சிறப்புக் கட்டுரைகள்

அந்தப் பாறையைக் கண்டீரா?

Published On 2024-12-20 10:00 GMT   |   Update On 2024-12-20 10:00 GMT
  • கல்லூரி வாழ்க்கை முடிந்தபின், மூவருக்கும் வெவ்வேறு ஊர்களில் வேலை.
  • கால ஓட்டத்தில் கொடைக்கானல் எவ்வளவோ மாறிப்போயிருந்தது.

'நினைக்கத் தெரிந்த மனமே

உனக்கு மறக்கத் தெரியாதா!

பழகத் தெரிந்த உயிரே

உனக்கு விலகத் தெரியாதா?'

-கவியரசு கண்ணதாசன்

பல வருடங்களுக்குப் பிறகு, தனது கல்லூரித் தோழர்கள் இருவரின் தொடர்பு கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சித் தாளவில்லை.

ஊர், முகவரி எதுவுமே பிடிபடாமல் தொடர்பறுந்து போன உறவுகள், இன்று சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் இணைப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகிவிட்டன. சமூக ஊடகங்களினால் நாம் பெறுகின்ற பயன்களில் இது முக்கியமான விஷயம்.

அந்த இருவரும் பள்ளிக் காலத்தில் இருந்து அவனுடன் படித்தவர்கள். கல்லூரிப் பருவத்தில் அவர்களின் நட்பு மிக நெருக்கமாயிற்று. விடுமுறை நாட்களில் நூலகம், திரைப்படம், கடைவீதி, விளையாட்டு என எங்கும் சேர்ந்தே திரிவார்கள்.

கல்லூரி வாழ்க்கை முடிந்தபின், மூவருக்கும் வெவ்வேறு ஊர்களில் வேலை. எனவே, சந்திப்புகள் குறைந்தன. கொஞ்ச காலம்தான் நட்பின் தொடர்பைத் தக்கவைக்க முடிந்தது. மூவருக்கும் திருமணமாகிக் குடும்பஸ்தர்கள் ஆனபின், தொடர்புகள் அறவே அற்றுப்போயின. இப்போதிருக்கும் வியத்தகு ஊடக வசதிகள், அப்போது இல்லாதிருந்ததும் அதற்கொரு முக்கிய காரணம்.

எத்தனையோ வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் தான், அந்த இரண்டு நண்பர்களை முகநூலில் அவன் கண்டுபிடித்தான். நட்பு மீண்டும் மலர்ந்தது. தகவல் பரிமாற்றங்கள் இனிதாயின.

அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட,

ஏதாவது ஒரு சுற்றுலாத் தலத்திற்குச் சென்று வரலாம் என்று அவன் சொல்ல, மற்ற இருவரும் மகிழ்ச்சியுடன் 'ஓகே' என்றார்கள்.

'கோவா நல்லாருக்கும்' என்றான் ஒருவன்.

'குலுமனாலி போகலாமே' என்றான் மற்றொருவன்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊராகச் சொல்லி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒருமுறை, இவர்கள் மூவரும் கொடைக்கானல் சென்று கொண்டாடிய நினைவுகள் அவன் நெஞ்சில் நிழலாடின. எனவே, அங்கு சென்று வரலாம் என்று அவன் சொல்ல, அதுதான் முடிவானது.

குறிப்பிட்ட நாளில் மூவரும் மதுரையில் சந்தித்தனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி நட்பின் வாசத்தை நுகர்ந்தனர். அவர்களில் ஒருவனின் காரில், அங்கிருந்து கொடைக்கானலுக்குப் பயணமாயினர். மீண்டும் ஒரு 'பேச்லர் டூர்' என்னும் உணர்வு பற்றிக் கொள்ள, வழிநெடுக ஒரே அரட்டை ஆரவாரம்.

7200 அடி உயரத்தில் இயற்கை எழில்கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையில், ஓர் அழகிய மலைவாசஸ்தலம் கொடைக்கானல். பசுமையான பூங்காக்கள், தெள்ளத் தெளிவான ஏரிகள், மூடுபனி, பச்சைப் புல்வெளிகள், பிரமாண்டமான மரங்கள், குளுமையான சூழல்! அதனால்தான், கொடைக்கானல் 'மலைகளின் இளவரசி'.

அவர்கள் கொடைக்கானலை எட்டிய போது, அது மாலை நேரம். கடுமையான குளிர். எனவே, ஓட்டல் அறையிலேயே மூவரும் பழைய கதைகளை எல்லாம் பேசிக் களித்தனர். நினைவுகள் அவர்களைக் கல்லூரிப் பருவத்திற்கே கொண்டு சென்றன. சக மாணவர்கள், பேராசிரியர்கள், வகுப்பறைக் குறும்புகள், கலைவிழாக்கள், கேண்டீன் நாயர், சிகரெட் வாங்கும் பெட்டிக்கடை... எத்தனை நினைவுகள்! அத்தனையும் பேசிப் பேசிப் பொழுது போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. நள்ளிரவு கடந்து இரண்டு மணிக்குமேல்தான் தூங்கினர்.

மறுநாள் பிரையன்ட்ஸ் பார்க், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, அறிவியல் ஆய்வகம், குணா குகைகள் என பல இடங்களுக்குச் சென்றனர். கால ஓட்டத்தில் கொடைக்கானல் எவ்வளவோ மாறிப்போயிருந்தது.

'கோக்கர்ஸ் வாக்' பகுதியைக் கடந்து மூவரும் சென்று கொண்டிருந்தபோது, அவனுடைய கண்கள் எதையோ தேடின. மற்ற இருவரும் சில அடி தூரம் சென்றபின் திரும்பிப் பார்க்க, அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவனின் நினைவு நாடாக்கள் பின்னோக்கி ஓடின.

கவிஞர் தியாரூ

இருபது வருடங்களுக்கு முன்பு, இந்த மூவரும் இங்கே சுற்றுலா வந்திருந்த போது இதே பகுதியில் ஒரு பாறை; அந்தப் பாறையில் ஒரு சிறிய ஆணியைக் கொண்டு, தன் பெயரோடு தன் காதலியின் பெயரையும் இணைத்து, அழுத்தமாகக் கீறிக் கீறிப் பெயர்களைப் பதிவு செய்திருந்தான். கற்பாறையில் தங்கள் பெயர்களைப் பொறித்துவைத்ததில் அவனுக்குப் பேரானந்தம். அவளைத் திருமணம் செய்து, தேனிலவுக்கு இங்கே கூட்டிவரும்போது, இதனைக் காட்ட வேண்டும் என்று மனதிற்குள் ஆசைகளைத் தேக்கி வைத்திருந்தான். ஆனால், அவள் அந்த இளம்வயதிலேயே புற்றுநோயினால் இறந்துபோனாள். அவளின் நினைவில் வாடினான். நாட்கள் செல்லச் செல்ல, உள்ளத்தின் வலியைக் காலம் ஆற்றியது.

இப்போது, அந்தப் பாறையைத்தான் அவன் கண்கள் தேடிச் சுழன்றன. மற்ற இருவரும் அவனருகில் வந்தனர்.

'டேய், என்னடா? எதையோ தொலைச்சவன் மாதிரி நின்னுட்டிருக்கிறே?'

'இல்ல... இதுக்கு முன்ன நாம இங்க வந்திருந்தப்ப, இதே இடத்துல ஒரு பாறையில் ரெண்டு பெயர்களை எழுதி வச்சேன்'.

'ஆமா, தெரியும். அதுக்கென்ன இப்ப?'

'அந்தப் பாறையைத்தான் தேடுறேன்'.

'இருபது வருஷமாச்சி. இத்தனை வருஷத்துல என்னென்ன மாற்றங்கள். ஊரே மாறிடுச்சி. அந்தப் பாறை மட்டும் அப்படியே இங்க இருக்குமா என்ன? வாடா போகலாம்' என்று சொல்லிக்கொண்டே செல்ல, மற்றவனும் நகர்ந்தான். அவனின் மனமோ, அந்தப் பாறையைக் காணாத ஏக்கத்தில் அதே இடத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

அதுதான் தேடலின் வலி. கால வெள்ளம் எல்லாவற்றையும் இழுத்துச் செல்கிறது. ஆனால், நினைவுகள் மட்டும் நம் உள்ளத்தில் கிணற்றுநீர்போல் தேங்கி நிற்கின்றன.

சுகமான நினைவுகள், சங்கடப்படுத்தும் நினைவுகள், அன்பான நினைவுகள், ஆறுதலான நினைவுகள்... இப்படிப் பலவித நினைவுகள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. நினைவுகளே இல்லாத வாழ்க்கையை நாம் நினைத்துப் பார்க்க முடியுமா? அவை இல்லை என்றால் வாழ்க்கை சூனியம்.

நமது மூளை நினைவுகளை ஒருங்கிணைக்கும் வழிகளில் ஒன்று, அனுபவத்தை மனரீதியாக மீட்டெடுப்பதாகும். கடந்த காலத்தின் நினைவுகள், நிகழ்காலத்தில் நமக்குப் பாடங்களாகவும் இருக்கக்கூடும். நல்லவையோ கெட்டவையோ, அவை இல்லாமல் நிகழ்காலம் ஏது! எதிர்காலம் ஏது!

நம் நினைவுக் கூடைக்குள் வைரக்கற்களும் இருக்கின்றன; கூழாங்கற்களும் இருக்கின்றன. மயிலிறகுகளும் உண்டு; முட்களும் உண்டு. மல்லிகைப் பூக்களும் உண்டு; ரத்தம் தோய்ந்த அம்புகளும் உண்டு. எல்லாவற்றையும் சுமந்தபடி பயணிக்கிறது வாழ்க்கை நதி.

ரம்மியமான அனுபவங்கள் மென்மையான நினைவுகளாய் மனதை வருடும். சில நினைவுகள் மனதை அழுத்தும். அவை மீண்டும் மீண்டும் நம்மைக் காயப்படுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், அப்படியே உட்கார்ந்துவிடக் கூடாது. ஓடிக்கொண்டே இருப்பதுதான் நதியின் இயல்பு.

சிலரைப் பாருங்கள். எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார்கள். உட்கார்ந்து குனிந்திருந்தபடி முனகுவார்கள்; பெருவிரலால் தரையைத் தேய்ப்பார்கள். அல்லது வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பித்துப்பிடித்தவர்களைப்போல் தெரிவார்கள். அவர்கள், நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.

கடந்து வந்த பாதைகள்; விலகிச் சென்ற உறவுகள்; துரோகம் செய்த முகங்கள், கைநழுவிய காதல் என மனதைப் பிழியும் நினைவுகள் எல்லாம் அனுபவப் பாடங்கள்தான். வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கு அவை நமக்குத் துணைசெய்யும்.

இனிமையான நினைவுகளை மட்டுமல்ல, கசப்பான நினைவுகளையும் மனதில் வைத்திருப்பது மிக மிக அவசியம். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகின்றோம். அதனால்தான் நம்பக்கூடாதவர்களை நம்புகின்றோம். செய்யக்கூடாதவைகளைச் செய்கின்றோம். மீண்டும் மீண்டும் ஏமாற்றங்களைப் பெறுகின்றோம்.

'மறப்போம் மன்னிப்போம்' என்று அடுக்கு மொழியில் பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். மன்னித்தல் மகோன்னதப் பண்பு. அதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், 'மறந்துவிடுதல்' என்பது அபாயகரமானது.

உங்களை வஞ்சித்தவர்களை மன்னித்து விடுங்கள். அது உங்கள் பெருந்தன்மை. ஆனால், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகத்தை நீங்கள் மறந்துவிட்டால், அவர்கள் மீண்டும் உங்களை அதே நோக்கத்துடன்தானே நெருங்குவார்கள். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பதற்கு 'மறவாதிருத்தல்' அவசியம்.

பெருந்தன்மை என்பது ஞானத்துடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். மதியீனமான பெருந்தன்மை நம் மனதை மழுங்கடித்துவிடும். அது நம் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடும். நினைவுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஏனெனில், நினைவாற்றலே அறிவாற்றல் எனப்படுகிறது.

நினைவுகளை அசைபோடுவது ஒரு ரம்மியமான அனுபவம். அப்போது, பல நிகழ்வுகள் நம் மனக்கண்முன் வந்து செல்லும். இன்பமான நினைவுகளை மீண்டும் மீண்டும் ரசிப்பதுபோல், கசப்பான நினைவுகளையும் ரசிக்க முடியும். காரணம், அந்தக் கடினமான அனுபவங்களையும் கடந்து வந்திருக்கிறோம் என்கிற நிம்மதிதான்.

ஓர் இளைஞன் தூக்கமின்றித் தவித்தான். பல நாட்களாக இதுதான் பிரச்சனை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் சென்றான்.

'அய்யா, என்னால் தூங்க முடியவில்லை. படுத்தால் பல நினைவுகள் வருகின்றன. என்ன செய்வது?'

'ஒன்றும் செய்ய வேண்டாம், பேசாமல் தூங்கு' என்றார்.

'அய்யா, அதுதானே பிரச்சனை. நினைவுகள் வந்து வந்து என் தூக்கத்தைக் கெடுக்கின்றன. உங்களுக்கு நினைவுகளே கிடையாதா?'

'நிறைய உண்டு'.

'அப்படியானால் எப்படித் தூங்குகிறீர்கள்?'

'நான் தூங்கச் செல்லும்போது நினைவுகளுக்கு என்ன வேலை? எனவே, அவையும் தூங்கிவிடும். நான் விழித்தெழும்போது, அவற்றிற்கு என்ன தூக்கம்? எனவே அவையும் விழித்தெழுந்துவிடும். அன்றாடப் பணிகள் ஏராளம். அச்சமயம் நினைவுகள் ஒதுங்கிக் கொள்ளும். சிறிது நேரம் ஓய்வாகச் சாய்ந்திருக்கும்போது, நினைவுகளை அசைபோடுவது சுகமாக இருக்கும்' என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு எழுந்தார் ஞானி. அவனுக்குள் ஏற்பட்ட ஒரு தெளிவான வெளிச்சம் அவன் கண்களில் தெரிந்தது.

நினைவுகள் அற்புதமானவை. அவையே நம் வாழ்வின் உயிரோட்டம். அவற்றோடுதான் நம் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது. நினைவுகளற்ற நிலை, வேரிழந்து நிற்கின்ற மரத்தைப் போன்றது.

நினைவுகளை நாம் ரசிக்க வேண்டும். இன்பமோ துன்பமோ, எல்லாவற்றிலும் ஒரு சுகம் இருக்கின்றது. உறவோ பிரிவோ, எந்த ஒன்றிலும் ஒரு படிப்பினை இருக்கின்றது. எனவே, நினைவுகளைக் கொண்டாட வேண்டும்.

நினைவுகளைச் சுமையாக நாம் எண்ணிவிடக் கூடாது. ஏனெனில், அவையே வாழ்வின் சுவை.

போன்: 9940056332

Tags:    

Similar News