சிறப்புக் கட்டுரைகள்
null

ஆன்மிகம் எனும் பிரம்மாண்டம்

Published On 2024-12-20 11:45 GMT   |   Update On 2024-12-20 11:45 GMT
  • நீங்கள் கேள்விப் படாத ஒரு மகாபாரதக் கதை.
  • சத்திரத்தில் பல தேசங்களைச் சேர்ந்த பலரும் தங்கி இருந்தனர்.

மாலை மலர் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஆன்மிக அறிவியல் எனும் இந்தத் தொடரின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துள்ளேன்.

இந்தத் தொடரின் மூலம் எவரையும் கரடு முரடான தத்துவ விளக்கங்களுக்குள் அழைத்துச் சென்று மூழ்கடிக்கப் போவதில்லை.

மாறாக இந்தத் தொடர், உங்களது அன்றாடப் பிரச்சனைகளை ஆன்மிகக் கதைகள் வாயிலாக ஆய்ந்திடும் ஒரு கதாகாலச்சேபமாக மட்டுமே அமையப் போகிறது.

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கும், ஆன்மிகத் தேடலில் முடிவு காண முடியாதிருப்பவர்களுக்கும், மனோரீதியான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இத்தொடர் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இந்தத் தொடரின் முடிவில் நீங்கள் ஒரு ஞானியாகவே மலர்ந்தாலும் கூட நாங்கள் எவரும் ஆச்சரியம் அடையமாட்டோம்.

புதியதான ஒன்றை எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம்?

நாம் அனைவரும் ஏற்கனவே பலவற்றைத் தெரிந்து வைத்துள்ளோம். தெரிந்து கொண்ட அவற்றின் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய புதியவைகளையும் அளந்து பார்க்கின்றோம்.

நீங்கள் கேள்விப் படாத ஒரு மகாபாரதக் கதை. பாண்டவர்களும், கவுரவர்களும் போர் புரிந்தார்கள்.

தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் எனும் பஞ்ச பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள்.

தர்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது . பட்டாபிஷேகத்தின் போது தர்மன் மக்களுக்கு தானதர்மங்களை வழங்கினார்.

அவரது தானதர்மத்தை பலரும் போற்றிப் புகழ்ந்ததால் தர்மன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எவராலும் இப்படி ஒரு தானதர்மத்தை செய்ய முடியாது என்ற கர்வமும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் இதேபோல் தொடர்ந்து தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

அவருடைய எண்ண ஓட்டம் அவருடன் இருந்த கிருஷ்ணருக்குத் தெரிந்தது.

"வேறு நாடுகளையும் பார்த்து வருவோம் வா!" என்று சொல்லி கிருஷ்ணர் அவரைக் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.

இருவரும், பாதாள லோகத்தை ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தியின் நாட்டுக்கு வந்தனர்.

அரண்மனை வாயிலில் நின்ற காவலனிடம், தான் வந்துள்ள விபரத்தை மகாபலி சக்கரவர்த்தியிடம் தெரிவிக்குமாறு தர்மன் கூறினார்.

காவலனும் புறப்பட்டுச் சென்று, சக்கரவர்த்தியிடம் விபரத்தைக் கூறினான்.

அதற்கு மகாபலி சக்கரவர்த்தியும், "தானதர்மங்களைச் செய்யும் தர்மன் என்ற சண்டாளனா வந்துள்ளான் ? அந்த சண்டாளனை சந்திக்க நான் விரும்பல்லை" என்று கூறி விட்டார்.

வாயில்காப்போன் திரும்பி வந்து தர்மனிடம் விபரத்தைக் கூறினான்.

தர்மனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. உலகமே போற்றிப் புகழும் தானதர்மத்தை பழித்துப் பேசும் இந்த மகாபலி சக்கரவர்த்தி நல்லவனாக இருக்க முடியாது. அவனை நாமும் சந்திக்க வேண்டாம் என முடிவு செய்து கிருஷ்ணரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இருவரும் ஒரு தெருவின் வழியாக வரும்போது அவர்கள் இருவருக்கும் நல்ல தாகம் ஏற்பட்டது.

அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.

வயதான பெண்மணி ஒருவர் இருவருக்கும் தங்கச் செம்புகளில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

தங்களுடைய தகுதியை அறிந்து தங்கச் செம்புகளில் தண்ணீர் தந்திருப்பதாக எண்ணிக் கொண்டனர்.

இருவரும் தாகம் தீர்ந்திடும் வரையிலும் தண்ணீர் குடித்து விட்டு தங்கச் செம்புகளை அந்தப் பெண்மணியிடம் திரும்பக் கொடுத்தார்கள்.

அந்தப் பெண்மணியும் அந்த தங்கச் செம்புகளை வாங்கி அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்.

தர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர் அந்தப் பெண்ணிடம், "இது சாதாரண செம்பு இல்லையே அம்மா. தங்கச் செம்பல்லவா இது! உங்களுக்கு வேண்டாம் என்றால் யாருக்காவது கொடுத்து விடலாமே அம்மா?" என்று கேட்டார்.

"உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்களே வைத்துக் கொள்ளலாம். இங்கு யாரிடம் கொடுத்தாலும் வாங்கமாட்டார்கள்.

ஏதோவொரு நாட்டை தர்மன் என்று ஒரு சண்டாளன் ஆட்சி செய்கிறானாம். அவன் தான் இப்படி தானதர்மங்கள் எல்லாம் செய்கிறானாம். எங்கள் மகாபலி சக்கரவர்த்தி ஆட்சியில் எவருக்கும் எந்தத் தேவையும் இல்லை. எல்லா வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. எவரும் எவரிடமும் வாங்கவும் தேவையில்லை கொடுக்கவும் தேவை இல்லை" என்று அந்த அம்மா சொல்லி முடித்தார்.

ஸ்ரீ பகவத்

தானதர்மம் உயர்ந்தது என்ற நமது பொதுவான கண்ணோட்டம், சில வேளைகளில் தவறானதாகவும் இருந்து விடலாம்.

ஏனெனில் தர்மனை குணசீலம் மிகுந்தவர் என்றும், அடுத்தவர்களுக்கு வாரிக் கொடுப்பவர், உயர்ந்தவர் என்றும் எண்ணியிருந்தோம்.

அதனால் தர்மனைப் புறக்கணித்த மகாபலி சக்கரவர்த்தி நமக்கு ஒரு வில்லன் போலவே தோற்றமளித்தார்.

உண்மை தெரிந்த பிறகு அவர் தர்மனை விடவும் உயர்ந்து காணப்படுகிறார்.

இப்படி ஆன்மிகம் என்பது சம்பந்தமாகவும் நமக்கு நம்மையறியாமலேயே சில கருத்துகள் உள்ளன.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி.

"உலகத்திலேயே பிரம்மாண்டமானது எது?"

ஆகாயத்தை விட பிரம்மாண்டமானது ஏதாவது இருக்க முடியுமா?

ஆகாயந்தான் பிரம்மாண்டமானது .

உங்களிடம் இன்னும் ஒரு கேள்வி .

உலகத்திலேயே மிகவும் சாதாரணமானது எது?

ஆகாயத்தை விடவும் சர்வ சாதாரணமானது ஏதாவது இருக்க முடியுமா?

சர்வ சாதாரணமாக இருப்பதும் இந்த ஆகாயமே .

இதே தன்மையில் தான் ஆன்மாவும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

எனது உடல் அழிந்துவிடும்; எனது மனமும் அழிந்துவிடும். ஆனால் எனது ஆன்மா மட்டும் அழியவே அழியாது என்று நம்மைப் பற்றி ஆன்மிக சாஸ்திரங்கள் அனைத்தும் கூறுகின்றன.

சாஸ்திரங்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா?

ஆன்மாவைப் பற்றி சாஸ்திரங்கள் வேறு என்னவெல்லாம் கூறுகின்றன?

ஆன்மாவுக்கு அழிவே கிடையாது;

ஆன்மா நீரில் நனையாது; நெருப்பில் வேகாது. - இப்படியெல்லாம் ஆன்மாவைப் பற்றி நமது சாஸ்திரங்கள் அடுக்கடுக்காகக் கூறுகின்றன .

அழியக் கூடிய உடலோ மனமோ நாமல்ல. அழிவற்ற ஆன்மாவே நாம். -ஆன்மிக சாஸ்திரங்கள் இப்படி எல்லாம் நம்மைப் பற்றிக் கூறுகின்றன .

அந்தக் காலத்தில் நடந்ததாக ஒரு கதை.

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இளைஞன் ஒருவன் ஒரு சத்திரத்தில் தங்கியிருந்தான்.

அந்த சத்திரத்தில் பல தேசங்களைச் சேர்ந்த பலரும் தங்கி இருந்தனர்.

இரவு வந்தது. அங்கு இருந்த பெரிய ஹாலில் பலரும் படுத்துத் தூங்க ஆரம்பித்தனர்.

தேவையான படுக்கை வழங்கப்பட்டிருந்தும், அந்த இளைஞன் மட்டும் தூங்காமல் அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

என்னவென்று கேட்டு, சத்திரத்தின் மேலாளர் அவனை விசாரித்தார் .

அவன் வினோதமான காரணம் ஒன்றைக் கூறினான்:

"அய்யா நான் குழந்தையாக இருந்தபோது எனது பெற்றோர் பக்கத்து ஊரில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டார்கள். திருவிழா கூட்டம் அதிகமாக இருந்தது...

அந்தக் கூட்டத்தோடு கலந்து நான் தொலைந்து போய் விட்டேன். நான் எனது பெற்றோரைக் கண்டுபிடிக்க முடியாமலும், எனது பெற்றோர் என்னைக் கண்டுபிடிக்க முடியாமலும் சங்கடப்பட்டு விட்டோம்...

இங்கும் கூட்டம் கூட்டமாக நிறைய பேர் படுத்து இருக்கிறார்கள்.

நானும் இவர்களோடு கலந்து படுத்தேன் என்றால் மீண்டும் முன்னைப்போல் தொலைந்து போய் விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தான் இவர்களோடு கலந்து படுத்துத் தூங்க பயமாக இருக்கிறது..."

அந்த மேலாளர் அவனை சற்று விசித்திரமாகப் பார்த்தார். ஒரு முடிவுக்கு வந்த அவர் சிவப்பு நிற நாடா ஒன்றை எடுத்து வந்து அந்த இளைஞனுடைய இடது காலில் கட்டினார்.

பிறகு அவர் அவனிடம், "உனது காலில் உனக்கு என ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி விட்டேன். இனி நீ தைரியமாகத் தூங்கலாம் . எத்தனை பெரிய கூட்டத்தில் நீ தொலைந்து போனாலும் கூட , உனது காலில் கட்டியிருக்கும் சிவப்பு நாடாவை வைத்து உன்னை நீயே சுலபமாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்!" என்று கூறினார்.

அந்த இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அடைந்தான்.

அவன் அப்படியே நிம்மதியாகப் படுத்து தன்னை மறந்து தூங்க ஆரம்பித்துவிட்டான்.

அவன் நன்றாகத் தூங்கியதும், அந்த மேலாளர் அவன் காலில் கட்டியிருந்த சிவப்பு நாடாவை அவிழ்த்து ,அவனுடைய பக்கத்தில் படுத்திருந்த இன்னொரு இளைஞனுடைய காலில் கட்டிவிட்டார்.

இரவு விடிந்தது. இளைஞனும் கண்விழித்தான். கண்விழித்துப் பார்த்தால், காலில் கட்டியிருந்த சிவப்பு நாடாவைக் காணவில்லை. அந்த சிவப்பு நாடாவானது வேறு ஒரு இளைஞனுடைய காலில் காணப்பட்டு இருந்தது.

ஆலோசனை செய்தவாறே உட்கார்ந்திருந்தான். இப்போது அந்த மேலாளர் அவனைக் கேட்டார்:

"என்ன தம்பி! நீ தொலைந்து போகாமல் பத்திரமாக இருக்கிறாயா?"

அந்த இளைஞனும் மகிழ்ச்சியுடன், "அய்யா உங்கள் ஆலோசனைக்கும் உதவிக்கும் மிகவும் நன்றி . உங்கள் ஆலோசனை மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் நான் இந்தக் கூட்டத்தினுள் மாட்டி, தொலைந்து தான் போயிருப்பேன். சிவப்பு நாடாவைக் கட்டியிருந்ததால் தப்பித்துக் கொண்டேன்...

நீங்கள் கட்டிவிட்ட சிவப்பு நாடா எவருடைய காலில் உள்ளதோ அதுதான் நான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதனால் தான் தொலைந்து போகாமல் இருக்க முடிந்தது. ஆனால் இப்போது இன்னும் ஒரு பிரச்சனை...!" என்று கூறினான்.

"இதற்குப் பிறகும் என்ன உனது பிரச்சனை?" -அந்த மேலாளர் அவனைக் கேட்டார்.

"சிவப்பு நாடாவைக் கட்டியிருக்கும் நான் தொலைந்து போகாமல் பத்திரமாக இருக்கிறேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது நான் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேனே, இந்த நான் யார்?" என்று கேட்டான் அந்த இளைஞன்.

நம்முடைய நிஜ சொரூபம் ஆன்மா என்று கூறப்படுகிறது. அதே நேரம் ஆன்மாவை அறியவே முடியாது, அது அறியப்படும் பொருளல்ல என்றும் கூறப்பட்டுவிடுகின்றது.

நிஜமான ஆன்மா அல்லவா நிதர்சனமாகத் தெரிய வேண்டும்? அழியக் கூடிய உடலல்லவா நிதர்சனமாகத் தெரிகிறது?

இதனை நாம் இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்வோம்!

தொடர்புக்கு - sribagavathji@gmail.com

Tags:    

Similar News