சிறப்புக் கட்டுரைகள்

உசுரே நீ தானே!... அத்தியாயம்- 14

Published On 2025-01-09 23:09 IST   |   Update On 2025-01-09 23:09:00 IST
  • பெருமாள் பதில் பேசாமல் அவரை பார்த்தான்.
  • எதிர்முனையில் “டேவிட்... நான் திவ்யா பேசறேன்” என குரல் கேட்டது.

"என்ன சார்... என் போன் ட்ரை பண்ணிகிட்டே இருந்திருப்பீங்களே... சுவிட்ச் ஆஃப் ஆனதும், திவ்யாவ நான்தான் ஆள் வெச்சு கடத்திட்டேன்னு எல்லோருமே முடிவு பண்ணி வெச்சுருப்பீங்களே..."

காரை விட்டு இறங்கிய பெருமாள், இப்படி கேட்டதும், அழகர் அதிர்ந்தார்.

"சார்... காலையில திவ்யா காணாமல் போயிட்டதா எங்கப்பா போன் பண்ணிட்டார்..."

அனைவரும் ரங்கராஜனை பார்த்தனர்.

"அவசரமா கிளம்பினதுலே இன்னிக்கு போன் பில் கட்ட கடைசித் தேதின்னு மறந்துட்டேன்... சர்வீஸ் கட் பண்ணிட்டான். வர்ர வழியில இ-மையம் எதும் கண்ணில படலே... அவசரமா வேற செல்ஃப் ட்ரைவுல வந்தேனா, உங்க ஊருக்கு வந்துதான் போன் பில் கட்டிட்டு வரன்... ஏம்ப்பா... நா வந்தேன்னு சொல்லலியா...?"-ரங்கராஜனை பார்த்து கேட்டான் பெருமாள்.

"இல்லப்பா... உன் போன் சுவிட்ச் ஆஃப்னு சொன்னாங்க... காலையில பேசுனவன் ஏன் போன் ஆஃப் பண்ணிட்டான்னு குழம்பி..."

"நீங்களும் ஒரு வேளை பெருமாள்தான் ஆள் வெச்சு திவ்யாவ கடத்தி இருப்பானோன்னு குழம்பி... சைலண்ட் ஆயிட்டீங்க... அப்படித்தானே?"

ரங்கராஜன் தலைகுனிந்தார்.

"உங்க மேல தப்பு இல்லப்பா... அது நம்ம நாட்டு மக்களோட வியாதி... ஒருத்தனை தப்புனு சொல்லிட்டா... என்ன ஏதுன்னு விசாரிக்காம எல்லோரும் அதையே நம்புறது... சாஞ்சா சாயுற பக்கமே சாயுற ஆடுங்க புத்தி..."

எல்லோரும் பார்க்க... பெருமாள் தொடர்ந்தான். "சரி... இன்ஸ்பெக்டர்... இப்ப என் தங்கச்சி நிலமை என்ன... ஏதாவது க்ளு கிடைச்சுதா... இல்ல அரசியல் ரீதியா நான் ஏதாவது ஆக்ஷன் எடுக்கணுமா...?"

"அதெல்லாம் தேவை இல்ல சார்... விசாரணையை இப்பத்தான் தொடங்கி இருக்கோம். கை குலுக்கிற மாதிரி ஸ்டிக்கர் ஒட்டின ஊதா இன்னொவால் கடத்தினதாக லேட்டஸ்ட் நியூஸ். நம்பர வச்சு வண்டிய தேடுறோம்..."

"ட்ரக்ல கடத்துனதா சொன்னாங்க..."

இயக்குநர் A. ெவங்கடேஷ்


"டரக்ல இருந்து, காருக்கு ஷிப்ட் பண்ணி கூட்டி போயிருக்காங்க... ட்ரக் நம்பர் போலின்னு தெரிஞ்சுட்டது..." -இன்ஸ்பெக்டர் சொன்னார்,

"ட்ரக் நம்பர் போலின்னா... ஊதா இன்னொவா நம்பர் மட்டும் ஒரிஜினலாவா இருக்கப் போகுது..."

பெருமாள் பேசிக் கொண்டிருந்த அதே வேளை...

"கருப்பு நிற கியா காருக்கு மாற்றப்பட்ட திவ்யா மயக்க நிலையிலே இருக்க. ஊதா நிற இன்னொவா காரில் வந்த மனோகர் மற்றும் இருவருக்கும் பணம் கைமாறியது. கியாவை ஓட்டி வந்தவன் சொன்னான்."

"முதல்ல காரோட நம்பர் பிளேட்ட மாத்துங்க... கை குலுக்கிற ஸ்டிக்கர கிழிங்க. அடுத்து பக்கத்து ஊருல போங்க. அங்க சர்ச்சுக்கு பக்கத்துல நமக்கு வேண்டிய மெக்கானிக் பேரு பச்சை... அவன் கிட்ட கார் ஷெட் இருக்கு. வண்டிய விட்டுட்டு நீங்க பஸ்ஸ பிடிச்சு சொந்த ஊருக்கு போயிடுங்க... நான் தேவைன்னா கால் பண்றேன்..."

மனோகர் உள்பட மூவரும் தலையாட்ட திவ்யாவுடன், அந்த கருப்பு கார் கிளம்பியது.

"என்னது கை குலுக்கிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தா அது என் ஃப்ரண்ட்டோட வண்டியா...?"

இன்ஸ்பெக்டர் அழகரிடம் டென்ஷனாய் கேட்டான் பெருமாள்.

"சார்... அந்த வண்டி என் ப்ரண்ட் இசக்கியப்பனோடது. திருநெல்வேலி டவுன்ல சன்னதி தெருவுல இருக்கான். நம்பர் தரேன். பேசுங்க. இந்த ஸ்டிக்கர் ஒட்டின வண்டி வேற யாரோடதோ?"

பேசிக்கொண்டு இருந்தவன் சட்டென்று திரும்பி மொத்த குடும்பத்தையும், டேவிட் நண்பர்களையும் பார்த்தான். பின் இன்ஸ்பெக்டர் அழகரிடம் திரும்பி, "சார்... ஒரு பத்து நிமிஷம் இவங்ககிட்ட சில விஷயங்களை பேசிட்டு வரேன்..."

போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள டீக்கடை பெஞ்சுகளில் எல்லோரும் அமர்ந்திருக்க, டீ குடித்தபடி பெருமாள் பேசினான்.

"இங்க பாருங்க... முதல்ல நீங்க என்னை இந்த சந்தேக பார்வை பார்க்காதீங்க. திவ்யா-டேவிட் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லாம இருந்தது உண்மைதான். ஆனா, அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் என் மனசும் மாறிடுச்சு. சரி, ஊரு, உலகத்துல இல்லாததான்னு நெனச்சு மனச மாத்திகிட்டேன்" குரல் கம்ம பெருமாள் பேசினான். டீயை ஒரு உறிஞ்சி தொண்டையை ஈரப்படுத்தியவன் தொடர்ந்தான்.

"ஆனா... அன்னிக்கு நெல்லை போலீஸ் ஸ்டேஷன்ல என்னை சந்தேகப்பட்டீங்க... கோபமாய் கிளம்பி போயிட்டேன்... மனசு கேட்கலை. மறுபடியும் அப்பாவை சந்திச்சு பேசினேன். என் நிலமையை சொன்னேன்..."

எல்லோரும் ரங்கராஜனை பார்க்க, அவர் "ஆமாம்!" என்பதுபோல் தலையாட்டினார்.

திவ்யா, டேவிட் கிட்ட தப்பா நடந்துகிட்ட ரவுடிகளை பிடிக்க, இந்த இன்ஸ்பெக்டர் அழகர் முனைப்பு காட்டலை'ங்கற கோபத்துல, அவர அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி டிரான்ஸ்ஃபர் பண்ணேன்."

"ஆனா... இன்னிக்கு திவ்யா காணமப்போன கேஸை அதே அழகர்கிட்டயே வந்திருக்கே!" - டேவிட் நண்பர் தியாகு கேட்டான்.

"யெஸ்... அதான் விதி. இப்ப இனிமே திவ்யா கிடைக்கற வரைக்கும் நாம எல்லாம் ஒருத்தர ஒருத்தர் முழுசா நம்பணும். குறிப்பா, நீங்க எல்லாம் என்னை நம்பணும்... என்ன சரியா...?"

எல்லோரும் பார்க்க பெருமாள் சொன்னான்.

"இங்கப் பாரு... கல்யாணத்துல பிரிஞ்ச குடும்பம், கஷ்டம்னா சேரும்னு சொல்லுவாங்க. நம்ம திவ்யா விஷயத்துல அதான் நிஜம். என்னை நம்புங்க... திவ்யாவை கண்டுப்பிடிச்சுடலாம்..."

அனைவரும் சரி என்பதுபோல தலையாட்டினர்.

"சார்... உங்க எல்லோரையும் இன்ஸ்பெக்டர் உடனே கூப்பிடுறார்..."

ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற கான்ஸ்டபிள் இவர்களை கத்தி கூப்பிட்டார். அனைவரும் அவசரமாய் ஸ்டேஷனை நோக்கி விரைந்தனர்.

ஸ்டேஷன் உள்ளே நுழையவும், இவர்களுக்காக காத்திருந்த இன்ஸ்பெக்டர் அழகர், பெருமாளிடம் டெலிபோன் ரீசிவரை நீட்டியபடி சொன்னார்.

"பெருமாள்! உங்க தங்கச்சிய கடத்தினவன் உங்ககிட்ட பேசணுமாம்!"

போனை அவரிடம் இருந்து பிடுங்காத குறைதான். ரிசீவரை பறித்து பெருமாள் காதில் வைத்தான். எதிர்முனை கரகரத்தது.

"என்ன பெருமாள்... தங்கச்சிய நீங்க கடத்தலன்னு எல்லாத்துக்கும் புரிய வைக்க இம்புட்டு நேரமா?"

"டேய்... யார்ரா நீ?"

"அதான் சொல்லிட்டேனே... நல்லவன்!"

"உனக்கு என்னடா வேணும்... எதுக்குடா திவ்யாவ கடத்துன?"

"எமோஷனல் ஆகாத பெருமாள்... இனிமே நான் போன் பண்ண மாட்டேன்... உன் தங்கச்சி உனக்கு வேணும்னா... அந்த டேவிட்டுக்கு அவ பொண்டாட்டி வேணும்னா..."

"என்ன செய்யணும்... சொல்றா... செய்யறோம்..." - பெருமாள் படபடப்பாய் கத்தினான்.

"ஒண்ணும் செய்ய வேணாம்... மூடிட்டு எல்லோரும் ஊருக்கு போயி... அவங்க அவங்க வேலைய பாருங்க..."

போன் கட் ஆனது. இன்ஸ்பெக்டரிடம் திரும்பிய பெருமாள், "என்ன சார்... எதுவும் வேணாம்... உன் தங்கச்சிய தேடுறத விட்டுட்டு எல்லோரும் திரும்பி போங்கன்னு சொல்றான்... சைக்கோ மாதிரி பேசுறான்..."

சேரை விட்டு எழுந்த அழகர், "எஸ்... சைக்கோ மாதிரிதான் இருக்கு அவன் பேச்சு... இவன பிடிக்காம விடக்கூடாது..." என்று கூறி, தன் செல்போனில் சில எண்களை தட்டினார். எதிர்முனை தொடர்புக்கு வந்ததும், "ஹலோ... நம்ம ஸ்டேஷனுக்கு லேண்ட்லைன்ல இப்ப ஒரு கால் வந்தது. அது எந்த நம்பர்ல இருந்து வந்ததுன்னு உடனே ட்ரேஸ் பண்ணி தகவல் கொடுங்க..." - போனை ஆஃப் செய்தார்.

அந்த இடம் ஏறக்குறைய ஒரு பொட்டல் காடு மாதிரி இருந்தது. ட்ரக் மட்டும் நிற்க, அதை போலீஸ் நோ எண்ட்ரி என மஞ்சள் நிற ரிப்பன் கட்டபட்டு இருக்க, ஆங்காங்கே, போலீஸ் மற்றும் தடய நிபுணர்கள் இயங்கி கொண்டு இருந்தனர். மோப்ப நாய்கள் தங்கள் டூட்டியை முடித்த களைப்பில் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.

மொத்த குடும்பமும், பெருமாள், டேவிட் அவனது நண்பர்கள் உட்பட, குழப்பமாய் இருக்க மற்ற அதிகாரிகளுடன் பேசிவிட்டு இவர்கள் அருகே வந்த இன்ஸ்பெக்டர் அழகர், மீசையை வருடியபடி பேச ஆரம்பித்தார்.

"வண்டி தடயத்தை வெச்சு பாக்குறப்போ இங்க இருந்துதான் ட்ரக்ல இருந்து ஊதா இன்னொவாக்கு திவ்யாவை ஷிப்ட் பண்ணியிருக்காங்க... ஜூஸ் பாட்டல லேப் செக்கப் அனுப்பி கிடைச்ச ரிப்போர்ட்ல மயக்க மருந்து அதுவும் வீரியமான கெமிக்கல்ஸ் அதுல இருந்தது உறுதியாயிருக்கு... இது இந்த டீம் ரிப்போர்ட்"

அப்போது அங்கு வந்த இன்னொரு அதிகாரி அழகரிடம், "சார்... இப்பத்தான் இன்ஃபர்மேஷன் வந்தது... ப்ளு இன்னொவால இருந்து அந்த பொண்ணை வேற வண்டிக்கு மாத்திட்டாங்க..."

அந்த ஆபீசர் நகரவும், மொத்த பேரின் கண்களில் கண்ணீரும், கவலையும் சேர்ந்தது. "திவ்யா கிடைப்பாளா... மாட்டாளா... யார் அந்த நல்லவன்... இப்ப அடுத்தது என்னத்தான் செய்ய....?" திவ்யாவின் அம்மா ராஜேஸ்வரி அழுதபடி கேட்டாள்.

"இருங்கம்மா... என்கொயரி போயிட்டு இருக்கு... கவலைப்படாதீங்க... உங்க பொண்ணு கிடைச்சிடுவாங்க..." அழகர் ஆறுதலுக்காக, அப்படி சொன்னாலும், அனைவருக்கும் அது ஆறுதல் வார்த்தை என்பது அப்பட்டமாய் தெரிந்தது.

டேவிட், அழகரிடம் கேட்டான். "சார்... ஸ்டேஷனுக்கு கால் வந்ததே, அது எங்கேயிருந்துன்னு ட்ரேஸ் பண்ணிடாங்களா சார்!"

"ஆமா... அது இங்கே இருந்து அறுபது கிலோ மீட்டர் தாண்டி இருக்கிற அரிசல்குளம் அப்படிங்கிற ஒரு சின்ன கிராமத்திலுள்ள பெட்டிக்கடை பப்ளிக் போன்ல இருந்து வந்துருக்கு. நம்ம டீம் விசாரணைக்கு போயிருக்காங்க... சீக்கிரம் ரிப்போர்ட் வந்துடும்..."

அதற்குள் பெருமாள் யாரிடமோ போன் பேசிவிட்டு வர, இன்ஸ்பெக்டர் அழகர் "பெருமாள்! தேவையில்லாம இதுக்குள்ள உங்க அரசியல் செல்வாக்கை பிரயோகிக்க வேண்டாம். அப்புறம் தேவை இல்லாத பிரச்சனைகள் உருவாகும்..."

பெருமாள் பதில் பேசாமல் அவரை பார்த்தான். அப்போது டேவிட்டின் செல்போன் சிணுங்கியது. டேவிட் போனை எடுத்து காதில் வைத்தான். எதிர்முனையில் "டேவிட்... நான் திவ்யா பேசறேன்" என குரல் கேட்டது.

(தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

Tags:    

Similar News