பெண்களுக்கு அதிகரிக்கும் வயதும்... குழந்தை பேறு பிரச்சனைகளும்
- கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான பெண்கள் 21 வயது நிரம்பியவுடன் திருமணம் செய்து கொள்வார்கள்.
- ஒரு கருவில் அடிப்படையான 30 சதவீத குரோமோசோம் குறைபாடுகள் என்பது எந்த வயதிலும் இருக்கலாம்.
பெரும்பாலான பெண்கள் தற்போது வயது அதிகரித்த பிறகே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனையை இப்போது அதிகமான பெண்கள் எதிர்நோக்குகிறார்கள். அதாவது திருமணம் செய்யும் வயது அதிகரித்து வருவது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் அதிக வயதான பிறகு திருமணம் செய்பவர்கள் கூட, குழந்தை பேறு பெறுவதையும் இப்போது தள்ளிப்போடுவது என்பது மிகவும் பொதுவாக இருக்கிறது.
குழந்தை பேறு விஷயத்தை தள்ளிப்போடும் பெண்கள்:
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான பெண்கள் 21 வயது நிரம்பியவுடன் திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தை பேறு விஷயங்களை 32 வயதுக்குள் முடித்து விடுவார்கள். இதுதான் எல்லா பெண்களின் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 35 வயதை தாண்டிய பிறகு குழந்தை பேறு பெறுவதை எதிர்நோக்குகின்ற பெண்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.
இதற்கு முந்தைய காலங்களில் 35 வயதில் குழந்தைபேறு பெறும் பெண்களின் எண்ணிக்கை 3 சதவீதமாக இருந்தது. இப்போது அது 30 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் 35 வயதில் குழந்தை பேறை எதிர்நோக்குகிற பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
பெண்கள் இன்றைக்கு நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போக வேண்டும், நன்றாக சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் ஒரு சிறந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அத்துடன் தங்களின் குடும்ப சூழ்நிலைகளையும் ஒரு நல்ல நிலையில் வைத்து விட்டு, அதன் பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற எண்ணம் தற்போது பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தை பேறு விஷயத்தை தள்ளிப்போடுகிறார்கள்.
குழந்தை பேறு விஷயத்தில் தவறான கண்ணோட்டம்:
குழந்தை பெற்றுக் கொள்வதை பெண்கள் ஏன் தள்ளிப்போடுகிறார்கள் என்று ஆய்வு செய்து தரவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு தொடர்பாக பார்க்கும்போது தம்பதிகள் பலர் குழந்தை பேறு விஷயத்தில் தவறான கண்ணோட்டத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது நமக்குத்தான் ஐ.வி.எப். நவீன சிகிச்சை முறை இருக்கிறதே... ஐ.வி.எப். சிகிச்சை செய்து கொண்டால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். எனவே நமது வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, ஐ.வி.எப். மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிற கண்ணோட்டம் அவர்களிடம் இருக்கிறது. இந்த கண்ணோட்டம் மிகவும் தவறானது.
அதாவது ஐ.வி.எப். கருத்தரிப்பு முறை, குழந்தை பேறு கொடுக்கும் என்கிற எண்ணத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது குழந்தையின்மைக்கு முழுமையான தீர்வு ஐ.வி.எப். தான் என்கிற அளவில், ஐ.வி.எப். செய்து கொண்டால் குழந்தை வந்துவிடும் என்கிற எண்ணங்கள் இருப்பதன் காரணத்தால் குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகிறார்கள்.
கருவில் ஏற்படும் குரோமோசோம் குறைபாடுகள்:
நான் 31 வருடமாக இது தொடர்பாக சிகிச்சை அளித்து வருகிறேன். இந்த சிகிச்சையில் 10 வருடங்களுக்கு முன்பு குழந்தை பேறு சிகிச்சைக்காக வருகிற பெண்களின் சராசரி வயது 27, 28 ஆக இருந்தது. அவர்களில் பலர் திருமணமாகி 3 அல்லது 4 வருடம் கழித்தும் வருவார்கள். அப்போது 33, 34 வயதில் குழந்தை பேறு சிகிச்சைக்காக வருபவர்கள் மிகவும் அபூர்வமாக இருப்பார்கள்.
ஆனால் இப்போது சராசரியாக 31, 32 என்ற வயதில் தான், குழந்தை பேறு சிகிச்சைக்காக நிறைய பேர் வருகிறார்கள். மேலும் 39, 40, 41 வயதில் குழந்தை பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இந்த அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் (மேம்பட்ட தாய்வழி வயது) என்பது எங்களை போன்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். ஏனென்றால் அதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு பெண்ணுக்கு இப்போது நல்ல முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்ய முடியும். அவர்களுக்கு ஏ.ஆர்.டி. செய்யலாம், நவீன முறையில் கருத்தரிப்பு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் முக்கியமாக கருவுறுதல் திறன் என்பது அவர்களுடைய வயதை சார்ந்தது தான். பெண்களுக்கு வயது கூடக்கூட அவர்களின் கருத்தரிக்கிற திறன் குறைவாகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஒரு கருவில் அடிப்படையான 30 சதவீத குரோமோசோம் குறைபாடுகள் என்பது எந்த வயதிலும் இருக்கலாம். ஆனால் இதுவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிப்படையான குரோமோசோம் குறைபாடுகள் 70 சதவீதமாக அதிகரிக்கிறது. அதுவே 40 வயதில் 90 சதவீத குரோமோசோம் குறைபாடுகள் வருகிறது. இதுவே 45 வயதானால் கிட்டத்தட்ட 100 சதவீதமாகிறது.
ஏனென்றால் 45 வயதுக்கு மேலே உருவாகின்ற கரு எல்லாவற்றிலுமே குரோமோசோம் குறைபாடுகள் இருக்கிறது. அதாவது டவுன் சின்ட்ரோம் பேபி உருவாகிறது. 13, 17, 27 குரோமோசோம் பாதிப்பு ஏற்படுகிறது. இவை அனைத்தும் கண்டிப்பாக வயது கூடும்போது கருத்தரிக்கிற பெண்கள் அதிகமாக எதிர்நோக்குகின்ற ஒரு விஷயம் ஆகும்.
அதனால்தான் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் ஆன பெண்களுக்கு கருத்தரிப்பு திறன் குறைவாகிறது. அவர்களுக்கு கருமுட்டைகள் எண்ணிக்கை குறைவாவதன் காரணமாக, கருமுட்டைகளின் கருத்தரிக்கும் திறனும் குறைவாகிறது. மேலும் கருப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மையும் குறைவாகிறது.
30 வயதுள்ள பெண்ணின் கருவையும், 40 வயது பெண்ணின் கருவையும் எடுத்துக்கொண்டால் 30 வயது பெண்களை விட 40 வயது பெண்களுக்கு கருவானது கர்ப்பப்பையை ஒட்டி வளரும் தன்மை திறன் குறைவாகிறது. அதாவது வயது கூடக்கூட பல விஷயங்கள் மாறுபடுகிறது.
வயதாகும்போது குழந்தை பேறு விஷயங்களில் அதிக கவனம் தேவை:
இப்போது நோயாளிகள் அனைவரும் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்னிடம் வரும் சில பெண்கள் டாக்டர் எனக்கு பிளாஸ்டோசிஸ்ட் பரிமாற்றம் செய்யுங்கள், அதில் வெற்றி விகிதம் அதிகம் என்று எங்களிடம் தெரிவிக்கிறார்கள்.
இந்த பிளாஸ்டோசிஸ்ட் என்பது 5-வது நாள் கரு ஆகும். இந்த 5-வது நாள் கரு கர்ப்பப்பையில் ஒட்டி வளருவதற்கு குறிப்பாக ஒரு சதவீதம் வாய்ப்பு அதிகம் தான். ஆனால் இந்த பிளாஸ்டோசிஸ்ட்டை பார்த்து அது நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் கூட, அந்த பிளாஸ்டோசிசில் மூன்றில் ஒன்று தான் நல்ல கருவாக இருக்கும். அதிலும் 32 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் அப்படி இருக்கும்.
இதுவே 35 வயதான பெண்களுக்கு 5 பிளாஸ்டோசிஸ்ட் இருந்தால் அதில் ஒன்று தான் நன்றாக இருக்கும். 35 வயதுக்கு மேலான பெண்களுக்கு 5 பிளாஸ்டோசிஸ்ட் இருந்தால் அதில் ஒரு ஒரு கருவில் தான் குரோமோசோம் நார்மலாக இருக்கும். ஆனால் அதுவே 40 வயதாகும்போது 10 பிளாஸ்டோசிஸ்ட் இருந்தால் அதில் ஒரு பிளாஸ்டோசிஸ்ட் தான் நன்றாக இருக்கும். எனவே அதில் எவ்வளவு அளவு மாறுபடுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த பிளாஸ்டோசிஸ்ட்டை பார்க்கும்போது அதனுடைய உருவ அமைப்பு, அதனுடைய பிளாஸ்டோமியோ அளவு எல்லாம் சரியாக இருந்தால் கூட வயதுக்கு ஏற்ப அதன் திறன் மாறுபடுகிறது. இதைவைத்து பார்க்கும்போது பெண்களுக்கு 42 வயதாகும்போது அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு 5 சதவீதமாக குறைகிறது. அதனால் தான் வயதாகும்போது குழந்தை பேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே ஐ.வி.எப். முறையிலும் குறிப்பிட்ட வயது வரைதான் குழந்தை பேறு பெற முடியும். அதுபற்றி அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்.