சிறப்புக் கட்டுரைகள்

உசுரே நீ தானே!... அத்தியாயம்- 13

Published On 2025-01-02 11:45 GMT   |   Update On 2025-01-02 11:45 GMT
  • அழகர் போனுடன் வாசலில் ஓரமாய் ஒதுங்கினார்.
  • ஆமா... இவளை எதுக்கு கடத்துனாங்க. பணம் பறிக்கவா?” டிரைவர் பக்கத்து சீட்காரன் கேட்டான்.

மொத்த குடும்பமும் போலீஸ் ஸ்டேஷனில், ஒரு பகுதியில் பயத்துடன் நின்று கொண்டு பார்த்து கொண்டிருக்க, டேவிட்டை தனியே அழைத்து சென்று, வாசல் ஓர ஜன்னல் அருகே நிற்க வைத்தார் இன்ஸ்பெக்டர் அழகர். டேவிட் பதைபதைப்புடன் அவரையே பார்க்க, மிகவும் சன்னமான குரலில் இப்படி சொன்னார் அழகர்.

"டேவிட்... அங்க 'டிரக்' மட்டும்தான் நிக்குதாம். உள்ள இருந்த திவ்யா, அப்புறம் அந்த டிரைவர் மனோகர் யாருமே இல்லையாம்!"

டேவிட் அதிர்ச்சியானான்...

"அதுமட்டுமில்ல டேவிட்... போலீஸ் விசாரணையில அந்த 'டிரக்'கே திருடினதுதான், நம்பர் போர்டு போலி. ஓனர் கூட செங்கல்பட்டு தான். ஹைவேஸ்ல ஒய்வுக்கு நின்ன டிரக் ட்ரைவரை கட்டி போட்டுட்டு டிரக்கை திருடி ஓட்டிட்டு வந்திருக்கான்..."

"அதெல்லாம் சரி சார்... இப்ப என் திவ்யாவோட நிலைமை என்ன?"

"பதறாதீங்க... அந்த ஏரியாவுல லோக்கல் போலீஸ் விசாரணை போயிட்டுருக்கு... இன்னும் கொஞ்ச நேரத்துல, நாமளும் அந்த ஸ்பாட்டுக்கு போறோம்! உங்க பேமிலியில கலந்து பேசி யாரெல்லாம் வர்றீங்கன்னு முடிவு பண்ணி வைங்க. நான் எஸ்.பிக்கு தகவல் சொல்லிட்டு வரேன்..."

அழகர் போனுடன் வாசலில் ஓரமாய் ஒதுங்கினார். டேவிட் தன் குடும்ப உறுப்பினர்களுடனும், நண்பர்களுடனும் பதட்டமாய் இன்ஸ்பெக்டர் சொன்னதை விவரிக்க தொடங்க...!

அதே நேரம், அதே வினாடிகளில் அந்த ஊதா கார் ஆள் நடமாட்டம் இல்லாத, தார் ரோட்டில் போய்க்கொண்டிருந்தது. உள்ளே, பின்சீட்டில் இன்னும் மயங்கிய நிலையில், இடது ஓர ஜன்னல் கதவில் சாய்ந்தபடி திவ்யா இருக்க, பக்கத்தில் மனோகர், வலது ஒர ஜன்னல் கதவில் சாய்ந்தபடி இருந்தான். முன்னாள் ஒருவன் காரை ஓட்ட, இன்னொருவன் கேட்டான்... "இந்த பொண்ணு மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிச்சுடமாட்டாளே?"

"இன்னும் மூணு மணிநேரம் முழிக்க மாட்டா... கொஞ்சம் அதிகமாகத்தான் மருந்து ஜூஸில் கலந்து கொடுத்தேன்..." மனோகர் சொன்னான்.

"ஆமா... இவளை எதுக்கு கடத்துனாங்க. பணம் பறிக்கவா?" டிரைவர் பக்கத்து சீட்காரன் கேட்டான்.

"நமக்கு எதுக்கு கேள்வி எல்லாம். சொன்ன இடத்துல ஒப்படைச்சுட்டு, காச கையில வாங்கிட்டு போயிட்டே இருப்போம்... அவனுங்க என்ன பண்ணா என்ன... நாம ஒன்லி டெலிவரி பாய்ஸ்... சொன்னபடி டெலிவரி பண்ணா மட்டும் போதும்..." மனோகர் சொல்ல போன் அடித்தது. எடுத்து காதில் வைத்தான்.

'சார்... இன்னும் ஒரு மணி நேரத்துல நீங்க சொன்ன இடத்துல நாங்க இருப்போம்..."

"............." எதிர்முனை


"சரிங்க சார்... இப்ப கூட போலீஸ் செக் போஸ்ட் இல்லாத சிங்கிள் ரோடா பார்த்து கொஞ்சம் ஜாக்கிரதையாதான் வர்றோம்..."

"............." எதிர்முனை

"கவலைப்படாதீங்க சார்... பத்திரமா ஒப்படைக்கிறோம்... சுண்டுவிரல் கூட மேல படாது சார்...!"

பதில் சொல்லி போனை அணைத்தான் மனோகர்.

"எதுக்கு பொண்ணை தொடக்கூடாதுன்னு அடிக்கடி சொல்றான்..." வண்டி ஓட்டினவன் கேட்டான்.

"அவன் அந்த விசயத்துல கண்டிப்பா இருக்கிறத பார்த்தா, பொண்ணு அவனுக்கு ரொம்ப வேண்டப்பட்டவளா இருக்கும்னு நெனைக்குறேன். என் யூகம், இவளை நாம ஒப்படைக்கபோற ஆளு இவளை பணத்துக்காக கடத்தல..."

மனோகர் சொல்லி முடிக்கவும், ஒரு கருப்பு நிற கியா கார் அவர்களின் காரை மறித்து நின்றது. ஊதா கார் இன்னோவா குலுங்கி நின்றது. கியா காரை பயத்துடன் பார்த்தான் மனோகர்.

போலீஸ் ஸ்டேஷன்,

"என்னங்க இது... மொத்த குடும்பமும் வரேன்னு சொல்றீங்க... அட்லீஸ்ட் ஆம்பளைங்க மட்டுமாவது வாங்க..."

அழகர் கூறவும், ரங்கராஜன் முன்னாடி வந்தார்.

"சார்... என் மனைவி, டேவிட்டோட அம்மா, தங்கச்சி மேரி, மொத்தம் மூணு பேருதானே அடிஷ்னலா வராங்க. காணாமப்போன பொண்ணு கிடைக்கணும்ன்ற பதட்டம் அவங்களுக்கு இருக்கிறது சகஜம்தானே சார்...!"

அழகர் யோசித்தார், "சரி... வரட்டும்... ஆனா ஒன்னு எப்போ லேடிஸ்லாம் வேண்டாம்னு நான் சொல்றேனோ... அப்போ கிளம்பிடனும் புரிஞ்சதா..." என கண்டிப்பான குரலில் சொன்னார். அனைவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டினர். அப்போது ஒரு கான்ஸ்டபிள் வேகமாய் நுழைந்தார். அழகர் 'என்ன' என்பதுபோல் பார்க்க, "சார்... அந்த திவ்யா பொண்ணை ஒரு 3 பேர் ஒரு ஊதா கலர் இன்னொவாவில் கடத்திப்போவதை பார்த்ததா... சாட்சி ஒருத்தர் வந்திருக்கார் சார்!"

இன்ஸ்பெக்டர் அழகர் உட்பட, அனைவரும் அதிர்ச்சியாக, "யாருய்யா அது வர சொல்லு!" அழகர் சொல்லவும், உள்ளே நுழைந்தது ஒரு 18 வயது பையன். கூடவே ஒரு புதிய கான்ஸ்டபிள். அழகரின் புருவம் நிமிர்ந்தது.

"நீங்க நம்ம ஸ்டேஷன் கான்ஸ்டபிள் கிடையாதே...?"

"ஆமா... சார்... கூட்ரோடு சீமந்தபுரம் ஸ்டேஷன் சார்! இந்த பையன் ஊதா இன்னொவாவை பார்த்து இருக்கிறான். எங்க ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான் பையனை இங்க நேர்ல அழைச்சுட்டு போக சொன்னாரு..."

வந்த புது கான்ஸ்டபிள் கூறவும், அழகர் பார்வை பையனிடம் திரும்பியது.

"தம்பி.. உன் பேரு என்ன?"

"ராஜாராம் சார்...?"

"சொல்லு... என்ன பார்த்த!"

"சார்... நான் படுச்சுகிட்டே பார்ட்டைமா பேப்பர் போடுறேன் சார்... காலையில நாலு மணிக்கு கூட்டு ரோட்டுல பேப்பர் பார்சல் வரும். பிரிச்சு கொடுப்பாங்க... நான் சீமந்தபுரம் சுத்தி இருக்குற ஏரியாக்களுக்கு சைக்கிள்ல போயி, வீடு வீடாய், கடை கடையாய் பேப்பர் போடுவேன். அப்படி போட்டுக்கிட்டு வரப்போ ஒரு ஐஞ்சு மணி வாக்கில, சீமந்தபுரம் குறுக்கு ரோடு வழியா ஒரு ஊதா கலர் இன்னொவா போச்சு. உள்ள ஒரு பொண்ணு தூங்கிட்டிருந்தாங்க... கூட மூணு பேரு இருந்தாங்க..."

இயக்குநர் A. ெவங்கடேஷ்


"உனக்கு இத ஏன் போலீஸ்ல சொல்லணும்னு தோணுச்சு..." அழகர் மடக்கினார்.

"சார்... நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கிறேன். பொண்ணுக்கும், கார்ல இருந்த தடியன்களுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி பார்த்த உடனே தோணுச்சு... அப்புறம் ஊருக்குள்ள போலீஸ் விசாரிச்சப்போ சொன்னேன்.."

அந்த பையன் ராஜாராம் தெளிவாக பேசினான்.

"கார் நம்பர் நோட் பண்ணியா...?"

"ஆமா சார்... சந்தேகப்பட்டதால நம்பர் பார்த்து வச்சேன்..."

கூட வந்த கான்ஸ்டபிள் குறுக்கிட்டார். "சார்.. அந்த நம்பர எல்லா டோல்கேட், எல்லா ஸ்டேஷனுக்கும் கொடுத்து தகவல் சொல்லியாச்சு... காரை மடக்கின உடனே இன்பார்ம் வரும் சார்..."

அழகர் பையனை கூர்மையாக பார்த்தார்.

"தம்பி... அந்த பொண்ணை அவங்க கடத்துனாங்கன்னு எப்படி கணிச்ச...?"

"சார்... பொண்ணு தூங்கும்போது, மத்த மூணு பேரும் பேசிட்டு போறப்போ... என்னை பார்த்த பார்வையும், கார் என்னை தாண்டி போன பிறகும், அவங்க என்னை திரும்பி பார்த்த பார்வையும் ஏதோ தப்பா தோணுச்சு சார்..."

பையன் முதுகில் தட்டி கொடுத்தார் அழகர்.

"இன்னிக்கு பசங்க எல்லாம் ரொம்ப எக்ஸ்பட்டா... தெளிவா இருக்காங்க... சரி... பையனை கூட்டிட்டு போங்க.."

அழகர் சொல்லவும், வந்த கான்ஸ்டபிள் பையனை அழைத்துக் கொண்டு, டூவீலரில் ஏற்றி கொண்டு கிளம்ப தயாரானார். அப்போது, திடீரென்று டேவிட் ஓடி வந்து வண்டியை நிறுத்தினான். அழகர் உட்பட அனைவரும் பார்க்க, பையனிடம் டேவிட் கேட்டான்.

"தம்பி... ராஜாராம்... அந்த வண்டியில நம்பர் தவிர வேறு ஏதாவது வித்தியாசமா பார்த்தியா...?"

பையன் குழப்பமாய் பார்த்தான். டேவிட் மீண்டும் தெளிவாய் கேட்டான்.

"அதான் தம்பி... முன்பக்கம் அல்லது காரோட பின்பக்கம், சைடுல.. ஏதாவது எழுத்து இல்ல… ஸ்டிக்கர் இப்படி…?"

டேவிட் முடிக்கும் முன்பே பையன் குறுக்கிட்டான்.

"ஆமா சார்... காரோட பின் கண்ணாடியில 'ரெண்டு கை குலுக்குற' மாதிரி ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது..."

டேவிட் முகம் பிரகாசம் ஆனது. "சரி தம்பி... நீங்க போங்க..." கான்ஸ்டபிள் பையனோட திரும்பி போனார்.

ஒரு நம்பிக்கையுடன், இன்ஸ்பெக்டர் அழகரிடம் வந்த டேவிட் சொன்னான்.

"சார்... நிச்சயமா சொல்றேன். திவ்யாவோட அண்ணன் பெருமாளோட ஆளுங்கதான்... திவ்யாவை கடத்தியிருக்காங்க..."

அழகர் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றிங்க...?"

பெருமாளின் அப்பா ரங்கராஜன் கேட்டார்.

"இல்ல மாமா... நான் திவ்யாவை கல்யாணம் பண்ண கூட்டிட்டு போனப்போ, பெருமாள் எங்களை பிடிக்க கார்ல துரத்திட்டு வந்தான்ல... அந்த கார்ல இந்த மாதிரி "கை குலுக்கிற" ஸ்டிக்கர் ஒட்டியிருந்துச்சு..."

டேவிட் நண்பர்கள் "அதானே... இருந்துச்சுல்ல" என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அதனால்தான் சொல்றன்... அன்னிக்கு பெருமாளுக்கு யார் கார் கொடுத்து உதவுனாங்களோ, அவங்களோட கார்லதான் இன்னிக்கும் திவ்யாவை கடத்திட்டு போயிருக்காங்க..."

"வெரிகுட்... எல்லோரும் கிளம்புங்க... நாம் உடனே கூட்டு ரோடு போயி, சம்பவ இடத்துல விசாரிச்சுட்டு அப்படியே எஸ்.பி ஆபிஸ் போலாம். அதுக்குள்ளே அந்த ஊதா இன்னோவாவ மடக்கிடுவாங்க. இல்லன்னா எஸ்.பி ஆபிஸ்ல பெருமாள் மேல சந்தேகம் இருப்பதா சொல்லி பெருமாள் எங்கிருந்தாலும் தூக்கலாம்.."

இன்ஸ்பெக்டர் சொல்லி, கிளம்ப எத்தனிக்கவும் அந்த ஸ்டேஷனில் வந்து நின்றது, ஒரு வெள்ளை நிற கார். காரின் பின் கண்ணாடியில் "கை குலுக்கும்" ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. எல்லோரும் 'யார்?' என பார்க்க, காரில் இருந்து இறங்கினான் பெருமாள்!

(தொடரும்)

E-Mail: director.a.venkatesh@gmail.com /வாட்ஸப் 7299535353

Tags:    

Similar News