சிறப்புக் கட்டுரைகள்

துன்பம் தாங்குதலே தவம்!

Published On 2025-01-12 14:33 IST   |   Update On 2025-01-12 14:33:00 IST
  • இருபது பேர் கலந்துகொண்டு ஓடுகிற ஓட்டப்பந்தயத்தில் இருபது பேருமா முதலிடத்தை எட்டிப் பிடிக்கிறார்கள்?.
  • வலிகளும் துன்பங்களும் எதிர்கொள்ளுகிற மனிதர்களைப் பொறுத்துக், கடினமானதாகவோ அல்லது லேசானதாகவோ அமைகின்றன.

வாழுகின்ற வாழ்க்கையைத் துன்பமின்றி இன்பமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

எல்லாவற்றையும் துறந்து பற்றற்ற நிலையில் காடுகளில் உலவிக்கொண்டு இருக்கின்ற துறவிகளுக்கு மட்டுமல்ல; எல்லா ஆசா பாசங்களோடும் சொந்த பந்தங்களோடும் சுற்றம் சூழ நாட்டில் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற இல்லறவாசிகளுக்கும் வாழ்க்கை என்பது தவம் போன்றதே ஆகும். தவம் என்பது மனிதர் ஒவ்வொருவரையும் நெறிப்படுத்துகிற வாழ்வியல் ஒழுங்குமுறை ஆகும்.

தவம் என்பது, பசி, தாகம், நோய்கள் போன்ற உடலியல் துன்பங்களையும், ஆசை, கோபம், காமம், களவு, பதற்றம் போன்ற மனவியல் துன்பங்களையும் பக்குவமாக எதிர்கொண்டு அவற்றை வெற்றிகண்டு அவற்றிலிருந்து வெளிவருவது ஆகும். தமிழில் 'நோற்றல்' என்னும் அழகான ஒரு தமிழ்ச்சொல் உண்டு. 'நோன்பு' என்கிற சொல்லினை அடியாகக் கொண்டது அச்சொல். எவ்வளவு துன்பம் வந்தாலும் மன உறுதியோடும், உடல் வலிமையோடும் தாங்கிக்கொள்வதே நோற்றல் ஆகும். 'நோன்பு இருத்தல்' என்றால் 'விரதம் இருத்தல்' என்று பொருள். நோன்புக் காலங்களில் உணவுண்ணா நோன்பிருப்பது எல்லாரும் கடைப்பிடிக்கின்ற ஒன்றாகும். பசியினால் வரக்கூடிய வேதனைகளைத் தாங்கிக் கொள்வது விரதமிருத்தல் ஆகும்.

உண்ணா நோன்பிருந்து உடம்பையும் மனத்தையும் வலிபொறுக்கும் பக்குவப்படுத்துவதே தவம் ஆகும். பெரும்பெரும் இலக்குகளோடும் குறிக்கோள்களோடும் இயங்கத் தொடங்கும் மனிதர்களைச் சிறுசிறு துன்பங்களும், தொல்லைகளும் சிறைப்படுத்தி விடக்கூடாது. அதற்காகவே அவர்கள் நோன்பிருந்து நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும் பக்குவம் பழகுகிறார்கள். தவம் என்பது துறவிகளுக்கு மட்டுமல்லாது இல்லறத்தார்க்கும் உடனடியாக வசப்பட்டு விடாது. பழகப் பழகவே தவமும் கைகூடும். அதற்கு முதலில் மனம் பழக்க வேண்டும்; அப்போதுதான் பெரிதினும் பெரிதான குறிக்கோள்களை அடைய எண்ணும் எண்ணம் உறுதிப்படும். அடுத்து, உடல் பழக்க வேண்டும்; உண்ணுதல், உறங்குதல், உல்லாச வாழ்வில் திளைக்க விரும்புதல் போன்ற மதிப்புக்குறைந்த உடலியல் ஆசைகளில் விருப்பங்களைச் செலுத்தாமல் அடக்கவும் அடங்கவும் பழக வேண்டும்...

எல்லா மனிதர்களுக்கும் லட்சியங்கள் உண்டு; அன்றாட வாழ்வில் அன்றைய உணவை அல்லாடாமல் பெறுவதே சிலருக்குப் பெரும்பாடாய் இருக்கும். இவர்களால் வாழ்வில் உயர்ந்த சிகரங்களை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 'தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரைகூடிக் கிழப்பருவம் எய்தி மாய்ந்துவிடும் வேடிக்கை மனிதர்களைப் போல' இவர்கள் வீழ்ந்து விடுவார்கள். 'பழகப் பழகப் பாலும் புளிக்கும்' என்பது போலப் 'பழகப் பழக வேம்பும் சுவைக்கும்' எனும்படியாக வலிபொறுக்கும் வாழ்வியல் பழகுபவர்களே, புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்கத் தொடங்குவார்கள்.

இந்த உலகில், இருப்பவர்கள் அதிகமா? இல்லாதவர்கள் அதிகமா? என்கிற ஒரு கேள்வியைப், படித்தவர், படியாதவர் என யாரிடம் கேட்டாலும், அவர்கள் மாறுபாடு ஏதுமின்றிச் சொல்லக்கூடிய ஒரே பதில், 'இல்லாதவர்தாம் அதிகம்' என்பதாகத்தான் இருக்கும். இப்போது மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கூட, இந்தக் கேள்விக்கான பதில் இதுவாகவே இருந்திருக்கிறது. இந்தக் கேள்வி பதிலில் என்ன சிறப்பு என்றால்…கேள்வி கேட்டவரும் பேரறிஞர்; பதில் சொன்னவரும் பேரறிஞர்; இருவரும் ஒரே அறிஞர், அவர்தாம் திருவள்ளுவர் என்னும் அறிவுப் பேராசான்.

"இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்

பலர் நோலா தவர்"

இந்த உலகில், இல்லாதவர்களே பலராக இருக்கின்றனர் என்கிற உலகியல் கணக்கெடுப்பைக் குறிப்பிடுகிற திருவள்ளுவர், அதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து நமக்கு விடையும் பகர்கிறார். ஆம், எல்லாருக்கும் லட்சியங்கள் உண்டு; எல்லாருக்கும் குறிக்கோள்கள் உண்டு. ஆனால் கொண்ட குறிக்கோளையும் லட்சியத்தையும் எல்லாருமா அடைந்து விடுகிறார்கள்?. இருபது பேர் கலந்துகொண்டு ஓடுகிற ஓட்டப்பந்தயத்தில் இருபது பேருமா முதலிடத்தை எட்டிப் பிடிக்கிறார்கள்?. இல்லையே! ஓரிருவர் மட்டும்தானே முதலிடம் வர முடிகிறது; மற்றவர்களிடம் என்ன குறை?; நாட்டில் இல்லாதவர்களும் அதிகம் பெருகியிருக்க என்ன குறை?. முறையான பயிற்சியில்லை; வலி தாங்கி, துன்பங்கள் பொறுத்து, தடைகளைத் தகர்க்கிற பக்குவமும் உறுதியும் பெரும்பான்மையானவர்களுக்கு இல்லை. தவம் என்பதே மனத்தையும் உடம்பையும் பழக்கிப் பக்குவப்படுத்தலே ஆகும்.

பக்குவம் என்பது ஒருநாளில் வந்து விடாது; துன்பமாயினும் இன்பமாயினும் பழகப் பழகத்தான் பக்குவம் ஆகும். வாழ்க்கையில் வெற்றிகரமான குடும்பஸ்தராவதும் அவ்வளவு சுலபமில்லை; அதே போலத் துறவறத்திலும் சாமியாராகப் போவதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. தவம் என்பது, கீழான எண்ணங்கள் தவிர்த்து, ஒருமித்த சிந்தனையில், கொண்ட குறிக்கோளை நோக்கி மனத்தைச் செலுத்துவது ஆகும்.

ஓர் ஊரின் மைதானத்தில் நடைபெற்ற ஒரு பிரபலமான பேச்சாளரின் பக்தி உபன்யாசத்தை மக்களோடு மக்களாக சேர்ந்து அமர்ந்து கவனமாக ஒரு குரங்கும் கேட்டது. தவத்தின் வலிமையையும், அருமையையும், தவமிருக்கும் வழிமுறையையும், சொல்ல வேண்டிய மந்திர ஜெபங்களையும் சொற்பொழிவாளர் வெகு அழகாக எடுத்து விளக்கினார். சொற்பொழிவை முழுமையாகக் கேட்ட குரங்கு, தானும் முயன்று ஒரு தவசீலராக ஆகிவிடவேண்டும் என்று முடிவெடுத்தது. அருகில் இருந்த காட்டிற்குள் சென்று அங்கிருந்த பாறை ஒன்றன்மேல் அமர்ந்து, யோகியரைப்போலக் கண்களை மூடித் தவமியற்றத் தொடங்கியது.

'சரி இடையில் பசித்தால் என்ன செய்வது?' குரங்கின் மனத்திற்குள் ஒரு முக்கியமான கேள்வி ஓடியது; 'உணவு முக்கியமில்லையா?'. தவத்தைச் சிறிதுநேரம் கலைத்துவிட்டுக் காட்டிற்குள் சென்று, மரத்திற்கு மரம்தாவி, நிறையக் கனிகளைப் பறித்துக்கொண்டு மீண்டும் பாறைக்கு வந்தது. பாறையின் ஒரு மூலையில் கனிகளை வைத்துவிட்டுக், குரங்கு உபன்யாசகர் மேடையில் சொல்லிக்கொடுத்த ஜெபத்தை முனுமுனுத்தவாறே தனது தவத்தைத் தொடர்ந்தது. மீண்டும் குரங்கின் மனவோட்டத்தில் ஒரு சிந்தனை,' இப்படி உட்கார்ந்தபடியே ரொம்ப நேரம் தவமிருந்துவிட்டுத், திடீரென்று பசி வரும்போது எழுந்திருக்க முடியாத நிலை உடம்பில் வந்து விட்டால்?'… என்ன செய்வது?. யோசித்த குரங்கு சிறிது ஜெபம் சொல்வதை நிறுத்திவிட்டுப், பாறையின் மூலையில் வைத்திருந்த கனிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, பாறையின் நடுவில் தாம் தவமிருக்கும் இடத்திற்கருகில் குவித்து வைத்துக்கொண்டு மீண்டும் தவத்தைத் தொடங்கியது.

 

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

சிறிது நேரத்தில் மீண்டும் குரங்கின் மனவோட்டத்தில் மற்றுமொரு கேள்வி, 'பழங்கள் பக்கத்தில்தான் இருக்கின்றன; இருந்தாலும், பசி வரும் நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுக், கைகால் நீட்ட முடியாத நிலை வந்துவிட்டால் எப்படிச் சாப்பிடுவது? உடம்பை ஊக்கமுள்ளதாக மாற்றுவது?'. அவ்வளவுதான். தன் அருகிலேயே குவித்து வைத்திருந்த பழங்களில் ஒன்றை எடுத்துத் தன் வாய்க்குள் போட்டுச் சுவைக்கத் தொடங்கியது. சுவையாக இருந்ததால் அடுத்தடுத்துப் பழங்கள் குரங்கின் வாய்க்குள் போகத் தொடங்கின. அடுத்தவேளை உணவைப் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்வோம்; இந்தவேளைப் பசிக்கு இவையனைத்தையும் இப்போதே உண்டு முடித்து விடுவோம் என்று எல்லாப் பழங்களையும் தின்று ஏப்பம் விட்டு, அந்தப் பாறையிலேயே உண்ட களைப்புத்தீர ஒரு குட்டித்தூக்கமும் போடத் தொடங்கிவிட்டது. இனியெங்கே அந்தக் குரங்கு தவம் இருக்கப்போகிறது?.

சின்னஞ்சிறிய தொல்லைகளாக, அன்றாடம் உண்டாகிற தொந்தரவுகளிலேயே கவனம் செலுத்தத் தொடங்கி, நாற்றச் சகதியில் உழலும் ஏதோபோலத் தடுமாறத் தொடங்கிவிட்டால், பாய்ந்து வரும் கங்கையாற்றில் நீச்சலடிப்பது எப்படி?. வானுயர ஆர்ப்பரித்துவிழும் நீரருவிகளில் குளித்து மகிழ்வது எப்படி?. கடலை நீந்திக் கடப்பது என்று லட்சியம் உறுதி செய்து விட்டால், கடற்கரையில் நின்றுகொண்டு அலைகளை எண்ணிப் பார்த்துப், பயந்து கொண்டிருந்தால் எப்படி?. 'எண்ணித் துணிக கருமம்!' என்றுதானே வள்ளுவரும் ஊக்கப்படுத்துகிறார்.

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு

என்ற திருக்குறளில் தவம் என்பது எப்படியிருக்கும் என்று வார்த்தைகளால் வடிவப்படுத்த முனைகிறார் திருவள்ளுவர், வருகின்ற துன்பமாகிய நோய்களையெல்லாம் தாங்கிக் கொள்ளுதலும், தாம் துன்பப்பட்டாலும் தம்மால் பிற உயிர்களுக்குத் துளியளவும் துன்பம் நேராமல் பார்த்துக்கொள்ளுதலும் ஆகிய இரண்டும்தான் நல்ல தவசீலருக்கு அடையாளம் ஆகும். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டே நல்ல லட்சியங்களை அடைய முடியாதா? என்று சிலர் கேட்கலாம். உளிவலி ஏற்காமல் பாறைகள் சிற்பங்கள் ஆவதில்லை; மேடுகள் தகர்க்கப்படாமலும், பள்ளங்கள் நிரப்பப்படாமலும் நல்ல பாதைகள் உருவாவதில்லை. பச்சையாக இருக்கின்ற கறிகாய்களும் இறைச்சிகளும் பக்குவமாக, நெருப்பின் துணைகொண்டு சமைக்கப்படாமல் அவை சுவையான உணவுகள் ஆவதில்லை. செய்வதற்கு அரிய செயல்களை அரிதின் முயன்று, வலிகளைப் பொறுத்துக் கொண்டு செய்து முடிப்பவர்களே சாதனையாளர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். அரிய செயல்களே அருமையான செயல்களாகப் பிற்காலத்தில் போற்றப்படுகின்றன.

வலிகளும் துன்பங்களும் எதிர்கொள்ளுகிற மனிதர்களைப் பொறுத்துக், கடினமானதாகவோ அல்லது லேசானதாகவோ அமைகின்றன. சிலர் துணிந்து எதிர்த்து நின்று போராடி வெற்றி காண்கிறார்கள். சிலர் வலிகளையும் துன்பங்களையும் அவற்றின் போக்கிலேயே போகவிட்டு, எதுவும் தெரியாததுபோல விலகிக் கொள்கிறார்கள்; அல்லது நகர்ந்து கொள்கிறார்கள். இரண்டு விதமான உத்திகளுமே தடைகளை வெல்லும் உத்திகள் தாம். வருகின்ற வலிகளும் துன்பங்களும் தொல்லைகளுமே அவற்றை எதிர்கொண்டு வெல்வதற்கான வழிமுறைகளையும் ஆயுதங்களையும் நமக்கு உணர்த்திவிடுகின்றன. எனவே எதிர்த்துப் போரிடுவது அல்லது தாங்கிக்கொள்வதைக்கூட கடினமானதாகக் கருதாமல் விளையாட்டுப் பாங்காக எடுத்துக் கொண்டால் இருநூறு சதவீதம் வெற்றி நிச்சயம்.

எல்லா ஞானியரும் துன்பம் வரும் வேளையிலே சிரிங்க! என்றுதான் கூறியிருக்கிறார்கள், கஷ்ட காலங்களில் கடகடவென்று வெளிப்படையாகச் சிரித்துக் கொண்டிருந்தால், பார்க்கிறவர்கள் நம்மை ஒருமாதிரிகூடப் பார்க்க நேரிடும். துன்பத்தைப் பார்த்துச் சிரிப்பது என்பது, சலிப்போடு அல்லாமல், மகிழ்ச்சியான மனோபாவத்தோடு எதிர்கொள்வது ஆகும். மகாகவி பாரதி, மரணத்தைக் கூட வெகு லாவகமாகவும் துணிச்சலாகவும், "காலா! வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா!" என்று பாடி அழைத்திருக்கிறார்.

வாழ்வில், இடையூறுகளும் தடைகளும் இல்லாத தருணங்களே இல்லை. நாம் பெரிதினும் பெரிதான லட்சியங்களை வகுத்துக்கொண்டு அவற்றை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டால், எவ்வளவு பெரிய தடைகளும் தீயினில் தூசுபோலக் காணாமல் போகும். வலி தாங்குதலே தவம்.

தொடர்புக்கு,

9443190098

Tags:    

Similar News