வாடகைத்தாய் முறையில் ஆரோக்கியமான குழந்தை
- மருத்துவமனைகள், வாடகைத்தாய் சட்டப்படி குழந்தை பேறு பெறுவதற்கு அனுமதி பெற்ற மருத்துவமனையாக இருக்க வேண்டும்.
- எல்லோருக்கும் வாடகைத்தாய் முறை என்பது முடியாத ஒன்று, தேவையில்லாத ஒன்று.
குழந்தையின்மையால் பாதிக்கப்படும் ஒரு பெண், ஏதோ ஒரு காரணத்தால் தனது கர்ப்பப்பை மூலம் குழந்தையை சுமந்து பெற முடியாத நிலையில், அந்த தம்பதிக்காக இன்னொரு பெண், அவர்களின் கருவை சுமந்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொடுக்க முடியும். வாடகைத்தாய் முறையை எப்படி பயன்படுத்த வேண்டும்? வாடகைத்தாய் முறையில் ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுவது எப்படி என்பதை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு பெறுவதற்கான வழிமுறைகள்:
வாடகைத்தாய் முறையில் முதல் முக்கியமான விஷயம், வாடகைத்தாயாக இருக்கும் பெண்ணின் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் வாடகைத்தாயாக வருகிறவர்களின் உடல் நலன் மற்றும் மன ஆரோக்கியத்தை முதலில் பரிசோதிக்க வேண்டும்.
அதன்பிறகு அவரது கர்ப்பப்பை வலுவாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். கர்ப்பத்தை தாங்கும் திறன் கர்ப்பப்பைக்கு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இவை சீரான முறையில் இருந்தால் தான் அந்த பெண்ணை வாடகைத்தாயாக பயன்படுத்த முடியும். அந்த பெண்களுக்கு இதில் ஏதாவது ஒரு குறை இருந்தால் வாடகைத்தாயாக பயன்படுத்த முடியாது.
வாடகைத்தாய் முறையில் குழந்தை பேறு பெற விரும்பும் கமிஷனிங் தம்பதியை ஐ.வி.எப். மையத்துக்கு வரவழைத்து பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து, கணவர் விந்தணுவுடன் சேர்த்து கருவாக்கம் செய்து, வாடகைத்தாயாக இருக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தப்படும். இதன் மூலமாக அந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுருக்கமாக சொன்னால் இதுதான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு பெறுவதற்கான வழிமுறைகள்.
அனுமதி பெற்ற மருத்துவமனையாக இருப்பது அவசியம்:
இந்த வாடகைத்தாய் முறையில் குழந்தை பேறு பெறுவதை பல்வேறு மருத்துவமனைகளிலும் செய்யலாம். ஆனால் அந்த மருத்துவமனைகள், வாடகைத்தாய் சட்டப்படி குழந்தை பேறு பெறுவதற்கு அனுமதி பெற்ற மருத்துவமனையாக இருக்க வேண்டும்.
பொதுவாக இந்த வாடகைத்தாய் முறையில் குழந்தை பேறு பெறுவதற்கு திருமணமாகி குறைந்தது 5 வருடமாவது இருக்க வேண்டும். தனியாக வசிக்கும் பெண் என்றால் 22 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அவருடைய கணவர் இல்லையென்றால் கூட, தானம் அளிப்பவரிடம் இருந்து விந்தணுவை எடுத்து, முட்டையுடன் சேர்த்து கருவாக்கம் செய்து, கர்ப்பப்பையில் வைத்து, குழந்தைப்பேறு பெற முடியும்.
இவை அனைத்தும் தான் அந்த வாடகைத்தாய் மற்றும் கமிஷனிங் தம்பதிக்கான விதிமுறைகள். எனவே வயது, அவர்களின் முட்டைகளின் எண்ணிக்கை, முட்டைகளின் வளர்ச்சி சீராக இருந்து, கர்ப்பப்பை நன்றாக இருந்தால் கண்டிப்பாக இதன் மூலம் குழந்தைப்பேறு பெற வாய்ப்புகள் உண்டு.
வாடகைத்தாய் சட்டப்படி வாடகைத்தாயாக இருப்பவர்கள், எந்த காரணத்தை கொண்டும் அந்த தம்பதியின் ஒப்புதல் இல்லாமல் குழந்தையை அழிப்பதோ, குறை பிரசவத்துக்கு அனுமதிப்பதோ அல்லது குழந்தை வேண்டாம் என்றோ கண்டிப்பாக சொல்லக்கூடாது. கமிஷனிங் தம்பதியாக வரும் பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லாத நிலை, கர்ப்பப்பை பாதிப்படைந்த நிலை, பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டு கர்ப்பப்பை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் அவர்களால் குழந்தையை சுமந்து பெற முடியாது. மேலும் அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களின் கர்ப்பப்பை வலுவிழந்து திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம். சில நேரங்களில் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம். இந்த மாதிரி ஏதோ ஒரு காரணத்துக்காக கர்ப்பப்பையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்தி ருந்தால் அவர்கள் குழந்தை பேறு பெறுவதில் ஒரு பிரச்சனை வரலாம். இந்த வகையான பிரச்சனை ஏற்பட்டால் இவர்களுக்கு முறையான பரிசோதனை செய்து என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அந்த காரணத்துக்கான தீர்வு தான் இந்த வாடகைத்தாய் முறையாக இருக்க வேண்டும். எனவே எல்லோருக்கும் வாடகைத்தாய் முறை என்பது முடியாத ஒன்று, தேவையில்லாத ஒன்று.
வாடகைத்தாய் முறைக்கான தகுதி சான்றிதழ்:
எனவே ஒரு தம்பதி வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுக்கும்போது அந்த பெண்ணுக்கு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் இருந்து ஒரு தகுதி சான்றிதழ் பெற வேண்டும். அதாவது, இந்த பெண் குழந்தை பேறு பெறுவதற்கு வாடகைத்தாய் முறைதான் தேவை, வாடகைத்தாய் முறைக்கு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
அதேபோல் வாடகைத்தாயாக வர விரும்பும் பெண்ணும் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு முன்பு அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்து உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதாக சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகு அவருக்கான தகுதி சான்றிதழை மாவட்ட சுகாதார அதிகாரி கொடுப்பார்.
இந்த தகுதி சான்றிதழை வைத்து வாடகைத்தாய்க்கு ரூ.5 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் தொகை, கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பிறகு அவருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். அதன்பிறகு மாவட்ட சுகாதார அதிகாரி கொடுக்கின்ற தகுதி சான்றிதழை வைத்து கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மூலமாக ஒரு அத்தியாவசிய சான்றிதழ் (எசென்சியாலிட்டி சர்டிபிகேட்) வாங்க வேண்டும். இந்த அத்தியாவசிய சான்றிதழ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை வைத்து இவர்களுக்கு மாநில அளவிலான வாடகைத்தாய் வாரியம் அனுமதி கொடுக்கும். இந்த அனுமதி கிடைத்த பிறகுதான் வாடகைத்தாய் மூலமான குழந்தைபேறு சிகிச்சையை தொடங்க முடியும்.
வாடகைத்தாய் முறைக்கு அனுமதி பெற்ற ஒவ்வொரு ஏ.ஆர்.டி. கிளினிக்குகளும், இந்த சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி தான் வாடகைத்தாய் முறையை செயல்படுத்த முடியும். அதேபோல் வாடகைத்தாய் எந்தவித லாபமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் இந்த வாடகைத்தாய் முறைக்கு உடன்பட வேண்டும்.
தொடர்ச்சியாக முயன்றால் குழந்தைபேறு வாய்ப்புகள் அதிகம்:
வாடகைத்தாய் முறையில் இருக்கும் எல்லோருக்கும் 100 சதவீதம் வெற்றி வருமா என்று கேட்டால் அந்த மாதிரியான எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால் ஒருமுறை வாடகைத்தாய் முறையை முயற்சிக்கும் போது வெற்றி விகிதம் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரலாம். ஆனால் இதுவே தொடர்ச்சியாக முயற்சி செய்யும்போது வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் கர்ப்பப்பையே இல்லாத பெண்கள், கர்ப்பப்பை பாதித்த பெண்கள், கர்ப்பப்பையில் புற்றுநோயோ அல்லது கட்டிகளோ ஏற்பட்டு சிதைந்து செயல் இழந்த பெண்களுக்கு இது தான் வழிமுறை. இந்த வழிமுறைகளை கடைபிடித்து வாடகைத்தாய் முறையில் கருத்தரிக்க முடியும். முறையான சட்டத்துக்கு கீழ் சரியான வழிமுறைகளுடன் செய்தால் இந்த வாடகைத்தாய் முறை மூலமாக குழந்தை பேறு பெற முடியும்.
எல்லோருக்கும் வாடகைத்தாய் முறையில் கருத்தரிப்பு சிகிச்சை செய்ய முடியாது. தேவையில்லாத சமூக காரணங்களுக்காகவோ அல்லது குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, ஆனால் வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொள்வேன் என்பவர்களுக்கோ இது சரியான வழிமுறை இல்லை. இதுதான் வாடகைத்தாய் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இதனை தெளிவாக தெரிந்து கொண்டு தம்பதியோ, தனியாக வசிக்கும் பெண்ணோ, விதவையோ அல்லது தனியாக வசிக்கும் ஆண்களோ, குழந்தை பேறு பெற விரும்பினால் இந்த சட்டத்தின்படி தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் நல்ல ஒரு ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும்.