சிறப்புக் கட்டுரைகள்

முருகனின் முதல் சீடர் அகத்தியர்!

Published On 2024-12-17 07:08 GMT   |   Update On 2024-12-17 07:08 GMT
  • கி.மு.7 அல்லது 8-ம் நூற்றாண்டில் அகத்தியர் வாழ்ந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.
  • அகத்தியர் தலைமையில் முதல் தமிழ்ச் சங்கம் செயல்பட்டதும் முருகப்பெருமானின் அருள் ஆசியால் நிகழ்ந்ததாகும்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள், ஆச்சரியங்கள் ஏராளம்... ஏராளம்...! அதில் சில மட்டுமே வரலாற்றில் பதிவாகி நமக்கு தெரிகிறது. ஆனால் திருச்செந்தூரில் முருகப்பெருமான் எப்போது அமர்ந்து அருள்பாலிக்க தொடங்கினாரோ அப்போதே அவரது அற்புதங்களும் தொடங்கி விட்டன.

சங்க காலத்துக்கும் முன்பே வேதம்-புராண காலத்திலேயே திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களுக்கு அற்புதங்கள் செய்து வழிகாட்டி உள்ளார். அப்படி முருகனின் அருள்பெற்ற அடியார்களில் முதல் நபராகவும், முதன்மையானவராகவும் கருதப்படுபவர் அகத்தியர்.

கி.மு.7 அல்லது 8-ம் நூற்றாண்டில் அகத்தியர் வாழ்ந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அந்த வகையில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ரிக்வேதம், ராமாயணம் ஆகியவற்றில் அகத்தியர் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன.

இவர் சப்த ரிஷிகளுள் ஒருவர் என பெயர் பெற்றவர். ஏழு கடலையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வெற்றி கொண்டவர். வாதாபி இவ்லன் என்னும் அசுரர்களை வென்றவர். தன் பித்ருக்களின் கர்மவினை தீர லோபமித்திரை என்னும் கற்புக்கரசியை மணந்து இல்லற தர்மத்திலும் சிறந்து விளங்கினார். காவிரியின் கர்வத்தை கமண்டலத்தில் அடக்கி பின்னர் அதை விரியச் செய்தவர்.

ராமாயண காலத்தில் அகத்திய பெருமான் ராம லட்சுமணர்களுக்கு மந்திரோபதேசம் செய்து வாழ்த்தினார்.

அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, தமிழ்முனி, பொதிகை முனி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு. பிரம்மாவின் வழித்தோன்றலான இவர் முக்காலமும் அறிந்தவர் என்ற சிறப்பை பெற்றவர்.

சிவபெருமானின் உத்தரவுபடி இவர் வடக்கில் இருந்து தெற்கே பொதிகை மலைக்கு வந்ததாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர் தென்னாட்டுக்கு வரும் போது கோல்காபூர் என்ற இடத்தில் மகாலட்சுமியை வழிபட்டார். அப்போது அவள், 'அகத்தியா நீ தென்னாட்டுக்கு சென்றதும் உனக்கு எல்லா வரங்களையும் முருகன் தந்தருளுவார்' என்று கூறினாள்.

அதன்படி பொதிகை மலைக்கு வந்த அகத்தியரை திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆட்கொண்டார். தெற்கே வந்த பிறகு அவர் முருகப்பெருமானின் முதல் சீடராக மாறினார். முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டில், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பழங்கால இலக்கியங்கள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில், அகத்தியர் தென்னிந்தியாவுக்கு வந்தபோது, முருகன் அவருக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பல கோவில்களில், அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்பிக்கும் காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

அகத்தியர் மற்றும் முருகன் இருவரும் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் கடவுள்களாக கருதப்படுகின்றனர். எனவே, அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்றுக் கொடுத்தார் என்ற நம்பிக்கை இயற்கையானது.

 

முருகன் புகட்டிய தமிழ்ப் பாலை குடித்துதான் அகத்தியர் 'அகத்தியம்' எனும் தமிழ் இலக்கண நூலை படைத்தார். அந்த நூல் 12 ஆயிரம் சூத்திரங்கள் கொண்டது என்று புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால் அந்த நூல் துரதிருஷ்டவசமாக நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டது.

என்றாலும் அகத்தியரின் முதன்மை சீடரான தொல்காப்பியர் அகத்திய இலக்கண நூலை பின்பற்றி எழுதிய தொல்காப்பியம் நமக்கு கிடைத்தது. இத்தகைய சிறப்புடைய அகத்தியர் சித்தர்களுக்கெல்லாம் சித்தராக திகழ்ந்தார்.

அவர் மூலம்தான் சித்தர் பரம்பரையை முருகப்பெருமான் தமிழகத்தில் உருவாக்கியதாக கருதுகிறார்கள். முருகப்பெருமான் அருளால் அகத்தியர் இலக்கியம், இலக்கணம், இசை, மருத்துவம், ஜோதிடம், உளவியல் என்று அனைத்து துறைகளிலும் மேன்மை பெற்று இருந்தார். அதனால்தான் அவரால் பல்வேறு துறைகளில் இன்றும் வழிகாட்டும் அளவில் குறிப்புகள் எழுதி வைக்க முடிந்தது.

அகத்தியர் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்தது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அகத்தியருக்கு தென்னாட்டை சிவபெருமான் கொடையாக வழங்கியதாகவும் அதில் ஒரு பகுதியை பாண்டிய மன்னர்களுக்கு அகத்தியர் கொடுத்தார் என்றும் திருநெல்வேலி தல புராணம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழுக்காக தமிழின் இனிமைக்காக அகத்திய முனிவர் பொதிகை மலையில் தங்கி தமிழ் வளர்த்தார் என்று புராணம் கூறுகிறது அகத்திய மாமுனிவரிடம் தமிழ் கற்கவே கைலைமலையில் இருந்து புறப்பட்டு வந்தவர் நந்தி. எம்பெருமானின் சீடரும் திருமந்திரம் தந்தருளியவருமான சித்தர் திருமூலர் ஆவார்.

பல பெருமைகளையும் சிறப்பையும் தந்து சிறப்பு பெற்றவரான அகத்திய மாமுனிவருக்கு தமிழின் ஞான குருவாகி நின்றவன் திருச்செந்தூர் முருகப் பெருமான். அருணகிரிநாதர் அதை தம் பாடலில்

"சிவனை நிகர் பொதியவரை

முனிவன் அகமகிழ இருசெவி

குளிர இனிய தமிழ் பகர்வோனே"

என்று போற்றி பாடியருள்கிறார்.

இத்தகைய தகவல்கள் மூலம் அகத்தியர் தமிழ்க்கடவுள் முருகனிடம் இருந்துதான் தமிழை தெரிந்து கொண்டு காலத்தால் அழியாத நூல்களை தந்து இருக்கிறார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். அகத்தியருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமான்தான் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அகத்தியர் தலைமையில் முதல் தமிழ்ச் சங்கம் செயல்பட்டதும் முருகப்பெருமானின் அருள் ஆசியால் நிகழ்ந்ததாகும். முருகனின் உத்தரவுபடிதான் அகத்தியர் தல யாத்திரைகள் மேற்கொண்டதாக புராண நூல்களில் சொல்லப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் பழமை சிறப்பு வாய்ந்த பல ஆலயங்களில் உள்ள தல வரலாறுகள் அகத்தியருடன் தொடர்பு கொண்டு இருப்பதே இதற்கு சான்றாகும். திருச்செந்தூர் முருகன் அருள் பெற்ற அகத்தியர் தென்னாட்டில் முருகன் தலங்களில் ஏராளமான வழிபாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தினார்.

இன்றும் அவை பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள வழிபாட்டு முறைகளில் பல அகத்தியர் காட்டிய வழிகாட்டுதல்படி நடப்பதாக சொல்கிறார்கள். இது முருகப்பெருமானின் முதல் சீடர் அகத்தியர் என்பதை காட்டுகிறது.

அகத்தியர் மூலம் திருச்செந்தூர் முருகன் நடத்திய அற்புதங்களும், திருவிளையாடல்களும் ஏராளம். ஆனால் அந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்று குறிப்புகளில் பதிவு பெறாமல் போனது துரதிருஷ்டமாகும். என்றாலும் திருச்செந்தூர் முருகனுக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை பிரதிபலிக்கும் வகையில் ஒரு சில பதிவுகள் திருச்செந்தூரில் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதில் ஒன்று தான் அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் ஆகும். மானிட நலனுக்காக பல மந்திரங்களை அகத்தியர் தந்துள்ளார். அந்த வகையில் நமது சொல்லும் செயலும் தெளிவாக இருக்க அகத்தியர், முருகன் மந்திரம் அருளியுள்ளார்.

அகத்தியரின் அந்த முருகன் மந்திரம் வருமாறு:-

ஓம் முருகா,

குரு முருகா,

அருள் முருகா,

ஆனந்த முருகா,

சிவசக்தி பாலகனே,

ஷண்முகனே,

சடாக் ஷரனே,

என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க,

ஓம் ஐம் ஹ்ரீம்,

வேல் காக்க சுவஹா!

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும், செவ்வாய் தோஷம் விலகும். அதோடு நமது நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்காக இருக்கும். நமது எண்ணமும் செயலும் நன்னெறிகளை நோக்கி இருக்கும். இதன் காரணமாக சமுதாயத்தில் நமக்கான ஒரு உரிய இடம் கிடைக்கும். நமது நிலையானது படிப்படியாக உயரும். நம் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் மந்திரத்தை சொல்ல தவறுவது இல்லை. பெரும்பாலான திருச்செந்தூர் முருக பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி தினத்தன்று அகத்தியர் வழங்கிய இந்த முருகர் மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகனுக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை இது தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இது மட்டுமின்றி திருச்செந்தூரில் அகத்தியருக்கு தனி சன்னதியுடன் அவரது சிலை நிறுவப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் ஆலயத்துக்கு செல்லும்போது மண்டபம் வழியில் தூண்டுகை விநாயகர் ஆலயம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த விநாயகர் ஆலயத்துக்கு அருகில் அகத்தியருக்கும் சிறிய சன்னதி இருக்கிறது. இது பற்றி தெரிந்தவர்கள் அந்த இடத்தில் அகத்தியரை வணங்காமல் செல்வதில்லை.

அகத்தியர் மீது பற்றுக் கொண்டவர்கள் அந்த சன்னதியை தேடி பிடித்து வந்து வணங்கி விட்டு பிறகு திருச்செந்தூர் முருகன் வீற்றிருக்கும் ஆலயத்துக்கு செல்வதுண்டு. முருகன் கருணைக்கேற்ப அகத்தியர் செயல்பட்டார் என்பதை இந்த சன்னதி நமக்கு உறுதிபடுத்துகிறது. அடுத்த முறை நீங்கள் திருச்செந்தூருக்கு செல்லும்போது அகத்தியரை வழிபட தவறாதீர்கள்.

முருகனின் அற்புதங்கள் அடுத்த வாரமும் தொடரும்...

Tags:    

Similar News