- கருவறைக்குள் இருக்கும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டி, “இவர்தான் தமிழ்க் கடவுள் முருகர்” என்றனர்.
- யோகம் என்பது தியானம் அல்லது தவம் செய்து இறைவனை வழிபட்டு பலன் பெறுவதாகும்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் தலம் ஆதிகாலத்தில் சந்தன மலையும், சந்தன மரங்களும் நிரம்ப பெற்றதாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அருகில் உள்ள கொற்கை, காயல் நகரங்கள் மிகச்சிறந்த துறைமுக நகரங்களாக திகழ்ந்தன.
சங்க காலத்தில் கிரேக்கம் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வியாபாரம் செய்வதற்காக வெளிநாட்டவர்கள் இந்த துறைமுகங்களுக்கு வருவது உண்டு. அவர்கள் தமிழகத்தில் அபரிமிதமாக கிடைத்த மிளகு, கிராம்பு, சந்தனம் ஆகியவற்றை விரும்பி வாங்கி சென்றனர்.
அதோடு தமிழக கடலோர பகுதிகளில் கிடைத்த முத்துக்கள், சங்குகள் ஆகிய வற்றையும் அதிகளவில் தங்கள் நாட்டுக்கு வாங்கிச் சென்றனர். அப்படி வரும் வெளி நாட்டவர்களை நமது நாட்டில் "மிலேச்சர்கள்" என்று சொல்வது உண்டு. இந்த மிலேச்சர்கள் சங்க காலத்தில் தென் தமிழக மக்களோடு மிகவும் நெருங்கி பழகினார்கள்.
சில மிலேச்சர்கள் தமிழக மன்னர்களுடன் மிகவும் நட்புடன் இருப்பது உண்டு. அந்த மிலேச்சர்களை தமிழக மன்னர்களில் சிலர் தங்களது மெய்காவலர்களாக நியமித்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. இத்தகைய சிறப்புடைய மிலேச்சர்களில் சிலர் தமிழ்நாட்டில் வரைமுறை மீறி நடந்தது உண்டு.
அத்தகைய ஒரு மிலேச்சன் மூலம் ஒரு தடவை திருச்செந்தூர் முருகன் அற்புதமான ஒரு திருவிளையாடலை நடத்தி காண்பித்தார். அந்த திருவிளையாடல் மூலம் திருச்செந்தூர் தலம் மோட்சத்தை தரக்கூடிய சாயுச்சிய பதவி தரும் தலம் என்ற சிறப்பை பெற்றது. இந்த உண்மை நிகழ்வு பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய அந்த மிலேச்சன் ஒரு தடவை திருச்செந்தூர் ஆலயத்துக்கு வந்தான். அந்த கால கட்டத்தில் சந்தன மலை அடிவாரத்தில் திருச்செந்தூர் முருகன் ஆலயம் அமைந்து இருந்தது. திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பார்த்ததும் அவனுக்குள் அவற்றை சூறையாடி தனது நாட்டுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
வியாபாரியாக வந்து கொள்ளையனாக மாறிய அவன் திருச்செந்தூர் ஆலயத்தின் முன்னே நின்று நோட்டமிட்டான். அங்கு வந்த பக்தர்கள் சிலரிடம் உள்ளே என்னென்ன இருக்கிறது? என்று கேட்டான். அப்போது பக்தர்கள் அவனை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
கருவறைக்குள் இருக்கும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டி, "இவர்தான் தமிழ்க் கடவுள் முருகர்" என்றனர். அதற்கு அந்த மிலேச்சன் முருகர் பற்றிய கூடுதல் தகவல்கள் கேட்டான். உடனே பக்தர்கள், "சுயஜோதி வடிவமாக இருக்கும் பரமசிவன் தனது நெற்றில் கண்ணில் இருந்து உருவாக்கியவர்தான் இந்த முருகர். மக்களை தொல்லை செய்த சூரபத்மனையும், அவனது ஆட்களையும் சம்ஹாரம் செய்வதற்காக இந்த முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. அவருக்கு தேவசேனாதிபதி என்பது உள்பட பல பெயர்கள் இருக்கிறது" என்று பெருமையோடு சொன்னார்கள்.
இதை கேட்ட மிலேச்சனுக்கு முருகப்பெருமானின் உடலில் கிடந்த அணிகலன்கள்தான் கண்களை கவர்ந்தன. இந்த முருகனிடம் கேட்டால் என்னவெல்லாம் தருவார் என்று அந்த மிலேச்சன் சற்று ஆணவத்துடனும், அலட்சியத்துடனும் கேட்டான்.
அதற்கு பக்தர்கள், "திருச்செந்தூர் முருகனை மனமுருக வணங்கினால் நினைப்பது நடக்கும். வாழ்வில் துன்பத்தை நீக்கி இன்பத்தை தருவார். இந்த பிறவியில் சகல செல்வங்களையும் தந்து ஆட்கொள்வார்" என்றனர்.
இதைக் கேட்டதும் மிலேச்சனுக்கு பக்தி வரவில்லை. அழகு முருகனின் சிலையை ஆபரணங்களுடன் கடத்திச் செல்ல வேண்டும் என்றே நினைத்தான். அதற்காக அவன் நாடகம் ஆடினான். இந்த முருகர் என்னை எப்படி தடுக்கிறார் பார்ப்போம் என்று வாளை ஓங்கியபடி கருவறைக்குள் ஓடினான்.
முருகர் சிலையை வெட்டி சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்ற அவன் வந்த வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தான். முருகனின் கமலபாதத்தில் அவனது தலை வேகமாக மோதியது. அடுத்த வினாடி அவனது உயிர் பிரிந்தது. அவனது உடல் முருகப்பெருமானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது போல கிடந்தது. அவனது உயிர் பறிக்கப்பட வேண்டும் என்பது அன்றைய விதியாகும். இதற்காகவே எமதர்மராஜாவும் தனது பாசக்கயிற்றுடன் தயாராக வந்தார். அந்த மிலேச்சனை பாசக்கயிற்றில் கட்டி அழைத்துச் செல்ல முயற்சி செய்தார்.
அப்போது முருகப்பெருமான் அதிரடியாக எமதர்மராஜனை தடுத்து நிறுத்தினார். இதைக் கண்டதும் எமதர்மராஜா அதிர்ச்சி அடைந்தார். முருகப்பெருமான் சின்முத்திரையாக ஜொலிப்பதை கண்டு பரவசம் ஆனார். கையெடுத்து கும்பிட்டு முருகனை வணங்கினார்.
"எனது அகஇருளை போக்கும் சுடர்மணியே" என்று முருகனை எமதர்மன் போற்றி பாடினான். முருகன் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். அதன் பிறகே எமதர்மராஜாவுக்கு நிம்மதி வந்தது. அவர் முருகப்பெருமானிடம், "இவனது உயிரை கவர்ந்து செல்லவே இங்கு தயாராக வந்து இருக்கிறேன்" என்றார்.
அதற்கு முருகப்பெருமான், "இந்த உலகில் சொல்ல முடியாத அளவுக்கு பாவங்கள் செய்தவர்களும் இந்த தலத்துக்கு வந்து விட்டால் அவர்களது பாவம் விலகி விடும். அதுவும் எனது காலடி நிழலில் சரண் அடைந்து விட்டால் அவர்களுக்கு சாயுச்சிய பதவி எனும் மோட்சம் வழங்கப்படும். அதன்படி இந்த மிலேச்சன் மோட்சம் பெற்று விட்டான்" என்றார்.
இதை கேட்டதும் எமதர்மன் நிலை தடுமாறினான். அடுத்து என்ன செய்வது புரியாமல் நின்று கொண்டு இருந்தான். அவனிடம் முருகப்பெருமான் மீண்டும், "இவன் எனது காலடியில் விழுந்ததால் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்துக்கு சென்று விட்டான். இந்த தலமானது தேவர் உள்பட அனைவரும் வணங்கி பலன் பெறக்கூடிய தலமாகும்" என்றார்.
இதை கேட்டதும் எமதர்மனுக்கு புரிந்தது. திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமானை சரண் அடைந்தவர்களை அணுக கூடாது என்று முடிவு செய்தான். முருகப் பெருமானை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
இந்த நிகழ்ச்சியை வியாச முனிவர் தனது மகன் சுகபிரம்ம மகரிஷிக்கு தெரிவித்தார். இதை முனிவர்கள் அனைவரும் கேட்டறிந்தனர். அவர்களிடம் வியாச முனிவர் ஒரு கருத்தை வலியுறுத்தி கூறினார். "யாருக்கு மோட்சம் எனும் சாயுச்சிய பதவி வேண்டுமோ அவர்கள் திருச்செந்தூர் தலத்துக்கு சென்று முருகனை சரண் அடைந்தாலே போதும்" என்றார்.
பொதுவாக இறைவனை அடைவதற்கான வழிகளாக சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கையும் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். சரியை என்பதும் கோவில்களுக்கு செல்வது, பூஜைகள் என்பதாகும். கிரியை என்பது மந்திரம் சொல்லி வழிபடுவதாகும்.
யோகம் என்பது தியானம் அல்லது தவம் செய்து இறைவனை வழிபட்டு பலன் பெறுவதாகும். ஞானம் என்பது இவை அனைத்துக்கும் மேலான நிலையில் அமைதியான மனநிலையுடன் இறைவனை வணங்கி அவருடன் ஒன்றிணைவதாகும்.
இந்த நான்கையும் யார் ஒருவர் முழுமையாக கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி எனும் மோட்சம் எளிதில் கிடைக்கும். இறைவறை அடைவதற்கு உடைய முக்தி நிலைகள் நான்கு வகைகளாக இருப்பதை நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளார்கள்.
சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கும்தான் இறைவனை அடைவ தற்கான முக்தி பாதைகளாகும். இதில் சாலோகம் என்பது இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வதை குறிக்கும். சாமீபம் என்பது இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வதை குறிக்கும்.
சாரூபம் என்பது இறைவனின் பிரதிநிதியாகவே வாழும் உன்னத நிலையை எட்டுவதாகும். இறைவனுக்கு செய்யப்படும் அனைத்தும் இந்த முக்தியை எட்டியவர்களுக்கும் கிடைக்கும்.
ஆனால் சாயுச்சியம் என்பது இறைவனோடு இரண்டற கலந்து விடுவதாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் முருகன் தரும் சாயுச்சிய பலம் காரணமாக முருகனோடு இரண்டற கலந்து விடலாம். இந்த பலனை தரும் ஒரே முருகன் தலம் திருச்செந்தூர் ஆலயம் என்பது புராணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே முருகனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பக்தர்கள் திருச்செந்தூர் முருகனை சரண் அடைய வேண்டும்.
இதை உணர்த்த தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்தினார். இதே போன்று இன்னொரு திருவிளையாடலை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.