சிறப்புக் கட்டுரைகள்

திருவாதிரை நோன்பின் கதை

Published On 2025-01-11 14:04 IST   |   Update On 2025-01-11 14:04:00 IST
  • `உங்களின் உயரத்தையும் உடல்வலுவையும் பார்த்தால் நீங்கள் பெரும் சக்தியுடையவர் என்று தெரிகிறது!` என்றார் சேந்தனார்.
  • கருவறையில் களி சிதறிக் கிடக்கும் செய்தியை ஓடோடிப் போய் அரசரிடம் தெரிவித்தார்கள்.

சிதம்பரம் அருகே வாழ்ந்து வந்தார் சேந்தனார் என்கிற அன்பர். அவர் ஓர் எளிய விறகு வெட்டி. விறகு வியாபாரம் செய்து பொருளீட்டி வந்தார்.

விறகுவெட்டியே ஆனாலும் மாபெரும் சிவபக்தர் அவர். விறகு வெட்டும்போதும் வெட்டிய விறகைக் கூவி விற்கும் போதும் எந்நேரமும் சிவனையே மனத்தில் சிந்தனை செய்வார்.

உண்ணும்போதும் உறங்கும்போதும் கூட சிவ சிந்தனை அல்லாமல் வேறு சிந்தனை அவரைத் தீண்டியதில்லை. அவருக்கு வாய்த்த மனைவியும் அவரைப் போலவே சிவ பக்தியுடன் திகழ்ந்தாள்.

 

சிவ பக்தியில் திளைத்து சிவநெறிப்படி வாழ்ந்துவந்த அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. நாள்தோறும் சிவனடியார் யாரேனும் ஒருவருக்கு உணவளித்த பின்தான் அவர் உணவு உட்கொள்வார்.

சிவனடியார்களைச் சிவ வடிவமாகவே கண்ட அவர், அவர்களுக்கு உணவளிப்பதைச் சிவனுக்கு நிவேதனம் செய்வதாக எண்ணிக் கொள்வார். அவர்கள் தாம் அளித்த உணவை உண்டபின் சிவனே உண்டுவிட்டான் என்ற திருப்தியில், பின்னர் தாம் உணவுண்பார் அவர். அவர் உணவு உண்டபின் அவர் மனைவி உணவு உண்பாள்.

அன்று ஒரு வித்தியாசமான நாள். கடும் மழை. வெட்டி வைத்த விறகுகள் அனைத்தும் மழை பெய்ததால் நனைந்து ஈரமாகி விட்டன. ஈர விறகுகளை யார் வாங்குவார்கள்?

விறகை விற்றால்தான் கொஞ்சமாவது பணம் கிடைக்கும். அதை வைத்து அரிசி வாங்கிச் சோறு சமைக்கலாம். சிவனடியார் ஒருவருக்கு அமுது படைத்தபின் அவரும் அவர் மனைவியும் உணவுண்ணலாம்.

ஆனால் சோதனையாக அன்று விறகு விற்கவே முடியவில்லையே? ஈர விறகு அவர் வயிற்றிலும் ஈரத் துணியைக் கட்டிக்கொள்ளும் நிலைமைக்கல்லவா அவரைத் தள்ளி விட்டது?

இப்போது யாரேனும் சிவனடியார், வழக்கம்போல் தாம் உணவளிப்போம் என்ற நம்பிக்கையோடு தம் வீடுதேடி வந்தால் என்ன செய்வது?

அரிசி வாங்கக் காசில்லாத அவர் இப்போது என்ன செய்வது என மனைவியிடம் வினவினார். வீட்டில் தேடித் தேடிப் பார்த்தாள் மனைவி. கொஞ்சமே கொஞ்சம் கேழ்வரகு இருந்தது.

சிவனடியார் வந்தால் களியையேனும் கொடுப்போம் என்ற எண்ணத்தில் கேழ்வரகில் களி சமைத்து வைத்தாள். சிவனடியார் வந்து களியுண்டபின் நாமும் உண்ணுவோம் என்ற எண்ணத்தோடும் பசியோடும் காத்திருந்தார் சேந்தனார்.

ஆனால் அன்று பார்த்துச் சோதனையாக யாருமே வரவில்லை. களிதான் கிடைக்கப் போகிறது என்று எப்படியோ தெரிந்துகொண்டு களியைச் சாப்பிட வருவானேன் என்று யாரும் வரவில்லையா?

சிவனடியார் ஒருவருக்கு உணவளிக்காமல் தான் எப்படி உண்பது? இன்று பட்டினிதான் போலிருக்கிறது என்று நினைத்தவாறே சிவ சிவ என ஜபித்தவாறு வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார் சேந்தனார். அவர் மனைவியும் சிவநாமத்தை ஜபித்தவாறே சிவனடியார் யாரேனும் களியுண்ண வரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

 

சிவன் தன் பக்தன் பட்டினியோடு இருப்பதை அறிந்தும் சிவனே என்றிருக்க முடியுமா? சிவன் சிவனடியாராக வேடம் புனைந்து கொண்டார். ஒப்பனை செய்துகொண்டு பழக்கப்பட்ட நடனக் கலைஞரான சிவனுக்கு வேடம் புனைந்து கொள்வது எளிதுதானே?

`நீங்கள் ஓர் உண்மைச் சிவனடியார் போலவே தென்படுகிறீர்கள்!` எனப் பார்வதி தேவியிடம் சான்றிதழ் பெற்ற பிறகு, தன் பக்தன் சேந்தன் இல்லம் நோக்கி நடந்தார் சிவன்.

`உண்ண ஏதேனும் உணவு கிடைக்குமா?` எனச் சிவனடியாரின் குரல் வாயிலில் கேட்டதும் துள்ளி எழுந்து ஓடோடி வந்தார் சேந்தனார். மெய்யெலாம் நீறு பூசி கையில் திருவோடு தாங்கி நிற்கும் சிவனடியாரைப் பார்த்து உள்ளம் குளிர்ந்தார்.

அந்தச் சிவனடியாரின் தெய்வீகப் பொலிவு நெஞ்சை அள்ளுவதாக இருந்தது, என்ன அழகு இவர் தோற்றம்!

`உங்கள் தலை சற்று ஈரமாயிருக்கிறதே? மழையில் நனைந்தீர்களோ? துவட்டிக் கொள்ளக் கூடாதா? துவட்டிக் கொள்ளத் துண்டு தரவா?` என அன்போடு கேட்டார் சேந்தனார். சிவன் தலையில் மறைந்திருந்த கங்கை மனத்திற்குள் நகைத்துக் கொண்டாள்.

`எம் தலை எப்போதுமே ஈரமாய்த்தான் இருக்கும்! துவட்டினாலும் ஈரம் போகாது!` எனச் சிரித்தார் சிவனடியார்.

`உங்கள் திருமுகம் பூரண சந்திரனைப் போல் ஒளிவீசுகிறது!` எனப் புகழ்ந்து கைகூப்பினார் சேந்தனார்.

`நீங்கள் பூரண சந்திரனின் எழிலைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் பிறைச் சந்திரனின் அழகே தனி. நான் பிறைச்சந்திரனைத் தான் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவேன்!` என்றார் சிவனடியார்.

`உங்களின் உயரத்தையும் உடல்வலுவையும் பார்த்தால் நீங்கள் பெரும் சக்தியுடையவர் என்று தெரிகிறது!` என்றார் சேந்தனார்.

 

திருப்பூர் கிருஷ்ணன்

`நான் சக்தி உடையவன் என்பது உண்மைதான்!` என்றார் சிவனடியார்.

`இல்லத்தின் உள்ளே வாருங்கள். எளிய உணவுதான் சமைத்திருக்கிறேன். களியுணவு. தாங்கள் அருள்கூர்ந்து அதை ஏற்று உண்ண வேண்டும்!`

`அதற்கென்ன? எந்த உணவையும் நாம் ஏற்போம். உணவின் பின் உள்ள அன்பைத்தான் நாம் பார்ப்போமே அன்றி உணவின் தரத்தையோ சுவையையோ ஒருபொருட்டாய் நாம் எண்ணுவதில்லை. ஒரு வேடன் தந்த ஊன் உணவையும் அவன் அன்பு கருதி நாம் ஏற்றிருக்கிறோம்! ஒரு கிழவி தந்த பிட்டுக்கும் நாம் ஆட்பட்டு அதை உண்டோம்!`

இப்படிச் சொன்னவாறே சேந்தனார் இல்லத்தில் நுழைந்த சிவனடியார், சம்மணமிட்டுத் தரையில் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டார். சேந்தனாரும் அவர் மனைவியும் வாழையிலையில் பக்தியோடு படைத்த களியமுதை ரசித்து ருசித்து உண்டார்.

`நீர் அளித்த களியமுதின் சுவை என்னைக் களிகொள்ளச் செய்கிறது!` எனச் சேந்தனாரின் விருந்தோம்பலைப் புகழ்ந்த சிவனடியார், எஞ்சியிருந்த களியைத் தன் அடுத்தவேளை உணவுக்குக் கட்டித் தருமாறு சேந்தனாரின் மனைவியிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.

தங்களுக்கெனக் களி எதையும் மீதம் வைக்காமல் அனைத்துக் களியையும் சிவனடியாருக்குக் கட்டிக் கொடுத்தாள் அவள். தான் கட்டிக் கொண்டவள் அப்படிக் கட்டிக் கொடுத்ததை எண்ணி மனம் பூரித்தார் சேந்தனார்.

சிவனடியார் அவர்களிடம் விடைபெற்று இல்லத்தின் வெளியே வந்து நடந்து செல்வதுபோல் போக்குக் காட்டிப் பின் மறைந்தார்.

மறுநாள் காலை தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவிலின் கருவறையைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்! பூட்டியிருந்த கருவறையின் உள்ளே தரையெங்கும் எப்படி இத்தனை களிச் சிதறல்கள் வந்தன?

எந்தக் கள்வன் உள்ளே எப்படி வந்து இப்படியோர் அடாத செயலைச் செய்திருக்கிறான் என அவர்கள் வியந்தார்கள். வந்தவன் உள்ளம் கவர் கள்வனான சிவன்தான் என்பதை அவர்கள் அறியவில்லை.

உடனே கருவறையில் களி சிதறிக் கிடக்கும் செய்தியை ஓடோடிப் போய் அரசரிடம் தெரிவித்தார்கள்.

அரசன் முந்தைய நாள் இரவு தான் கண்ட அரிய கனவொன்றை எண்ணிப் பார்த்தான். கனவில் நடராஜப் பெருமான் தோன்றி தன்னைப் பெரிதும் நேசிக்கும் அடியார் ஒருவர் இல்லத்தில் தான் களியுண்ணச் சென்றதை அறிவித்தானே?

கனவில் கிடைத்த செய்தி உண்மைதான் என்பதை இதோ கருவறையில் உள்ள களித்துகள்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்குக் களியமுது படைத்த அந்தச் சிவனடியார் யார் எனத் தேடுங்கள் என உத்தரவு பிறப்பித்தான் அரசன். ஆனால் எங்கு தேடியும் சேந்தனார் யார் என அறிய இயலவில்லை.

அன்று நடராஜருக்குத் தேர்த் திருநாள். அழகிய தேர் கோலாகலமாக வீதியுலா செல்லப் புறப்பட்டது. மன்னனும் மந்திரி பிரதானிகளும் எண்ணற்ற பொதுமக்களும் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். பொதுமக்களில் ஒருவராய்ச் சேந்தனாரும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழையின் காரணமாக மண் இளகியிருந்தது. இளகிய மண்ணில் தேர்ச் சக்கரங்கள் புதைந்து கொண்டன. எவ்வளவு இழுத்தும் தேர் மேலே நகரவில்லை. என்ன செய்வது இப்போது?

ஆகாயத்தைப் பார்த்த மன்னன், சிவனே, கருணை காட்டு. தேரை எப்படியாவது நகரச் செய்வாய் அப்பா என மனமுருகி வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுதலுக்கு பதிலாக ஆகாயத்தில் இருந்து எழுந்தது ஓர் அசரீரிக் குரல். `சேந்தனே! நாம் தேரை மேலே செலுத்த வேண்டுமானால் என்மேல் பல்லாண்டு பாடு!` எனப் பணித்தது அந்தக் குரல்.

நான் பாடல் பாடி அறியேனே என முதலில் தயங்கிய சேந்தனார், இறைவன் கட்டளை அது என்பதை உணர்ந்து இறையருளால் தாம் பாடலானார். `மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல` எனத் தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என முடித்து மொத்தம் பதின்மூன்று பாடல்கள் பாடினார் சேந்தனார்.

யார் முயன்றும் இதுவரை நகராதிருந்த தேர், பாடல் பாடியவுடன் நகரத் தொடங்கியது. மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மன்னன் சேந்தனார் யார் எனத் தான் இனம்காணவேண்டிச் சிவன் நடத்திய திருவிளையாடல் இது என்பதைப் புரிந்துகொண்டான்.

சேந்தனார் கால்களில் விழுந்து வணங்கி, அவர் இல்லம் தேடிவந்து களியுண்ட சிவனடியார் உண்மையில் சிவபெருமானே என்பதை அவரிடம் தெரிவித்தான். சேந்தனாரின் விழிகளில் இருந்து பக்திக் கண்ணீர் பெருகியது.

இந்த நிகழ்ச்சி நடந்த நாள் மார்கழி மாதம் திருவாதிரை நன்னாள். இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக திருவாதிரைப் பண்டிகை ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்படுகிறது. களியுண்ட சிவனுக்குத் தாங்களும் களிசெய்து படைத்து சிவபெருமானைப் போற்றி அவன் அருளைப் பெறுகிறார்கள் அடியவர்கள்.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News