மருத்துவம் அறிவோம்: ஜீரண மண்டலமே 2-வது மூளை!
- உங்களின் உடல் நலத்தினை சரி செய்யும் சாவி உங்கள் உடலில்தான் இருக்கின்றது.
- பொரித்த உணவு, பாஸ்ட்புட் இவை அனைத்துமே நம்முடன் உறவாடி கெடுக்கும் பகையாளிகள் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
சமீப காலமாக மனிதனின் உணவுக்குழாய், ஜீரண மண்டலம் இதனைப் பற்றி ஆய்வுகள் கூடுதலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஆரோக்கியமான, நீண்ட கால வாழ்விற்கு ஜீரண மண்டல ஆரோக்கியம் மிக முக்கியமானது என ஆய்வுகள் கூறுகின்றன.
பல மருத்துவர்கள் குறிப்பாக ஜப்பானிய மருத்துவர்கள் 100 வயதினைத் தாண்டி வாழ்கின்றனர். அத்தோடு மட்டுமல்ல தொடர்ந்து மருத்துவ சேவைகளும் செய்து வருகின்றனர். குடல் ஆரோக்கியம் என்பது உணவில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளே அனைவருக்கும் ஏற்றது.
அதிக சிகப்பு அசைவம் ஜீரணத்திற்கு கடினமானது. மீன் உணவு மிகவும் ஏற்றது ஆகும்.
உடற்பயிற்சி என்பதோடு கூட நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 20 நிமிடம் உடற்பயிற்சி செய்து பின் நாள் முழுவதும் அசையாது ஓரிடத்தில் அமர்ந்தபடி இருப்பது குடலினை ஆரோக்கியமாக வைக்காது. உடல் உழைப்பு அதிகம் இல்லாது இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.
உங்களின் உடல் நலத்தினை சரி செய்யும் சாவி உங்கள் உடலில்தான் இருக்கின்றது. அதனால்தான் உங்கள் குடல் உங்களின் "இரண்டாவது மூளை" என்று சொல்லப்படுகின்றது. ஜீரணம் மட்டுமல்லாது பல வேலைகளை குடல் செய்கின்றது. பொதுவில் 'ஆரோக்கியம் குடலில்தான் தொடங்குகின்றது என்பர். தவறான உணவு, அளவுக்கு அதிகமான உணவு, சத்தற்ற உணவு இவை ஆரோக்கியம் கெட முதல் காரணம் ஆகின்றன. இவை நச்சுகளை வெளியிட்டு உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.
இவற்றினை தடுத்தாலே 90 சதவீதத்துக்கு மேல் உடல் நலம் சீராக இருக்கும். இதனால் உங்கள் மன நலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் நன்றாக இருக்கும். நமது குடலில் என்டெரிக்நேரே சிஸ்டம் என்று இருக்கின்றது. இது தானே இயங்குவது. ஜீரணம், சில ரசாயனங்களை வெளியிடுதல் போன்றவை இதனால் ஏற்படுகின்றது.
நம்மை மகிழ்வாக வைக்கும் 'கெரடோனின்' எனும் ரசாயனப் பொருள் 90 சதவீதம் குடல் மூலம்தான் பெறுகின்றோம். குடலும், மூளையும் தொடர்புடையவை. பேசிக் கொள்பவை. உங்கள் மனநிலை, படபடப்பு ஏற்படும்போது வயிறு சங்கடமாய் இருக்கின்றது என கூறுவது இதனால்தான்.
70 சதவீதம் நோய் எதிர்ப்பு செல்களை குடலே கொண்டுள்ளது. வைரஸ், பாக்டீரியா இவற்றினை எதிர்த்து போராடுகின்றது. குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து கெட்ட பாக்டீரியாக்கள் தொடர்ந்து கூடி இருக்கும்போது எடை கூடுதல், சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், மறதி நோய் இவைகளின் பாதிப்பு கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதிக கனமான உணவுகளை உண்ணும்போது ஜீரணமாகி கழிவுகள் வெளியேற அதிக காலம் ஆகின்றது. இது உடலில் நச்சுக்களை உருவாக்கி வீக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நச்சுக்களை உருவாக்கி பாதிப்பு ஏற்படுத்துவதில் சர்க்கரை உணவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் காரணமாகத்தான் சர்க்கரை, மைதா இவைகளை தவிர்க்கச் சொல்லி வலியுறுத்தப்படுகின்றது.
சிகப்பு அசைவம், அதிக கொழுப்பு, சோடா, வறுத்த, பொரித்த உணவுகளை இந்த 2025-வது புது வருடத்தில் இருந்தாவது விட்டு விடுவோமே.
இப்படி செய்யும்போது உடல் தன்னை தானே ஏற்றுக்கொள்ளும்.
அதிக பால் சார்ந்த உணவுகள், வெஜிடபிள் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மது, பதப்படுத்தப்பட்ட அசைவம், அதிகம் பொரித்த உணவு, பாஸ்ட்புட் இவை அனைத்துமே நம்முடன் உறவாடி கெடுக்கும் பகையாளிகள் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
இன்றைய கால கட்டம்- உலகளவில் ஒரு கண்ணோட்டமாக பார்க்கும்போது பல மேலை நாடுகளில் இளம் தம்பதியினர் குழந்தையே எங்களுக்கு வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கின்றனர். பல இடங்களில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் விதமாக பல மருத்துவமனைகள் பணியாற்றுகின்றன. இதனை நாம் அதிகம் பார்க்கின்றோம். அப்படி இருக்கும் இதே கால கட்டத்தில்தான் எங்களுக்கு குழந்தை பேறு வேண்டாம் என்றும் பலர் இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் கூறுவது:
* இன்று குழந்தை வளர்ப்பது என்பது வாழ்வின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
* பெற்றோர்கள் இருவர் சம்பாதித்தாலும் படிப்பு கட்டணம் என்பது ஏணி போட்டு ஏறி நிக்குது.
* பொறுப்புத் தன்மை அதிகம் கூடுவதால் தனக்கென்ற ஒரு வாழ்க்கையினை அடியோடு தியாகம் செய்ய வேண்டி உள்ளது.
* கடைசி காலத்தில் பிள்ளைகளால் ஏமாற்றங்கள்தான் அதிகம் ஏற்படுகின்றன.
இப்படி அவரவர் மனதில் தோன்றும் காரணங்களைக் கூறுகின்றனர். இதனைப் பற்றி சில நாடுகள் கவலைகளைக் கூட தெரிவிக்கின்றனர். இந்த நிலை இப்படி இருக்க மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக முதியோர்களின் ஆயுட் காலமும் நீண்டு இருக்கின்றது. ஆக புதிய பிறப்புகள் குறைந்தாலும், வயதானோர் ஆயுட் காலம் நீண்டும் உள்ள நிலை வெகு சீக்கிரத்தில் வரலாம்.
சரி. இந்த முதியவர்களை பார்த்துக் கொள்வது யார்? உதவுவது யார்? என்ற கேள்வியும் எழுகின்றது. இதற்காக வெளிநாடுகளில் ரோபோட்டினை உருவாக்கும் முயற்சியும் தீவிரம் அடைந்துள்ளது.
இது இப்படியே இருக்கட்டும். நம்ம ஊருக்கு வருவோம். உடல் நலம், சொத்து என இருந்தால் 100 வயதானாலும் வாழ்க்கை தடபுடலாகத்தான் இருக்கும். மாடாய் உழைத்து தேய்ந்த உடம்பு, கையில் காசில்லை, நோய் என்றாகி விட்டால் முதுமை நரகமாகி விடுகின்றது. பிள்ளைகள் ஒரு டீ, காபிக்குக் கூட கணக்கு பார்க்கும் நிலை என்று வருவதால் மனிதன் நொந்து விடுகின்றான். உயிரினை போ என்றால் போய் விடுமா என்ன? இல்லை கொஞ்ச நாள் இரு என்றால்தான் கேட்டு விடுமா? ஆக இதற்கு ஒரே தீர்வு உடலினை ஆரோக்கியத்தோடு பராமரிப்பது ஒன்றுதான். முதுமையில் பிறர் தயவில்லாமல் தன் வேலைகளை தானே செய்து கொள்வதே மிகப்பெரிய வரம் தான். அதற்கு நம்முடைய முயற்சியும் வேண்டும்.
60-70 வயதாகி விட்டதா, நீங்களே உங்கள் நடையினை கவனியுங்கள், நடை தளர்ந்து விட்டதா? தள்ளாடுகின்றதா? மெதுவாக மட்டுமே நடக்க முடிகின்றதா, கால் முட்டி, பாதங்களில் வலி உள்ளதா?
இதனை வெளிநாட்டில் ஒரு பல்கலைக்கழகம் 34,000 நபர்களை கொண்டு ஆய்வு செய்ததாம். அதன் முடிவாக அவர்கள் கூறியுள்ளது. நடையின் வேகம் அவர்களின் ஆரோக்கியம், ஆயுளுடன் இணைந்து உள்ளது என்பதுதான். 18 வயது போல் ஓடவோ, குதிக்கவோ வேண்டாம். சற்று நன்கு நடப்பவர்கள் ஆரோக்கியத்துடன், கூடுதல் ஆயுளுடனும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். இன்றே கூட
* நடைப்பயிற்சி ஆரம்பிக்கலாம். நிதானமாய், பொறுமையாய் அன்றாடம் செய்யும் பொழுது கால் தசைகள் வலு பெறத்தொடங்குகின்றன.
* நீங்கள் மருத்துவரிடம் செல்லும் பொழுது மருத்துவர் தன் விரல்களை உங்கள் கையால் முடிந்த வரை இறுகப் பிடியுங்கள் என்பார். இது உங்கள் கை தசைகளின் வலுவினை காட்டும் ஒரு பரிசோதனை ஆகும். இருதய ஆரோக்கியத்தைக் கூட அறிகுறி காட்டுதலாக அறிய முடியும்.
* ஆன்மீக ரீதியாக மன பக்குவப்பட்டவர்களுக்கு தனிமை ஒரு பரிசு. ஆனால் யதார்த்த மனிதர்களுக்கு தன் குடும்பம், சுற்றம், நட்பு இவை மகிழ்ச்சி தருவது மட்டுமல்ல. உடல் நலத்தினையும் காப்பதாகும். ஆக உங்கள் மன பக்குவத்திற்கேற்ப வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளுங்கள்.
* முதுமையில் தூக்கமின்மை என்பது சாதாரணமாக நாம் கேள்விப்படும் ஒன்றுதான். ஆனால் அது சாதாரணமானது அல்ல. 7 மணி நேர தூக்கம், ஆழ்ந்த தூக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. இது இல்லையெனில் கடுமையான நோய்களின் பாதிப்பு ஏற்படும்.
* ஒரு மனிதனுக்கு ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தம் மட்டும் இருந்தால் போதும். அவன் வாழும் காலமே நடைபிணம் ஆகி விடும். இதனை இளம் வயதில் இருந்தே தூக்கி எறிந்து (மனதில் இருந்து) வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கையினை கடத்த முடியும். இது பெரிய மாற்றத்தினை காட்டும். தியானம், யோகா இவை இரண்டும் மன அழுத்தத்திற்கு சிறந்த தீர்வு.
ஒரு காலை சற்று தூக்கி மற்றொரு காலால் 10 செகண்ட் நிற்க முடிகின்றதா? தயவு செய்து சோபா, நாற்காலி இதனைப் பிடிக்காமல் இந்த வீர முயற்சியினை செய்ய வேண்டாம்.
விழுந்து எலும்பு முறிவு ஏற்படலாம். இதனை பயிற்சியாளர் உதவியுடன் மட்டுமே செய்ய வேண்டும். எந்த வயதினராலும் இந்த அறிவுறுத்தலை அவசியம் பின்பற்ற வேண்டும். 50 வயதை தாண்டியவர்கள் அருகில் ஒரு ஆள் இல்லாமல், நாற்காலி போன்றவை பிடித்துக் கொள்ள இல்லாமல் இதனை செய்யவே கூடாது. இவை அனைத்தும் முதுமையிலும் அதிகம் பிறரைச் சாராது முடிந்தவரை நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முயற்சிகளே.