சிறப்புக் கட்டுரைகள்

குளிர்கால உடல்நல பராமரிப்பு

Published On 2025-01-01 06:57 GMT   |   Update On 2025-01-01 06:57 GMT
  • குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்து, குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம்.
  • வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.

குளிர்காலத்தில் தாக்கும் நோய்கள் குறித்தும் தடுப்பு முறைகள் குறித்தும் பார்ப்போம்.

குளிர்ந்த, வறண்ட காற்று நமது எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்சினைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்சினைகள் படை எடுக்கும்.

இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

குளிர்காலத்தில் தோல் எளிதில் வறண்டு விடும். வறண்ட சருமம் ஈரப்பதத்தை இழக்கச் செய்து தோலில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, தோல் வெடிப்புக்குக் காரணமாகிறது.

குளிர்காலத்தில் தோலில் பாயும் ரத்தக் குழாய்களும் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபட்டு வியர்வை நாளச்சுரப்பி, எண்ணெய்ப் பசையைத் தோலுக்குத் சீராகச் தரும் சுரப்பி செயல்படாமல் போவதாலும் தோல் வறண்டு அரிப்பு ஏற்படும்.

குளிர் காலம் தீவிரமடையும் நேரத்தில் பசி அதிகம் இருக்காது. அஜீரணம் உருவாகலாம். பொதுவாக அதிக உணவுப் பொருட்களை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் உரிய உணவு வகைகளைச் சாப்பிடாவிட்டால், ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு உடலில் சோர்வு ஏற்படும்.

'நாம் அனைவரும் அறிந்தபடி, நம் உடலுக்கு வைட்டமின் டி இன் முக்கிய ஆதாரமாக சூரிய ஒளி உள்ளது. குளிர்காலத்தில் சூரிய ஒளி இல்லாததால், நம் வைட்டமின் டி அளவு குறையலாம். வைட்டமின் நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் போன்ற நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருக்கத் திடகாத்திரமாகப் பராமரிக்க வேண்டும். குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்து, குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம்.

முதியவர்களுக்கு இயல்பிலேயே உடல் வெப்பம் குறைவாக இருக்கும். குளிர்காலத்தில் இதன் தாக்கம் அதிகரித்து ஆபத்தைத் தரும். இதைத் தவிர்க்க குளிரிலிருந்து காக்கும் வகையில் நன்கு கனமான உடைகளை அணிய வேண்டும்.

மூட்டு வலி:

குளிர்காலத்தில் முதியவர்களுக்குக் கை, கால், மூட்டுகள் பன்மடங்கு விறைப்புத்தன்மை பெற்று முன்னங்கால் மூட்டு அதிகமாக வலிக்கும். இரவு நேரம் அதிகப்பனியால் முன்னங்கால் மூட்டு மேலும் பாதிக்கப்படும்.

இதைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

காய்ச்சல்:

இது 'இன்ப்ளூயன்ஸா' என்ற வைரஸால் பரவும் சுவாச நோயாகும். அசுத்தமான பொருட்களைத் தொடுவதன் மூலம், தும்மும்போது அல்லது இருமும்போது காற்றில் பரவும் நீர்த்துளிகளிலிருந்து பரவும்.

மூச்சுக்குழாய் அழற்சி:

மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தும் பல்வேறு வைரஸ்கள் உள்ளன, மிகவும் பொதுவானது ஆர்.எஸ்.வி. ஆகும். நீங்கள் அதை சளி அல்லது காய்ச்சல் வைரஸ் அல்லது உள்ளிழுக்கும் பாக்டீரியாவிலிருந்து உருவாக்கலாம். நீங்கள் புகைபிடித்தல், சைனசிடிஸ், டான்சில்கள் அல்லது ஒவ்வாமை மற்றும் காற்று மாசுபாடு போன்ற எரிச்சலூட்டும் காரணிகளால் கூட தொற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஸ்ட்ரெப் தொண்டை:

இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. குழந்தைகளிடையே இது மிகவும் பொதுவானது. இது பெரும்பாலும் பள்ளியிலோ அல்லது விளையாடும் நேரத்திலோ குழந்தைகளிடையே பரவுகிறது.

நிமோனியா:

இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் சுவாசிக்கப்படும் ஒரு நோயாகும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் அல்லது ஆஸ்துமா, முதுமை அல்லது புகைபிடித்தல் போன்ற பிற நோய்களால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போது இது பெரும்பாலும் நிகழ்கிறது.

குளிர்கால உணவு:

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள். இனிப்பு, புளிப்பு, உப்பு அதிகமுள்ள உணவு, கொழுப்பு அதிகமுள்ள கோதுமை உணவு, மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு, பால் பொருள்கள், கரும்புச்சாறு, வெந்நீர் ஆகியவை. பருவகாலப் பழங்கள், காய்கறிகள், வெப்பம் தரும் உணவு வகைகள் குறிப்பாக இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்த உணவுப் பொருள்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, புதினா ஆகியவற்றைச் சேர்த்துகொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.

 

தும்பை பூவை நசியம் செய்யலாம்.

சுக்கு தைலம் மற்றும் நொச்சி தைலம் போன்றவற்றை தலை முழுக்கு செய்யலாம்.

சுவாச மண்டலம்:

மஞ்சள் மற்றும் பால் : மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சளியை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. வெதுவெதுப்பான பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் கலந்து இரவில் குடிக்கவும். இது தொண்டை வீக்கத்தைக் குறைத்து, சளி தொற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.

தோல் நீக்கிய இஞ்சி துண்டு, லவங்கம், துளசி இலை, கற்பூரவல்லி இலை, மிளகு, ஏலக்காய், இடித்த பூண்டு பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் இவற்றை தண்ணீரில் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். இந்த வகை டீ நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உதவுவதோடு, குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகளையும் சரியாக்கும்.

ஓமம், மஞ்சள் தூள், மூன்று துளி நீலகிரி தைலத்தை சேர்த்து ஐந்து நிமிடம் நீராவி பிடித்தால் மார்பு, நாசிப் பகுதிகள் விரிவடைந்து சளி வெளியேறிவிடும். இதனால் சளி தொந்தரவில் இருந்து சுலபமாக நிவாரணம் கிடைக்கும்

தேன் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். எனவே, இது சுவாச நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேனில் உள்ள பலன்களைப் பெற ஒரு கப் வெதுவெதுப்பான நீர் அல்லது தேநீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்த வேண்டும்.

பாத வெடிப்பு:

 

பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவி வரலாம்.

வறண்ட சருமம்:

வறண்ட தோல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. ஆனால் இங்கு குளிர் காலத்தில் ஈரப்பசை குறைவாக உள்ளதால் தோல் வறண்டு அதனால் அரிப்பு ஏற்படுகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கலாம். பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரையும் பாதிக்கலாம். கோடையில் குறைவாகவும் காணப்படும். இந்த நோய் தீவிரமானால் நிரந்தரமாக அரிப்பு ஏற்படலாம். இதற்குச் சில தீர்வுகள் உள்ளன.

1. மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

2. 15 முதல் 20 நிமிடத்திற்குக் குறைவான நேரத்தில் குளிப்போர் குறிப்பாக வெதுவெதுப்பான நீரிலேயே குளிக்க வேண்டும். குழந்தைகளையும் அவ்வாறே பழக்க வேண்டும்.

3. குளித்த உடனேயே ஈரத்துடன் பேபி ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்து, பின்னர் காய்ந்த துண்டினால் ஒத்திக் கொள்வது நல்லது. எண்ணெயைத் தோல் உறிஞ்சிக் கொள்வதால் துணிகளில் ஒட்டுவதில்லை.

4. இதற்கும் அடுத்த படியாக ஈரப்பசை அதிகமாக்கும் களிம்புகளைத் தடவிக் கொள்வது சிறந்தது.

மேற்கூறியவற்றை அன்றாடம் செய்து வந்தால் வறண்ட தோல் நீங்கி இது முக்கியமாகக் குழந்தைகளின் தோல் வறண்டு போகாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டும். இதனைத் தடுக்க கற்றாழை அல்லது எண்ணெய் ஆகியவற்றை தடவி வர, எளிதில் தோல் வெடிப்பு சரியாகும்

உதடு வெடிப்பு: 

உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசலாம். வறண்ட சர்மம் உள்ளவர்கள் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வர சர்மம் சீராகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க:

உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

 

இயற்கை மருத்துவர் நந்தினி, 9500676684

தொண்டை வலி:

குளிர் காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.

வெந்நீரில் சிறிதளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவைத்து அருந்தினால், சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி போன்ற நோய்கள் நம்மை நெருங்காது. இவை எல்லாம் பொதுவாக குளிர்காலத்தில் நம் உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு வீட்டு மருத்துவம் மூலம் நம்மை எவ்வாறு தற்பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட வழிமுறைகள் ஆகும். மேலும் நோய் தீவிரப்படின் மருத்துவரை அணுகவும்.

Tags:    

Similar News