மீனா மலரும் நினைவுகள்... குசேலனை நினைத்து குமுறல்...!
- மம்முட்டிக்கு தன்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை என்று போக மறுத்து விடுவார்.
- சினிமாவில் புகழ்பெற காரணம் எனது பள்ளித்தோழன் சீனிவாசன் தான் என அந்த முடிதிருத்தும் தொழிலாளியை புகழ்ந்து பேசுவார்.
மலையாளத்தில் இமாலய வெற்றி பெற்ற ஒரு படம் தமிழில் இப்படி சிக்கி சிதறி போகும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை.
இது தான் அந்த மலையாள படம். கதா நாயகன் சீனிவாசன். அவருக்கு ஜோடி நான். சீனிவாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. மிகச் சிறந்த கதாசிரியர். சிறந்த வசனகர்த்தாவும் ஆவார். முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.
யதார்த்தமான கதை. ஆனால் வலுவான கதை. கேரளாவில் மேலுகாவு என்ற கிராமத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக இருப்பார் சீனிவாசன்.
உயர் சாதியை சேர்ந்த அழகான பெண்ணான நான் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன். எங்களுக்கு 3 குழந்தைகள். சிறிய முடி திருத்தும் கடை வைத்து அதில் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாமல் தவிப்பார். ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நான் வீட்டுக்குள் எப்ப பார்த்தாலும் சட்டி, பானைகளை தூக்கி போட்டு உடைப்பேன்.
ஷூட்டிங்கின் போதும் பானைகளை அவ்வப்போது உடைத்து விடுவதால் டைரக்டர் என்னிடம் 'மீனா.. பார்த்தும்மா... எத்தனை பானையைத்தான் உடைப்பே. எத்தனை பானைதான் வாங்குவது? என்பார்.
எங்கள் குழந்தைகளில் ஒரு பையன் 'நான் மட்டும் ஏன்மா கருப்பா இருக்கிறேன்?' என்பான். அதை உன் அச்சனிடம் (அப்பா) போய் கேளு என்பேன்... நான். முடி திருத்தும் தொழிலாளி சீனிவாசனின் பள்ளி தோழர் மம்முட்டி. அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பார். ஆனால் மம்முட்டியை தனது தோழன் என்று முடிதிருத்தும் தொழிலாளியான சீனிவாசன் வெளியே சொல்ல மாட்டார். இந்த நிலையில் அந்த கிராமத்தில் 10 நாள் படப்பிடிப்புக்காக மம்முட்டி வருவார். அவரை போய் பார்க்கும் படி குடும்பத்தினர் வற்புறுத்துவார்கள். ஆனால் மம்முட்டிக்கு தன்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை என்று போக மறுத்து விடுவார்.
இதற்கிடையில் முடிதிருத்தும் தொழிலாளியும் சூப்பர் ஸ்டாரும் நண்பர்கள் என்பதை கிராமத்தினர் எப்படியோ கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் முடிதிருத்தும் தொழிலாளியிடம் வந்து எப்படியாவது சூப்பர் ஸ்டாரை பார்க்க அழைத்து செல்லும் படி கெஞ்சுவார்கள். இதனால் அவருக்கு மரியாதை கூடும்.
ஆனால் படப்பிடிப்பு நடந்த போது சூப்பர் ஸ்டாரான மம்முட்டி அங்கு சென்ற சீனிவாசனை கண்டு கொள்ளவில்லை என்பதை அறிந்ததும் மீண்டும் மக்கள் சீனிவாசனை கேலி, கிண்டல் செய்ய தொடங்கி விடுவார்கள். அப்போது அங்குள்ள பள்ளி விழா ஒன்றுக்கு சூப்பர் ஸ்டார் மம்முட்டி வந்திருப்பார். அந்த விழாவில் பேசும் போது, தான் இந்த அளவுக்கு சினிமாவில் புகழ்பெற காரணம் எனது பள்ளித்தோழன் சீனிவாசன் தான் என அந்த முடிதிருத்தும் தொழிலாளியை புகழ்ந்து பேசுவார்.
அதை கேட்டு கூட்டத்தில் இருந்த முடிதிருத்தும் தொழிலாளி ஆனந்த கண்ணீர் வடிப்பார். பின்னர் நண்பர்கள் சந்திப்பில் அந்த ஏழை முடி திருத்தும் தொழிலாளியின் வாழ்க்கையே மாறிவிடும். இது தான் கதை. அற்புதமான கதை. படமும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்த்ததும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாரிக்க முன்வந்தார்கள். அந்த இரண்டு மொழிகளிலும் ஹீரோயின் வாய்ப்பு எனக்கே கிடைத்தது.
ஒரே படம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் சந்தோசப் பட்டேன்.
அந்த படம் தான் தமிழில் 'குசேலன்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. படத்துக்கு கால்ஷீட் கேட்டு வந்தபோது கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றார்கள். ஆனால் போக போக கதையில் ஏன் அப்படி பல மாற்றங்களை செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஒரு வேளை ரஜினி சார் இருந்ததால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்து அப்படி மாற்றினார்களா என்றும் தெரியவில்லை.
ஆனால் படம் முழுக்கவும் ரஜினி சார் வரவில்லை. கவுரவ தோற்றத்துக்கான முக்கியத்துவமும் அவருக்கு இல்லை. மலையாளத்தில் நான் ரசித்து மிகுந்த ஈடுபாட்டோடு நடித்த அதே படம் தமிழில் தயாரான போது ஏன் தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டோம் என்று வருத்தப்படும் நிலைக்கு ஆளானேன். பட ஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொதப்பியது. ஏனெனில் முதல் காட்சியாக கிளை மாக்சை உடுமலைபேட்டையில் படமாக்கினார்கள். அதை பார்த்தபோதே ஒரு மாதிரி இருந்தது. கதை, காட்சி ஒவ்வொன்றையும் அப்படி, இப்படி என்று மாற்றி மாற்றி தயார் செய்ததை பார்த்து ரஜினிசாரும் நிச்சயம் அதிருப்தி அடைந்திருப்பார்.
படத்தில் ரஜினி சாரும் இருந்ததால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை அந்த படம் நிறைவேற்றவில்லை என்பதும் உண்மை.
ஒரே நேரத்தில் தெலுங்கிலும் ஷூட்டிங்கும் நடந்ததால் நான் மட்டும் மாறாமல் செட்டில் இருப்பேன். தமிழ் காட்சி முடிந்ததும் தெலுங்கு காட்சிக்காக கதாநாயகன் மட்டும் மாறி வருவார். ஷூட்டிங் ஜாலியாக நடந்து முடிந்தது.
குசேலனை விளம்பரப்படுத்தியதிலும் கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. கடைசியில் படமும் வெற்றியடையவில்லை. ரஜினிசார் நடித்த படத்தில் நானும் நடித்தேன் என்ற பெருமை மட்டும் தான் மிஞ்சியது. ' திடீரென்று ஜப்பானுக்கு போக கிடைத்த வாய்ப்பும் அங்கு சந்தித்த இன்பமயமான அனுபவங்களையும் அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்)...