சிறப்புக் கட்டுரைகள்

மார்கழி மாதமும் பாவைப் பாடல்களும்!

Published On 2024-12-21 11:00 GMT   |   Update On 2024-12-21 11:00 GMT
  • பாவைப் பாடல்கள் மதுர பாவனையை ஆதாரமாகக் கொண்டவை.
  • முற்கால அடியவர்கள் பலர் மதுர பாவனையில் பக்தி செய்திருக்கிறார்கள்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் மார்கழி மிகவும் விசேஷமானது. மாதங்களில், தான் மார்கழியாக இருப்பதாகக் கிருஷ்ண பகவான் குறிப்பிடுகிறார். அதனால் மார்கழி தேவர் மாதம் எனப்படுகிறது.

ஆண்டவனுக்கு உகந்த மார்கழி மாதத்தில் பக்தி செய்வதன் மூலம் இறைவனை எளிதாக அடையலாம் என்கிறார்கள் சமயச் சான்றோர்கள். இறைவனை நினைப்பதற்கான மாதமாக இது கருதப்படுவதால், இந்த மாதத்தில் திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப் படுவதில்லை.

வைணவ நூலான ஆண்டாளின் திருப்பாவை, சைவ நூலான மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இரண்டுமே மார்கழியில் அன்பர்களால் நாள்தோறும் ஓதப்படுகின்றன.

இந்த நூல்களைப் பாராயணம் செய்வதன் மூலம் மனம் தீய நினைவுகளிலிருந்து விடுபட்டுத் தூய நினைவுகளில் ஆழ்கிறது. இந்த இரு பாவை நூல்களும் பாவை நோன்பு நோற்கும் பெண்களைப் பற்றிப் பேசுகின்றன.

ஐயப்பனுக்கு விரதமிருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடுவது, செருப்பு அணிந்துகொள்ளாமல் இருப்பது, அசைவ உணவைத் தவிர்ப்பது, கறுப்பு ஆடை உடுத்திக் கொள்வது போன்ற நியமங்களைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம்.


அதுபோலவே பாவை நோன்பு நோற்கும் பெண்களுக்கும் அவர்கள் அனுசரிக்க வேண்டிய சில நியமங்கள் உள்ளன.

பாவை நோன்பில் ஈடுபடும் பெண்கள் நோன்புக் காலத்தில் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது, பால் அருந்தக் கூடாது, அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும், கண்களில் மை இட்டுக்கொள்ளக் கூடாது, கூந்தலில் மலர் சூடிக் கொள்ளுதல் போன்ற அலங்காரங்கள் எதையும் செய்து கொள்ளக் கூடாது.

`நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்`

என்றெல்லாம் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் வரும் வரிகள் பாவை நோன்பின் விதிமுறைகளை விவரிக்கின்றன.

பாவைப் பாடல்கள் மதுர பாவனையை ஆதாரமாகக் கொண்டவை. தொன்று தொட்டு வரும் பக்தி மரபில் ஒன்றுதான் மதுர பாவனையில் பக்தி செய்தல். கோபிகைகள் கண்ணனை பக்தி செய்தது மதுர பாவனை முறையில்தான்.

இறைவனாகிய பரமாத்மா மட்டுமே ஆண் என்றும், உலகில் உள்ள மற்றைய ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெண் என்றும் கருதி பரமாத்மா மேல் ஜீவாத்மா காதல் கொள்வதான பாவனையில் பக்தி செய்வதே மதுர பாவனை எனப்படுகிறது.

முற்கால அடியவர்கள் பலர் மதுர பாவனையில் பக்தி செய்திருக்கிறார்கள். அண்மைக்கால அடியவரான பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர், சிறிதுகாலம் மதுர பாவனையை அனுசரித்து பக்தி செய்தார் என்பதை சுவாமி சாரதானந்தர் எழுதிய குருதேவரின் ஆராய்ச்சிபூர்வமான வாழ்க்கை வரலாற்று நூல் தெரிவிக்கிறது.

பாவைப் பாடல்கள், பக்தர் தம்மைக் காதலியாகவும் தாம் வழிபடும் இறைவனைக் காதலனாகவும் பாவித்துக் கொண்டு பாடும் மரபைச் சார்ந்தவை.

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டுமே பாவை நோன்பு நோற்று இறைவனை அடைதலை வழியாகக் கொண்டவை. இறைவனே தங்களுக்குக் கணவனாக வரவேண்டும் என மகளிர் வேண்டிக் கொள்வதாகப் பாவைப் பாடல்கள் அமைந்துள்ளன. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் கருக்கல் நேரத்தில் எழுந்து நீராடி இறைவனைத் தொழுது அனுசரிப்பதே இந்நோன்பு.

அதிகாலையில் பெண்கள் ஒருவர் இல்லத்திற்கு மற்றொருவர் சென்று, ஒருவரை ஒருவர் துயில் எழுப்பிக் கொண்டு பாவை நோன்பை அனுசரிக்கும் பொருட்டு குளத்தில் நீராடச் செல்வார்கள்.

அவ்விதம் செல்லும் பெண்கள் தங்கள் தோழியரின் இல்லத்திற்குச் சென்று காலையில் தோழியரைத் துயிலெழுப்புவதாகப் பாவைப் பாடல்கள் அமையும்.

திருப்பாவை திருவெம்பாவை ஆகிய இரண்டு பாவை நூல்களிலும் இந்த உத்தியிலேயே பாடல்கள் அமைந்து அவை திருமாலையும் சிவபெருமானையும் போற்றுகின்றன.

அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுப்புவது என்பது வெறும் துயிலெழுப்புதல் அல்ல. அதற்கு தத்துவ ரீதியாக ஆழ்ந்த பொருள் உண்டு.

ஜீவான்மா மாயை என்ற இருளில் சிக்கிக் கிடக்கிறது. தான் சென்று சேரவேண்டிய இடம் எது என்று அறிய இயலாமல் அறியாமை இருள் அதை மூடியுள்ளது.

ஜீவான்மாவை எழுப்பி அதற்கு பரமான்மா என்கிற ஒளியை அறிமுகப்படுத்துவதே பாவை நோன்பின் நோக்கம்.

வைணவ நூலான திருப்பாவையின் பெருமையைத் தான் செல்லுமிடங்களில் எல்லாம் பேசி அதன் புகழைப் பரப்பியவர்களில் முக்கியமானவர் சைவத் துறவியான காஞ்சிப் பரமாச்சாரியார்.

சைவ வைணவ ஒற்றுமைக்கு திருப்பாவை திருவெம்பாவை என்ற இரண்டு நூல்களுமே வழிகாட்டுகின்றன என்றார் அவர்.

திருப்பாவையின் முதல் பாடல், `மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்` என மாணிக்க வாசகரின் முதல் எழுத்தில் தொடங்குகிறது என்றும், திருவெம்பாவையின் முதல் பாடல் `ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்` என ஆண்டாளின் முதல் எழுத்தில் தொடங்குகிறது என்றும் இந்த இரு நூல்களையுமே மார்கழி மாதத்தில் பக்தர்கள் ஓதுவதன் மூலம் நிறைந்த ஆன்மிகப் பயன்களைப் பெற முடியும் என்றும் குறிப்பிட்டார் அவர்.

திருப்பாவையை அருளிய ஆண்டாள் சிறு குழந்தையாக துளசிச் செடியின்கீழ் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். புனிதமே வடிவானவர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார்களில் இவர் மட்டுமே பெண்.

திருப்பூர் கிருஷ்ணன்


பெருமாள் கோயில்கள் பலவற்றில் ஆண்டாளுக்கென்று தனிச் சன்னிதி உண்டு. திருமாலைப் பாடித் திருவரங்கத்தில் திருமாலுடன் கலந்து தெய்வமாகவே மாறிய ஆண்டாளைச் சிலை வடிவில் வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

ஆண் அடியவர்கள் மதுர பாவனையின் பொருட்டுத் தங்களைப் பெண்ணாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆண்டாளுக்கோ அவரே பெண் என்பதால் மதுர பாவனையில் பக்தி செய்வது மிகவும் இயல்பாயிற்று.

தன்னைக் கண்ணனின் காதலியாகக் கருதி ஆண்டாள் எழுதிய பாசுரங்கள்தான் திருப்பாவை எனப் போற்றப் படுகின்றன. திருப்பாவையின் ஒவ்வொரு பாடலும் பக்தி இலக்கியத்தின் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றது.

திருப்பாவையைப் பாராயணம் செய்தால் பாகவதம், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட புனித நூல்கள் அனைத்தையும் பாராயணம் செய்த பலன் கிட்டும் என்பதுண்டு.

காரணம் அந்தப் புனித நூல்களில் உள்ள பல புராணச் செய்திகள் திருப்பாவையில் இடம்பெற்றுள்ளன.

ஆண்டாள் `திருப்பாவை, நாச்சியார் திருமொழி` என்ற இரண்டு கவிதை நூல்களின் ஆசிரியர். ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களையும் அவரது நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்து மூன்று பாடல்களையும் கொண்டது.

நாச்சியார் திருமொழியில் கண்ணனைத் திருமணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனவைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

`வாரணமாயிரம் சூழ வலம்வந்து

நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்.`

`மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் முறைதாழ்ந்த பந்தர்க்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்...`

`கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண்சங்கே!`

இப்படியெல்லாம் வரும் பாடல்கள் ஜீவான்மா பரமான்மாவோடு கலக்கவிரும்பும் வேட்கையின் உச்சத்தைப் புலப்படுத்துகின்றன.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் வேதங்களுக்கு நிகரானவை என அன்பர்களால் கொண்டாடப் படுமளவு பெருமை படைத்தவை.

திருவெம்பாவையை அருளியவர் மாணிக்க வாசகர். திருவாசகம் எழுதிய பெருமைக்குரியவர். திருவாசகத்தின் ஒரு பகுதியாகவே திருவெம்பாவை இடம் பெற்றுள்ளது.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டவர் இராமலிங்க வள்ளலார்.

`வான்கலந்த மாணிக்க வாசக!நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!`

என்ற பாடல் மூலம் மாணிக்கவாசகரின் பெருமையை வள்ளலார் உரத்துச் சொல்கிறார். மாணிக்கவாசகர் திருவாசகம் தவிர திருக்கோவையார் என்ற நூலையும் படைத்துள்ளார்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. மாணிக்கவாசகர் திருவண்ணாமலையைத் தரிசிக்கும்போது அருளிய பாடல்கள் அவை. `அருட்பெருஞ்சோதி, அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கொரு மருந்து, வேத விழுப்பொருள்` என்றெல்லாம் சிவன் திருவெம்பாவையில் போற்றப்படுகிறார்.

மாணிக்கவாசகரே எழுதிய திருப்பள்ளியெழுச்சி பத்துப் பாடல்களைக் கொண்டது. வைணவர்கள் மார்கழி மாதம் திருப்பாவை முப்பது பாடல்களைப் பாடுவது போன்றே திருவெம்பாவையின் இருபது பாடல்கள் திருப்பள்ளி எழுச்சியின் பத்துப் பாடல்கள் இரண்டையும் சேர்த்து முப்பது பாடல்களாகச் சைவர்கள் ஓதுகின்றனர்.

தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டு விழாவின்போது திருப்பாவை திருவெம்பாவை ஆகிய இரண்டும் பாடப்படுகின்றன.

திருப்பதி வேங்கடவன் சன்னிதியிலும் மார்கழி மாதத்தில் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருமாலின் காதலியான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஒலிக்கிறது.

பெருமாள் கோயில்கள் அனைத்திலும் மார்கழி மாதத்தில் திருப்பாவை அதிகாலை நேரத்தில் ஒலிக்கிறது.

தமிழின் பரந்த பக்தி இலக்கியத்தில் திருப்பாவை திருவெம்பாவை ஆகிய இரண்டு நூல்களுக்கும் உள்ள இடம் மிக முக்கியமானது.

மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவையையும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையையும் பாராயணம் செய்வதன் மூலம் இம்மைப்பயன், மறுமைப் பயன் இரண்டையும் நாம் அடைய முடியும்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News