சிறப்புக் கட்டுரைகள்

21-ந்தேதி உலக சேலைகள் தினம்- புடவையோ புடவை!

Published On 2024-12-19 09:04 GMT   |   Update On 2024-12-19 09:04 GMT
  • ‘உலக புடவை தினம்’ என்பது புடவைக்கு கொடுக்கப்படும் மரியாதை, அங்கீகாரம்.
  • புடவையின் சிறப்பு காலத்திற்கும் நிற்கும் என்பதே உண்மை.

புடவை... இது ஒரு சாதாரண துணி அல்ல. அழகுபடுத்தப்பட்ட துணி மட்டும் அல்ல. கண்ணைப் பறிக்கும் வண்ண நிறங்களும், டிசைன்களும் கொண்டது மட்டுமல்ல.

இது கலாச்சாரத்தின் பொக்கிஷம். பாரம் பரியத்தின் அடையாளம். ஏனோ தெரியவில்லை, இதற்கு ஒரு மென்மையும், கருணையும், கம்பீரமும், மரியாதையும் உண்டு. இது பெண்களின் ஆடை. தென் ஆசியா, வங்களாதேசம், நேபாளம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான்-இங்கெல்லாம் புடவை என்பது பழமையான, மதிப்பான ஆடையாகும்.

'பெண்மையின் அடையாளம் அழகு

நேர்த்தி மிக்க ஆடை புடவை'

'உலக புடவை தினம்' என்பது புடவைக்கு கொடுக்கப்படும் மரியாதை, அங்கீகாரம். இந்த நாள் புடவையின் அழகு, ஸ்டைல் பற்றி மட்டுமல்ல கலாச்சாரத்தின் ஆணி வேரினை போற்றுவதாகும். இந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றது. நம் பெண்களின் மரபுரிமை சொத்தாகின்றது. புடவை விழா சமீப காலமாகத்தான் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. என்றாலும் புடவையின் சிறப்பு காலத்திற்கும் நிற்கும் என்பதே உண்மை.


புடவையின் சரித்திரம் சுமார் 5,000 வருடங்களுக்கும் பழமையானது. என்றாலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நிரூபணமாக கூறுவது புடவைகள் சுமார் கி.மு. 3000 வருடங்களுக்கு முந்தையதாக குறிப்பிடு கின்றனர். சிந்து வெளி நாகரிகத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது பழங்கால சிற்பங்களிலும், மற்ற சிற்ப வேலைகளிலும் பெண்கள் புடவையினை உடலை சுற்றி அணிந்திருந்ததாகக் கூறுகின்றனர்.

காலத்திற்கேற்ப, நாகரிகத்திற்கேற்ப, கலாசாரத்திற்கேற்ப, சமுதாயத்திற்கேற்ப, மத, மொழிகளுக்கேற்ப புடவை அணியும் முறைகளில் மாறுதல்கள் ஏற்பட்டன.

இந்த மாறுதல்கள் அதிகம் இந்தியாவிலேயே ஏற்பட்டன. அதனை ஒட்டியுள்ள நாடுகளிலும் இந்த மாற்றங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகளில் மேலே குறிப்பிடப்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டன. வட இந்தியர், தென் இந்தியர்-அதிலும் கன்னடம், தெலுங்கு, தமிழ் பேசுபவர்கள் இவர்கள் புடவை அணியும் முறையில் மாறுதல் ஏற்பட்டது. நூல் சேலை, பட்டு சேலை, சுங்குடி சேலை என புடவையின் துணியின் தரமும் மாறுபட்டு இருக்கின்றது.

புராண புத்தகங்களில் பெண்கள் தைக்காத ஒரு நீண்ட ஆடையினை உடலினை சுற்றி அணிந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இது 5-9 கஜ நீளம் இருந்தது. துணித்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக இன்று சாயர், கைவேலை, நெசவில் முன்னேற்றம் என உயர்தரம், அதிக விலை, கண் கவர் நாகரிகம் புடவைத் துறையில் ஏற்பட்டுள்ளது.

கமலி ஸ்ரீபால்

மருத்துவ துறை, கல்வித்துறை, படிப்புத் துறை என எல்லா துறைகளிலும் 'உலக தினமாக புடவை'யினை கொண்டாடுவது இதன் முக்கியத்துவத்தினை அனைவரும் மறந்து விடாது என்பதற்காகத்தான். இந்நாளன்று விதவிதமான உற்பத்திகளை வெளி கொணர்ந்து மக்களிடம் புடவைகளின் சமீப கால முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்வர்.

அது மட்டுமா! அப்புடவை உருவாக்கப்பட்ட விதம், அதிலுள்ள டிசைன்களின் விவரங்கள், உடுத்தும் முறை இவற்றினை கூட விளக்குவர்.

தென் ஆசியா குறிப்பாக இந்தியாவில் புடவை கலாச்சாரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. விழாக் காலங்கள், பண்டிகைகள், கல்யாணங்கள், பூஜைகள், சமூக விழாக்கள் இவைகளில் பெண்கள் வித விதமாய் புடவை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து, தலை நிறைய பூ என வலம் வரும் பொழுது தேவலோகம் போல் அவ்விடமே காட்சி அளிக்கும்.

* என்றுமே புடவை நம் கலாச்சாரத்தின் பண்பாடு.

* பெண்ணின் பெருமை

* பெண்ணின் தனிப்பட்ட அடையாளம்.

முன்பு நூல் சேலை, பட்டு சேலை என்ற காலம் மாறி ஷிபான், ஜார்ஜெட், ஆர்கென்சா, கல், முத்து பதித்தவை, தங்கம், வெள்ளி கொண்டு உருவாக்கப் பட்டவை என கொடி கட்டி பறக்கின்றது.

கல்யாண செலவில், பெண்ணுக்கு சேலையும், வேலைப்பாடு மிகுந்த பிளவுசும் என்பது முக்கிய செலவு என்றாகி விட்டது.

* பனாரஸ் புடவைகள்: உத்தர பிரதேசத்தினை சொந்தமாகக் கொண்டது. உயர் பட்டில் தங்கம், வெள்ளி வேலை பாடுகளில் அதிக மொகல் பிரிவு கலை வடிவத்தில் இருக்கும்.

* காஞ்சிபுரம் பட்டு: கனத்த உயர்தர பட்டுப்புவை, நீண்ட பெரிய பார்டர்கள், தங்கம், வெள்ளியின் வேலைப்பாடு, புடவை முந்தானை ராஜ பாம்பனா போன்ற வேலைபாடு கொண்டது. வண்ண, வண்ண நிறங்களுக்குப் பஞ்சமே இராது. அநேக மணமகளின் சாய்ஸ் காஞ்சிபுரம் பட்டுப்புடவையாகத்தான் இருக்கும்.


* பாத்தினி புடவை: ராஜஸ்தான், குஜராத் பகுதியினைச் சார்ந்தது. பளிச்சென நிறங்களில் பல பிரிண்டுகளில் வரும் இந்த புடவை பாரம்பரியமானது மட்டுமல்ல. வட இந்திய நாட்டுப்புற நடனங்களில் இவ்வகை புடவைகளே அதிகமாக இருக்கும்.

* பாந்தினி புடவைகள்: மகாராஷ்டிரா பிரிவினைச் சார்ந்தது. உயர் பட்டில், நிறத்தில், பெரிய மயில், பூக்கள் கொண்டது. இதன் பார்டர் தங்கம், வெள்ளி கொண்டு மிக நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கும்.

* ஷிபான் மற்றும் ஜார்ஜெட் புடவைகள்: எடையற்றது. நவீன நாகரிகமானது. அன்றாட உபயோகம் மற்றும் விழாக்காலங்களுக்கு ஏற்றது. வெய்யில் காலத்திற்கு ஏற்றது.

புடவைக்கென்று ஒரு சரித்திரமே எழுதலாம். இது இடத்திற்கு இடம் சற்று மாறுபடலாம். ஆனால் தென் இந்தியா விற்கென்று ஒரு சரித்திரம் உண்டு. இங்கு உருவாகும் உயர்தர உருவாக்கம் கண் கவர் வேலைபாடுகளைக் கொண்டது. ஆகையால்தான் மக்கள் புடவை என்றாலே தென் இந்தியாவையே அதிகம் குறி வைப்பர்.

* காஞ்சிபுரம் நூல் சேலைகளும் அகன்ற பார்டர், முழுமையான உயர்தர பருத்தி, கண் கவர் வண்ணம் என உடுத்துபவரை அதி கம்பீரமாகக் காட்டும். இதனை அணிபவர் நல்ல வாட்ட சாட்டமான உயரம், தோற்றத்துடன் இருந்து விட்டால் போதும். கொள்ளை அழகுதான். மரியாதையும் கொஞ்சம் கெத்தும் கொண்ட புடவை இது.

*மைசூர் சில்க்: இதனை தென்னிந்தியாவின் புடவை கிரீடம் எனலாம். இதன் வழு வழுப்பும், மென்மையும் உடலோடு ஒத்து போகும் விதமும், நிறமும், ஜரிகை வேலைப்பாடும் அடடா!! அடடா!! என்று இருக்கும். எடை அதிகம் இல்லாதது. கூடுதல் மென்மையானது. எந்த பெண்ணும், அதாவது அதிக உயரம், சாதா உயரம், பருமன் தோற்றம், எந்த வயதும் இவற்றிற்கு வளைந்து கொடுத்து அப்பெண்ணையே சாந்தமாகக் காட்டும். இதனை அணியும் போது அதிக ஒல்லியாகக் காட்டும்.

* குமதவல்லி புடவைகள்: தமிழ் நாட்டினைச் சார்ந்தது. அதிக பிரபலம் இல்லாதது. பார்டர், உடல் தாமரைப்பூ மற்ற பூக்களைக் கொண்டு நெய்யப்பட்டு இருக்கும். கனமில்லாதது. கோடைக்காலத்திற்கு ஏற்றது.

* போச்சம் பள்ளி புடவை: ஆந்திர மாநிலம் பருத்தி, பட்டு இரண்டு வகை உண்டு. போச்சம் பள்ளிக்கே உரித்தான டிசைன்கள் உண்டு. பல நிறங்கள், ஜிக்ஸக் பிரிண்ட், யானை, மயில், கோவில்கள் என்ற உருவ பதிவுகள் கொண்டது.

*கோள புடவைகள்: எளி மையான தோற்றம், சீதோஷன நிலைக்கேற்ற புடவை, அடர்ந்த நிறம் கொண்ட பார்டர்கள், எளிதான முந்தானை கொண்டது. இதற்கென தனி அமைதியான தோற்றமும், உயர்தரமும் உண்டு.

* ஆரணி பட்டு: பார்டரும், முந்தானையும், உடல் நிறமும் அசத்த லான தோற்றத்தினைக் கொண்டிருக்கும். அநேக விழாக்களில் பெண்கள் இப்புடவையில் வலம் வருவதினைக் காணலாம்.

இன்னும் எழுதப்படாதவை எத்தனை எத்தனையோ! பல வீடுகளில் பண வீக்கம் எற்பட்டு விடக்கூடாது என்ற காரணம் கருதி மிக குறைந்த அளவில் தான் இங்கு எழுதப்பட்டுள்ளன.

* நாளுக்கு நாள் இதன் பேஷன் மாறிக் கொண்டேதான் இருக்கின்றது.

* பருத்தி, பட்டு, பாலியெஸ்டர், ஷிபான், கிரேப் போன்றவை உள்ளன. குறைந்த செலவில் பராமரிக்கும் வகையிலும் உள்ளன.

* சில்க் காட்டன், காட்டன் லினென், சில்க் ஜார்ஜெட் என கலந்து புடவைகள் உருவாக்கப்படுகின்றன.

* ஆர்கானிக் காட்டன், மூங்கில் பட்டு, வாழைநார் என்றெல்லாம் தினுசு, தினுசாக உள்ளன.

* பாரம்பரிய முறைபடி உடுத்துதல். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

பேண்ட் ஸ்டைல் சாரி: இது இந்த கால பெண்களுக்கு ஏற்றாற் போல் பேண்ட் அணிந்து ரெடிமேடாக தைத்த புடவையினை அணிவது மிக எளிதாக உள்ளது.

இதனை அவரவர் விருப்பப்படி அணிய முடியும். அவரவர் உருவத்திற்கு ஏற்றாற் போல் டெய்லரும் தைத்து கொடுத்து விடுகின்றார்.

* லெகங்கா ஸ்டைலில் புடவை கட்டுவதும் இன்றைய நாகரிகத்தின் வளர்ச்சிதான்.

இப்படி புடவை உடுத்தும் விதத்தினைக் கூட அதிகம் கூற முடியும். இத்தனை சொல்லி விட்டு பிளவுஸ் எனப்படும் சட்டையினைப் பற்றிக் கூறாமல் இருக்கலாமா?

முன்பெல்லாம் புடவை விலை உயர்ந்ததாக இருந்தாலும், பிளவுஸ் மிக மிக சாதாரணமாக இருக்கும். ஆனால் இன்று பிளவுஸ் அதிக வேலை பாடுகள் கொண்டது. மிக மிக அழகு வாய்ந்தது. எம்ப்ராய்டரி வேலை, முத்து, கல் பதிப்பு என அசாத்திய வேலைபாடு கொண்டது. சில நேரங்களில் புடவையினை விட பிளவுசுக்கு அதிக விலை இருக்கும்.

இன்றைய நிலையில் புடவை 200 ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை கூட உள்ளன.

எத்தனை விதங்களை சொன்னாலும் 'மதுரை சுங்குடி' புடவைக்கு தனி மவுசுதான். தூய காட்டனில் அன்றாடம் அணிவதற்கு ஏற்றாற் போல் மங்களகரமான நிறங்களில் பெண்கள் அணிந்து மஞ்சள் பூசிய முகமும், பெரிய குங்கும பொட்டும், தலை நிறைய பூவும், கை நிறைய கண்ணாடி வளையல் மற்ற அணிகலன்கள் காலில் கொலுசு என வரும் பொழுது எந்த வகை ஸ்டைலும் எதிரே நிற்க முடியாது.

இன்றைய காலத்தில் பெண்களுக்கு அன்றாடம் புடவை கட்டிவேலை செய்வது என்பது கடினம். இந்த வகையில் தான் சுடிதார், சல்வார் என உருவாகின. ஆனால் விழாக்காலங்களில் புடவைக்கு நிகர் புடவைதான். புடவையை போற்றுவோம்! கொண்டாடுவோம்!

"அம்பாளுக்கும் விதம் விதமாய் புடவை சார்த்தி மகிழ்வது நம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. செய்வோமே"

Tags:    

Similar News