அற்புதங்கள் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள்!
- ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம்-ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் இரண்டும் அடுத்தடுத்து இருக்கும்.
- தவறுகள் செய்து இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கையை கோவிலில் இறைவனும் ஏற்க மாட்டான்.
எல்லோரும் இந்த பொங்கலை மிகவும் மகிழ்வோடு கொண்டாடி இருப்போம். குடும்ப உறவுகளோடு கூடுதல் நாட்கள் இருக்கும் வகையில் விடுமுறை கிடைக்கும் பண்டிகை தீபாவளியினை விட பொங்கல் திருவிழாவிற்கே அதிகம் வாய்ப்பு உள்ளது.
மார்டன் ஸ்டைலில் உள்ளவர்கள் கூட அதனை விட்டுவிட்டு நம் பாரம்பரிய ஸ்டைலுக்கு 'கப்சிப்' என ஓடி வந்து விடுவார்கள். அது இந்த மண்ணின் வலிமை. அது போலத்தான் எத்தனை விஞ்ஞான முன்னேற்றம் இருந்தாலும், உள் மனதில் ஏதோ ஒரு புள்ளி மையத்தில் மெய் ஞானமும் ஓடிக் கொண்டு இருக்கும். அதனால்தான் அதன் வழிகாட்டு பாதைகளாக திருவிழா, குல தெய்வ வழிபாடு போன்றவை இன்னும் நம் நாடி நரம்புகளில் ஓடுகிறது.
கூடவே எத்தனையோ மகான்கள், சித்தர்கள் என இங்கு தோன்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிற்றினால் நம்மைக் கட்டி நல்வழி பாதையில் தரதரவென இழுத்துச் செல்வார்கள். ஆகவேத்தான் சித்த பீடங்கள், சித்தர் சமாதிகளை தொடர்ந்து சென்று வழிபட்டு வரவேண்டும். எத்தனையோ மகான்கள், சித்தர்களைப் பற்றி பேசலாம். அதிசயிக்கலாம். ஆழமாக மனதில் விதைக்கப்படலாம். விஞ்ஞானம் தன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆழ் கருத்துக்களை இங்கு காணலாம். அவ்வகையில் நான் அறிந்து அதிசயித்த ஒரு மகான், சித்தரைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
திருவண்ணாமலை. இந்தப் பெயரைச் சொன்னாலே உடல் சிலிர்க்கும். மனம் அடங்கும். நினைத்தாலே முக்தி என போற்றப்படும் தலம். இங்கு அரூபமாக வாழும் சித்தர்கள் பற்றி நம் அறிவு கொண்டு கணக்கிட முடியாது. அப்படியொரு மகான் வாழ்ந்து இன்றும் அரூபமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் 'ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்.
ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம்-ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் இரண்டும் அடுத்தடுத்து இருக்கும். சாதாரண ஒரு வேட்டி, கழுத்தில் ஒரு துண்டு என்ற ஒரு எளிய தோற்றம் கொண்டவர் ரமண மகரிஷி. மிக இளம் வயதில் தியானத்தால் உடலை கரையான் அரிப்பது தெரியாமல் இருந்த நிலையில், சில சிறுவர்கள் அவர் மீது கல் விட்டு எறிந்த நிலையில் அவரை மீட்பதற்கு காரணமானவர் வழூவூரைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே இவரின் இறைத்தன்மைகள் வெளிப்பட தொடங்கின.
காமாட்சி அம்மனின் பரிபூர்ண அருளாசி பெற்றவர் என்றும், அப்படியே காமாட்சி அம்மனின் அவதாரம் என்றும் குறிப்பிடப்படுபவர். திருவண்ணாமலை செல்பவர்கள் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமம் சென்று இவரை தரிசிக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் இவர் தன் கடையில் கால் வைக்க மாட்டாரா? என அங்குள்ளவர்கள் ஏங்கினர். வழுவூரில் சிறு வயதிலேயே இவரது மகிமையை உணர்ந்தவர்கள் இவரை 'தங்க கை' என்று அழைப்பார்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். 1870-1929 காலம் இவரது பிறப்பும் சமாதியுமாக அறியப்படுகின்றது. ஆக இவரது கடைக்கண் பார்வை, காலடி இவற்றுக்கு மக்கள் ஏங்கத்தான் செய்தார்கள்.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டவர். கிரிவலம் வரும் பொழுதெல்லாம் அங்கு ஒரு மூதாட்டியின் வீட்டில் உணவு அருந்துவது வழக்கம். ஏன் அங்கு தொடர்ந்து உணவு அருந்தினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். உணவு என்றதும் விருந்து என்று நினைத்து விடக்கூடாது அல்லது ஏதோ அன்று சமைத்த உணவு என்றும் நினைக்கக் கூடாது. பழைய சோறுதான் அங்கு உணவு. அதுவும் சில நேரங்களில் அது நான்கைந்து நாள் பழையதாகக் கூட இருக்கும்.
இப்படி சில காலங்கள் சென்றன. அந்த மூதாட்டி மிகவும் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருநாள் சுவாமிகள் உணவருந்திக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டி சுவாமிகளிடம் ஒரு வேண்டுதலை விடுத்தார். "ஐயா, உன்னால் கடவுளை காட்ட முடியும் என்று சொல்கின்றார்களே? எனக்கு நீ கடவுளை காட்டுவாயா? என்றாள்.
"அட... உனக்கா... சாமியை.... என்று சிரித்தார் சாமி. ஆனால் மூதாட்டியோ ஆமாய்யா... இது என்னுடைய நெடுநாள் ஆசை. அதை நீ பூர்த்தி செய்துதான் தரணும்" என்று தீர்க்கமாக சொன்னார்.
மகான் சிறிது நேரம் யோசித்தார். பின் "சரி, கடவுளைக் காட்டுகிறேன். ஆனால் நான் சொல்வது போல் நீ செய்ய வேண்டும். சிறிது தவறினாலும் உனக்கு ஆபத்து வந்து விடும். சரியா! என்று கேட்க மூதாட்டியும் ஒத்துக்கொண்டார்.
"நான் சொல்லும்போது நீ கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு நான் சொல்லும் பொழுதுதான் நீ கண்ணை திறக்க வேண்டும். இடையில் நீ கண்ணை திறந்து விட்டால் நடப்பதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்" என்றார். 'சரியா?' என்று கேட்க மூதாட்டியும் ஒத்துக் கொண்டார்.
மூதாட்டி தன் மனதினை திடப்படுத்திக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டார். அடுத்த நொடியில் மூதாட்டி தன்னிலை மறந்தவராக "ஆஹா அற்புதம்! ஆஹா ஹா! என்ன சுகமான காற்று! ஆஹா மனம் குளிர வைக்கும் மணம். ஆஹா ஆனந்தமாக இருக்கிறதே! ஏதோ குதிரை சத்தம் கேட்கிறதே. ஆஹா என்ன அழகு!.... என்ன அழகு...! அதோ இந்திரன் வந்து விட்டான் என்று சொல்லிக்கொண்டே, கண்ணை திறந்து விட்டார் மூதாட்டி. உடனே கண்கள் இரண்டும் பார்வை தெரியாது ஆகி விடுகின்றன. அதிர்ந்து போய் விட்டார் மூதாட்டி.
"நான்தான் சொன்னேனே..... நான் சொன்ன பிறகுதான் கண்ணை திறக்க வேண்டும் என்று. உன்னை யார் இடையில் கண் திறக்கச் சொன்னார்கள்" என்று சொல்லி சாமிகள் கிரிவலத்தில் மறைந்து விடுகின்றார்.
மூதாட்டியின் உறவினர்கள் அவருடைய நிலைமையைப் பார்த்து மகானிடமே சென்று மன்றாடுவோம் என்று சொல்லி கிரிவலம் பாதையில் சாமியைத் தேடுகின்றனர். ஓரிடத்தில் இறையருளால் மகானைக் கண்டு மூதாட்டிக் காக பரிந்துரை செய்ய மகானும் மனமிரங்கி "சரி... சரி... நாளைக்கு அவள் தூங்கி விழிக்கும்போது, கண்கள் நன்கு தெரியும்" என்று அருள் புரிந்தார்.
என்ன அதிசயம்.... மறுநாள் காலை தூங்கி எழுந்தபோது மகான் சொன்னபடியே அம்மூதாட்டியின் கண்கள் ஒளி பெற்று விடுகின்றன. பார்வை நன்கு தெரிந்தது. என்னதான் கண் தெரிந்தாலும் அதன் பிறகு மகானை அந்த மூதாட்டி பார்க்கவும் முடியவில்லை. உணவு (பழைய சோறு) கொடுக்கவும் முடியவில்லை.
நாம் உத்தம நிலையை அடைய மகான்கள் நிறைய சந்தர்ப்பங்கள் அளிக்கத்தான் செய்கின்றனர். நாம் தான் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. மகான்கள் விருப்பப்படிதான் நம் விருப்பங்களை எல்லாம் மகான்கள் நடத்தித் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஏனெனில் நமக்குத் தேவையானதை இறைவன் அறிவான். இதையே தான் மாணிக்கவாசகரும் இறைவனை ''வேண்டத்தக்கது அறிவோய் நீ... வேண்ட முழுவதும் அறிவோய் நீ'' என்றார்.
அம்மூதாட்டி கூட அமைதியுடன் காத்திருந்தால் அவர் முடிவில் கடவுளை நிச்சயம் கண்டிருப்பார். இது சில ஆயிரம் ஆண்டுகள் முன்னாடி நடந்தது அல்ல. சமீபத்திய நிகழ்வு. இதனை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே!
மகான்களுக்கு நம்மைப் பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நாம் செய்யும் செயல்கள் பற்றி அவர்களுக்கே நன்கு தெரியும். அது தவறு எனின் அவர்களே அதனை திருத்தவும் செய்வார்கள். அனைவராலும் போற்றப்படும் காஞ்சி மகா பெரியவரின் அற்புதங்களைப் பற்றி கூறிக் கொண்டே செல்லலாம். அதில் நான் படித்த ஒன்றினைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு வயது கூடிய அம்மா நெற்றி நிறைய குங்குமம், அணிகலன்கள், ஜரிகை போட்ட புடவை என்று அணிந்து மகா பெரியவர் காஞ்சி மகான் ஸ்ரீ சந்திரசேகர சுவாமி அவர்களை பார்க்க வந்திருந்தார். அந்த அம்மையாரின் தோற்றம் அனைவரையும் சற்று திரும்பி பார்க்க வைத்தது.
வந்திருந்தோர் வரிசையில் நின்று இறைவனாய் பார்க்கப்படும் காஞ்சி மகானிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தனர். இந்த அம்மையாரின் முறையும் வந்தது. அவரைப் பார்த்தவுடன் மகான் அருகில் இருந்தவரை அழைத்து 100 எலுமிச்சை பழங்களை கொண்டு வரச் சொன்னார். அதனை அந்த அம்மை யாரைப் பார்த்து எடுத்துக் கொள். இந்த எலுமிச்சை பழத்தினை வைத்து தானே பில்லி, சூனியம், குடும்பத்தை பிரிப்பது போன்ற காரியங்களை செய்கிறாய். எடுத்துக் கொள்' என சற்று கண்டிப்பாக பேசினார்.
கூட்டம் அதிர்ந்து விட்டது. பதறி அழுதாள் அந்த அம்மையார். 'சாமி, மன்னித்து விடுங்கள். காசுக்கு ஆசைப்பட்டு இம்மாதிரி வேலைகளை செய்து விட்டேன். இனி ஒரு போதும் இப்படி செய்ய மாட்டேன்' என்றார்.
மகானும் சரி, இந்த தவறான மந்திரங்களை விடு (அதற்கான முறையையும் சொன்னார்) நல்ல வாழ்க்கை முறைக்கு மாறு' என அவளுக்கும் அருளினார்.
எங்கே இருந்து வந்தாலும் இறைசக்தி கொண்ட மகான்கள் அவர்களைப் பற்றி முழுமையாய் அறிவர். தவறுகள் செய்து இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கையை கோவிலில் இறைவனும் ஏற்க மாட்டான். மாறாக அனைவரையும் நல்வழிப்படுத்துவதே ஆன்மீகப் பாதை. இதற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது. இதனை எல்லாம் உணர்ந்து விட்டால் வாழும் தூய்மையான வாழ்வு ஒன்றே போதும். ஆத்ம சக்தியினை அதுவே கூட்டி விடும்.
இதெல்லாம் இங்கொன்றும், அங்கொன்றுமாய் நிகழ்கின்றது. என் வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கின்றது என்று அங்கலாய்க்க வேண்டாம். எதிலும் ஒரு துடிப்பு வேண்டும். நம்பிக்கை வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதெல்லாம் இருந்தால் தானாகவே நிகழும் தானே என்று நினைக்கலாம். 99 சதவீதம் உங்கள் முயற்சி வேண்டும். 1 சதவீதம் அந்த உயர் சக்தி இல்லாவிட்டால் நிறைவு பெறாது. நம்பிக்கையும், முயற்சியும் பல மடங்கு நன்மைகளைத் தரும். அனுபவம் என்பது வலியினைக் கடப்பது மட்டுமல்ல. வலியினைக் கடப்பதும் தான் என்ற பெரியோரின் வாக்கினை மறக்கக் கூடாது.
வாழ்க்கை எந்த நொடியிலும் பேரதிசயத்தினை நிகழ்த்தலாம்! நிகழ்த்தும்! பெற்று வாழ்வோம்!!