- நம் கண்முன்னே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலம்.
- வாழ்வில் இனிமை சேர நிகழ்காலத்தை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.
எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பில் எப்போதும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் இனிமையான வாசகர்களே! வணக்கம்.
காலங்களைக், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று நிலைகளில் பிரிக்கலாம். கடந்த காலம் என்பது நாம் கடந்து வந்த காலம்! அல்லது நம்மைக் கடந்து போன காலம்! என்று குறிப்பிடலாம்; இதனை இறந்த காலம் என்றும் கூறுவர்; அதாவது இறந்துபோன காலம்!; அதனை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுவர முடியாது; நாம் செய்த தவறுகள், நாம் சாதித்த சாதனைகள், நாம் சந்தித்த சோதனைகள், நாம் அனுபவித்த இன்பங்கள், நாம் அனுபவித்த துன்பங்கள்... என ஒட்டு மொத்தமாக நாம் வாழ்ந்த வாழ்க்கையின் கூட்டுக் கலவையாகக் கடந்தகாலம் திகழுகிறது. கடந்த காலத்தைத் திரும்பப் பார்க்கத்தான் முடியுமேயொழிய, அதற்குள் சென்று திருந்திய வாழ்க்கையை வாழ்வோமென்று திரும்பப் புகவே முடியாது.
நிகழ்காலம் என்பது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிற காலம்; நம் கண்முன்னே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலம். நேற்றுப் போட்டு வைத்த திட்டங்கள் படி இன்று எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தால், நிகழ்காலம் மகிழ்ச்சிமயம் என்று மகிழலாம். நினைத்தது ஒன்றாகவும் இன்று நடப்பது வேறாகவும் அமையும் பட்சத்தில் நிகழ்காலம் துயர இசைக் காலமாகவே கழிந்து கொண்டிருக்கும்.
நேற்றுவரை கையிருப்பில் இருந்த மகிழ்வும் செல்வமும் அதே போலவே இன்று தொடர்ந்தாலோ அல்லது அதற்கு மேலான நிலைகளில் வளர்ச்சிநிலை கண்டாலோ நிகழ்பொழுது சிறப்பான பொழுது என்று போற்றப்படும். அல்லது நிலைமை தலைகீழாக மாறித், தோல்விகளே தொடர்ந்துவந்து கொட்டிக் கொண்டிருந்தால், நிகழ் காலம் நம்மைச் சோர்வடைய வைத்துத் தளர்வடையச் செய்யலாம். அல்லது நடந்தவரை தோல்விகள் போதும்!, இனியாவது விழித்துக் கொள்வோம்! என்று புதிய நம்பிக்கைகளோடு கிளம்பினால், அதே நிகழ் காலம் நம்மைக் கிளர்வடையவும் செய்யும்.
எதிர் காலம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கிற காலம்!; நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிற காலமும்கூட. எப்போதுமே யாருமே சந்தித்திராத, சந்தித்து அனுபவித்துப் பார்த்திராத ஒரு கற்பனைக் காலம் அது. அங்கே நிகழமுடியாத வியப்புகள் நிகழ்வதற்கும் வாய்ப்புகள் உண்டு; தோல்விகளும் மறுபக்கத்தில் உண்டு. என்றாலும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கைகளும் லட்சியங்களும் அபரிமிதமான வெற்றிகளை நோக்கிய எதிர்பார்ப்புகளாகவே இருக்கின்றன.
"நேற்று என்பது உடைந்த பானை!; இன்று என்பது கையில் உள்ள வீணை!; நாளை என்பது மதில்மேல் பூனை!" என்பது மூன்று காலங்கள் குறித்த ஓர் அழகான பழமொழி. நேற்று என்பது நம்மால் உருவாக்கப்பட்ட அழகான பானையாக இருக்கலாம்; அந்தப் பானை பல பயனுள்ள செயல்களுக்குப் பயன்பட்டும் இருக்கலாம்; ஆனால் இன்றோ அது பயன்பாட்டுக்கு எந்த வகையிலும் ஒத்துவராத உடைந்த பானையாக மாறிவிட்டது. கடந்த காலம் நமக்கு நினைவுகளாகச் சில வழிமுறைகளைக் கற்பிக்கலாமேயொழிய, இன்றைய நமது செயல்பாடுகள் நிகழ்காலத்துக்கு ஏற்புடையதாக இருக்கும் வகையில் அது உதவ முடியாது. அதனால் தான் இன்றைய நிகழ் காலத்தைக் 'கையிலுள்ள வீணை' என்று கூறுகிறார்கள். வாசிக்க முடிந்த அளவுக்கு வாழ்வில் இனிமை சேர நிகழ்காலத்தை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.
'எதிர் காலம் என்பது மதில்மேல் பூனை' என்கிற வாசகம் ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. மதில்மேல் இருக்கிற பூனை எப்பக்கம் வேண்டுமாயினும் தாவக்கூடிய தன்மை வாய்ந்தது. நம்முடைய எதிர்காலமும் அத்தகையதே!. நாம் நம் அறிவையும் கற்பனையையும் கொண்டு, அறிவியலோடு கூடிய அழகியலாய், நமது எதிர்காலம் குறித்துப் பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருக்கலாம். ஆனால் அவை பலன் தருமா? தராதா? என்பது மதில்மேல் பூனை நிலைமைதான். எதிர்காலத்தின் பலன் வெற்றியாகவும் இருக்கலாம்; தோல்வியாகவும் அமையலாம்; நிகழப்போகிற காலத்தில் மட்டுமே அதன் இயல்புத் தன்மையை அறியமுடியும்.
பொதுவாகவே எதிர்காலம் குறித்த கணிப்பு எல்லாருக்கும் நேர்முறையானதாகவும் நம்பிக்கையானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் மனிதன் தனது கடந்த கால வாழ்வில் சந்தித்திருக்கிற தொடர் துன்பங்களும், நிகழ்காலத்திலும் அவற்றிலிருந்து மீடேறி வரமுடியாமல் தவிக்கின்ற தோல்வி அனுபவங்களும் அவனுக்கு எதிர் காலம் குறித்து நம்பிக்கையூட்டாமல் அச்சமூட்டு வதாகவே அமைந்து விடுகின்றன.
கடந்த காலத்திலும் பெரியதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை!; நிகழ் காலத்திலும் சொல்லிக்கொள்ளும்படி, நினைத்தது எதுவும் நினைத்தபடி நடக்கவில்லையென்றால் , எதிர்காலம் குறித்து மகிழ்வதற்குப் பதில் அச்சப்படவே எல்லாரும் செய்வார்கள். ஒவ்வொரு மனிதனும் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் குறித்து என்ன மனநிலையிலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எதிர்கொள்ளப்போகிற எதிர்காலம் குறித்து இரண்டு விதமான மனநிலையில் மட்டுமே அவன் செயல்படமுடியும். ஒன்று 'எதிர்காலம் என்ன ஆகுமோ?' என்று அச்சப்படுவது; மற்றொன்று என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நம்பிக்கையோடு துணிந்து எதிர்கொள்வது.
அச்சப்படுவதும், துணிந்து நிற்பதுமாகிய இரண்டுவித மனோபாவங்களுமே ஒருவகையில் எதிர்காலம் குறித்த நேர்முறை நிகழ்வுகளுக்கு வழி திறப்பவையாகவே அமையும். எப்படியென்றால், நிகழ்காலம் தான் தோல்விமயமாக இருக்கிறதே; எதிர்காலம் என்னாகுமோ? என்று அச்சம் வந்து பற்றிக்கொண்டால், அந்த அச்சத்தையே மூலதனமாகக் கொண்டு, நிகழ்காலத்திலேயே கவனமாகச் செயல்படத் தொடங்கிவிடுவோம்!; பிறகு வாய்க்கிற எதிர்காலம் நன்மைகளை வழங்குகிற பொற்காலமாகவே அமைந்து விடும்.
மற்றொரு கோணத்தில், கடந்த காலமும் நிகழ்காலமும் கசப்பான அனுபவங்களின் காலமாக அமைந்துவிட்ட பட்சத்தில், எதிர்காலமும் சொல்லிக்கொள்ளும்படி நன்மையானதாக அமையாவிடினும், அதனை நமக்கேற்றபடி, மாற்றியமைத்துக்கொள்ளும் நம்பிக்கையையும் துணிச்சலையும் பெற்றுவிடுகிறோம். அப்படித் துணிச்சலோடு செயல்படத் தொடங்கும்போது எதிர் காலத்தில் எந்தத் துன்பமும் எதிர்த்து நிற்கமுடியாமல் தூள் தூளாகிப் போகும்.
எல்லா மனிதர்களுக்கும் எதிர்காலம் குறித்த ஓர் அழகான கற்பனை உண்டு; அந்த அழகான கற்பனையை நிஜமாக்கிக் காட்டுவதும், வெறும் கனவாக்கிக் கலைத்திடுவதும், நாம் எந்த அளவுக்கு நேர்மையுடனும் உண்மையுடனும் பாடுபடுகிறோம் என்பதைப் பொறுத்தே வாய்க்கும்.
கவுதம புத்தர் வாழ்ந்த காலத்தில் ஒரு பயங்கரக் கொலை, கொள்ளைக்காரன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் மனம் திருந்தி துறவறம் மேற்கொள்வது என்று ஆசைப்பட்டான். புத்தரை அவரது மடத்தில் சந்தித்து, பாவமன்னிப்புப் பெற்றுக்கொண்டு சந்நியாசி யாகத் துறவு வாழ்க்கையைத் தொடங்குவது என்பது அவனது எண்ணம். நேராகப் புத்தரைச் சந்திக்க அவரது மடத்துக்குச் சென்றான். இவனைப் பற்றி அங்குள்ள சீடர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் மடத்துக்குள் விட மறுத்து விட்டார்கள். சற்றும் தளராமல் மடத்தின் சுற்றுச்சுவர் ஏறித்தாவிக் குதித்து மடத்துக்குள் சென்று விட்டான்.
அந்த நேரத்தில் புத்தர் பிச்சைக்காக மடத்திற்கு வெளியே சென்றிருந்தார். மடத்துக்குள் தாவிக்குதித்த கொலைகாரனைச் சீடர்கள் பிடித்தனர். புத்தருக்கு அடுத்த நிலையிலிருந்த சாரிபுத்தனிடம் அவனைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். 'புத்தரைப் பார்த்து தீட்சை பெறுவதற்காக வந்துள்ளேன்' என்றான். அவனைப் பார்த்த ஒருசில நொடிகளிலேயே அவனது ஜாதகம் முழுவதையும் மனதால் வாசித்து முடித்து விட்டார் சாரிபுத்தன்.' அவன் இந்தப்பிறவியில் பல கொலைகளையும் கொள்ளைகளையும் செய்தவன்; அதுமட்டுமல்ல, இதுவரை பிறந்த எந்தப் பிறவியிலும் அணுவளவுகூட நல்லவனாக இருந்ததில்லை' என்பதைத் தெரிந்துகொண்டார் சாரிபுத்தன்.
"புத்தரை நேருக்கு நேராகத் தரிசிக்கும் தகுதிகூட இந்தத் தீயவனுக்கு இல்லை; புத்தர் வருவதற்குள் இவன் கழுத்தைப் பிடித்து மடத்துக்கு வெளியே தள்ளிவிட்டு வாருங்கள்!" என்று சீடர்களைப் பார்த்துக் கட்டளையிட்டார் சாரிபுத்தன். "என்னது? பகவான் புத்தரைப் பார்க்கிற அருகதை கூட எனக்கு இல்லையா? பிறகு எதற்கு நான் உயிரை வைத்துக் கொண்டு இந்த உலகில் இருக்க வேண்டும்?" என்று கேட்டுவிட்டு அங்கே மடத்தில் இருந்த சுவற்றில் தன் தலையைக் கொண்டு மோதி உயிர்விடும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினான்.
அப்போது, வெளியில் சென்றிருந்த புத்தர் மடத்துக்குள் வந்துவிட்டார். உயிரை விடுவதற்காகச் சுவற்றில் மோதிக்கொண்டிருந்த அந்தக் கொடியவனின் தலையைத் தனது கரங்களால் தாங்கிப் பிடித்து அவனது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். நடந்தவற்றைச் சாரிபுத்தன் புத்தருக்கு எடுத்துரைத்தான். "அந்தக் கொலைகாரனின் இந்தப் பிறவியிலுள்ள கடந்த காலம் மட்டுமல்ல; கடந்த பிறவிகள் அனைத்திலுமே அவன் கொடியவனாகவே இருந்திருக்கிறான். நிகழ்காலத்திலும் அவன் கொடியவன் தான். அவன் இப்போது உங்களிடம் தீட்சை பெற்றாலும் எதிர்காலத்திலும் அவன் தீயவனாகவே வாழ்வானேயொழிய நல்லவனாகத் திருந்தி வாழ வாய்ப்பே கிடையாது" என்று தனது அனுமானத்தை எடுத்துரைத்தார் சாரிபுத்தன்.
புன்னகைத்தவாறே புத்தர் பேசினார், " சாரிபுத்தா நீ இந்தக் கொலைகாரனின் இறந்தகாலத்தைப் பற்றியே ஜாதகம் கணித்தாய்!. இறந்தகாலம் எப்போதும் இறந்தகாலம்தான். அது எதிர்காலம் குறித்த மாற்றங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை; இவனை என்னிடம் விடு!; ஒரு வாரத்தில் இவனைத் திருந்திய மனிதனாக மாற்றிக் காட்டுகிறேன்; வாழ்க்கையில் நல்லவர்களைவிட வெகு சீக்கிரத்தில் கெட்டவர்கள் திருந்தி விடுவார்கள். கடந்தகாலம் எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் திருந்தி நேர்மையுடன் வாழ முயற்சிக்கும் எல்லாருக்கும் எதிர்காலம் நல்ல காலம்தான்!" என்று கூறி அவனைச் சந்நியாசி ஆக்கித் தன்னோடு சேர்த்துக்கொண்டார்.
எதிர்காலம் என்பது எழுதப்படாத காகிதம் போன்றது; அதில் நாம் அழகிய சித்திரங்கள் வரையலாம். வரைந்த சித்திரங்களைச் சிதைக்கவும் செய்யலாம். சிலர் எதுவுமே எழுதாமல் வெற்றுத் தாள்களாகவே வைத்திருக்கலாம். மதிப்புடைய அழகிய வாழ்க்கையை வாழ்ந்து சாதனைச் சுவடுகளைப் பதிக்க நினைப்பவர்களுக்கு எதிர்காலம் எப்போதும் ஏற்றம்தரும் காலமாகவே அமையும்.
'அச்சமே கீழ்களது ஆசாரம்' என்று குறிப்பிடும் திருவள்ளுவர் அச்சமின்மையே மேன்மக்களாக வாழத் துடிப்பவர்களின் செயலாயுதம் என்பதை வலியுறுத்துகிறார். அவரே, 'எண்ணித் துணிக கருமம்!' என்று கூறி எச்செயலையும் துணிச்சல் குன்றாத சிந்தனையூக்கத்துடன் எதிர்கொள்ளப் பழகச் சொல்கிறார். எதிர்காலம் குறித்த அச்சம், எல்லாருக்கும் முதலில் தோன்றுவது இயல்பானது என்றாலும், அந்த அச்சத்தைக் கவனப்படுத்தும் செயல்முறையாக்கித், துணிச்சலை ஆயுதமாக்கி எதிர்கொண்டால் எதிர்காலம் என்றும் நல்ல காலமே!.
தொடர்புக்கு - 9443190098