சிறப்புக் கட்டுரைகள்

வீரத்துறவி விவேகானந்தர்

Published On 2025-01-11 14:45 IST   |   Update On 2025-01-11 14:45:00 IST
  • ஒருவர் கொண்டு இருக்கும் உயர்ந்த லட்சியம் தான் அவரின் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய் மாற்றுகிறது.
  • மனிதனை மனிதன் நேசிக்கிற மனிதநேய உணர்வு தான் ஆன்மீகத்தின் ஆரம்பப் பாடம் என்பதை பாமரர்களுக்கும் புரிய வைத்தார்.

'இளைஞர் சக்தி' - இந்த வார்த்தையை இப்போ நிறைய பேர் பயன்படுத்தறாங்க. ஆனா முதன் முதலா, ஆக்கபூர்வமா இளைஞர்களை ஒன்று திரட்ட இந்த வார்த்தையைப் பயன்படுத்தியவர் - சுவாமி விவேகானந்தர்.

உலகம் எங்கும் உள்ள இளைஞர்களை, இலட்சிய இளைஞர்களாக மாற்றி, உயர்ந்த குறிக்கோளுக்காக, ஒட்டுமொத்த மனித குல வளர்ச்சிக்காக உழைக்கச் செய்தவர்.

வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள் - ஜனவரி 12 - மிகப் பொருத்தமாக, 'தேசிய இளைஞர் தினம்' என்று இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.

ஒரு சமயத் தலைவராக (மட்டும்) அல்லாது, எல்லாப் பிரிவுகளையும், எல்லாத் தரப்பினரையும் ஒன்றிணைத்து அனைவருக்குமான ஆக்கபூர்வ வழிமுறைகளை நெறிமுறைகளை நடைமுறைகளை செயல்திட்டங்களை சுவாமி விவேகானந்தர் மிக வலிமையுடன் முன்னிறுத்தினார்.

'எல்லா வலிமையும் உனக்குள்ளே இருக்கிறது; நம்பு, உன்னால் முடியும்' என்று தீர்க்கமாக எடுத்துச் சொன்னார்.

இறை நம்பிக்கை வேண்டும்; அதே அளவுக்கு, தன்னம்பிக்கை - மிக முக்கியம். இதுவே எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படை என்று தெளிவுபடுத்தினார்.

"ஒரு லட்சியவாதி (ஏதேனும்) ஒரு தவறு செய்கிறான் என்றால், லட்சியம் ஏதும் இல்லாதவன் ஓராயிரம் தவறுகள் செய்கிறான். ஒருவர் கொண்டு இருக்கும் உயர்ந்த லட்சியம் தான் அவரின் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய் மாற்றுகிறது."

ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் உறுதியான ஒரு லட்சிய வேட்கை இருந்தாக வேண்டும். அதுவே அவனை, எல்லா இடர்கள் இன்னல்கள் துன்பங்கள் துயரங்களில் இருந்தும் காப்பாற்றி, மேலும் துணிச்சல் மிக்கவனாக மேலும் கொள்கைப் பிடிப்பு கொண்டவனாக மாற்றி வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேற உறுதியாய் உதவுகிறது. இதுவே வீரத்துறவி விடுத்த செய்தியின் சாராம்சம்.

சுவாமி விவேகானந்தர் ஆற்றிய ஒவ்வோர் உரையும், அவர் உதித்த ஒவ்வொரு சொல்லும் மக்களை, குறிப்பாக இளைஞர்களை, வீறுகொண்டு எழச் செய்தது. மேன்மேலும் கடினமாக உழைப்பதற்கு மக்களைத் தயார் செய்தது.

"எழுமின் விழிமின்" என்கிற வாசகம், "இலக்கை அடையும் வரை நிற்காமல்" ஓடுவதற்கு, களைப்பின்றி சலிப்பின்றி தொடர்ந்து பணியாற்றுவதற்கு மிகுந்த உத்வேகம் தந்தது.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற 'உலக சமய மாநாடு' சுவாமி விவேகானந்தரை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

"சகோதர சகோதரிகளே..." என்று மதவாதிகள் மத்தியில் சுவாமி விவேகானந்தர் தனது உரையைத் தொடங்கிய அந்தத் தருணம்... உலகம் விழித்துக் கொண்டது! உலக நாடுகள் திரும்பிப் பார்த்தன; உலக மக்கள் நம்ப முடியாமல் வியப்புடன் உற்று நோக்கினர்.

அப்போது தொடங்கியது அந்த வெற்றிப் பயணம்! சுவாமி விவேகானந்தரின் பேச்சு எண்ணம் திட்டம் செயல்... மக்கள் மத்தியில் காட்டுத் தீயாய்ப் பரவி, பரவசப்படுத்தியது.

'கொழும்பு முதல் அல்மோரா வரை' (இந்த தலைப்பிலேயே புத்தகம் கிடைக்கிறது) அவர் ஆற்றிச் சென்ற உரைகள்... இன்றளவும் எண்ணற்றோரை வழி நடத்துகிறது.

 

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய், டாக்டர் அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்கள், சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

சென்னையில் 'எனது செயல் திட்டம் / செயல் தந்திரம்' எனும் தலைப்பில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையில் கூறுகிறார்:

லட்சியப் பிடிப்பு மிக்க 100 இளைஞர்கள் போதும்; இந்த உலகை மாற்றி விடலாம்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது - இந்த உலகத்துக்கே நன்மை பயக்கும் ஆன்மீகப் பேரலை சென்னையில்தான் உருவாகப் போகிறது.

இந்திய இளைஞர்கள் மீது சுவாமி விவேகானந்தருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.

'இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக!' என்கிற அவரது அறைகூவல் - எங்கெங்கும் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இன்று நம்முன் உள்ள சவால் என்ன...? இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை என்ன...? இளைஞர்களை பீடித்துள்ள சோம்பல், முயற்சியின்மை.

சுவாமி விவேகானந்தர் முழங்குகிறார் - நம் நாட்டு இளைஞர்கள் மெல்லிசை கேட்டுக் கேட்டு கோழைகள் ஆகி விட்டனர். நம் நாட்டில் முரசுகள் ஒலிப்பதில்லையா? துந்துபிகள் முழங்குவது இல்லையா...?

சாதிக்க வேண்டிய வயதில் இளைஞர்களுக்கு, கேளிக்கைகள், வெறும் ஆபத்தாகவே முடியும். பேச்சு அல்ல செயலே முக்கியம்; கேளிக்கைகள் அல்ல கொள்கைகளே அவசியம் என்பதை சுவாமி விவேகானந்தர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

செயல்தான் மனிதனின் இயல்பு; செயல்தான் மனிதனை உயர்த்தும்; செயல்தான் உலகத்துக்கு நன்மை செய்யும்.

இந்த உண்மையை உலக மக்களுக்கு உரக்கச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

ஆன்மீகத் தளத்திலும் சுவாமி விவேகானந்தர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்தார்.

அர்த்தமற்ற சடங்குகள், மூடப் பழக்க வழக்கங்கள், சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத் தனம் ஆகியவற்றுக்கு எதிராக ஆணித்தரமாக பேசி அடுக்கடுக்கான வாதங்களை முன் வைத்தார்.

இறை நம்பிக்கையில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை; மனிதனை நன்னெறிப்படுத்துவதும் நல்வழிப்படுத்துவதுமே ஆன்மீகத்தின் இலக்கு.

இறைமை எல்லாருக்கும் பொதுவானது. இறைவன் எல்லா மக்களுக்கும் பொதுவானவன். மனிதனை மனிதன் நேசிக்கிற மனிதநேய உணர்வு தான் ஆன்மீகத்தின் ஆரம்பப் பாடம் என்பதை பாமரர்களுக்கும் புரிய வைத்தார்.

வறுமையில் வாடும் வறியவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், நோயுற்று துன்பமுறும் சாமானியருக்கு ஆதரவாய் இருத்தல், அறியாமையில் உழலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதிகாரம் அற்றுக் கிடக்கும் அடித்தட்டு மக்களை அதிகாரம் பெறச் செய்தல்... எல்லாமே, ஆன்மீகப் பணிகளில் அடக்கம் என்று விளங்க வைத்தார்.

உள்ளம் திடமாய் இருக்க, உடல் வலிமையாய் இருந்தாக வேண்டும்.உடல் வலிமையாய் இருக்க நல்ல உணவும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும் அவசியம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ளும்படி தானே முன் நின்று ஒரு நல்ல உதாரணமாய் வாழ்ந்து காட்டினார்.

உடை, நடை, பேச்சு, வாழ்க்கை முறை என்று ஒவ்வொன்றிலும் கம்பீரத்தை வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் ஆனவன். யாருக்கும் யாரும் அடிமை இல்லை. ஆன்மீக அரசியல் பொருளாதார சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்பதில் உறுதியாய் இருந்தார்.

இந்து சமய சாத்திரங்கள் வலியுறுத்திச் சொல்லும் ஒரே நற்குணம் - அச்சமின்மை. அச்சமே எல்லா கவலைகளுக்கும் துயரங்களுக்கும் காரணம். எதற்காகவும் எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம்; எதிர்த்து நிற்கும் துணிவு இருந்தால், எந்தச் சவாலையும் எதிர்கொண்டு எளிதில் வெற்றி அடைய முடியும். இந்தச் செய்திதான் அடிமை நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு உத்வேகம் ஊட்டி உற்சாகம் தந்தது.

வேதங்கள் உபநிடதங்கள் புராணங்கள், கர்ண பரம்பரைக் கதைகள்... என்று ஒவ்வொன்றில் இருந்தும் சிறந்ததை மட்டும் எடுத்து நல்லதை மட்டுமே எடுத்துக் கூறினார்.

கல்வியில் விளையாட்டில் இசையில் தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்கள் உலகின் தலைசிறந்த நிபுணர்களுக்கு இணையாகத் திகழ வேண்டும்; இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், தமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆழ்ந்த அக்கறை காட்டினார்.

ஒரு வகையில், பண்டைய பாரதம் - நவீன இந்தியா இடையே ஓர் இணைப்புப் பாலமாக விளங்கினார் சுவாமி விவேகானந்தர்.

மேற்கு வங்க மாநிலம் இரண்டு பெரும் ஆளுமைகளை இந்த உலகுக்கு தந்தது- சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும் - இரண்டு பேரின் தோற்றங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி, மிடுக்காய் கம்பீரமாய் வீரத்தின் துணிச்சலின் அடையாளமாய் இருப்பதை உணர முடியும்.

உண்மையில் இவ்விரு தலைவர்களுமே புரட்சியாளர்கள் தாம்.

பழமையை உடைத்து எறிந்து புதிய பாதையை அமைக்கப் பாடுபட்டவர்கள் இவர்கள்.

இந்தியா என்றாலே எழுத்தறிவு இல்லாத வறுமையில் ஊழலும் நோய்வாய்ப்பட்டவர்களின் நாடு என்கிற எண்ணமே உலக நாடுகள் மத்தியில் இருந்தது. ஓரளவுக்கு இதில் உண்மையும் இருந்தது.

இந்தத் தோற்றத்தை மாற்ற வேண்டும்; இந்த அவல நிலையைப் போக்க வேண்டும்; இந்திய மக்களை அச்சம் அற்றவர்களாய் அறிவார்ந்தவர்களாய் ஆரோக்கியம் ஆனவர்களாய் மாற்றுவதே தமது முதல் கடமை என்று அதை நோக்கியே இவ்விரு தலைவர்களும் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் ஆற்றிய மகத்தான பணியின் நல்விளைவு, அவரது தன்னலமற்ற சேவையின் நற்பயன்... ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் தீரம் மிக்க தலைவர்கள் தோன்றினார்கள்.

 

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - காந்திய சிந்தனையாளர்

உலகில் வேறு எந்த நாட்டிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு அடுக்கடுக்காய் அடுத்தடுத்து இந்தியாவின் எல்லா பாகங்களில் இருந்தும் வலிமையான திறமையான தலைவர்கள் உருவானார்கள்.

யாருக்கேனும் சமயம் கிடைத்தால் பட்டியலிட்டுப் பார்க்கலாம்..

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் எத்தனை பேர்...?

வடக்கே காஷ்மீர் தொடங்கி தெற்கே குமரி வரை ஒப்பற்ற தலைவர்கள் தோன்றி வரக் காரணமாய் அமைந்தது - சுவாமி விவேகானந்தர் ஆற்றிய எழுச்சி உரைகள்.

நாடெங்கும் புது ரத்தம் பாய்ச்சினார். மக்களிடையே தாமாக புதிய எழுச்சி பிறந்தது. முக்கியமாய் அவநம்பிக்கை மறைந்து நல்ல நம்பிக்கை வேர் விட்டது. தனி ஒரு மனிதராய் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இந்தச் சாதனை, மனித குல வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயம். அதனால்தான் இன்றைக்கும் இளைஞர்களின் முன்மாதிரியாய், 'கவர்ச்சி நாயகனாய்' திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர்!

சாதி, சமயம், இனம், மொழி, மாநிலம், தேச எல்லைகளைக் கடந்து, மனித குலம் முழுமைக்குமான பேராற்றலாக, உலக இளைஞர்களின் உந்து சக்தியாக சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்துவார்.

வளமான செழிப்பான ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு இளைஞர்களின் கலங்கரை விளக்கமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கும் சுவாமி விவேகானந்தரை, தேசிய இளைஞர் தினத்தில் போற்றுவோம்: பின் தொடர்வோம்.

Tags:    

Similar News