- என் மனித உடலோடு சொர்க்க லோகத்திற்கு என்னை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும்! நீங்கள் நினைத்தால் அது முடியும்!`
- விஸ்வாமித்திரரின் தவ ஆற்றல் காரணமாக சொர்க்கவாசல் யாரும் திறக்காமல் தானே திறந்து கொண்டது.
கோசல நாட்டின் குலகுருவான வசிஷ்டரது தவச் சக்தியின் மேல் கடும் பொறாமை கொண்டிருந்தார் மகரிஷி விஸ்வாமித்திரர்.
வசிஷ்டரைப் போலவே தானும் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்றும் தவ ஆற்றலால் வசிஷ்டரை வெல்ல வேண்டும் என்றும் ஆசை கொண்டார். அதே லட்சியத்தோடு கடுமையான தவத்தில் ஈடுபட்டார்.
அவர் செய்த தவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. ஒரு நாளைக்குப் பதினைந்து மணி நேரத்திற்கு மேல் தவத்தில் ஈடுபட்டார் அவர். கண்மூடி தவம் செய்யத் தொடங்கினால் பல மணிநேரங்களுக்குப் பிறகு எப்போதாவதுதான் கண் திறப்பார்.
ஆண்டுகள் செல்லச் செல்ல அவரின் தவத்தின் காரணமாக விளைந்த பேராற்றல் அவரிடம் மிக அதிகம் கூடியிருந்தது. அவரது கடும் தவத்தின் உஷ்ணம் இந்திர லோகத்தையும் தகித்தது.
ஒருநாள் அவரை நாடிவந்தான் கோசல நாட்டு மன்னன் திரிசங்கு. விஸ்வாமித்திரர் தவம் செய்யும் தவச் சாலையில் அமைதியாக அவர் முன் அமர்ந்து கொண்டான். கொக்கு மீனுக்காகக் காத்திருப்பதைப் போல், அவர் கண் விழிப்பதற்காகப் பொறுமையோடு காத்திருந்தான்.
அன்றைய தவத்தை அப்போதைக்கு நிறைவு செய்து மெல்லக் கண்விழித்த விஸ்வாமித்திரர், தன் எதிரே தலையில் கிரீடத்தோடு மன்னன் திரிசங்கு பணிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் மனம் வியப்பில் ஆழ்ந்தது.
அவன் வசிஷ்டரின் பிரதான சீடனல்லவா? அப்படியிருக்க அவன் தன்னை நாடி வந்த காரணமென்ன?
தனக்கும் வசிஷ்டருக்கும் இடையே இணக்கமான போக்கு இல்லை என்பதை அவன் அறியவில்லையா? தன்னை நாடி இவன் வந்திருக்கிறான் என்றறிந்தால் வசிஷ்டர் சீற்றமடைவார் என்பதை அவன் உணரவில்லையா?
விஸ்வாமித்திரர் விடையறிய முற்பட்டார். திரிசங்குவிடம் `தன்னை அவன் தேடி வந்த காரணம் என்ன?` என்று பரிவோடு வினவினார்.
திரிசங்குவின் விழிகள் கண்ணீரில் பளபளத்தன. அந்தப் பளபளப்பில் நிறைவேறாத ஆசையின் ஏக்கம் புலப்பட்டது. ஏன், வசிஷ்டரைப் பற்றிய சலிப்பும் கூடத் தென்பட்டது. அவன் தன் ஆசையை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தான்:
`முனிவரே! நான் இந்த உடலோடு இப்படியே சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகிறேன். என்னுடைய நெடுநாள் ஆசை இது. இதை என் குலகுரு நிறைவேற்றி வைப்பார் என நம்பினேன்.
வசிஷ்டரிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். ஆனால் அவர் சொர்க்கத்திற்கு மனித உடலோடு போவதா? அதெல்லாம் நடக்காது, இப்படியெல்லாமா ஆசைப்படுவது? உன் பைத்தியக்காரத்தனமான ஆசையை விட்டுவிடு என்று கூறி என்னை விரட்டிவிட்டார்.
கடும் சோர்வில் ஆழ்ந்த எனக்கு உங்கள் நினைப்பு வந்தது. உங்களின் அபாரமான தவச்சக்தி பற்றி அறிவேன். உங்களைத்தான் இந்த உலகம் முழுவதும் புகழ்கிறதே? நீங்கள் மட்டும் மனம் வைத்தால் என் குரு வசிஷ்டரால் முடியாததை நீங்கள் முடித்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அந்த நம்பிக்கையில்தான் இதோ இங்கு வந்து உங்களைச் சரணடைந்துள்ளேன். என்னை வசிஷ்டரின் சீடன் என்று புறக்கணிக்காமல் என்மேல் தாங்கள் கருணை கொள்ள வேண்டும்.
இப்படியே இந்த என் மனித உடலோடு சொர்க்க லோகத்திற்கு என்னை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும்! நீங்கள் நினைத்தால் அது முடியும்!`
திரிசங்குவின் பேச்சைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்தார் விஸ்வாமித்திரர். முதலில் இது ஏதாவது தன்னைச் சிக்க வைக்கும் சூழ்ச்சியோ என சந்தேகம் கொண்டார். ஆனால் ஞான திருஷ்டி மூலம் இது சூழ்ச்சியல்ல என்பதையும் உண்மையிலேயே திரிசங்குவின் நீண்டநாள் ஆசை என்பதையும் உணர்ந்து கொண்டார்.
வசிஷ்டரால் இயலாததை, தான் செய்து வெற்றி பெற வேண்டும் என நினைத்தது அவர் உள்ளம். வசிஷ்டரை விடவும் தான் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்க இது ஓர் அருமையான சந்தர்ப்பம் அல்லவா? குலகுருவால் கைவிடப்பட்டவனை நாம் ஆதரிப்போம் என எண்ணிய விஸ்வாமித்திரர் ஒரு முடிவு செய்தார்.
`திரிசங்கு! கவலைப்படாதே. போய் உன் அரசாங்கக் கடமைகளை விரைவில் முடி. உன் மகனுக்குப் பட்டம் கட்டி அவனை மன்னனாக்கு. பிறகு என்னிடம் வா. நான் என் தவ வலிமையினால் யாகம் செய்து உன்னை உன் உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்! வசிஷ்டர் நிறைவேற்றாத உன் வேண்டுகோளை நான் நிறைவேற்றுகிறேன்` என்றார் அவர்.
மனநிறைவடைந்த திரிசங்கு தன்னுடைய கோசல நாட்டுக்குத் திரும்பினான். தன் மகனுக்குப் பட்டம் சூட்டி அவனை மன்னனாக்கினான்.
பின் மந்திரி பிரதானிகளிடமும் குடும்பத்தாரிடமும் மக்களிடமும் விவரத்தைச் சொல்லி விடைபெற்றான். விஸ்வாமித்திரரிடம் மறுபடி வந்து சேர்ந்தான். எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றிவிட்டேன் எனச் சொல்லி அவர்முன் கைகட்டி நின்றான்.
பாராளும் மன்னன் தன் குலகுரு வசிஷ்டரை நிராகரித்துவிட்டுத் தன்முன் பணிவோடு நிற்பதை எண்ணி விஸ்வாமித்திரரின் மனம் பெருமிதம் கொண்டது. விஸ்வாமித்திரர் திரிசங்கு தன் மனித உடலோடு சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற சங்கல்பத்தோடு அக்கினி மூட்டி யாகம் வளர்க்கலானார்.
மன ஒருமைப்பாட்டோடு தொடர்ந்து மந்திரங்களை ஜபிக்கலானார். அவர் மந்திர உச்சாடனம் செய்யச் செய்ய வேள்விக் குண்டத்தில் யாகத் தீ திகுதிகுவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மந்திரங்கள் தங்கள் பலனைத் தர ஒருபோதும் தவறுவதில்லையே?
அப்போதுதான் அந்த வியக்கத்தக்க சம்பவம் நடைபெற்றது. மந்திரங்களின் ஆற்றல் காரணமாக சொர்க்கத்தில் இருந்து ஒரு விமானம் தானே பூமிக்கு இறங்கி வந்தது. விமானத்தைப் பார்த்த விஸ்வாமித்திரர் மகிழ்ச்சி அடைந்தார்.
`திரிசங்கு! இந்த விமானத்தில் ஏறி நீ சொர்க்கத்திற்குச் செல்!` என கம்பீரமாக உத்தரவிட்டார்.
அவர் பாதங்களைப் பணிந்து விடைபெற்று விமானத்தில் ஏறினான் திரிசங்கு. அடுத்த கணம் விமானம் விர்ரென்று விண்ணில் பறக்கத் தொடங்கியது. சொர்க்கத்தின் முன் போய் நின்றது அது.
விஸ்வாமித்திரரின் தவ ஆற்றல் காரணமாக சொர்க்கவாசல் யாரும் திறக்காமல் தானே திறந்து கொண்டது.
சொர்க்கத்தின் உள்ளிருந்த தேவர்கள் சொர்க்க வாசல் தானே திறக்கும் அதிசயத்தைப் பார்த்துத் திகைத்தார்கள். திறந்த வாசல் வழியே ஒரு மானிடன் சொர்க்கத்தின் உள்ளே நுழைய எத்தனிப்பதைப் பார்த்தார்கள்.
யார் இவன்? ஆன்மாதானே சொர்க்கத்திற்கு வரும்? இவன் தன் மானிட உடலோடு வந்திருக்கிறானே? இது எப்படி சாத்தியம்?
இதை அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் பின்னர் இப்படியெல்லாம் மானிடர் அடுத்தடுத்து வரத் தொடங்கினால் சொர்க்கத்தின் மதிப்பு என்னாவது? இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.
யோசித்த தேவர்கள் தங்கள் அரசனான தேவேந்திரனிடம் விஷயத்தைச் சொல்லி முறையிட்டார்கள். அதிர்ந்து போன தேவேந்திரன் கட்டளையிட, அனைத்துத் தேவர்களும் சொர்க்க வாசலில் வந்துநின்ற திரிசங்குவை விமானத்தில் இருந்து கீழே பிடித்துத் தள்ளினார்கள்.
தடதடவென பூமியை நோக்கி விழத் தொடங்கினான் திரிசங்கு. `விஸ்வாமித்திரரே! அபயம் அபயம்!` என அவன் கதறிய கதறல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.
ஆகாயத்தைப் பார்த்த விஸ்வாமித்திரர் என்ன நடந்தது என்பதை உடனே புரிந்துகொண்டார். கடும் சீற்றமடைந்தார்.
`என் தவச் சக்தியின் மீது ஆணை! திரிசங்கு! நில் அங்கே!` என உரத்த குரலில் கட்டளையிட்டார். கீழே விழுந்து கொண்டிருந்த திரிசங்கு அவரின் தவ ஆற்றல் காரணமாக அடுத்த கணம் வானில் நடுவே அப்படியே கீழே விழாமல் நின்றான்!
இடைப்பட்ட ஆகாயத்திலேயே தம் தவச் சக்தி மூலம் புதிதாய் ஒரு சொர்க்கத்தைப் படைக்கத் தொடங்கினார் விஸ்வாமித்திரர். விறுவிறுவென்று இன்னொரு சொர்க்க லோகம் வானத்தின் நடுவே உருவாகத் தொடங்கியது. அதைப் பார்த்து தேவலோகம் கதிகலங்கியது.
சொர்க்கத்தின் மதிப்பு குறையும் எனக் கருதி ஒரு மனிதன் மனித உடலோடு சொர்க்கத்திற்கு வருவதைத் தடுத்தோம். ஆனால் இப்படிப் புதிதாகவே இன்னொரு சொர்க்கம் உருவாக்கப்பட்டால் ஏற்கெனவே உள்ள சொர்க்கத்தின் மதிப்பு என்ன ஆகும்?
தேவர்கள் மும்மூர்த்திகளிடம் போய் முறையிட்டார்கள். சிந்தித்த பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முன்மூர்த்திகளும் விஸ்வாமித்திரரைத் தேடி வருவதற்கும் முன்பாக வசிஷ்டரைத் தேடிச் சென்றார்கள்.
இன்னொரு சொர்க்கத்தைப் படைப்பது இந்திரனை அவமதிப்பதாகும் என்றும் அந்த எண்ணத்தைக் கைவிடுமாறு விஸ்வாமித்திரரிடம் அவர் சொல்ல வேண்டும் என்றும் வசிஷ்டரைக் கேட்டுக் கொண்டார்கள்.
மும்மூர்த்திகளுக்குப் பணிந்த வசிஷ்டர் தன்மேல் பொறாமை கொண்டிருந்த விஸ்வாமித்திரரைத் தாமே தேடிச் சென்றார். சொர்க்கம் படைப்பதை அவ்வளவில் நிறுத்திக் கொள்ளுமாறும் மும்மூர்த்திகள் அதை விரும்பவில்லை என்றும் எடுத்துச் சொன்னார்.
தவத்தால் யாரை வெல்ல நினைத்தாரோ அந்த வசிஷ்டரே தன்னைத் தேடிவந்து கேட்டுக் கொண்டதை எண்ணி மகிழ்ந்தது விஸ்வாமித்திரரின் மனம். புதுச் சொர்க்கம் படைப்பதைத் தொடராமல் அவ்வளவில் நிறுத்திக் கொண்டார் அவர்.
அந்தரத்தில் நிறுவப்பட்ட இடைச் சொர்க்கத்தில் திரிசங்கு வானகத்திலும் இல்லாமல் பூமியிலும் இல்லாமல் அந்தரத்திலேயே வாழலானான்.
விஸ்வாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால் திரிசங்கு தனது கோசல நாட்டின் அரசாட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு வந்தார் அல்லவா? அந்த மகன்தான் அரிச்சந்திரன். பொய்யே பேசாமல் உண்மையை மட்டுமே பேசி அதனால் வந்த அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தவன்.
இதுதான் திரிசங்கு சொர்க்கம் என்று இன்னொரு சொர்க்கம் உருவான கதை.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com