null
- மருத்துவரை எந்தச் சிகிச்சையும் செய்ய ரமணர் அனுமதிக்கவில்லை.
- ஆன்மாவே நிலையானது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
ரமணாஸ்ரமத்தில் அனைவர் நெஞ்சங்களும் துயரில் ஆழ்ந்திருந்தன. ஏதோ நடக்கப் போகிறது என்று எல்லோருக்கும் மனத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது. நடக்கப் போவது என்ன என்றும் தெரியும்.
ஆனால் அதை எதிர்கொள்ள யார் மனமும் தயாராக இல்லை. எல்லோரும் யோசனையோடு நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
1950 ஏப்ரல் 13. மகரிஷி ரமணருக்கு நுரையீரல் அடைப்பு. மருந்துகள் கொடுத்து சுவாசத்தைச் சரிசெய்ய வேண்டும். மருத்துவர் ஸ்ரீரமணர் அருகே போனார். ஆனால் மருத்துவரை எந்தச் சிகிச்சையும் செய்ய ரமணர் அனுமதிக்கவில்லை.
''தானே எல்லாம் சரியாகிவிடும்!'' என்றார் ரமணர்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது சிலருக்குப் புரிந்த மாதிரி இருந்தது. ஆனால் அந்த அர்த்தத்தில் அவர் சொல்லியிருக்க மாட்டார் என்பதாக அவர்களே தங்களைச் சமாதானம் செய்துகொள்ள முயன்றார்கள்.
சிலமணி நேரங்கள் மெல்ல நகர்ந்தன. ஸ்ரீரமணர் தன்னைச் சுற்றி இருந்த அனைவரையும் அங்கிருந்து போகச் சொல்லிவிட்டார்.
அவருக்குத் தொடர்ந்து பணிவிடை செய்யும் ரங்கசாமி மட்டும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஸ்ரீரமணர் காலடியிலேயே அமர்ந்திருந்தார். ரங்கசாமி பெற்ற பாக்கியத்தை எண்ணி மற்றவர்கள் மனத்தில் வியந்து கொண்டார்கள்.
மகரிஷி மறுநாள் காலையில் ரங்கசாமியை ஜாடைகாட்டி அழைத்தார். மெல்லிய குரலில் அவரிடம் ''தேங்க்ஸ் '' என்று ஆங்கிலத்தில் சொன்னார். ரங்கசாமிக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே அந்த வார்த்தைக்குப் பொருள் புரியாது விழித்தார்.
மகரிஷி புன்முறுவல் பூத்தவாறே ''தேங்க்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையாகத் தமிழில் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்றால் சந்தோஷம் என்று சொல்லலாம்'' என்றார். ரங்கசாமி முகத்தில் ஒரு மெல்லிய முறுவல் படர்ந்தது.
என்ன நடக்கப் போகிறதோ என்று காலையிலிருந்து மதியம் வரை அன்பர்கள் மஹரிஷியின் சிறிய அறையை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் அவரை எப்படியாவது தரிசித்துவிட வேண்டும் என்று தீராத ஆர்வம் இருந்தது.
ஆனால் ஸ்ரீரமணர் மேனி மிகவும் பலவீனமடைந்து விட்டது. எடை அளவுகடந்து குறைந்துவிட்டது. உடல் சற்றுக் கறுத்துவிட்டதுபோல் தோன்றியது.
என்றாலும் முகத்தின் பொலிவும் கண்களின் ஒளியும் குன்றவில்லை. நோய்வாய்ப்பட்ட சிம்மம் போல் அவர் படுத்திருந்தார்.
மகரிஷி என்பதால் உடல்வலி அவருக்கு இருக்காதா என்ன? யாராயிருந்தாலும் ஆன்மா உடலில் தங்கியிருக்கும் வரை உடல் உபாதைகளை அனுபவித்துத் தானே தீரவேண்டும்?
ரமணருக்குக் கடுமையான வலி இருந்தது. ஆனால் அவர் அதைப் பலர் முன்னிலையில் வெளிப்படுத்தியதில்லை.
தனியே இரவுப் பொழுதுகளில் அவர் துன்பத்தால் அவதிப்படுவது தெரிந்தது. மற்றவர்கள் கவனிக்காத போதுதான் அவர் தனது உபாதைகளை, வலிகளை வெளிப்படுத்தினார். சோபாவில் படுத்திருக்கும் அவரிடமிருந்து மெல்லிய முனகல் கேட்பதுண்டு.
அதைப்பற்றி அவரிடம் விசாரத்தாலோ, அதுசரி, வலி ஏற்படுவது உடலின் இயற்கைத் தன்மை தானே, அதனால் என்ன என்பார்.
எப்பேர்ப்பட்ட ஞானியாக இருந்தால்தான் என்ன? உடலில் நோய்வந்தால் அது வலிக்கத்தானே செய்யும்? ஆனால் அந்த வலியை வெளிப்படுத்துவதில்தான் ஞானிகளுக்கும் சாதாரணமானவர்களுக்கும் வித்தியாசம். ஞானிகள் பிறர் அறியத் தங்கள் வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்கள் வலிகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்வார்கள்.
எவ்வளவு வலி இருந்த போதிலும் ஸ்ரீரமணர் பக்தர்கள் தம்மைத் தரிசனம் செய்ய வருவதை ஒருபோதும் தடுக்கவில்லை. தம்மை வந்து தரிசித்த அன்பர்களை அவர் மிகுந்த கருணையோடு பார்த்து அனுக்கிரகம் செய்தார்.
மனிதர்கள்மேல் அவருக்கிருந்த கருணையைப் போலவே ரமணாஸ்ரமத்தில் வாழ்ந்த இதர உயிரினங்களான பறவைகள், விலங்குகள் மீதெல்லாம் அவர் கடைசிவரை அதிக அக்கறையோடிருந்தார்.
அவர் மறைவதற்குச் சில மணி நேரங்கள் முன்பாக ஆசிரமத்தில் அருகே மரங்களில் வசித்த ஏராளமான மயில்கள் உரத்துக் குரல் கொடுத்தன. தன் பக்கத்தில் இருந்தவரைக் கையசைத்து மெல்லக் கூப்பிட்டார் ரமணர்.
மெல்லிய குரலில், ''மயில்களுக்கெல்லாம் உணவு போட்டாச்சா?'' என்று அக்கறையோடு வினவினார். மயில்கள் ஏனோ அவரது அறையைச் சுற்றிச் சுற்றி வந்தன.
பசுக்கள், நாய்கள், குரங்குகள் என அங்கிருந்த எல்லா விலங்குகளுமே நிம்மதியின்றி இருப்பது அனவைருக்கும் கண்கூடாகத் தெரிந்தது. தங்கள் மேல் பேரன்பு செலுத்தும் எஜமானனுக்கு உடல் நலமில்லை என்பதை அவை உணர்ந்து கொண்டன. அவை என்ன செய்வது என்றறியாது திகைத்தன.
ஒரு வெள்ளை மயில் ஆசிரமத்திற்கு அடிக்கடி வரும். மகரிஷியின் அருகே வந்து நிற்கும். அன்று அந்த வெள்ளை மயில் ஸ்ரீரமணர் இருந்த அறையின் கூரைமேல் ஏறி நின்று நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் கத்தியது. அந்த மயிலின் அகவல் எதையோ உணர்த்துவதாக எண்ணிய பக்தர்கள் கண்ணீர் சிந்தினார்கள்.
பல பக்தர்கள் பகவான் ரமணர் மேல் கொண்ட அன்பால் கதறத் தொடங்கினார்கள். ''எங்களை விட்டு நீங்கள் எப்படிப் போகலாம்?'' என்று அவர்கள் பகவானிடம் வினவினார்கள். ஸ்ரீரமணர் வேதனையை மறந்து நகைத்தார்.
''எதற்கு என்னுடைய தேகத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தேகம் இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் அழிய வேண்டியதுதானே?
உங்கள் குரு இந்த தேகம் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. இல்லவே இல்லை. இந்த தேகம் இல்லாவிட்டாலும் கூட உங்கள் குரு உங்களை விட்டு என்றும் போகமாட்டார்.
ஆன்மாவே நிலையானது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களில் நான் உண்டு, என்னில் நீங்கள் உண்டு. என்னை தரிசித்தாயிற்று அல்லவா? இனி ஆனந்தமாகச் சென்று வாருங்கள்'' என்று துன்பத்தால் பெரிதும் துயருறும் பக்தர்களை அவர் சமாதானம் செய்து அனுப்பி வைக்கத் தொடங்கினார்.
1950 ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி. மாலைப் பொழுது. எந்தக் கணத்திலும் ரமணர் தம் பூத உடலில் இருந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெரிய தலையணைகளில் சாய்ந்து கொண்டிருந்தார். உட்கார்ந்தவாறு தலையைப் பின்புறம் சாய்த்துக் கொண்டிருந்தார். வாய் சிறிது திறந்திருந்தது. சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
சில நிமிஷ நேரங்கள் அவருக்குப் பிராணவாயு செலுத்தினார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அதையெல்லாம் எடுத்து விடுங்கள் என்று பகவான் சைகை காட்டினார்.
கடைசி நிமிஷங்களில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (தமிழக முதல்வராக இருந்தவர்) மகரிஷியின் கூடவே இருந்தார். அவர் படும் சிரமத்தைப் பார்த்து ஒரு திரை போட்டு, தரிசிக்க வந்த மக்கள் கூட்டத்தை தரிசனம் வேண்டாம் என்று விலக்கினார்.
மகரிஷி படும் அவஸ்தையை அவரும் கண்ணால் காண இஷ்டப்படவில்லை.
மகரிஷி தன்னை நிமிர்த்தி உட்கார வைக்கச் சொன்னார். 'அருணால சிவா...'' என்று அருகிலிருந்தோர் தியான பாராயணம் செய்தார்கள். மகரிஷி அதை ஆனந்தமாகக் கேட்டார். கண்களை அகலத் திறந்து பார்த்தார். அவர் விழிகள் ஒளி வீசின. அவர் முகத்தில் மெல்லிய முறுவல் படர்ந்தது.
கண்களில் நீர் பெருகி அவரது ஒட்டிய கன்னங்களில் வழிந்தது. பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். ஆழ்ந்து ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு அவர் உடலில் எந்த அசைவும் இல்லை. அப்போது நேரம் சரியாக இரவு 8.47 மணி.
அவருக்கு விசிறிக் கொண்டிருந்தவர்கள் விசிறுவதை நிறுத்தினர். விசிறும் சப்தம் கேட்கவில்லை என்பதிலிருந்தே திரைக்கு வெளியே இருந்த அன்பர்கள் விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். பகவான் பூத உடலை உகுத்துவிட்டார். அதையறிந்த துயரத்தில் துடித்த இதயங்கள் வெகுநேரம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன.
வானத்தில் அன்றிரவு சரியாக 8.47மணிக்கு ஒரு வால் நட்சத்திரம் பளிச்சென்று மின்னி விரைந்து சென்று அருணாசல மலைகள் மேல் பறந்து சிகரத்தின் பின் மறைந்ததைப் பார்த்ததாக பல பத்திரிகைகள் மறுநாள் எழுதின.
இவ்விதம் வால் நட்சத்திரம் ஒன்று ஸ்ரீரமணர் ஸித்தி அடைந்தபோது அதே கணத்தில் தோன்றி வானில் கலந்த சம்பவத்தைக் கல்கி கிருஷ்ணமூர்த்தி தம் கட்டுரையொன்றில் பதிவு செய்திருக்கிறார்.
அப்போது சிறுமியாக இருந்த நடனமணி பத்மா சுப்பிரமணியம் சென்னையில் தாம் குடும்பத்தோடு வெளியே நின்று கொண்டிருந்தபோது அந்த நட்சத்திரத்தைப் பார்த்து வியந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஹென்றி கார்டியர் ப்ரெஸ்ஸன் ரமண பக்தர். அவர் திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தின் அருகே வசித்துக் கொண்டிருந்தவர். அவர் சொல்கிறார்:
''நான் என் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தேன். அப்போது என்னுடன் நின்ற நண்பர்கள் திடீரெனக் கூச்சலிட்டார்கள். அதோ பார், அதோ பார்! ஆகாயத்தில் ஒரு நட்சத்திம் வால் நீண்டு ஒளிவீசிப் பறந்து செல்கிறது பார்!'' என்று என்னைக் கூப்பிட்டுக் காட்டினார்கள்.
அது மாதிரியான காட்சியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. என் கைக்கடிகாரம் இரவு 8.47 என்று காட்டியது.
கவலையோடு நாங்கள் அனைவரும் தடதடவென்று ஆஸ்ரமத்துக்கு ஓடிச் சென்றோம். எங்கள் மனத்திலிருந்த பயம் உறுதியாகியது. அங்கே சரியாக அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பகவான் ஸ்ரீரமணர் மஹா நிர்வாணம் அடைந்தார் என்று அறிந்து கொண்டோம்.''
வேண்டுதல் வேண்டாமை இரண்டும் இல்லாது வாழ்ந்த ஓர் ஆன்மா, அண்ணாமலையானின் திருவடியில் இரண்டறக் கலந்தது. எங்கும் நிறைந்தார் ஸ்ரீரமணர்.
இப்போது எங்குமுள்ள அவரை அன்பர்கள் அவரவர் இருக்குமிடத்திலேயே பிரார்த்தனை செய்து தங்கள் மனத்தை அவர் அருளால் தூய்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com