- சுவாமிகளின் இயக்கத்தில் மூல மந்திரமாய் ஒலித்தது தர்மம் ஆகும்.
- மக்களின் எண்ணிக்கை சரிவர அறியப்படவில்லை.
வைகுண்ட சுவாமிகள் புகுத்திய தலைப்பாகை அணியும் வழக்கம் இன்றும் அன்புகொடி மக்களின் வழிபாட்டின்போது காண முடிகின்றது. மேலும் அவரது அன்பர்கள் தங்கள் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் தலைப்பாகை அணிந்தே கடமை செய்வது, அய்யாவின் புரட்சியின் நிலைத்த தன்மையையே வெளிப்படுத்துகின்றது. சுவாமிகளின் இயக்கத்தில் மூல மந்திரமாய் ஒலித்தது தர்மம் ஆகும். சுவாமிகளை வணங்கி தர்மம் செய்ய வந்தவர்கள், தர்மம் பெற வந்தவர்கள் என ஏராளமான மக்கள் வந்தனர். தர்மம் பெற வந்தவர்களுள் பஞ்சத்துக்கு ஆண்டி வேடமிட்டு பலர் இருந்தனர். அழுக்குத் துணிகளுடன் ஆண்டிகள் அலைந்து திரிந்ததை தடுக்கும் விதமாக, அவர்கள் நன்றாக துவைத்து, குளித்து பந்தியில் இருந்திட சுவாமிகள் கட்டளையிட்டார்.
உணவுக்காகவே இவர்கள் வருகிறார்கள் என்பதை கவனித்த சுவாமிகள், அவர்களின் குறிக்கோளற்ற வாழ்க்கையை மாற்ற 'சட்டம்' கற்றுக்கொடுத்தார். சட்டம் என்பது நீதிநெறிகளையும், ஒழுக்க விதிகளையும் புகட்டும் பாடமாகும். இதனையே சுவாமிகள் 'சட்டம் மறவாதே' என்று அம்மானையில் பல இடங்களில் கூறுகின்றார். சட்ட வரிகளை ஏட்டோலைகளில் தினந்தோறும் வீட்டிலிருந்து எழுதி, காலையில் சட்டாம் பிள்ளைகளிடம் ஒப்புவிக்கும் வழக்கம் அன்றைய கல்வியில் ஒரு பகுதியாக இருந்தது. 'வைகுண்ட சுவாமிகள் பண்டாரங்களை குனிய நிறுத்தி சட்டம் படிப்பித்தது போல' என்ற உவமானம் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கூட மக்களிடையே வழங்கியது. சட்டத் தேர்ச்சியில் தகுதி பெற்றவர்கள், சுவாமிகளின் முதல் தேர்வு நிலையில் தேறியவர்களாக கருதப்பட்டனர். சுவாமிகள் அவர்களை தவ வாழ்விற்கு இட்டுச்செல்லும் விதமாக துவையல் பந்திக்கு அழைத்துச்சென்றார். சுத்தத்தால் சோறு போட்டிடவும், ஒழுக்கத்தால் விழுப்பம் பெற்றிடவும் முடியும் என்பதனை நன்குணர்ந்திருந்த சுவாமிகள் தூசு படிந்து கிடந்த சமூகத்திற்கு துவையல் நடத்தி ஏற்றம் அளித்திட விழைந்ததின் விளைவே துவையல் பந்தியாகும்.
துவையல் என்பதற்கு ஆடை வெளுக்கை எனவும், துவைத்தல் என்பதற்கு சேர்த்து வைத்தல் எனவும், பந்தி என்பதற்கு கூடுதல் அல்லது ஆன்மாவைப் பந்தத்துக்குள்ளாக்குதல் எனவும் தமிழ் அகராதி பொருள் விளம்புகிறது. இவ்வடிப்படையில் சுவாமிகளின் துவையல் பந்தியினை இரு வேறு கண்ணோட்டத்தில் நோக்கலாம். சமுதாய நோக்கினில் பார்க்கும்போது, அழுக்கு படிந்த ஆடைகளை கசக்கிக்கட்டி தூய்மையாக வாழ்வதுடன் மட்டுமல்லாது ஒன்றுபட்டு வாழ்ந்திட வழிகாட்டியது எனவும், ஆன்மீக நெறியினில் பார்க்கையில், தனித்தோடிக் கிடந்த ஆன்மாக்களை மேலோனிடத்தில் பந்தத்துக்குள்ளாக்கி, பக்தி வாழ்வினில் ஈடுபடச் செய்தது எனவும் கொள்ளலாம்.
துவையல் பந்தியில் மக்களை ஆன்மீக நெறிப்படுத்த, தவ வாழ்க்கையில் பக்குவப்படுத்தியதுடன் சமுதாயத்தில் உயரிய வாழ்வு வாழ்ந்திடவும் சுவாமிகள் அழைத்துச்சென்றார். சமூகவியலார் பார்வையில் நோக்கினால், உயர் சாதியினரின் வாழ்வியல் முறைகளை பின்பற்றி ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையை மேன்மைபடுத்திட முயற்சி மேற்கொண்டார்.
இந்தியாவில் உயர்சாதியினர் வரிசையில் இடம் பெற்றவர்கள் தங்களை தூய்மையாக வைத்துக்கொண்டும், உணவு வகைகளில் புலால் உணவை விடுத்து 'சைவ' உணவு உட்கொண்டும் இருந்தவர்களே." வைகுண்ட சுவாமிகள் மக்களின் தூய்மை வாழ்க்கையிலும் உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்தினார். துவையல் பந்தியில் பங்கு கொள்ள வந்த மக்களை பற்றி கூறுகையில் "மூணு நேரம் துவைத்து உச்சியொரு நேரமதாய்
வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்
வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டு
தாகமில்லாமல் தவசிருக்க வேணுமென்று
வந்தனர்" என அகிலம் குறிப்பிடுகின்றது. தவசிருக்கச் சென்றவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவு வகையில் சில ஒழுகலாறு களை கற்பித்து, எப்போது மீனுண்டென்றே மிகப் பார்த்து அப்போததை வேண்டி யரக்குர காயவைத்து வாயிலெடுத்திட்டு வயிறு வளர்க்கும் மக்களுக்குப் புதியதோர் மாற்றத்தினை சுவாமிகள் கொடுக்க முயன்றார்.
துவையல் பந்தியில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை சரிவர அறியப்படவில்லை. மனைவி மக்களுடன் அன்பர்கள் கலந்து கொண்டனர் என அகிலம் அறிவிக்கின்றது. எழுநூறு குடும்பங்கள் கலந்து கொண்டதாகக் கூறுவர்.
"வஸ்து வகை தானிழந்து
வீடுமனை மறந்து விற்று விலைகள் செய்து
ஒண்ணிலரைப் பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனை
மண்ணும் மறந்து மாடாடு தான் மறந்து
ஆண்ட பண்டமெல்லாம் மிக மறந்து
வைகுண்டரின் பாதமே தஞ்சம்" என நினைத்து, அவர் காட்டிய நெறியில் வாழ விருப்புடனே வந்தனர். தவமிருக்க மக்கள் வந்த பாங்கினைப் பற்றி அகிலம் கூறுகையில்,
"மண்ணுடன் மனைகளாசை மாடுடன் வீடு ஆசை
பெண்ணுடன் பொருளினாசை பூதலப்பொன்னினாசை
எண்ணுடன் எழுத்தினாசை யிறடு பொல்லாசை வேசை
ஒண்ணுடனாசை நீக்கி யுடையவனாசை கொண்டார்!"
எனக் குறிப்பிடுகின்றது.
கன்னியாகுமரியிலிருந்து சுமார் மூன்று கல் தொலைவில் கிழக்கு கடற்கரையோரமாக அமைந்துள்ள வாகைப்பதியில் தான் சுவாமிகள் துவையல் பந்தியை ஆரம்பித்தார். காலை, நண்பகல், மாலை என தினந்தோறும் மூன்று வேளை நன்றாக குளித்து, துவைத்து, நண்பகல் ஒரு வேளை பச்சரிசி, சிறுமணி (பாசிப்பயிறு), நன்றாக வேகவைத்து கஞ்சியாக்கி உண்டு வாகைப்பதியில் தவமிருந்தனர். உச்சிப்படிப்பு, உகப்படிப்பு பத்திரம், சிவகாண்ட அதிகார பத்திரம் போன்ற சமயநெறிப் பாடங்களையும், சட்டங்கள், தாம்பத்திய நெறி, சான்றாண்மை வாழ்வு நெறி, உலக நெறி முதலிய அறச்சார்பு கருத்துக்களையும் சுவாமிகள் அவர்களுக்கு போதித்தார்.
வாகைப்பதியில் அவர்களின் தவவாழ்வு ஆறு மாத காலமே நீடித்தது. தவமேற்கொண்ட மக்களை நோய் தாக்கியதால் சிலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. எனவே எல்லோரும் வாகைப்பதி விடுத்து முட்டப்பதி ஏகி தவ வாழ்வினை தொடர்ந்தனர். நாடோறும் தூய நீரில் மூன்று வேளை குளித்து, காலையும், மாலையும் பகலவனை தொழுது, சைவ உணவினையே உண்டு தவம் புரிந்த மக்களை கண்ட மேற்சாதியினர் வாயடைத்து நின்றனர்.
"எப்போது மீன் வரும் என மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து, அப்போது அதை வேண்டி அரை குறையாய் வேகவைத்து வாயில் போட்டு வயிறு வளர்க்கும் இம்மக்கள், புகையிலையும் மறந்து, ஆணும் பெண்ணும் ஒருமனதாய் இருப்பது பண்டிலமைத்ததுவோ!" என வியந்து நின்றனர். உயர்சாதி மக்கள், சுவாமிகள் நடத்திய துவையல் பந்தியை சிதறடிக்க முயன்றனர். பந்தியில் கலந்து கொண்ட அன்பர்களை அல்லல் படுத்தினர்.
"பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய் குளித்து துவைத்தனை
கண்டு மாபாவி கலைத்து அடித்தனன்"
என அகிலம் குறிப்பிடுகின்றது. எனினும் துவையல் முடங்கவில்லை. தினந்தோறும் சேவிப்பதும் உகப்பாட்டு ஓதுவதுமாய் இருந்தனர். துவையலை வெற்றியுடன் முடித்த துவையற்காரர்களை சுவாமிகள் வாழ்த்தி அனுப்பினார். தவ வாழ்வில் தகுதி பெற்ற துவையற்காரர்களை 'வானலோக தேவர்களோ!' என மக்கள் வியந்து போற்றினர். அவர்களை தத்தம் ஊர்களில் வரவேற்று அன்னமும் ஆடையும் கொடுத்து மக்கள் அன்புடன் அமுதூட்டினர்.
அன்று அவர்களுக்கிட்ட கஞ்சி தர்மமே காலம் காலமாக தொடர்ந்து இன்றும் நிழல் தாங்கல்கள் தோறும் "தவணைக்கஞ்சி" என்ற பெயரில் தர்மமாக வழங்கப்பட்டு வருகிறது. தவவாழ்வின் போது வைகுண்டர் கற்பித்த போதனைகளையும், சான்றாண்மை நெறிகளையும் துவையற்காரர்கள் ஊர்தோறும் சென்று மக்களிடையே பரப்பி வந்தனர். வைகுண்ட சுவாமிகள் மக்களின் வீட்டமைப்பு முறையிலும் மாற்றம் ஏற்படுத்திட விழைந்தார். மாடி வீடுகள் கட்டுவதற்கும், ஓடு வேய்ந்த வீடுகள் அமைப்பதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமையற்றவர்களாக இருந்தனர்.
சாலை ஓரங்களில் வீடு கட்ட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் குடியிருப்புகள் கம்பு, மண்சுவர், தென்னை ஓலை போன்றவற்றால் எழுப்பப்பட்ட சிறு சிறு குடில்களை உள்ளடக்கியதாகவே காணப்பட்டன. அவர்களின் வீடுகள் ஆங்காங்கே விளைக்கொன்றாக சிதறிக்கிடந்தன. தவிரவும் எவ்வித ஒழுங்குமின்றி சரிவர திட்டமிடாது இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைந்திருந்தன. சுவாமிகள் தன் அன்பர்களிடம் பல அறைகளையுடைய வீடுகள் கட்டவும். வீடுகளை ஒன்றுக்கொன்று அடுத்தாற்போல் அமைக்குமாறும் வரிசையாகவும், ஒரே திசையில் முன் வாயில் அமைத்து கட்டுவிக்குமாறும் வற்புறுத்தினார்.
நான்கு பக்கமும் கதவுகள் இட்டு, சன்னல்களும் அமைத்து காற்றோட்டமாக வீடுகள் கட்டிடுமாறு பணித்தார். குடியிருப்பு அமைப்பில் கூட ஒழுங்காகவும், நெருக்கமாகவும் வீடுகள் அமைக்கப்படுமானால் மக்களிடையே நெருங்கிய தொடர்பும், ஒருமைப்பாட்டுணர்வும் நிலவும் என்பதை கருத்திற் கொண்டு மாற்றம் ஏற்படுத்தினார். அடுத்த பதிவில் முக்தி தரும் முத்திரி கிணறு கண்ட சுவாமிகளின் அருளை காண்போம்.