பிரம்மனுக்கு ஐந்தாவது முகம் கொடுத்த திருச்செந்தூர் ஆறுமுகம்
- முருகனுக்குரிய மந்திரத்தையும் பிரம்மனுக்கு திருமால் சொல்லிக் கொடுத்தார்.
- பல சித்தர்கள் அவரை வணங்கும் பொழுது பல மந்திரங்களை உருவேற்றினார்கள்.
திருச்செந்தூர் தலம் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தப்பட்ட தலமாகும். மும்மூர்த்திகளின் குறைகளும் இந்த தலத்தில் தீர்ந்துள்ளன. ஆன்மிக புண்ணிய தலங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் தலம் அவற்றில் முதன்மையானது என்பதற்கு இதுவே சான்றாகும்.
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு நல்ல பக்குவத்தை கொடுத்த இடம் திருச்செந்தூர். பிரம்மன் தனது 5-வது தலையை இழந்து வருந்திய போது அதற்கு நிவாரணம் கிடைத்த இடமும் திருச்செந்தூர் தான். அதன் பின்னணியில் உள்ள வரலாற்றை தெரிந்து கொண்டால் திருச்செந்தூரின் தலச்சிறப்பு உங்களுக்கு புரியும்.
பிரம்மாவுக்கும் திருமாலிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது வேதமும் பிரணவமும் சிவனே இருவரிலும் உயர்வானவர் என்று கூறிய பின்னும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது. இதை தேவர்கள் மூலம் அறிந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி தந்தார். அதனைக் கண்ட திருமால் தன்னைவிட சிவபெருமான்தான் பெரியவர் என்று அமைதியானார். ஆனால் பிரம்மா அதை ஏற்காமல் இன்னும் செருக்குடன் இருந்தார்.
சிவனுக்கு ஐந்து முகங்கள். இருப்பது போலவே தமக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் நானே பெரியவன் என்ற அகந்தை பிரம்மாவுக்கு உண்டானது. (பிரம்மாவுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தது). பிரம்மனது அகந்தையை போக்க எண்ணிய சிவபெருமான் பைரவராக மாறி அவருடைய தலைகளில் ஒன்றினை கொய்தார்.
இதனால் பிரம்மா நான்கு முகத்துடன் நான்முகன் என்று பெயர் பெற்றார். பிரம்மாவின் ஆணவமும் அழிந்தது. ஆணவம் மிகுந்த பிரம்மாவின் தலைகளில் ஒன்றினை கொய்த சிவபெருமானின் திருவுருவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானின் இந்த பேராற்றலை திருஞானசம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் தேவாரங்களில் போற்றி புகழ்ந்து பாடி உள்ளார்கள். திருஞானசம்பந்தர் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களில் இதுவும் ஒன்று என்று பாடியதோடு இவ்வீர செயலை பற்றி தேவாரங்களில் 29 இடங்களில் சிறப்பாக பாடியுள்ளார்.
சிவபெருமான் பைரவராக மாறி பிரம்மாவின் தலையை கொய்ததால் பிரம்மாவுக்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டது. தலையிழந்த பிரம்மன், புலம்பியபடி அலைந்தார். தனக்கு மீண்டும் தலை கிடைக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தார்.
திருமாலை சந்தித்து பேசினால், நல்ல யோசனை சொல்வார் என்று பிரம்மனுக்கு தோன்றியது. உடனடியாக திருமாலை சந்தித்து தனது தலை பறிபோனதை பற்றி மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அதற்கு திருமால், ஆறுதல் கூறினார்.
சிவபெருமான் மூலம் இழந்த தலையை அவரது மகன் ஆறுமுகம் மூலம் பெற்றுவிட முடியும் என்று பிரம்மனுக்கு நம்பிக்கையூட்டினார். இதைக் கேட்ட பிரம்மன், "முருகனின் அருளைப் பெற தான் என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு திருமால், "முருகனை உரிய மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். திருச்செந்தூருக்கு சென்று நான் சொல்லும் முருகனின் மந்திரத்தை தினமும் சொல்லி தவம் செய். உனது 5-வது தலை நிச்சயமாக கிடைக்கும்" என்றார்.
முருகனுக்குரிய மந்திரத்தையும் பிரம்மனுக்கு திருமால் சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்று பிரம்மன் திருச்செந்தூருக்கு வந்தார். முருகனை மனதார வழிபட்டு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.
முருகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. பல சித்தர்கள் அவரை வணங்கும் பொழுது பல மந்திரங்களை உருவேற்றினார்கள். அந்த மந்திரங்களையும் அதன் பலன்களையும் பிற்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருந்தார்கள்.
அப்படி பல மந்திரங்களை பெற்ற முருகப் பெருமானின் மூல மந்திரம் என்று நாம் கூறுவது "ஓம் சரவணபவ" இந்த மந்திரத்தை முறையாக கூறினால் இந்தப் பிறவி மட்டுமல்லாமல் நம்முடைய ஏழேழு பிறவிகளுக்கும் அதைத் தாண்டி இறைவனின் திருவடியை அடைவதற்கும் உதவி புரியும்.
சரவணபவ- இந்த மந்திரத்தை உச்சரித்தால் சர்வமும் வசமாகும்.
ரவணபவச- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருளும் நம்மை வந்து சேரும்.
வணபவசர- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு தெரிந்த எதிரிகள் மற்றும் மறைமுகமாக நமக்கு இருக்கும் எதிரிகள் என்று அனைத்து வகையான எதிரிகளையும் நம்மால் வெல்ல முடியும்.
ணபவசரவ- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு இருக்கக்கூடிய எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோய்கள் அகன்று விடும்.
பவசரவண- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நாம் செய்யும் தொழிலில் நமக்கு சிறந்த ஞானத்தை முருகப்பெருமான் அருள்வார்.
வசரவணப- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும்.
இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது ஆறு முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிப்பட வேண்டும். பிறகு குருதட்சணையாக ஒரு ரூபாயை முருகப்பெருமானுக்கு அல்லது விநாயகப் பெருமானுக்கு எடுத்து வைத்து விட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
இவ்வாறு கூறும் பொழுது அந்த மந்திரத்திற்கு உரிய பலனை மட்டும் நாம் பெறாமல் முருகப் பெருமானின் அருளையும் பெற்று பிறவா நிலையை அடைவோம் என்பது சித்தர்களின் வாக்கு.
முருகனை வழிபட அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த மாகிய பொழுதிலே எழுந்து ஒரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி, தீபத்தின் முன் அமர்ந்து "ஓம் முருகா" என்றோ "ஓம் சரவண பவ" என்றோ "ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி" என்றோ "ஓம் சரவணஜோதியே நமோ நம" என்றோ முருகப்பெருமானின் நாமங்களை மனம் உருகி சொல்லி பூஜித்திட வேண்டும்.
வாழ்வில் ஒரு முறையேனும் இப்படிப்பட்ட புனிதமான வழிபாடாகிய ஜோதி வழிபாட்டினை ஒருவன் செய்து வருவானேயானால் அவன் செய்த அந்த ஒரு வேளை ஜோதி வழிபாட்டின் பலன் என்னவெனில் கடுமையான விரதமிருந்து 100 ஆண்டு தவம் செய்ததற்கு ஒப்பான தவப் பயனை பெறுவார்கள் என்பது உண்மையாகும்.
ஏனெனில் வேறெந்த விதமான விரதமுறை வழிபாட்டிலும் வெளிப்பட முடியாத முருகப்பெருமான் அருள்ஜோதி வழிபாட்டில் அவர்கள் ஏற்றும் ஜோதியில் உடனே தோன்றி அருள் செய்வதினாலே ஜோதி வழிபாடு உடனடியாக முருகனது ஆசிகளை பெற்றுத்தர வல்ல வல்லமை மிக்கதான வழிபாடாகும்.
* முருகப்பெருமானை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும்.
* எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பில் இருந்து காக்கப்படுகிறார்கள்.
* திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
* கணவன்-மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.
* நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
* வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும்.
* தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.
"ஓம் சரவண பவ மந்திரத்தில் "ச" என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது "ர" என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது "வ" என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது. "ந" என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது. "ப" என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது. "வ" என்பது நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.
இந்த மந்திரம் முருகனின் அருளை பெற சிறந்த மந்திரமாகும், வெள்ளிக்கிழமை நாளில் விரதம் இருந்து இந்த மந்திரத்தை சொன்னால் நம் எண்ணங்கள் பூர்த்தியாகும், நினைத்தது நிறைவேறும்.
"சரவணபவ" என்கிற மந்திரத்தை மட்டும் 1008 முறை ஒருவர் தினமும் சொன்னால் அவருக்கு பொன் பொருள் சேர்ந்து வேண்டியது வேண்டிய வண்ணம் நிறைவேறும், இந்த வழி பாட்டை செவ்வாய்க்கிழமைகளில் தொடங்குவது சிறப்பு, அது முருகனுக்கு பிடித்த நாளாகும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபித்து இனிப்பான பாலில் குங்குமப்பூ கலந்து முருகனுக்கு நைவேத்யமாக படைத்தால், வாழ்வில் பல சிறப்புகளை அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இத்தகைய சிறப்பான மந்திரத்தை திருச்செந்தூரில் தினமும் உச்சரித்தார் பிரம்மன். இதனால் மகிழ்ச்சியடைந்த முருகப் பெருமான் பிரம்மன் முன் தோன்றினார். அவரிடம் பிரம்மன் தனது குறையை தெரிவித்தார்.
பிரம்மன் மீது முருகப் பெருமானுக்கு இரக்கம் உண்டானது. ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கும்படி அறிவுறுத்தினார். அவ்வாறே, பிரம்மாவும் லிங்க பிரதிஷ்டை செய்து அத்தி, மா, முட்கிளுவை, முல்லை, வில்வம் ஆகிய 5 வகை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் பிரம்மன் முன்தோன்றி ஆசிர்வதித்தார். முருகப் பெருமான் கேட்டுக் கொண்டதால் பிரம்மனுக்கு அவரது 5-வது தலையை கொடுக்க முடிவு செய்தார். திருச்செந்தூர் தலத்தில் உள்ள மூகாரம்பத் தீர்த்தத்தில் நீராடி முருகனை 3 முறை சுற்றி வா. உனக்கு 5-வது தலை தானாக வந்துவிடும் என்றார்.
அதன்படி முருகப் பெருமானை பிரம்மன் 3 முறை சுற்றி வந்தார். அப்போது முருகனுக்குரிய மந்திரத்தையும் உச்சரித்தார். உடனடியாக அவருக்கு இழந்த தலை மீண்டும் கிடைத்தது. மகிழ்ச்சியடைந்த அவர் முருகனுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் தனது பணிகளை தொடங்கினார்.
இதே போன்று திருச்செந்தூரில் நடந்த இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்...