சிறப்புக் கட்டுரைகள்

நிழல் தாங்கல்கள் கண்டஅய்யா

Published On 2025-01-04 11:15 GMT   |   Update On 2025-01-04 11:15 GMT
  • தென்திருவிதாங்கூர் சமய சமூக வரலாற்றில் இத்தாங்கல்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.
  • சுவாமிகளால் தூண்டப்பட்ட உரிமைப் போராட்டம் அவரது காலத்தில் வெற்றி காண முடியவில்லை.

அய்யா ஏற்றிய அன்புக்கொடி முக்கியப்பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் நடைபெறும் விழாக்களின் போது அன்பர்களால் ஏற்றப்பட்டு, விழாக்கள் தொடங்கப்படுவது வழக்கமாகும். அய்யாவின் அவதார தினத்தன்று நாகர்கோவில் முதல் சாமிதோப்பு வரை நடைபெறும் ஊர்வலத்தில் அன்புகொடி மக்கள் ஏந்தி வரும் காட்சி கண்ணுக்கினிய கவின்மிகு காட்சியாகும். ஒற்றுமை உணர்வினை வளர்த்திடவும், தன்னுடைய போதனைகளை பரப்பிடவும் வைகுண்ட சுவாமிகள் பல நிழல்தாங்கல்களை நிறுவினார்.

இத்தாங்கல்கள் இணந்தாங்கல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. வெளித்தோற்றத்தில் இத்தாங்கல்கள் யாவும் சிறுகுடிசைகள் போன்று ஆரம்ப காலத்தில் அமைந்திருந்தன.

சுவாமிகள் தானே நேரில் சென்று செட்டிக் குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், பாலூர், கண்டவிளை, வடலிவிளை, கடம்பன்குளம், பாம்பன்குளம், பாஞ்சாலங்குறிச்சி முதலிய இடங்களிலும் நிழல் தாங்கல்களை நிறுவினார். இந்த நிழல்தாங்கல்களை தொடர்ந்து, ஏராளமான நிழல் தாங்கல்கள் அய்யாவின் ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்டன. தென்திருவிதாங்கூர் சமய சமூக வரலாற்றில் இத்தாங்கல்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.

எல்லா மக்களையும் ஒன்றாக தன்னகத்தே கவர்ந்து சுவாமிகளின் அறிவுரைகளை செவிமடுக்கச் செய்ததுடன், கல்விக் கூடங்களாகவும் செயல்பட்டன. 'பகர்த்து எழுதி வைத்து பள்ளி கூடங்கள் தோறும் கொடுத்து நீங்கள் போய் சொல்லுங்கள்' என்று தனது சீடர்களை சுவாமிகள் அறிவுறுத்தினார். தன் கோட்பாடுகளைப் பரப்பிட பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட பண்டாரங்களுள், சித்தி பெற்றவர்களும் இருந்தனர். சுவாமியின் காலத்திற்கு பின்னர் தாங்கல்களில் தங்கி மக்கள் தொண்டாற்றினர்.

சில கிராமங்களில் அண்ணாவிகளால் செயல்படுத்தப்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இத்தாங்கல்களில் வைத்து நடத்தப்பட்டன. நிழல் தாங்கல்களில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிலவ வேண்டும் என்பதில் சுவாமிகள் கண்டிப்புடன் இருந்தார். தனது அறிவுரைகளை தவறாது போற்றி நடக்குமாறும், மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவர் எனவும் அழுத்தமாக உரைத்தார். சுவாமிகள் தனது காலத்தில் இந்நிழல்தாங்கல்களை இணைத் தாங்கல்களாகச் செயல்படச் செய்து, சாமிதோப்பு தலைமைப் பதியில் இருந்து, தான் இடுகின்ற கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றச் செய்தார்.

இன்று நாராயண சுவாமி கோயில் எனவும், நாராயண சுவாமிப்பதி எனவும் பெயர் தாங்கி நிழல்தாங்கல்கள் ஆயிரக்கணக்கில் காட்சி அளிக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமின்றி உயர் வகுப்பினரும் ஏற்றத்தாழ்வு இல்லாது இத்தாங்கல்களுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இத்தாங்கல்களில் சிலைகளோ வேறு வகையான உருவங்களோ இல்லை. சமய வழிபாட்டில் வீண் உபசாரங்களை தவிர்த்து ஒரு புதிய சமய வாழ்வினை இத்தாங்கல்கள் தோற்றுவித்துள்ளன. ஆண்டிற்கொரு முறையோ இருமுறையோ இப்பதிகளில் அன்னதானம் செய்வதுவே தலையாய சமய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகின்றது. "பால் வைப்பு விழா" என்ற பெயரில் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகின்றது. விழாக்களில் தர்ம பரிபாலனமே சிறப்பான இடம் வகிக்கின்றது.

சுவாமிகளின் அன்புக்கொடி மக்கள் பிற இந்துக் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் இல்லை. அங்குச் சென்று காணிக்கை, காவடி எனக் கொடுப்பதுமில்லை. உருவமற்ற இறைவனை உருவ வழிபாட்டில் காண்பது தவறானது எனவும், பல்லுயிர்களின் நாயகனாக விளங்கும் பரமனுக்கு அவன் படைத்திட்ட உயிரினங்களையே பலியாக்குவது பண்பற்ற செயல் எனவும் தெள்ளத்தெளிந்து எளியோராய், இரக்கச் சிந்தை கொண்டு செய்திடும் வழிபாட்டினை வைகுண்டர் காட்டிய பாதையில் நடத்தி மன நிறைவு அடைகின்றனர். பிரம்மனின் வாரிசெனக் கொண்டு, தங்களுக்கே அனைத்தையும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட பிராமணர்கள், தென்திருவிதாங்கூர் சமுதாய வானில் பெரும்பான்மையோரின் தாழ்வு நிலைக்குக் காரணமாய் இருந்ததை சுவாமிகள் வெளிப்படையாகவே தாக்கினார். பிராமணர்களைப் பயம் காட்ட நாம் வருவோம் என பிராமண ஆதிக்கத்தில் கட்டுப்பட்டிருந்த காலத்தில் பகிங்கரமாக தனது அன்பர்களுக்குத் திடம் கூறினார். பிராமணர்களின் ஆதிக்கம் நிலையானதல்ல; அது வெகுவிரைவில் அழிந்தே தீரும் என நம்பிக்கை ஊட்டினார்.


பூநூல் முடித்தவர்கள் இப்புவியில் இருக்க மாட்டார் என்று பூநூல் அணிந்து, பூமாதேவியின் மடியில் புனித போர்வையுடன் விளங்கிய பிராமணர்களின் பூநூல் மகத்துவம் இல்லாமல் போய்விடும், அவர்களின் ஆதிக்கம் இனி அழிந்துவிடும் என எச்சரிக்கை செய்தார். எல்லா உரிமைகளும் கொண்டு விளங்கிய பிராமணர்களின் ஏகபோக நிலையினை எல்லா மக்களும் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தாழ்த்தப்பட்டோரை விழிப்புணர்வு பெற ஊக்கம் ஊட்டினார். நாள் முழுக்க கடுமையாக உழைத்த போதிலும் உண்ண உணவின்றி, பசியையும், பட்டினியையும் தனதாக்கி கொண்டு தென்திருவிதாங்கூர்வாழ் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் பரிதவித்தனர். பிஷப் சாமுவேல் மாற்றீர் இப்பெண்களின் துயர் நிலை கண்டு, 'இப்பகுதியில் பெண்ணாகப் பிறப்பதே ஒரு கொடிய பாவமான செயல்' எனக் கூறுகின்றார். அரசாங்கம் விதித்திருந்த வரியினை செலுத்த முடியாத நிலையில் தன்னை இம்சைப்படுத்திய வரி வசூலிப்போனிடமே தனது மார்பகத்தைத் தானே அறுத்து அளித்திட்ட அவல நிலையில் திருவிதாங்கூரில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் வாழ்ந்தனர்.

'ஆடையில்லாதவன் அரை மனிதன்' என இகழ்ந்துரைத்த நாட்டில் ஆடையில்லாது திரிந்த அமணர்களை அவதூறு கூறி நாட்டில் தோற்றத்திலேயே "ஒடுக்கப்பட்டவர்கள்" என்பதை கண்டறியும் விதத்தில் மேட்டுக்குடியினரின் கெடுபிடி காரணமாக அரை மனிதர்களாக அரைகுறை ஆடையுடன் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடினர். பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிந்திட பிற்போக்கு எண்ணம் கொண்ட மேட்டுக்குடியினர் இடம் தரவில்லை. " இடுப்பில் குடம் எடுத்துச்செல்லவும் உரிமையற்றவர்களாய் அவர்கள் வாழ்ந்தனர். ஒடுக்கப்பட்ட சமூகப்பெண்களின் நிலைகண்டு வருந்திய சுவாமிகள்'

"பெண் பாவம் பாராதே

பேணியிரு என்மகனே"

என அறிவுறுத்தி அவர்களின் இழிநிலையினை அகற்றிடப் பணித்தார். தன்னைத் தேடி வந்த மக்களிடத்தில் தோள் சேலை அணியவும் இடுப்பில் குடம் எடுத்துச்செல்லவும் கோரிக்கை விடுத்தார். அய்யாவின் அருளுரையினை ஏற்று பெண்கள் தங்கள் வழக்கத்தினை மாற்றி, மேட்டுக்குடியினரைப் போன்று ஆடை அணிந்து வெளி வரலாயினர். ஒடுக்கப்பட்ட ஆனால் மேட்டுக் குடியினர், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் மாறுதலான பழக்க வழக்கம் கண்டு வெகுண்டெழுந்து தாக்குதல் நடத்தி அச்சுறுத்தினர். அருள் நூல் இதுபற்றிக் கூறுகையில்,

"பூமக்கள் நீதமுடன் போட்ட

தோள்சீலை தன்னைப் போடாதே

என்றடித்தானே சிவனே அய்யா

என் மக்கள் சான்றோர்கள்

இடுப்பில் எடுத்தகுடம் ஏண்டி

இறக்கென்றானே சிவனே அய்யா"

எனக் குறிப்பிடுகின்றது. சுவாமிகளால் தூண்டப்பட்ட உரிமைப் போராட்டம் அவரது காலத்தில் வெற்றி காண முடியவில்லை. எனினும் அவர் மறைந்த சில வருடங்களுக்குள் தோள்சேலைப் போராட்டம் என ஒரு மாபெரும் போராட்டமாக மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்து வெற்றி கண்டது. பெண்களின் கற்புநெறி தவறா வாழ்க்கையினைச் சுவாமிகள் வலியுறுத்தினார். சோழநாட்டுப் பெண்களின் நிலை பற்றிக் கூறுகையில் 'கனிவான பெண்கள் கற்புநிலை மாறாமல் வாழ்ந்தனர்' எனக் கூறி "கல்கதவு போல கற்புமனக் கதவு" என்று கற்பின் திண்மையைப் பெருமைபட கூறினார்.

மேலும் திருவிதாங்கூரில் தவறான ஆட்சிபுரிந்து மக்களுக்குப் பெருஞ்சுமையாக தோன்றிய நீசனின் ஆட்சியினை அகற்றிட உரிமைக்குரல் எழுப்பிய சுவாமிகள், "நல்ல பெண்ணின் கற்பே உன் நாட்டை அழித்து விடும்" என்று கற்பையே ஒரு சக்திமிக்க ஆயுதமாக குறிப்பிடுகின்றார். எனவே தான் துறவை தவிர்த்து இல்லறத்தை நல்லறமாக போற்றினார் அவர். அது ஏன்? பார்ப்போம் அடுத்த தொடரில்.

Tags:    

Similar News