சிறப்புக் கட்டுரைகள்
null

உசுரே நீ தானே!... அத்தியாயம்- 11

Published On 2024-12-19 11:45 GMT   |   Update On 2024-12-19 11:45 GMT
  • திவ்யாவின் அம்மா கிட்டத்தட்ட கத்தினாள்.
  • எல்லோரிடமும் திவ்யா காணாமல் போன பதட்டம் இருந்தது.

தன் காதல் மனைவி திவ்யா, கண் எதிரே, 'டிரக் 'குடன் காணாமல் போனதை பார்த்து சில நிமிடங்கள் நிலை குலைந்து போய்விட்டான் டேவிட். உடல் படபடக்க, வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து ரத்தம் அழுத்தம் ஏறி தலை கிறுகிறுக்க, என்ன செய்ய? ஏது செய்ய? என்ற குழப்பத்தில் அருகில் இருந்த மைல் கல்லில் அப்படியே உட்கார்ந்து விட்டான்.

ஒரு நிமிஷம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு யோசித்தான். -"திவ்யா தூங்கவில்லை, மயங்கி இருக்கிறாள். குடித்த ஜூஸில் ஏதோ கலந்து இருக்கிறான் அந்த டிரைவர் மனோகர்!".

"பாட்டில் கவர் சீல் செய்யப்பட்டு இருந்ததே. ஒருவேளை இன்ஜெக்ஷன் மூலம் மயக்க மருந்தை ஜூஸில் செலுத்தி இருக்காலாம். பாட்டில் மூடி திறக்கும் போது, கையில் ஜூஸின் திரவம் பிசுபிசுக்கும் போதே யோசித்து இருக்கணும்…!"

"கடவுளே.. திவ்யாவுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது. அவள் தைரியமானவள். அந்த மனோகரால் அவளை ஒன்றும் செய்ய முடியாது..!"

"சரி.. இப்போ நான் என்ன செய்யணும்..!"

இப்படி பலவாறாக யோசித்த டேவிட் 'டக்' கென்று முடிவு செய்து செல்போனை எடுத்து திவ்யா போனுக்கு டயல் செய்ய அது ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. வேறு வழியின்றி நண்பன் செந்திலை அழைத்தான்.


'டிரக்' போய்க்கொண்டிருந்தது. உள்ளே கேபினில் டிரைவர் மனோகர். அருகில் உள்ள சீட்டில் படுத்திருந்தாள் திவ்யா. அவளையே உற்று நோக்கியபடி, டிரக்கை ஒட்டியபடி மனோகர், 'நல்லா அழகாத்தான் இருக்கா. இவ மயக்கம் தெளியறதுக்குள்ள, காரியத்த முடிச்சருனும்' - யோசித்தவன் அங்கிருந்த திவ்யாவோட ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட போனை தூக்கி வெளியில் எறிந்தான்.

பின்னர் தன்னுடைய செல்போனில் இருந்து யாருக்கோ டயல் செய்தான். "ம்.. சரி.. சரி.. வந்துடுறேன்" என போனை கட் செய்தான். டிரக் போய்க்கொண்டிருந்த, தார் சாலையில் இருந்து, இடது புறமாய் உள்ள ஒரு ஒற்றையடி செம்மண் சாலையில் திரும்பி சென்றது.

"என்னங்க சொல்றிங்க திவ்யாவ யாரோ ஒரு 'டிரக்'காரன் கடத்திட்டானா? ஐயோ.. மணி ராத்திரி 12 தாண்டிடுச்சே. என் புள்ளைய என்ன பண்ணானோ படுபாவி. இப்ப என்னங்க பண்றது."

திவ்யாவின் அம்மா ராஜேஸ்வரி கிட்டத்தட்ட கத்தினாள்.

இயக்குநர் A. ெவங்கடேஷ்

"பொரும்மா… மாப்பிள்ளை போன் பண்ணி அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்காரு. இப்பதான் செந்தில் தம்பி தகவல் சொன்னாரு. அவங்க இப்பவே கிளம்புறாங்களாம். போய் டேவிட் வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வந்து, நம்மளையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.. சீக்கிரம் கிளம்பு!. என திவயாவின் அப்பா ரங்கராஜன் சொல்லவும், பதறியபடியே

"இப்ப மாப்பிள்ளை எங்க இருக்காரு?"

"மேலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன். அங்க வாங்கன்னு பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்காரு!"

பதட்டம் குறையாத ராஜேஸ்வரி, கெஞ்சும் குரலில் திவ்யா அப்பாவிடம் கேட்டாள்.

"எதுக்கும் நம்ம பையன் பெருமாளுக்கு ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லலாங்களா..?

"அதெல்லாம் தேவையில்லை. அவன் அரசியல் பலத்துல நமக்கு உதவுவான்னு நினைக்குற.. அவன் கோவத்துல இந்த வீட்ட விட்டு போனவன். இன்னிக்கு வர பேசல. இப்ப இந்த நியூஸ் தெரிஞ்சு சந்தோசம்தான் படுவான். உதவி செய்றவனா இருந்தா, எப்பவோ, எவ்வளவோ பண்ணி இருக்கலாம். இப்போ… என் பொண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. கடவுளே… அவளுக்கு எதுவும் ஆயிடக்கூடாது..."

குரல் உடைந்து அவரும் நிலை குலைந்து சேரில் அமர்ந்தார். தளர்ந்து அமர்ந்த தனது கணவரின் தோளை பிடித்து ஆசுவாசப்படுத்தினாள் ராஜேஸ்வரி. அப்போது டேவிட்டின் நண்பர்கள், அவர்களுடன் டேவிட்டின் அம்மா, அப்பா, தங்கை எல்லோருமாய் ஒரு வேனில் வந்து இறங்கினர். எல்லோரிடமும் திவ்யா காணாமல் போன பதட்டம் இருந்தது.

மேலூர் போலீஸ் ஸ்டேஷன்.

அந்த இன்ஸ்பெக்டர் வேறு யாரும் இல்லை. டேவிட், திவ்யாவிடம் ரவுடிகள் கலாட்டா செய்தபோது, அந்த கேசை விசாரித்தாரே அதே இன்ஸ்பெக்டர் அழகர் தான். அதே முறுக்கு மீசையும், தொப்பையுமாக நின்றார்.

டேவிட் அதிர்ச்சியாய் பார்க்க, அந்த இன்ஸ்பெக்டர் "என்ன சார்.. வாழ்க்கை நம்ம ரெண்டுபேரையும் மீண்டும் சந்திக்க வைக்குது. அன்னிக்கு உங்க மச்சான், உங்க கேசு விஷயமா வந்து, ஸ்டேஷன்ல கத்திட்டு போனாரா.. மறுநாளே எனக்கு டிரான்ஸ்வர். இந்த ஸ்டேஷனுக்கு மாத்திட்டாங்க. இங்க வந்து ரெண்டு நாள்தான் ஆகுது. பொண்டாட்டிய 'டிரக்' காரன் கடத்திட்டான்னு நீங்க இங்க வந்து நிக்கிறீங்க…"

டேவிட் என்ன பதில் சொல்வது என்று தெரியாத மனநிலையில் நின்றான். "போங்க சார்… ரைட்டர் கிட்ட நடந்த எல்லாத்தையும் டீடெயிலா ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க.."

டேவிட் ரைட்டர் டேபிளுக்கு செல்ல, பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளிடம், "யோவ்.. எல்லா டோல்கேட், போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணுங்க. சிகப்பு கலரு டிரக், கேரளா ரிஜிஸ்டிரேசன், தாடி, கூலிங் கிளாஸ் போட்ட டிரைவர் பேரு மனோகர், பொண்ணு கிட்னாப் கேசுன்னு சொல்லுங்க..!"

கான்ஸ்டபிள் நகர,

"முன்ன பின்ன தெரியாத டிரக்ல ஏறப்போ, நம்பர் கூட நோட் பண்ணாம இருந்து இருக்கீங்களே… என்ன படிச்சு என்ன பிரயோஜனம். டேவிட்டை பார்த்து, சலிப்பாய் கூறினார் இன்ஸ்பெக்டர் அழகர்.

அப்போது ஒரு போனை அட்டெண்ட் பண்ணி எழுந்த கான்ஸ்டபிள், "சார்.. இவரு மனைவி திவ்யாவோட செல்போன் ஜிபிஎஸ் டிராக பண்ணதுல, மேலூர் கூடிரோட்ல, காட்டுச்சாம்… போய் பார்த்தா போன் ஒரு பையன் வச்சு இருக்கானாம். கூடிரோடு, புதர்ல கிடந்து எடுத்தேன்னு அவன் சொன்னானாம். கடத்துனவன், போனை ஆப் பண்ணி, தூக்கி போட்டு போயிருக்கான்…"

"ப்ச்.. கடத்துன டிரக் டிரைவர் மனோகர் பிரிலியண்டாவே 'மூவ்' பண்ணி இருக்கான். அப்போ அவன் ஒரு புரொபஷனல் கிட்நாபர்."இன்ஸ்பெக்டர் அழகர் தனக்குள் பேசியபடி யோசித்தார். அப்போது வாசலில் வந்து நின்ற வேனில் அனைவரும் இறங்கினர்.

"டேவிட்டு… திவ்யாவுக்கு என்னடா ஆச்சு"

அலறி அடித்தபடி டேவிட்டின் அம்மா லிசா ஓடி வந்து டேவிட்டின் கைகளை பிடிக்க, கூடவே திவ்யாவின் அம்மா அழுதபடி வர, வந்து இறங்கிய அனைவரும், ஒரே பதட்டத்தோடு ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கேட்க, ஸ்டேஷன் பரபரப்பானது.

சற்று நேரம் பொறுத்து பார்த்த இன்ஸ்பெக்டர் அழகர், "அமைதி.. அமைதி..!" என கத்தி அலறல்களை ஆசுவாசப்படுத்தினார்.

அனைவரும் அமைதியாகி அவரை பார்க்க,

"இவரு நெல்லை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த இன்ஸ்பெக்டராச்சே?" செந்தில் 'கிசுகிசுப்பாய்' நெல்சனிடம் கேட்க.. "என்னை இந்த ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் பண்ணது திவ்யாவோட அண்ணன் பெருமாள் தான்!" என்று இன்ஸ்பெக்டர் அழகர் சொல்லவும், அனைவரும் அவரையே பார்க்க,

"அன்னைக்கு, அவரு ஸ்டேஷன் வந்தாரு இல்ல.. அப்ப நீங்கல்லாம் கூட அவர அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி வச்சீங்களே.. அன்னிக்கு கோபமா போனவரு.. அவரோட அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, என்னைய இந்த ஸ்டேஷனுக்கு உடனே தூக்கி அடிச்சிட்டாரு!"

"எங்க மேல உள்ள கோபத்துல… உங்கள எதுக்கு டிரான்ஸ்பர்…? தியாகு கேட்டான்.

"ஆங்… அன்னிக்கு கேசை ஒழுங்கா விசாரிச்சு இருந்தா.. அவரு ஸ்டேஷனுக்கு வந்து இருக்க மாட்டாராம்.. தங்கச்சிக்காக வரப்போயி நீங்க எல்லாம் அவர தரக்குறைவா நடத்துனதுக்கு நான்தான் காரணமாம்…! எங்க இடிச்சு, எங்க முடியுது பார்த்தீங்களா..?"

அனைவரும் பார்க்க,

"இப்ப பாருங்க.. மறுபடியும் நான் வந்த ஸ்டேசனுக்கே., அவர் தங்கச்சிய 'கிட்நாப்' பண்ண கேசு என்கிட்டையே வந்துருக்கு… இது என்னமோ விட்ட குறை தொட்ட குறை மாதிரி இந்த திவ்யா கேசு.. விடாது கருப்புன்னு என்னையே துரத்துது.."என இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு, பின் அவர்களை பார்த்து,

"இன்னும் இந்த 'கிட்நாப்' விசயத்தை பெருமாள் சாருக்கு நீங்க யாரும் தகவல் சொல்லலியா..?" என கேட்க.. அவர்கள் 'இல்லை' என தலையாட்டினர்.

திவ்யாவின் அப்பா முன்வந்து, "எங்களுக்கு அதுல விருப்பம் இல்லை சார்.. இப்ப அது முக்கியம் இல்ல. திவ்யாவை பத்தி எதுவும் தகவல் கிடைச்சதா.. அத சொல்லுங்க..!" என நா தழுதழுக்க கேட்டார்.

"ஒரு பெண்ணோட அப்பாவா உங்க பதட்டமும், பயமும் புரியுது சார்.. ஆனா, புரிஞ்சுக்கோங்க… நாங்க போலீஸ் தான். மந்திரவாதி இல்லை. மை போட்டு பார்த்து, உடனே உங்க பொண்ணு எந்த இடத்துல இருக்கான்னு சொல்ல…!"

திவ்யாவின் அம்மா தேம்பி அழ, அவளை தோளோடு அணைத்து ஆறுதல்படுத்தினாள், மேரி.

"பொதுவா.. இந்த மாதிரி கேசுல 'கிட்நாப்' காரணம் தெரியணும். கிட்நாப் பண்ணவன் எதுக்கு பண்ணினான்னு தெரியணும்னா, அவன் உங்களில் யாருக்காவது, இந்நேரம் போன் பண்ணி இருக்கணும்… அவன் திவ்யாவை ஏதாவது பண்றதுக்கு முன்னாடி, கண்டுபிடிக்க, மொத்த போலீசும் வயர்லெஸ்ல அலறிகிட்டு இருக்காங்க. ரோந்து போலீஸ், ஹைவேஸ், பேடிரோல் எல்லாரும் அலார்ட்டா இருக்காங்க.. பொறுமையா இருங்க, திவ்யாவுக்கு ஏதும் நடக்காது.. கண்டுபுடிச்சுடலாம்…"

அவர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவது போல் இருந்தது இன்ஸ்பெக்டர் அழகரின் கனிவான பேச்சு. அப்போது போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போன் அடித்தது. எடுத்து பேசிய கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரை பார்த்து கத்தினார். "சார்.. திவ்யாவை கடத்தின கடத்தல்காரன் பேசுறான் சார்!"

அனைவரும் அந்த டெலிபோனை நோக்கி ஓடினர். ரிசிவரை வாங்கி காதில் வைத்த இன்ஸ்பெக்டர் அழகர் முகம் அதிர்ச்சியில் உறைந்தது…

(தொடரும்

E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353

Tags:    

Similar News