற்றலைச் செய்யட்டும்' என்றார் ததேய்ஷி. எல்லா சாதனங்களையும் தானியங்கி முறையில் அவர் உருவாக்க ஆரம்பித்தார். ஏடிஎம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினை முதன்முதலில் பெருமளவில் அவர் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். ஒரு கார்டைச் செருகி மெஷினிலிருந்து பணத்தை எடுப்பதைக் கண்ட நடைமுறையை உலகமே முதலில் பார்த்து வியந்தது. இப்போது இது சகஜமாக ஆகி விட்டது. அவரது இன்னொரு நிறுவனமான ஓம்ரான் ஆயில்பீல்ச் அண்ட் மரைன் என்ற நிறுவனம் ஏசி மற்றும் டிசியால் இயங்கு, சாதனங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. 120 நாடுகளில் ஓம்ரான் தனது தயாரிப்புகளை இப்போது வழங்கி வருகிறது.
வீட்டில் உபயோகப்படுத்தப்படும் சாதனங்களையும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய கண்காணிப்பு சாதனங்களையும் ஓம்ரான் தயாரிக்க ஆரம்பித்தது. இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவிகள், டிஜிடல் தெர்மாமீட்டர், பாடி காம்போஸிஷன் மானிடர், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் உள்ளிட்ட ஏராளமான சாதனங்கள் இந்த தயாரிப்பில் அடங்கும்.
யடாகா நகாமுரா என்ற டாக்டர் ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்ஸில் போட்டிகள் முடிந்த பின்னர் ஜப்பான் வீரர்கள் மட்டும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்பதைக் கண்டார். வருத்தம் கொண்டார். தனது மனப்பான்மை போலவே உள்ள ததேய்ஷியுடன் இணைந்து அவர் 1972-ல் ஒம்ரான் டையோ என்ற நிறுவனத்தையும் 1985-ல் ஓம்ரான் டையோ எலக்ட்ரிக் கம்பெனி லிமிடட் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். அவர்களது ஒரே கொள்கை: "தர்மம் அல்ல; வாய்ப்பு தான்" (Not a Charity but a Chance). ஊனமுற்றோருக்கான விசேஷ சாதனங்களை இந்த நிறுவனங்கள் தயாரித்தன.
ஊனமுற்றோருக்கு நல் வாழ்வு: உலகின் உன்னதமான மனித குல சேவை ஒன்றைச் செயலில் காட்டியவர் காசூமா ததேய்ஷி.
உலகில் உள்ள நாடுகளில் ஐரோப்பாவில் 14 சதவிகிதமும், 12 சதவிகிதம் அமெரிக்காவிலும் ஜப்பானில் 4 சதவிகிதமும் உடலில் குறை உள்ளோர் வாழ்கின்றனர்.
கியோடா நகர்புற எல்லையில் இருக்கும் அவரது தொழிற்சாலையில் ஒரு அரிய காட்சியைக் காண்பவர் வியந்துபோவார்கள்.
உடல் ஊனமுற்றவர்களையும் மனதளவில் மன வளர்ச்சி குன்றியவர்களையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைக்கவே முனையும். அவர்களைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய பொதுவாக தொழில் அதிபர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் ஓம்ரான் நிறுவனரான ததேய்ஷி படைப்பாற்றல் திறனுடன் அதி நவீன தொழில்நுட்பங்களை இந்த ஊனமுற்றவர்களுக்காகவும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காகவும் உரிய முறையில் மாற்றி அமைத்தார்.
சிஸ்டம்ஸ் தியரி என்ற தொழில்நுட்பக் கொள்கையானது வெவ்வேறு பாகங்கள் ஒருங்கிணைந்து எப்படி ஒரு முழு பொருளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்கிறது. சைபர்னெடிக் எஞ்ஜினியரிங் என்ற தொழில் நுட்பமும் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே ஒரு புதிய தொடர்பை உருவாக்கும் தொழில்நுட்பமாகும்.
ஆக இந்த தொழில்நுட்பங்களை நன்கு அறிந்து கொண்ட ததேய்ஷி உடல் ஊனமுற்றவர்கள் கூட சிக்கலான அசெம்பிளி லைனில் திறம்பட வேலை பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அவர்கள் திறனுக்கு ஏற்றபடியும் உடல் வலிமைக்கு ஏற்றபடியும் அவர் இயந்திரங்களைத் தயாரிக்கச் செய்தார். அவர்கள் எவ்வளவு திறன் உடையவர்கள் என்பதை நன்கு கணித்து மீதி திறனை இயந்திரங்களே செய்ய உரிய வழி வகைகளை அவர் உருவாக்கினார்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த வேலையை நிச்சயம் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
ஓம்ரான் சன் ஹவுஸ் தொழிற்சாலையில் உள்ள அசெம்பிளி லைனில் உள்ள இயந்திரங்கள் உடல் ஊனமுற்றோர் அமர்ந்திருக்கும் வீல் சேர் அளவு கீழே இறங்கி வரும். ஒரு கையை இழந்த ஒருவர் இன்னொரு கையால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்காக கருவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.
உடல் வலுவே இல்லாத ஒரு பெண்மணி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு ஒரு பாக்கேஜிங் மெஷின் உருவாக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இலேசாக தன்னிடம் உள்ள சிறு பெட்டியை உள்ளே தள்ளி விட அந்த பாக்கேஜிங் அதை ஏற்றுக் கொண்டு மிக வேகத்துடன் தன் உள்ளே இழுத்துக் கொள்ளும்.
தொழிற்சாலையில் உள்ள அனைத்து விளக்குகளையும் லிப்டுகளையும் இவர்கள் தங்கள் வீல் சேரிலிருந்தே இயக்கலாம்.
அவர்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுத்து கண்ணியமாகவும் பிறர் மதிக்கும் படி மரியாதையுடன் வாழவும் அவர் வழி வகை செய்தார்.
உடல் ரீதியாக குறைகள் உள்ளவர்கள், மன ரீதியாக குறைகள் உள்ளவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு குறைகள் உள்ளவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஓம்ரான் நல்ல வாய்ப்புகளையும் பயிற்சியையும் தந்தது.
பெரிய வணிக வியாதி: ஒரு நிறுவனம் வளர்ந்து வரும் போது அங்கு பிக் பிசினஸ் டெலிஸ் எனப்படும் "பெரிய வணிக வியாதி" என்று ஒன்று உருவாகி நிறுவனத்தின் கட்டுக்கோப்பை சிதைக்கச் செய்வதைக் கண்ட ததேய்ஷி தனது பெரும் நிறுவனத்தைப் பல பகுதிகளாகப் பிரித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய ஒரு மேலாளரை நியமித்தார். அவர்கள் கம்பெனியின் தலைவர் போல இருக்க வேண்டும் என்று அவர் உணர்த்தினார். நிறுவனத்தை மிகச் சிறப்பாக நடத்த உள்ள வழிமுறைகளை அவர் சுட்டிக் காட்டினார்.
உற்பத்திப் பிரிவே தொழிற்சாலைக்கு இதயம் போன்றது என்பதால் அங்கு மதிய இடைவேளையின்போது முதலில் தொழிலாளர்களுக்கே உணவு முதலில் பரிமாறப்படும். கடைசியில் தான் மேலாளர்கள் சாப்பிடலாம். இது போன்ற பல சிறப்பு விதிகள் தொழிலகத்தை மிக அழகுற நடத்த வழி வகுத்தது.
"உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல விளைவானது நிறுவனத்தில் ஏற்பட வேண்டுமென்றால் அது நிச்சயம் நடைபெறும் என்பதற்கான நல்ல சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்" என்று அடிக்கடி அவர் கூறுவார்.
ததேய்ஷி எழுதிய நூல்: ததேய்ஷி 'தி எடர்னல் ஸ்பிரிட் ஆப் எண்டர்பிரெய்னர்ஷிப்' என்ற நூலை 1985ல் எழுதினார். இது சீன, ரஷிய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் விற்பனையைக் கண்ட நூலாக ஆனது.1991ல் ததேய்ஷி தனது 91ம் வயதில் மறைந்தார்.
பொன்மொழிகள்: முக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் வணிகமானது சமூகத்தில் ஒரு மதிப்பை உருவாக்க வேண்டும்.
ஒரு நிறுவனம் சமூகத்திற்கு லாப நோக்கில் அல்லாமல் பெரிய அளவில் நல்லனவற்றை வழங்கும் போது அது மிக்க சக்தி வாய்ந்ததாக ஆகிறது.
'என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. அதற்குப் பதில் அதை நான் எப்படிச் செய்வது' என்று பார். முயற்சி செய்து அதைச் செய்து முடிக்கும் வழியைப் பார்.
முதலில் முயற்சி செய் என்பதே மந்திரம்!
உலகம் வியக்கும் ததேய்ஷியின் வாழ்க்கைத் தத்துவமே மொத்தம் மூன்றே வார்த்தைகளில் அடங்கியுள்ளது.
"முதலில் முயற்சி செய்!" என்பது தான் அந்த மூன்று வார்த்தை மந்திரமாகும்!
அன்றாடம் ஆரோக்கியம் சம்பந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களை வீட்டில் உபயோகிக்கும் போது நாம் மனதிற்குள் நன்றி சொல்ல வேண்டிய ஒரு பெயர் காசூமா ததேய்ஷி!