அந்த மோதிரம் எங்கே?.. நலமிக்க நல்லார் சொல்- 18
- உலகில் ஒவ்வொரு நொடியும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- ஞானமே நமக்கு நம்பகமான காவல்.
'நம்பகத்தன்மை இல்லாத ஒரு மனிதன் முற்றிலும் பயனற்றவன்.'
-கன்பூசியஸ்
தினந்தோறும் நம்மைச் சுற்றிலும் பல
விசித்திரமான காரியங்கள் நடத்து கொண்டே தான் இருக்கின்றன. வேடிக்கையாகவும் இருக்கும்; சில விஷயங்கள் வலிகளாகவும் இருக்கும். அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது.
நம் எதிரில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்; நமக்கு முன்னும் பின்னும் யார்யார் நடக்கிறார்கள்; அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள முடியுமெனில், நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், நம் நிலைமை அப்படியா இருக்கிறது!
முகபாவம் முயல்போல் இருக்கும்; உள்ளே பயங்கரமான மிருகம் விழித்துக் கொண்டிருக்கும். சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். தோள்மீது கைபோட்டுத் தோழமை பாராட்டுவார்கள். திடீரென்று வேறுவிதமாக மாறிவிடுவார்கள். நமக்கு எதிராகச் செயல்படுவார்கள். ஏன் என்றே நமக்குத் தெரியாது.
இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்கே சென்றாலும் யாருடன் நின்றாலும், நம்மை நாமே காத்துக் கொள்வதற்கான ஞானம் அவசியம். அந்த ஞானமே நமக்கு நம்பகமான காவல்.
மனித சமூகத்தில் மனித நேயத்தைவிட, சுயநலம்தான் உச்சந்தலையில் ஏறி நிற்கின்றது. அது ஒரு போதை. சுயநலம் கண்களை மறைக்கும்போது, நம்பிக்கைத் துரோகங்கள் சகஜமாகிவிடுகின்றன.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நான்கு நண்பர்கள் இணைந்து ஓர்
இலக்கிய அமைப்பை உருவாக்கினோம். அதன்மூலம் கவியரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவுகள் எனப் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவோம்.
உள்ளூர்க் கல்வி நிறுவனங்களில் மட்டுமன்றி, வெளியூர்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். எனவே, அவ்வப்போது வெளியூர்களுக்குச் சென்றுவருவதும் உண்டு. சென்ற இடங்களில் எல்லாம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எழுதுவதிலும் பேசுவதிலும் எனக்கிருந்த ஆர்வம், இலக்கிய நிகழ்ச்சிகளில் என்னை அதீத ஈடுபாடு கொள்ளச் செய்தது.
ஒருமுறை எங்கள் இலக்கிய அமைப்பின் சார்பில், தூத்துக்குடியில் சில இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவரச் சென்றிருந்தேன். அங்கே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நண்பன். பேருந்து நிலையத்திற்கு வந்து, என்னை அன்புடன் அழைத்துச் சென்றான். அவனின் சக மாணவர்கள் உட்பட, அங்குள்ள மற்ற கல்லூரி மாணவர்களும் அந்த நண்பன் மூலம் எனக்கு நல்ல அறிமுகம்.
அன்று முழுக்க பல இடங்களுக்கு அவன் என்னை அழைத்துச் சென்றான். திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடிந்தது. அன்று மதிய உணவு என் உறவினரின் வீட்டில். நண்பனும் உடனிருந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்தபின் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு, நெல்லை திரும்புவதற்காக கிளம்பினேன்.
என்னை வழியனுப்பிவைக்கப் பேருந்து நிலையம் வரை அந்த நண்பன் வந்தான். ஆட்டோவில் சென்று இறங்கினோம். என் கைவிரல்களைப் பற்றிப் பிடித்தபடியே நடந்தான். பேருந்து கிளம்புவதற்கு அரைமணி நேரம் இருந்தது. கண்டக்டர் வெளியே நின்று டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் டிக்கெட் வாங்குவதற்குக் கையை நீட்டியபோதுதான் எனக்குப் பகீரென்றது. மனம் படபடத்தது. என் வலது கைவிரலில் போட்டிருந்த மோதிரத்தைக் காணவில்லை.
நான் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு வந்ததும், என் பெற்றோர் அன்புடன் எனக்கு அணிவித்த மோதிரம். ஒரு சவரன். அழகிய டிசைன். அதைப் பார்த்துப் பார்த்து நானே ரசிப்பதுண்டு. சில நிமிடங்களுக்கு முன்பு வரை என் விரலில் இருந்த அந்த மோதிரம், இப்போது இல்லை என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் பதற்றத்தையும் படபடப்பையும் என் நண்பன் கவனித்தான்.
'என்னாச்சுடா?'
'என் மோதிரத்தைக் காணலியே!'
'நீ போட்டிருந்தியா?'
'என்னடா இப்படி கேக்குறே... எங்க போச்சுதோ தெரியலியே...'
'நல்லா யோசிச்சிப் பாரு...வேற எங்கேயாவது...'
'இல்ல... மோதிரத்தை நான் கழற்றினதே கிடையாது. ஆட்டோவில் வரும்போதுகூட பார்த்தேனே. அதுக்குள்ள எப்படி...மர்மமா இருக்குதே...' - தளர்ந்துபோய் பக்கத்தில் இருந்த சிமென்ட் திண்டில் உட்கார்ந்தேன்.
ஓடிப்போய் காபி வாங்கிக்கொண்டு வந்து தந்தான். எனக்குக் குடிக்க மனமில்லை. அப்படியே வைத்துவிட்டேன்.
'சரிடா, இங்க நின்னு என்ன பண்றது? நீ ஊருக்குக் கிளம்பு. எனக்கு முக்கிய வேலை இருக்கு. அப்புறம் ஊருக்கு வந்து உன்னை பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
மனபாரத்தோடு ஊர்போய்ச் சேர்ந்தேன். இரண்டொரு வாரம் கழித்து, இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி சென்றேன். அந்த நண்பன் என்னைச் சந்திக்க வரவில்லை. நிகழ்ச்சியை முடித்தபின் மற்றொரு நண்பனிடம், அவனை விசாரித்தேன்.
'அவனுக்கு எல்லா பிரண்ட்ஸ்கிட்டேயும் கடன். என்கிட்ட வாங்கின பணத்தை ஒரு வருஷமா திருப்பிக் கொடுக்கலே. அழுத்திக் கேட்டப்பிறகு போன வாரம்தான், ஒரு மோதிரத்தை வித்துப் பாதி கடனை கொடுத்தான்' என்றான்.
மோதிரத்தைத் தவறவிட்ட வலியைவிட, இவன் சொன்ன தகவல் எனக்குள் அதிக வலியை ஏற்படுத்தியது. அன்று என் விரல்களைப் பற்றிப் பிடித்தபடி நடந்தவன், என் மோதிரத்தை லாவகமாக உருவிச்சென்றதை அப்போதுதான் என்னால் உணர முடிந்தது. அதன்பின் எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனும் என்னைச் சந்திக்கவில்லை. நானும் அவனைப் பார்க்க விரும்பவில்லை.
நாம் மேலோட்டமாகவே பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் 'இன்னொருவர்' இருக்கிறார். உள்ளிருக்கும் அந்த நபர் எப்படிப் பட்டவர் என்பதுதான் நமக்குத் தெரிவதில்லை.
நயவஞ்சகப் பண்புதான் கொடிய விஷம். அப்படிப்பட்டவர்கள் நல்லவர்கள்போல் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு அதிக பிரயத்தனம் செய்வார்கள். செயற்கைத்தனமாகச் சிரிப்பார்கள். அக்கறைப்படுபவர்போல் பேசுவார்கள். அவையெல்லாம் அவர்களின் இயல்புக்கு முரணானவையாகவே இருக்கும்.
எந்த மிருகத்திடமும் நாம் தாராளமாகப் பழகலாம். அது அன்பிற்குக் கட்டுப்படும். ஆனால், நயவஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிஜமுகம் எது, முகமூடி அணிந்த முகம் எது என்பதைக் கண்டறிவதுதான் மிகப்பெரிய சவால்.
ஒருவன் அவனுடைய வார்த்தைகளில் இருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.
ஏதோ ஒன்றிரண்டு முறை அப்படி நடந்தால், அதைப் பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம். ஆனால், அதையே ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தால் அவன் 'நயவஞ்சகன்'. கபட நாடகம்தான் அவன் வாழ்க்கை.
அத்தகைய அரிதார மனிதர்களை நாம் பார்க்கத்தானே செய்கின்றோம். ஒட்டி உறவாடத் தான் வருவார்கள். அவர்களின் நட்பை நாம் ஏற்றுக்கொண்டால், நம் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை நிச்சயமாகவே நாம் சந்திக்க நேரிடும். உடனடியாக விலகவில்லை என்றால், நம் தயவுதாட்சண்யம் நம்மையே படுகுழிக்குள் தள்ளிவிடும்.
நேர்மை இல்லாதவர்கள் எதிலும் உண்மையாய் இருக்க மாட்டார்கள். உண்மை இல்லாதவர்கள் எதிலும் உறுதியாய் நிற்க மாட்டார்கள். அவஸ்தை அவர்களுக்கல்ல; அவர்களை நம்பியவர்களுக்குதான்.
சிலர் தங்கள் வாழ்க்கையில் இழப்புகளைச் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களைக்
கேட்டுப் பாருங்கள். அவர்களின் இழப்புகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பெரும்பாலும் மற்றவர்களின் நம்பிக்கைத் துரோகங்களே காரணமாக இருக்கும்.
தென்னைக்கு நீர்வார்த்தால் அது தேங்காயைத் தரும் என்பது நமக்குத் தெரியும். தெருவில் திரிகின்ற நாய்க்குக் கொஞ்சம் சோறு போட்டால், அது நம்மையே கோவிலாகக் கருதி வாசற்படியில் காத்துக்கிடக்கும். நன்மைக்கு நன்மை என்பது இயற்கையின் விதி. ஆனால், இந்த விதி மனிதனுக்கு மட்டும் பொருந்தாது.
எவ்வளவுதான் நல்லது செய்யுங்கள்; சிலருக்கு நன்றியே இருக்காது. பெற்றுக்
கொண்டவைகளை எல்லாம் மறந்துவிடுவார்கள்; இல்லையென்றாலும், அவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேச மாட்டார்கள். உங்களைத் தள்ளிவிட வகை தேடுவார்களே அன்றி, வழங்கிய கைகளை வாழ்த்துவதற்கு அவர்களுக்கு மனம் வராது.
நண்பர்களை மிகப்பெரிதாகக் கருதி, அவர்களின் வாக்குறுதிகளை நம்பி நஷ்டமடைந்த
தவர்கள் உண்டு. காரணம் என்ன? ஒரு தரப்பின் நம்பிக்கை; மறுதரப்பின் நம்பிக்கைத் துரோகம்.
அறிந்தோ அறியாமலோ சில சமயங்களில் நாம் தவறு செய்துவிடுகின்றோம். நம்பக்கூடாதவர்களை எளிதில் நம்பிவிடுகின்றோம். அதுதான் பலருடைய வாழ்வின் போக்கையே மாற்றிவிடுகின்றது. கடின உழைப்பினால் தொழிலில் படிப்படியாக முன்னேறியவன், ஒரு கட்டத்தில் விறுவிறு என்று வீழ்ச்சி அடைகின்றான்.
காரணம் கேட்டால், 'ஒருவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, புதிய தொழிலில் பல லட்சங்களை முதலீடு செய்தேன். அவன் என்னை ஏமாற்றிவிட்டான்' என்கிறான்.
இன்றைய இளைய தலைமுனையினர் அறிவு பெருத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். நிறைய சம்பாதிக்கிறார்கள். எனினும், வாழ்க்கையில் பலர் தடுமாறுகிறார்கள். எதையும் சரியாகத் தீர்மானிக்கத் தெரியாமல் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
லட்ச லட்சமாய் சம்பாதித்து என்ன பயன்! காசு பணம் ஒருபோதும் மனநிறைவைத் தருவதில்லை. செல்வச் செழிப்பினால் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதில்லை. ஞானம்தான் முக்கியம். அதுதான் நம் வாழ்வுக்கு வேலி. ஞானத்தினால் மட்டுமே நல்லது கெட்டது நாம் உணர முடியும். நல்லவர்கள் யார் நயவஞ்சகர்கள் யார் என்பதை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியும். வாழ்வின் பாதுகாப்பு என்பது, நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.
ஓர் இளைஞனுக்குச் சில நாட்களாக மிகுந்த மன உளைச்சல். காரணம் என்ன என்றே அவனுக்குப் புரியவில்லை. படிப்பில் கவனமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதிலும் நாட்டமில்லை. பெற்றோரிடத்தில் சொல்வதற்கும் தயக்கம்.
அப்போது, தற்செயலாக ஒரு யோகியைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அவரிடம் தனது மன உளைச்சலைச் சொன்னான். யோகி அவனை உற்றுப் பார்த்தார்.
'சமீபத்தில் ஏதாவது தவறு செய்தாயா?' என்று கேட்டார்.
'இல்லை ஐயா!' என்றான் பணிவுடன்.
நன்றாக யோசித்துப்பார். யாரிடமாவது பொய் சொன்னாயா?'
'வேறு யாரிடமும் சொல்லவில்லை. என் அம்மாவிடம் மட்டும் ஒரு சிறிய பொய் சொன்னேன்'.
'என்ன பொய்?'
'போன வாரம் என் அம்மாவின் பிறந்தநாள். அதற்காக என்னிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து, கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஏழைகளுக்குத் தா்மம் செய்துவிடு' என்றார்கள். எங்கள் காலேஜ் டூர் செலவுக்காக அந்தப் பணத்தை நான் வைத்துக்கொண்டு, தர்மம் செய்துவிட்டதாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன். வேறெந்தத் தவறும் செய்யவில்லை' என்றான்.
'உன் தாய் உன் வார்த்தையை நம்பிவிட்டாள். அப்படியெனில், நீ செய்தது நம்பிக்கைத் துரோகம் அல்லவா. அது மிகப்பெரிய பாவம். இன்றே அதைத் தர்மம் செய்துவிடு. உன் பிரச்சனை தீர்ந்துவிடும்' என்றார். அவன் தெளிவடைந்தான்.
நம்பிக்கைத் துரோகத்தைப்போல் கொடிய பாவம் வேறொன்று இல்லை. நம்பிக்கைக்கு உரியவர்களாய் நாம் வாழ்வதும், நம்பிக்கைக்கு உரியவர்களை நாடிச் சேர்வதுமே நமக்குப் பெருமை. அதுதானே வாழ்வின் சிறப்பு.
போன்: 9940056332