சிறப்புக் கட்டுரைகள்

இல்லறத்தை போற்றிய அய்யா வைகுண்டர்

Published On 2025-01-18 13:54 IST   |   Update On 2025-01-18 13:54:00 IST
  • வரி விதிப்புக்கு எதிராக சுதேச அரசாங்கத்திற்கெதிராக இயக்கம் நடத்திய சீர்திருத்தப் பெரியார்களுள் ஒருவராக சுவாமிகள் திகழ்கின்றார்.
  • பொருளாதார நிலையில் தன்னிறைவு கொண்டு மகிழ்வுடனே யாவரும் வாழ வேண்டும் என்பதில் சுவாமிகள் மிக்க நாட்டம் கொண்டு செயல்பட்டார்.

துறவுக்கு முக்கியத்துவம் அளிக்காது, இல்லறத்தையே நல்லறமாகப் போற்றிய வைகுண்ட சுவாமிகள், பெண்கள் மணமாகி தாய்மையடைந்து இனிய வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். எனவே தான் கஞ்சனின் வாழ்வை பற்றி கூறும்போது, திருமணமாகாத பெண்களை தங்கையர்களாக கொண்டிருந்த கஞ்சனை நோக்கி நாரதர் உரையாக,

"வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்

தலைகெடுங்காண் சாத்திரத்துக் கேறாது,

வானம் வந்து சிக்கும் மாரியது பெய்யாது

கோத்திரத்துக்கேறாது குடும்பம் தழையாது

மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து

கோட்டை யழியும் குளங்கரைகள் தானழியும்

நாட்டை அழிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்"

என அகிலம் கூறுகின்றது. மேலும் இல்லறத்தில் நின்று இறைவனை ஏத்தி இன்பநிலை அடைந்திடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

"இல்லறத்தைவிட்டு தவமில்லை காண் வேறுண்டு

ஆனதால் பேடென்னும் அருளியிருளியெனும்

மானமில்லா ரென்னும் வராது மேல் பிறவி"

என்று அறிவுறுத்திய சுவாமிகள்,

"ஆணும் பெண்ணும் கூடி

ஆசாரம் செய்திடுங்கோ"

என ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் உலகியல் நெறி என்பதை ஊக்குவித்த சுவாமிகள், மேட்டுக்குடியினர் திணித்திருந்த இழிநிலை அகற்றி, சமத்துவ நிலையில் வாழ்வினை அமைத்திடுவதற்கான வழிமுறைகளைத் தன்னகத்தே கொண்டு சமுதாயப் பணி ஆற்றியதின் விளைவாக மக்கள் கிளர்ந்தெழுந்து உரிமை காக்கக் களம் புகுந்தனர்; வெற்றியும் கண்டனர். கோனோக்கி வாழும் குடிகளை பேணி அவர்களின் நலம் காக்க வேண்டிய மன்னன், சிறுபான்மை மேட்டுக்குடி வர்க்கத்தின் சுகபோக வாழ்வுக்காக துணை நின்றான். புரோகிதர்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு சமயச்சடங்குகளில் ஏராளமான தொகையினை விரையம் செய்தான். சிலரது கடைக்கண் பார்வைக்காக பலரது கண்ணீர் காணிக்கையாக்கப்பட்டது.

 

மக்கள் நலனுக்காக அரசு என்ற நிலை மாறி, அரசுக்காகவே ஓடாய் உழைத்து ஓய்ந்திட வேண்டிய நிலைக்கு உழைக்கும் வர்க்கம் தள்ளப்பட்டது. "எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்து கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது; வறுமை நோவு முதலிய குட்டிப்பேய்கள் எல்லாம், உழைப்பை கண்டவுடன் ஓடிப்போய் விடும்" என்று போதனை செய்யப்பட்ட நாட்டில், நாள் முழுக்க உழைத்த போதிலும் அவர்களால் எந்தப் பேய்களையும் ஒட்ட முடியவில்லை. ஏனெனில், அவர்களின் உழைப்பு அரசாங்கத்தாலும் மேட்டுக்குடியினராலும் உறிஞ்சப்பட்டது.

எண்ணிலா வரிகளைச் செலுத்துவதுடன், உழைக்கும் வர்க்கம் ஊழிய வேலை செய்யுமாறு ஆதிக்க வர்க்கத்தால் கொடுமைப்படுத்தப்பட்டது. வரி செலுத்த இயலாதவர்களை சுடுமணலில் நிறுத்தி வைப்பது, யானையை கொண்டு மிதிக்க வைப்பது, குனிய நிறுத்தி முதுகில் கல்லேற்றி வைப்பது என தாங்கொணா வேதனைக்குட்படுத்தப்பட்டார்கள். அரசாங்கம் இழைத்த வரிக் கொடுமையை வைகுண்ட சுவாமிகள் வன்மையாக கண்டித்தார். அதிகயிறை வசூலிக்கக் கூடாது' எனவும், காலச்சூழலுக்கேற்ப வரி வசூலில் சிற்சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும், வரிவசூல் என்ற பெயரில் மக்களை கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். தனது கோரிக்கையின் நியாயம் குறித்து பல புராண வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தினார். சோழமன்னர்தம் அரசியல் நெறியினை விளக்குகையில்,

"ஆறிலொரு கடமை அது தரவே மாட்டோமென்று

மாறொருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்

பன்னிரண்டு ஆண்டு பரிவாய் இறையிறுத்தால்

பின்னிரண்டாண்டு பொறுத்து இறைதாரும் என்பார்"

எனவும், கஞ்சனின் கொடுங்கோலாட்சி பற்றிக்கூறுகையில், இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை ஆண்டதினாலே புவியிலுள்ளோர்கள் ஈனதுன்பமாகி இருந்தோர் பயமடைந்து வெறுப்பு ஏற்பட்டு அவனின் ஆட்சி ஒழிக்கப்பட்டதுடன் அவனும் அழிவை தேடிக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் இராவணனின் வீழ்ச்சிப்பற்றி கூறுகையில், மூர்க்கமதால் பாவி ஊழியங்கள் கொண்டதினால் பொறுக்க முடியாமல் பூலோகத்தார்களெல்லாம்வெ குண்டெ ழுந்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. நவீன யுகத்தில் இந்திய நாட்டில் ஆளும் வர்க்கத்துக்கு எதிராய் வரி எதிர்ப்பு போராட்டம் நடத்திய முதல் புரட்சியாளராக வைகுண்ட சுவாமிகள் திகழ்கின்றார். திருவிதாங்கூர் மன்னனை நோக்கி "மக்களுக்கு நீ தொடர்ந்து முறைகேடு செய்து வருவாயெனில் உன் வாழ்நாட்களுக்கு இடர் வரும் மாநீசா" என்ற எச்சரிக்கை விடுத்தார். மேலும்,

"உன்கிளையும் நீயும் உற்றார் பெற்றார்களுடன்

தன் கிளையோடே நீயும் தரணியாள வேணுமென்றால்

நீதியுடன் இறைகள் இல்லாமல் நீக்கி வைத்து

ஊழியமும் தவிரு நீ உலகாள வேணுமென்றால்

அல்லாமல் சான்றோரை அன்னீதமாய் அடித்தால்

பொல்லாத நீசா புழுக்குழிக்காளாவாய்

எனவும்"

கற்புள்ள சாணாத்தி கதறியுன்னை சாபமிட்டால்

அப்படியே உன்கோட்டை அழிந்து பொடியாகுமடா

எனவும்,

தெய்வ சாணாத்தி தினமுனை நிந்தித்ததுண்டால்

பொய்வகையால் கர்ம போகத்தால் நீ மடிவாய்"

எனவும் கண்டன குரல் எழுப்பினார். வரி விதிப்புக்கு எதிராக சுதேச அரசாங்கத்திற்கெதிராக இயக்கம் நடத்திய சீர்திருத்தப் பெரியார்களுள் ஒருவராக சுவாமிகள் திகழ்கின்றார்.

"கொத்தைக் குறையாதே

குறை மரைக்கால் வைக்காதே

உபதேசம் சொல்லும் கூலி

உடன் கையில் கொடுத்திடுங்கோ"

என மக்களுக்கு அறிவுரை வழங்கினார். தவிரவும், மக்கள் வியர்வை சிந்தி ஈட்டும் வருவாயை வீண்செலவு செய்திடவோ, பய உணர்வுடன் வரி வசூலிக்கும் மேட்டுச்சாதியினரிடம் கொடுக்கவோ வேண்டாம் என போதித்தார். அகிலம் இதுபற்றி,

"அவனவன் தேடும் முதல் அவனவன்

வைத்தாண்டிடுங்கோ

எவன் எவனுக்கும் பதறியினி

மலைய வேண்டாமே"

என்று புரட்சி முழக்கமிடுகின்றது.

சமய சடங்குகளில் பொருள் விரயம் செய்யக்கூடாது என்று நாடி வந்தவர்களிடம் ஆணையிட்டார். பொருளாதார நிலையில் தன்னிறைவு கொண்டு மகிழ்வுடனே யாவரும் வாழ வேண்டும் என்பதில் சுவாமிகள் மிக்க நாட்டம் கொண்டு செயல்பட்டார். இங்ஙனம் சுவாமிகளின் சமுதாய சீர்திருத்த இயக்கம் தாழ்வுற்ற மக்களுக்கு தன்மானம் ஊட்டியது; ஒற்றுமையும் சமத்துவமும் நிலவிட முயற்சித்தது; பெண்கள் முன்னேற்றத்தில் நாட்டம் கொண்டது; தர்மம் நிலைக்க பாடுபட்டது. வரிக்கொடுமையை எதிர்த்து ஆளும் வேந்தனை இடித்துரைத்தது; மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக வாழ்வினை புத்தாக்கப்படுத்திட சுவாமிகளின் இயக்கம் முழுமூச்சுடன் செயலாற்றியது எனலாம்.

வைகுண்ட சுவாமிகள் சமுதாய மறுமலர்ச்சியில் மிக்க நாட்டம் கொண்டவராய் இருந்த போதிலும், சமயத்துறையிலும் சீர்திருத்த பார்வையை காட்ட வேண்டிதாயிற்று. ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்தியாவில் சமூக சீர்திருத்தம் சமயவாழ்வின் மாற்றங்களுடன் பின்னி பிணைந்து காணப்பட்டது. உடலுக்கு உயிர் போன்று திருவிதாங்கூர் ஆட்சி பரிபாலனத்தில் சமயமே ஆதாரமாக விளங்கியது. ஆளும் வேந்தர்கள் கூட பிராமணப் புரோகிதர்களின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்தனர். இச்சூழ்நிலையை ஊன்றி கவனித்த சுவாமிகள் சமுதாயச் சீர்திருத்தம், சமய சீர்திருத்தத்தின் துணையுடன் தான் நடைபெற முடியும் என்பதை நன்றாக உணர்ந்தார். எனவே அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமய வாழ்விலும் மாற்றம் காண முனைந்தார். அதற்கு அவர் செய்தது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்.

Tags:    

Similar News