- அவள் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில், ஓர் இளைஞனுக்கும், அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
- மறுநாள் காலையில், அவள் தற்கொலை செய்து கொண்டதாக, அவளின் குடும்பத்தினரால் ஊருக்குச் சொல்லப்பட்டது.
'நிதானம் தவறும்போது, நீங்கள் இழப்பதற்கு நிறைய விஷயங்கள் வரிசையில் காத்திருக்கும்'.
-சுவாமி விவேகானந்தர்
ஆணவம்தான் ஆத்திரத்தின் ஆணிவேர். ஆத்திரம் நம் கண்களை மறைக்கின்றபோது, என்னென்னவோ விபரீதங்கள் நடந்து விடுகின்றன. நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல், தூண்டிவிடுவதற்கென்றே பக்கத்தில் நாலுபேர் இருப்பார்கள். அவர்களுக்குத் தர்ம நியாயம் தெரியாது. ஒருவனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும், அவ்வளவுதான்!
பால் கொதிக்கின்றபோது, அதன்மேல் நீர் தெளித்தால் கொதிப்படங்கிவிடும். அதேபோல், ஒருவன் கொந்தளிக்கும்போது, அவனை அமர்த்துவதற்கு நாலு நல்ல வார்த்தைகள் பேச ஒருத்தர் இருந்தால் போதும். ஆனால், அத்தகைய நல்ல மனிதர்களைக் காண்பது அரிது.
'சண்டை சச்சரவுகள் ஏற்படாதா; தலை ஏதாவது உருளாதா' என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு இரத்தச் சிதறல்கள் மீதுதான் வேட்கை. கலவரங்களுக்கும் விபரீதங்களுக்கும் காரணம் என்ன? நிச்சயமாகப் பகையோ கருத்து வேறுபாடுகளோ அல்ல; தூண்டிவிடுபவர்கள்தான் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.
ஒரு சிறிய கிராமம். விவசாய பூமி. அந்தக் கிராமத்தில் மொத்தமே பதினைந்து தெருக்கள்; நூறு குடும்பங்கள். எளிய வாழ்க்கை நிலை. ஒரு குடும்பம் மட்டும்தான் வசதியில் கொஞ்சம் உயர்ந்தது. அந்தக் குடும்பத்தின் வாலிப மகள், பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியில் படித்தாள்.
காலையில் ஒரு பேருந்து வரும்; அதுதான் மாலையில் திரும்பி வரும். தங்கள் கிராமத்திற்கு அடுத்திருக்கும் கிராமத்திலிருந்து வரும் அந்தப் பேருந்தில்தான் அவள் கல்லூரிக்குப் போய்வருவாள். அவளுக்கு இரண்டு அண்ணன்மார். காடு, கழனி எல்லாம் அவர்களின் கண்காணிப்பில்தான்.
அவள் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில், ஓர் இளைஞனுக்கும், அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நட்பாக மாறியது. நாட்கள் செல்லச் செல்ல அதுவே காதலாகக் கனிந்தது.
அந்த இளைஞனும் கல்லூரி மாணவன்தான். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவன். காதலானபின் மனதில் துணிச்சல் அதிகரித்துவிடுகிறது. காதலைத் தவிர வேறெதையும் அது பொருட்படுத்துவதில்லை.
இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். அவர்களின் காதல் விவகாரம், ஒருநாள் அங்குள்ள கிராமவாசி ஒருவன் மூலம் அவளின் வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. அன்று அவள் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியபோது ஒரு பூகம்பமே காத்திருந்தது. அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
'இந்த ஊரில் நம்ம குடும்பத்துக்கு ஒரு மரியாதை இருக்கு. அதுல மண்ணள்ளிப்போட பாக்குறியா? அந்த ஊர்ப்பயலுக்குக் கட்டிக்கொடுக்க நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்ல' என்று அலறியபடி பெல்ட்டை எடுத்து விளாசினார் அப்பா.
அவள் முடியைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அறைந்தான் மூத்த அண்ணன். 'நீ படிச்சிக் கிழிச்சது போதும். இனிமே காலேஜிக்குப் போகக்கூடாது. சொந்தத்துல ராசாவாட்டம் மாப்பிள்ள இருக்கான். அடுத்த மாசம் உனக்குக் கல்யாணம்' என்று உறுமினான் இளைய அண்ணன்.
வீட்டில் சிறைபட்டாள். கல்லூரிப் படிப்பு நின்றுபோனது. அந்தப் பையனின் வீட்டாரையும் போய் பார்த்து, கடுமையாக மிரட்டிவைத்தனர் அவளின் வீட்டார். எனினும், தோழி ஒருத்தி மூலம், அவர்கள் இருவரும் தகவல்களை இரகசியமாகப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அவளுக்கு அவசர அவசரமாகத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. சொந்த அத்தை மகன்தான் மாப்பிள்ளை. வைபவத்திற்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே, வீட்டிற்கு உறவினர்கள் வரத்தொடங்கினர்.
திருமணத்திற்கு முதல்நாள் இரவு கிடா அடித்து விருந்து. எல்லாரும் சாப்பிட்டு முடித்து, கதைபேசிக் கதைபேசித் தூங்கச் செல்வதற்கு நள்ளிரவு ஆகிவிட்டது. விடிந்தால் திருமணம்.
திடீரெனத் தாயின் அலறல் கேட்டு, எல்லோரும் எழுந்துவிட்டனர். அறையில் படுத்திருந்த அவளைக் காணவில்லை. அம்மா மயங்கி விழுந்தாள்.
'அய்யய்யோ... மோசம் போயிட்டோம். சண்டாளி ஓடிட்டாளே... போய் புடிங்கடா' - கூப்பாடு போட்டாள் பெரிய கிழவி.
கிராமமே கூடிவிட்டது. வேல்கம்பையும், அரிவாளையும் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் ஓடி வந்தது.
'இது நம்ம மண்ணோட மானப் பிரச்சினை. ஓடுகாலிகளை புடிச்சி வெட்டிப் பொலி போட்டாதான் நம்ம வம்சத்துக்கு மரியாதை' என்றான் கூட்டத்தில் ஒருவன். வெறி தலைக்கேறி நின்ற அவளின் அண்ணன்மாரின் கைகளில் அரிவாளைக் கொடுத்தான் இன்னொருவன்.
'ஊர் எல்லையைத் தாண்டுறதுக்குள்ள மடக்கிப் புடிச்சிடணும்' என்று ஒரு பெரிய குரல் ஒலிக்க, அந்த நள்ளிரவு வேளையில் கையில் ஆயுதங்களுடன் டார்ச் லைட்டையும் பிடித்துக்கொண்டு திபுதிபு எனக் கிளம்பினர்.
நான்கு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் தேடினார்கள். அகப்படவில்லை. அவளின் அண்ணன்மாருடன் இருவர் சோளக்காட்டுப் பக்கம் ஓடினார்கள். சோளக்கதிர்கள் எட்டடி உயரத்திற்கு வளர்ந்திருந்தன. கும்மிருட்டில் காற்றின் இரைச்சல். தூரத்தில் நாய்கள் ஊளையிட்டன. சோளக்கதிர்களுக்கிடையே சரசர எனச் சத்தம்.
'டேய் ரெண்டு பேரும் இங்கதான்டா இருக்காங்க... புடிச்சி வெட்டிச்சாய்ங்கடா' என்று ஒருவன் கத்தினான்.
அண்ணன்மார் விருட்டென்று சோளக் கதிர்களுக்குள் பாய்ந்தனர். அவர்கள் இருவரும் தடதட என்று ஓடத் தொடங்கினர். அவள் நிலைதடுமாறிக் கீழே விழ, அவர்களின் கைகள் அவளின் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்தன. அவன் எப்படியோ தப்பி ஓடிவிட்டான்.
அவளைத் தரதரவென்று வீட்டிற்கு இழுத்து வந்தார்கள்.
'இவளை அடிச்சிக் கொல்லுங்க. அவனையும் புடிச்சிக் கண்டந்துண்டமா வெட்டிக் கூறுபோடுங்க' என்றது ஒரு மிருகம்.
'த்தூ... நம்ம ஊருக்கே மானக்கேடு' என்று துண்டை உதறிச் சென்றது ஒரு பெருசு.
'பொட்டப்புள்ளைய இப்படியா வளர்க்கிறது... இவளக் கொத்திப் பொதைச்சாலும் இந்த மண்ணு வெளங்காது' என்றாள் ஒரு வம்புக்காரி. ஆளாளுக்கு விஷவார்த்தைகளைத் தூவிவிட்டுச் சென்றனர்.
அவளை வீட்டிற்குள் இழுத்துப்போய் கதவைச் சாத்தினர். பெற்றோர் உட்பட அனைவரும் அரக்கத்தனமாய்த் தாக்கிட, வெகுநேரம் வரையிலும் அவளின் கதறல் சத்தம் கதவுகளுக்கு வெளியே கசிந்து கொண்டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அடங்கியது. மறுநாள் காலையில், அவள் தற்கொலை செய்து கொண்டதாக, அவளின் குடும்பத்தினரால் ஊருக்குச் சொல்லப்பட்டது.
ஆணவம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். ஆத்திரம் அழிவை ஏற்படுத்தும். மூர்க்க குணத்தினால் வேறென்ன லாபம்! கரடுமுரடான மனதில் கருணை சுரப்பதில்லை. அது யாருக்கும் செவிமடுப்பதுமில்லை. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதுமில்லை. அதனால்தான் மோதல்களும் விபரீத விளைவுகளும்.
மனிதன் நிதானத்தை இழக்கின்றபோது, சொந்த பந்தங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றான். மற்றவர்கள் மீதான தனது உரிமையின் வரையறையையும் அவன் மறந்துவிடுகின்றான். ஒருவன் தன்னைத்தான் இழந்துவிடுகின்றபோது, அவனிடத்திலிருந்து தீமையைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்!
எல்லாருக்கும் தேவை நிதானம். நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம். நம்மில் எத்தனை பேருக்கு நிதானம் இருக்கிறது. பதற்றப்படாமல் நிதானமாகச் சிந்தித்தால் எத்தனையோ கேடுபாடுகளைத் தவிர்த்துவிடலாம். அதற்குப் பொறுமை அவசியம்.
அதிவேகமாக ஓடுகின்ற விலங்கு சிறுத்தை. சூழலுக்குத் தக்கபடி வேட்டையாடும் தன்மை; வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் குணம்; மணிக்கு 58 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல்! எனினும், ஒரு கட்டத்திற்குமேல் அதன் உடல் அதிக சூடாகிவிடும். அப்படி சூடாகும்போது, அந்த நொடியே ஓட்டத்தை நிறுத்தக்கூடிய நிதானம் சிறுத்தைக்கு இருக்கிறது. தன் உடலை நிர்வகிக்க அந்தச் சிறுத்தைக்குத் தெரிந்திருக்கிறது. அந்த ஞானம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது.
நிதானம் தவறும்போது நம் பார்வை மயங்குகிறது. பாதை தவறுகிறது. ஒருசில நொடிகளில் வாழ்க்கையே தலைகீழாய் மாறிவிடுகின்றது. ஆத்திரம் ஒருபோதும் நிம்மதியைத் தராது. நிதானமாய்ச் சிந்திக்கின்றவர்களுக்குக் கோபம் வராது. ஆத்திரம் காயப்படுத்தும்; அல்லது காயப்படும்.
வார்த்தைகளால் யார் மனதையும் நாம் புண்படுத்திவிடக் கூடாது. நம் செயல்களால் யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்னும் உறுதிப்பாடு நமக்கு வேண்டும். அதுதான் மனிதத்தன்மை.
ஒளரங்கசீப் மாபெரும் முகலாயச் சக்கரவர்த்தி. அவரின் மகன் அவருக்கு எதிராக ஒரு சேனையைத் திரட்டிப் புரட்சி செய்கிறான். உடனே ஒளரங்கசீப் படைகளை அனுப்பி, தன் மகனைப் பிடித்துவரச் சொன்னார்.
'அவன் உடம்பில் எந்தக் காயமும் ஏற்படக் கூடாது. அடிபடாமல் பத்திரமாக அவனைப் பிடித்து வாருங்கள்' என்று உத்தரவிட்டார்.
நாட்டில் புரட்சியை ஏற்படுத்திய மகன். அவனைப் பிடித்துக் கைது செய்ய வேண்டியது அவசியம். எனினும், அவன்மேல் சிறு காயம்கூட ஏற்படக் கூடாது என்று பெற்ற மனம் நினைக்கிறது.
நிதானம் ஒரு நல்லொழுக்கம். அது எப்போதும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் முன்னிறுத்துகின்றது. சமநிலை என்பது என்ன? எல்லா தரப்பிற்கும் செவிமடுப்பது; பிடிவாதமாக இல்லாமல் இணக்கமாக இருப்பது; சிக்கலைப் புரிந்து கொண்டு மனிதாபிமானத்துடன் அணுகுவது.
பிரச்சினைகள் எதுவாகவும் இருக்கட்டுமே. அதிலிருந்து சற்று விலகி நின்று யோசித்தால், எல்லாம் நன்றாக முடிந்துவிடும். நிதானம் ஒன்றே நம்மை நல்வழிக்குக் கொண்டு செல்லும். எதிலும் பதற்றப்படாமல் சிந்திப்பதுதான் மனப்பக்குவத்தின் அடையாளம்.
நம் ஆத்திரத்தை மேலும் மேலும் தூண்டிவிட்டு, அதனால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளை வேடிக்கை பார்ப்பதற்கென்றே சிலர் நம் அருகில் இருப்பார்கள். நாம் ஜாக்கிரதையாக இல்லை என்றால், இழப்பும் இன்னல்களும் நமக்குதான்.
செயல்படும்போது கடைபிடிக்கப்படும் பொறுமைதான் நிதானம். செயல்படத் தொடங்கு முன் கடைபிடிக்கப்படும் நிதானம்தான் பொறுமை.
நிதானத்தை நாம் இழந்துவிட்டால், வாழ்க்கை வழிதவறிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆணவம், ஆத்திரம், கோபம், வெறித்தனம் எல்லாமே நம் வாழ்வை நொடிப்பொழுதில் அழிக்கும் பொல்லாத விஷயங்கள். எனவே நிதானத்தைக் கடைபிடிப்போம். ஆத்திரமூட்டுபவர்களை அப்புறப்படுத்துவோம். நிம்மதியுடன் வாழக் கற்றுக் கொள்வோம்.