- கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
- குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது பொது தொண்டு காரியங்களில் தன்னை ஈடுபடுத்துவார்கள்.
ராசி சக்கரத்தின் 16-வது நட்சத்திரம் விசாகம். இதன் அதிபதி குருவாகும் இதில் நீச்சமடையும் கிரகம் சந்திரன். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். இதன் வடிவம் முறம், குயவன் சக்கரம், அல்லது தோரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் நீச்சமடையும் கிரகம் சந்திரன். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும் நான்காம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்துள்ளது. இது முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாகவும், அறிவாகவும் சிந்திக்கும் திறன் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
விசாக நட்சத்திரத்தின் பொதுவான பலன்கள்
இது குருவின் நட்சத்திரம் என்பதால் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பொறுப்பாகவும், வசதியாகவும், புகழ் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பிறருக்கு எப்பொழுதும் ஆலோசனை கூறிக் கொண்டே இருப்பார்கள். அழகான ஆடம்பரமான ஆடை அணிவதிலும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும் விருப்பம் அதிகம் உள்ளவர்கள்.
புகழ், அந்தஸ்து சுயகவுரவம் இவர்களது தாரக மந்திரம். அறநெறியில் விருப்பம் உடையவர்கள் உண்மை விளம்பிகள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள். பிறரால் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்கள். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். குறுக்கு வழியில் செல்வது பிடிக்காது.
உற்றார், உறவினர்களுக்கும் தன்னை நம்பி வருவோர்க்கும் நிச்சயம் உதவி செய்வார்கள். பழைய சாஸ்திரங்கள், பழக்க வழக்கங்களின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் உள்ளவர்கள். எனவே கட்டுப்பாடுகளை மீறமாட்டார்கள். இவர்கள் பேசும்போது இறைவன், விதி, நியாயம், மனசாட்சி, நேர்மை போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். குறுக்குவழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள். சுதந்திரமாக வாழ விரும்புவார்கள்.
வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள்.
அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். பிறரிடம் யாசகம் பெற விரும்பாதவர்கள்.
பிறருக்கு உபதேசம் செய்யக்கூடிய ஆற்றல் உண்டு. பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு தனித்திறமையுடன் பிரகாசிப்பார்கள்.
அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவதில் வல்லவர்கள். குல தெய்வ கடாட்சம் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது பொது தொண்டு காரியங்களில் தன்னை ஈடுபடுத்துவார்கள்.
கல்வி
குரு தசா இவர்களுக்கு கல்வியில் மேன்மையைத் தரும். சனி தசாவில் சிலருக்கு மந்த தன்மை அதிகமாகும். அல்லது ஆரோக்கிய பாதிப்பால் கல்வியில் கவனக்குறைவு ஏற்படலாம். பொருளாதாரம், திரைப்படம், தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், நடிப்பு, அழகு கலை, ஆடை, ஆபரணம், நெசவு, சட்டம், நீதித்துறை, நிதித்துறை, சார்ந்த கல்விகள், பொறியியல், கனிமம், சுரங்கம், சுங்கச்சாவடி, விவசாயம், மின்னனுவியல், ஆசிரியர், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த அனைத்து துறை படிப்புகளையும் படிக்கலாம்.
தொழில்
இவர்கள் அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள், மத போதகர், அர்ச்சகர், தத்துவ மேதைகள், மந்திரி, கவுரவமான தொழில், நீதிபதிகள், அரசு துறை, நீதித்துறை, வங்கி அதிகாரிகள், ஆலோசகர் பதவி, எழுத்துத்துறை, ஜோதிடம், பேச்சுத்தொழில், நுண்ணிய சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள், புத்தக விற்பனை பள்ளிகள் நடத்துதல், பேப்பர் கடை, அச்சுத் தொழில், எழுத்து பணி போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோயில்நிர்வாகம், ஊர்த்தலைமை, போன்றவற்றில் கௌரவப் பதவி வகிப்பார்கள். அரசியல் ஈடுபாடும் உண்டு. அதில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள்.
தனம், வாக்கு குடும்ப ஸ்தானம்
இவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நல் வாய்ப்புகள் எப்பொழுதும் தேடி வரும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தன்னை சார்ந்த குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்கும் அதிக முயற்சி செய்வார்கள். தன்னை சார்ந்தவர்களின் பொருளாதாரத்தில் வாழ மாட்டார்கள். சுய உழைப்பில் பொருளாதார உயர்வு உண்டு.
கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக சிரமத்தை சந்திப்பார்கள். இந்த நட்சத்திரம் கால புருஷ 7-ம் வீடான துலாத்திலும், 8-ம் வீடான விருச்சிகத்திலும் இருப்பதால் திருமண வாழ்க்கை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அடிக்கடி குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். அல்லது குடும்பத்தில் கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும். பெற்றோர்கள், மனைவி மக்களிடம் அதிக பாசம் வைப்பார்கள்.குடும்ப உறுப்பினர்களின் உணர்விற்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் இவரின் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
சொத்துக்கள் விஷயத்தில் உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக்கொடுத்து எதார்த்தமாக இருப்பார்கள்.
தசா பலன்கள்:
குரு தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 16.
பிறந்த கால நேரத்திற்கு ஏற்ப இதன் தசா வருடம் இருக்கும். விசாகம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 12- 16 வருடமும், விசாகம் 2-ம் பாதத்தில் 8-12 வருடமும், விசாகம் 3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4-8 வருடமும், 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 1-4 வருடமும் பிறப்பு கால குரு தசா நடக்கும். ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். பூர்வீகம் சம்பந்தமான விஷயங்கள் முடிவிற்கு வரும். பெற்றோர்கள் கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். தடைபட்ட சுப விசேஷங்கள் நடக்கும். பல வருடங்களாக திருமணத் தடையை சந்தித்த தாய்மாமாவிற்கு திருமணத்திற்கு வரன் வரும். பெற்றோர்கள் கடன் வாங்கி சொத்து சுகம் அமைப்பார்கள்.
சனி தசா: இது தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19.
பிறப்பில் குரு தசா அதிக காலம் இருந்தால் ஜாதகர் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து நிலையான தொழில், உத்தியோகத்திற்கு செல்வார்கள். ஜாதகரும் அவரின் குடும்பமும் மேன்மையான பலன்களை அடைவார்கள். கடன் நிவர்த்தியாகக் கூடிய வகையில் வருமானமும் வாழ்வாதாரமும் உயரும் பலர் திருமணம், குழந்தை என வாழ்வில் செட்டிலாகுவார்கள். சுய ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் ஸ்திர சொத்துக்கள் சேரும். இதன் தசா வருடம் அதிக காலம் என்பதால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அடைவார்கள். சிலருக்கு கவுரவப் பதவி, அரசியல் ஆதாயம் என சமுதாய அந்தஸ்து உயரும் .
புதன் தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 17. சனி தசாவை பள்ளி, கல்லூரி படிப்பில் கடந்தவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். சனி தசாவில் இளம் வயதில் திருமணம் நடந்த சிலருக்கு விவாகரத்து வழக்கு வரும் அல்லது பொருள் இழப்புகள் இருக்கும் அல்லது வாழ்வில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரும். நம்பியவர்களே துரோகியாக மாறுவார்கள். பாம்பு என்று தாண்டவும் முடியாது. பழுது என்று மிதிக்கவும் முடியாது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய சிரமம் இருக்காது. நீண்ட கால பெரிய தசா என்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் வாழ்க்கை லதுவாக இருக்கும்.
கேது தசா: இது நான்காவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசா வாகும். இதன் தசா வருடம் 7 ஆண்டுகள்.
புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாழ்க்கை வளமாகும். கட்ட முடியாத வீட்டை கட்ட முடியும். விற்க முடியாத சொத்தை விற்க முடியும். தொழில், வியாபார அபிவிருத்தி, பண வரவு என அனுகூலமான பலன்களை பெறுவார்கள். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். விட்டதை பிடிக்கும் நேரம் என்று கூட கூறலாம். கடன்கள் நிவர்த்தியாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ முடியும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் எதிர்பாராத உதவிகளும் உங்களை மகிழ்விக்கும் காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த தகுந்த வைத்திய உதவிகள் கிடைக்கும்.
சுக்ர தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 20. எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்காமல் வாழ வேண்டிய காலகட்டம். பங்காளிகள் தகராறு பிள்ளைகளால் மன உளைச்சல் ஏறபடலாம்.
பரம்பரை வியாதிகளால் உடல் நலம் குன்றும். எந்த வயதினராக இருந்தால் சுக்ர தசா எதிர் பாலின பிரச்சனையை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சனி பலம் பெற்று தசா நடந்தால் அடுத்தடுத்து வரக் கூடிய எந்த தசாவைப் பற்றியும் விசாக நட்சத்திரத்தினர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீண் பேச்சை குறைத்தால் பிரச்சனைகள் இருக்காது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது முக்கியமாகும்.
நட்சத்திர பட்சி: செங்குருவி
யோகம்: சித்தி
நவரத்தினம் : புஷ்பராகம்
உடல் உறுப்பு: ஸ்தனங்கள்
திசை : மேற்கு
பஞ்சபூதம் : நெருப்பு
அதிதேவதை: சுப்ரமணியர்
நட்சத்திர மிருகம்: பெண் புலி
நட்சத்திர வடிவம்: குயவன் சக்கரம், தோரணம்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
நன்மை தரும் நட்சத்திரங்கள் :
சம்பத்து தாரை : அனுஷம், உத்திரட்டாதி, பூசம்
சேம தாரை : மூலம், அசுவினி, மகம்
சாதக தாரை: வத்திராடம், கிருத்திகை, உத்திரம்.
பரம மிக்ர தாரை : சதயம், திருவாதிரை, சுவாதி
விசாக நட்சத்திரத்தின் சிறப்புகள்
சுக்கிரனுடைய ராசியையும் செவ்வாயின் ராசியையும் இணைக்கும் நட்சத்திரம் விசாகம் என்பதால் விசாக நட்சத்திரம் நாளில் விரதம் இருந்து மாலை நேரத்தில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் கணவன்-மனைவி ஒற்றுமை ஏற்படும். கருத்து வேறுபாடு நீங்கும்.
பெண்கள் செவ்வாய்க்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்தால் தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். கருத்து வேறுபாடு நீங்கும். வெள்ளிக்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் ஆண்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமணத் தடை அகலும். மனைவி அன்பாக பேசுவாள்.
இந்த நட்சத்திரம் விவாகம், கர்ப்ப தானம், நிஷேகம் போன்றவற்றிற்கு உகந்த நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திர நாளில் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணத் தடைகள் அகலும். நினைத்த, விரும்பிய நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கந்தகுரு கவசம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். ஜென்ம தாரையில் இருந்து 6-வது தாரையான உத்திராடம் நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்வதுடன். சிவனடியார்களுக்கு தான, தர்மங்கள் வழங்க வேண்டும்.