சிறப்புக் கட்டுரைகள்
null

சிந்தனையும் சிந்தித்தலும்

Published On 2025-01-17 17:00 IST   |   Update On 2025-01-17 17:00:00 IST
  • உங்களுடைய சிந்தித்தல் எவையும் தாமாக ஏற்பட்டதல்ல.
  • சிந்திப்பீர்களேயானால் அதுதான் சிந்தித்தல் ஆகும்.

கணவன்-மனைவியான அவர்கள் இருவருமே டாக்டர்கள்.

அவர்கள் நம்மை சந்திக்க வரும்போது அவர்களுக்கு ஒரேயொரு குழந்தை. ஒன்றரை வயதில் அந்தக் குழந்தை இறந்து விட்டது.

அவர்கள் இருவருக்குமே அது ஆற்றமுடியாத துயரம்.

அந்தக் கணவர் கேட்டார்: "எங்கள் இருவருக்குமே இது சாதாரண துயரமல்ல. எங்களுக்கு இது தாங்கமுடியாத துயரம். ஆனாலும் நான் என்னை எப்படியோ நிலைநிறுத்திக்கொண்டு விட்டேன்...

"ஆனால் இவளால் மட்டும் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அதனையே எண்ணி எண்ணி, ஒருவகையில் மனநோயாளியாகவே மாறிவிட்டாள். இவளை எப்படி சகஜ நிலைக்குக் கொண்டு வருவது?"

அவர்களுக்கும் சிந்தனை என்றால் என்ன, சிந்தித்தல் என்றால் என்ன என்பதை எடுத்துக் கூற நேர்ந்தது.

"அம்மா! சிந்தனை என்றால் என்ன, சிந்தித்தல் என்றால் என்ன என்பதை மட்டும் சற்று வேறுபடுத்திப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை இப்படி அகாலமாக இறந்தது எவ்வளவு பெரிய சோகம். அதனைச் சந்தித்த எவராவது நிம்மதியாக இருக்க முடியுமா? அது பற்றிய நினைவுகள் அலை அலையாக வந்த வண்ணமே தான் இருக்கும். அது தான் இயற்கை. எவருமே இதற்கு விதி விலக்கு கிடையாது...

"உங்களுக்கு ஏற்பட்ட சிந்தனைகளும், அதனால் உங்களுக்கு ஏற்பட்ட மனத்துயரமும் இயற்கையானதே. ஆனால் அப்படி வந்துவிட்ட சிந்தனைகள் மீது நீங்களாக ஏறி அமர்ந்து கொண்டு நீங்களாக ஏதாவது சிந்திப்பீர்களேயானால், அதுதான் செயற்கையானது.

நாம் இந்த மருந்தைக் கொடுத்ததற்குப் பதிலாக அந்த மருந்தைக் கொடுத்திருக்கலாமோ, நாம் நம்முடைய மருத்துவத்தை நம்பாமல் ஆரம்பத்திலேயே சீனியர் டாக்டர்களைக் கன்சல்ட் பண்ணியிருக்கலாமோ, எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிய எங்களுக்கு இப்படி ஒரு கொடுமை ஏற்படலாமா என்று நீங்களே என்று சிந்திப்பீர்களேயானால் அதுதான் சிந்தித்தல் ஆகும்...

"எவ்வளவு தான் சிந்தனைகள் வந்தாலும் அவை அனைத்தும் தாமாகவே மறைந்துவிடும். மறைந்து கொண்டிருக்கும் சிந்தனைகள் மட்டுமே நமக்குத் தெரியும். அவற்றை அப்புறப்படுத்துவது சம்பந்தமான எந்த வேலையுமே நமக்குக் கிடையாது. சிந்தனைகள் அனைத்தும் பலமற்றவை. அவற்றால் நம்மை முடக்கிப் போட்டு விட முடியாது. ஆனால் நீங்களாக சிந்திக்கும் சிந்தித்தல் அனைத்தும் பலம் வாய்ந்தவை. சிந்தனைகள் எவையும் உங்களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் உங்களையும் மீறி உங்களையறியாமல் ஏற்பட்டவை. ஆனாலும் அவை அனைத்தும் பலமற்றவையே. தாமாக ஏற்பட்ட சிந்தனைகள் யாவும் தாமாகவே மறைந்துவிடும்...

"உங்களுடைய சிந்தித்தல் எவையும் தாமாக ஏற்பட்டதல்ல. நாமாகவே அவற்றைக் கொண்டு வந்துள்ளோம். நாமாகக் கொண்டு வந்து நாமாகவே அவற்றை பராமரித்துக் கொண்டிருக்கிறோம் . நாம் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அவற்றில் இருந்து விலகிக் கொள்ளலாம்"

-இவ்வாறு அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

அவர்களும் அதனைப் புரிந்து கொண்டு அவர்களது பிரச்சனையில் இருந்து விடுபட்டார்கள். அந்த நாட்டு மன்னருக்கு ஒரு பிரச்சனை. அவர் இளவரசனாக இருந்த போது பக்கத்து நாட்டு இளவரசிக்கும் அவருக்குமிடையே காதல் ஏற்பட்டிருந்தது. அவர்களின் திருமணத்துக்கு இளவரசியின் தந்தை சம்மதிக்கவில்லை. தந்தையின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அது முதல் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக நேசித்து வந்தனர்.

ஸ்ரீ பகவத்

இளவரசனாக இருந்த அவர் மன்னராக பொறுப்பேற்று நல்லாட்சி நடத்தி வந்தார்.

அந்த நிலையில் அவர் மனைவியான அரசி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். மனக்கவலையில் பரிதவித்துக் கொண்டிருந்த அவருக்கு மனச்சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவரது மந்திரி அவரை வேட்டையாட அழைத்துச் சென்றார்.

அவர்கள் இருவரும் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அரண்மனையில் இருந்த அரசி மரணமடைந்து விட்டார்.

காதல் மனைவியை இழந்த அரசர் பரிதவித்துப் போனார்.

"வேட்டைக்குப் போகாமல் பக்கத்தில் இருந்திருந்தால் எப்படியாவது காப்பாற்றி இருப்பேனே" என்று குமுறிக் கொண்டிருந்தார்

சதா காலமும் மனைவியின் நினைவாகவே இருந்த அவரால் நிம்மதியாக சாப்பிடவும் முடியவில்லை, தூங்கவும் முடியவில்லை. மனைவியின் நினைவே அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அவருடைய மனக்கவலையை தீர்த்து வைக்கக்கூடிய மருத்துவரைத் தேடி வந்தனர். பல மருத்துவர்கள் வந்து மருந்து கொடுத்தும் அவருடைய மனக்கவலை தீர்ந்த பாடில்லை. அதனால் அவருக்கு மருத்துவர்கள் மீதே கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார்: "எந்த மருத்துவராவது மருந்து கொடுத்து எனது மனக்கவலை நீங்கவில்லை என்றால் மருந்து கொடுத்த மருத்துவரின் தலையைக் கொய்து விடுவேன். அவருடைய மருந்தினால் என்னுடைய மனக்கவலை நீங்கிவிட்டால், இந்த ராஜ்ஜியத்தில் பாதியையே அவருக்குக் கொடுத்து விடுவேன்."

இந்த அறிவிப்புக்குப் பிறகு எவருமே அவருக்கு மருத்துவம் பார்க்கத் துணியவில்லை.

அந்த நிலையில் அவர் மீது பரிதாபம் கொண்ட ஞானி ஒருவர் தன்னை மருத்துவர் என கூறிக் கொண்டு மருந்து கொடுக்க முன்வந்தார்.

அரசர் அவரையும், "நிபந்தனை தெரியுமல்லவா?" என்று கேட்டு மிரட்டினார்.

அந்த ஞானியும், "நன்றாகவே தெரியும்!" என்று சொல்லி மருந்து பாட்டிலை மன்னரிடம் கொடுத்தார்.

அதனை வாங்கிக் கொண்ட மன்னரும், மருந்தைச் சாப்பிட பத்தியம் ஏதாவது உண்டா என்று கேட்டார்.

அதற்கு அந்த ஞானியும், " பெரிய பத்தியம் ஒன்றும் இல்லை. இந்த மருந்தைச் சாப்பிடும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக்கூடாது! மூன்று நாட்கள் மட்டும் இந்த மருந்தைச் சாப்பிட்டால் போதும் " என்று கூறினார்.

அரசரும், "இது ஒரு பத்தியமா? குரங்கை நினைக்கும் பழக்கமே எனக்குக் கிடையாது. மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாம் சந்திப்போம்" என்று கூறி மருந்தை வாங்கிக் கொண்டார்.

மறுநாள் காலையில் அரசர் மருந்தைச் சாப்பிடுவதற்காக பாட்டிலை எடுத்தார்.

"மருந்தைச் சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்று மருத்துவர் சொன்னாரே" என்று அவரை அறியாமலேயே குரங்கை நினைத்து விட்டார்.

அதனால் அன்று அவரால் மருந்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. எப்படி மருந்தை எடுப்பது என்பது அவருக்குப் புரியவில்லை. தன்னுடைய மதிமந்திரியிடம் ஆலோசனை கேட்டார்.

மந்திரியும் ஆலோசனை வழங்கினார்:

"அரசே நான் மனோவியல் சம்பந்தமான பல்வேறு நூல்களைப் பயின்றுள்ளேன்.

நமக்கு ஒரு சமயத்தில் ஒரே ஒரு சிந்தனைதான் ஏற்படும் என்று கூறியுள்ளனர். குரங்குகளின் நினைவு வருவதற்கு முன்பே நீங்களாக ஒரு யானையைப் பற்றி நினைத்துக் கொள்ளுங்கள். குரங்கின் நினைவு வராமலேயே போய்விடும்"

அரசருக்கு அந்த ஆலோசனை மிகவும் பிடித்துப்போனது. அதனால் அவர் அடுத்த முறை மருந்தை எடுக்கும் போது குரங்குக்குப் பதிலாக பட்டத்து யானையை நினைத்துக் கொண்டார். ஆனால் என்ன ஆச்சரியம், அவருடைய நினைவில் அந்த யானையானது யானையளவு பெரிய குரங்காக மாறிவிட்டது.

அதன்பிறகு எப்போது மருந்து பாட்டிலைத் தொட்டாலும் யானையளவில் உள்ள குரங்குகளே தோன்ற ஆரம்பித்தன.

இப்படி ஒவ்வொரு நாளும் அவர் மருந்தை எடுக்கும் போதெல்லாம் அவரை அறியாமலேயே குரங்கின் நினைவுகளே வந்துவிட்டன. மூன்று நாட்கள் ஆகியும் ஒரு முறை கூட அவரால் மருந்தை எடுக்க முடியவில்லை.

நான்காவது நாளில் மருத்துவராக வந்திருந்த அந்த ஞானியே அவரைத் தேடி வந்துவிட்டார்.

"அரசே! மருந்தைச் சாப்பிட்டீர்களா? உங்களுடைய நோய் மறைந்து விட்டதா?" என்று கேட்டார். அரசருக்கு கோபம்தான் ஏற்பட்டது.

"வைத்தியரே, நீர் ஒரு மோசடியான எண்ணத்துடன் வந்திருக்கிறீர். குரங்கை நினைக்கும் பழக்கமே எனக்குக் கிடையாது. நினைக்கக் கூடாது என்று சொல்லி என்னை நினைக்க வைத்துவிட்டீர். நீர் எதுவுமே சொல்லாமல் கொடுத்திருந்தால் நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன்?" என்று கேட்டார்.

"குரங்கை நினைக்காமல் மருந்தை எடுப்பது எப்படி என்று என்னிடம் கேட்டிருந்தால் நான் சொல்லிக் கொடுத்திருப்பேனே!" என்றார் அந்த ஞானி. அரசரும் மருந்தை எடுத்துவந்தவாறே,

"பார்த்தீரா! மருந்து பாட்டிலை எடுக்கவும், நான் கூப்பிடாமலேயே குரங்கின் நினைவு வந்துவிட்டது" என்று கூறினார்.

ஞானி கேட்டார்: "குரங்கின் நினைவு அதுவாக வந்ததா அல்லது நீங்களாக நினைத்தீர்களா?"

"நானாக ஏன் நினைக்கிறேன், அதுவாக அல்லவா வந்துள்ளது" என்று மன்னர் கூறினார். "நீங்களாக தான் குரங்கை நினைக்கக் கூடாது என்று கூறினேனே தவிர, குரங்கைப் பற்றிய நினைவுகள் எதுவாகவும் வரக்கூடாது என்று நான் கூறவில்லையே" என்று கூறி அந்த ஞானி, சிந்தனைக்கும் சிந்தித்தலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக் கூறி புரிய வைத்தார்.

சிந்தனைக்கும் சிந்தித்தலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்ட அரசர் தனது மனக்கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டார்.

மருத்துவராக வந்தவர் மகா ஞானி என்பதையும் புரிந்து கொண்டு அவரையும் நமஸ்கரித்து அவருடைய நல்லாசிகளையும் பெற்றார்.

தொடர்புக்கு - sribagavathji@gmail.com

Tags:    

Similar News