- அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள்.
- தாமரை போல் எப்பொழுதும் அன்று மலர்ந்த மலராக அழகிய தோற்றப் பொழிவுடன் இருப்பார்கள்.
27 நட்சத்திரங்களில் 17-வது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மற்றொரு வீடான விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள். இதற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. இந்த நட்சத்திரம் வானில் பனை மரம், குடை அல்லது தாமரை போல் தெரியும். இதன் தமிழ் பெயர் பனை .இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை லஷ்மி இதன் வசிப்பிடம் அழிந்த காடுகள்.
அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
தாமரை போல் எப்பொழுதும் அன்று மலர்ந்த மலராக அழகிய தோற்றப் பொழிவுடன் இருப்பார்கள். அமைதியானவர்கள். சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கெளரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர்கள். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். பேச்சும், பழக்கமும், கம்பீரமான உடலமைப்பும் மற்றவர்களை எளிதில் கவரும் வகையில் இருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் உள்ளுணர்வு கொண்டவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் நிரம்பியவர்கள். அனைவராலும் விரும்பப்படுபவர்கள். பொருளாதாரம், குடும்ப வாழ்க்கையில் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். ராஜபோக வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் உண்டு. சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். கதை, கவிதை கட்டுரை எழுதுவதில் அதிக ஈடுபாடு இருக்கும். அரசியல் ஆதாயம் உண்டு.
தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. சில காலம். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ நேரும். புதிய நாகரிக முறைகளை குற்றம் கூறுவார்கள். பழைய நாணயங்கள், கலைப்பொருள்கள் ஆகியவற்றைச் சேகரிக்க விரும்புவார்கள். அதனால் பழமைவாதிகள் என்ற பட்டமும் உண்டு. பேச்சு, குணம், மன வலிமை, கல்வியில் சிறந்து விளங்குதல் என சிறப்பாக வாழ்வார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் நேர்வழியிலிருந்து தடம் மாறாமல் இருப்பார்கள்.
கல்வி
பிறக்கும் போது சனி தசா என்பதால் ஆரம்ப கல்வி சற்று மந்த தன்மையுடன் இருக்கும். பள்ளியில் சரியாக படிக்காத பலர் கல்லூரி வாழ்க்கை புதன் தசாவில் சாதனை மாணவர்களாக மாறுவார்கள். கெமிக்கல், பயோ கெமிஸ்ட்ரி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடி யாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள், தகவல் தொழில் நுட்பம், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், பல் மருத்துவர், காவல்துறை , ஆயுதப் பயிற்சி, விளையாட்டுத் துறை, ராணுவம். என்ஜினியரிங், புவியியல், வண்டி வாகனம் சார்ந்த படிப்புகள். விவசாயம், சீருடை பணிகள் சார்ந்த கல்விகள் அடங்கும்.
தொழில்
திர புத்தியும் புத்திசாலித்தனமும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்வார்கள் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவி அதில் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். ஆடிட்டர், கணக்காளர் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள். வங்கி அதிகாரி, பதிப்பகம், எழுத்துத்துறை, கணித மேதை, ஆராய்ச்சியாளர், விஞ்ஞானிகள், புதுவித மருந்துகளை கண்டுபிடித்தல், தூதரகப் பணி, தகவல் தொழில் நுட்பம், சங்கேத வார்த்தை நிபுணர், பண்டைய மொழி ஆராய்ச்சி, அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தி யோகங்கள் அமையும்.
தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த் தலைமை போன்றவற்றில் கெளரவப் பதவி உண்டு. மேலும் ஹிப்னாடிசம், மந்திரம் தந்திரம் செய்தல், ஜோதிடம், உளவு பார்த்தல், புகைப்படக்கலை, சினிமா, இசை மற்றும் கலை தொடர்பான தொழில், கவுன்சிலிங், சைக்காலஜி, அறிவியல், எண்கணிதம், கணிதவியல், நிர்வாகம் தொடர்பான பணிகள், தொழிற்சாலை நடத்துதல், சுற்றுலா துறை தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு. தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பு குறைவு. பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் தனது சொந்த உழைப்பினாலும், முயற்சியாலும் வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பல சமயங்களில் பிறருக்காகவே உழைப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டு. அன்பு, பாசம் நிறைந்த குடும்பத்தை உருவாக்குவார்கள். இளமைக் காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலைமையில் இந்தாலும், 20 வயதில் இருந்து செல்வமும் செல்வாக்கும் வந்து சேரும்.
தசா பலன்கள்
சனி தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19.
பிறந்த கால தசா இருப்பிற்கு ஏற்ப சனி தசாவின் கால அளவு மாறுபடும்.
தந்தைக்கு தொழில் மந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக்கஷ்டம் ஏற்படும். சிறு வயதில் குழந்தை பருவத்தில் வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும். மஞ்சள் காமாலை, எலும்பில்லாத உறுப்புகளில் அடிக்கடி தொந்தரவு இருக்கும்.
புதன் தசா: இது சம்பத்து தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 17 வருடம். திருமணம், குழந்தை என சுப விசேஷங்கள் தொடரும். வாழ்க்கை வசந்த காலமாக இருக்கும். அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பூர்வீகச் சொத்துகளுடன் சுயமாகவும் சொத்து சேர்ப்பார்கள். கற்ற கல்வி பயன் தரும்.
கேது தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டு 7 வருடம். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும்.
சுக்ர தசா: இது நான்காவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். பிறப்பு கால சனி தசா குறைந்த வருடமாக இருக்க பிறந்தவர்களுக்கு இது பொற்காலமாக இருக்கும். வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவார்கள். பலர் சுய திறமையால் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். கடன்களால், எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். திரண்ட சொத்து, பணம், நகை என பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவார்கள்.
சுய ஜாதக ரீதியாக திருமண தடை உள்ளவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நடக்கும். சிலருக்கு மறுவிவாகம் நடக்கும். நவீன வசதிகளுடன்கூடிய வீடு. புதுப் புது வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
சூரிய தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் ஆறு ஆண்டுகள். அனுபவ அறிவு அதிகம் இருக்கும். சற்று முன்கோபம் வரும்.
சிறு சிறு வாக்கு வாதங்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.
கொள்கையில் பிடிவாதம் அதிகரிக்கும். சில நேரங்களில் கோபத்தில் கடுமையாகப் பேசிவிட்டு, பிறகு அதற்காக வருந்துவார்கள்.
சமூக சேவை செய்வதில் ஆர்வம் கூடும். வயோதிகம் காரணமாக சிறு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும்.
சந்திர தசா: இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும்.
எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்தபடியே இருப்பார்கள். எதிலும் பிடிவாத குணம் அதிகமாகும். காலம் தாழ்த்திய சாதக தாரையின் தசா என்பதால் நல்ல வாழ்வாதாரம் இருந்தால் கூட பெரியதாக எதையும் அனுபவிக்க முடியாது. பேரன், பேத்தி பிள்ளைகளின் சுப விசேஷம் என வாழ்க்கை சுமூகமாக இருக்கும். ஆனால் மனதில் இனம் புரியாத சோகம் மற்றும் வெறுமையுடன் வாழ்வார்கள்.
அனுஷம் நட்சத்திரத்தின் சிறப்புகள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் தான் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்.பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவரின் ஜாதகத்தில் நிறைந்துள்ளதால் இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார். உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து கவுரவம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார்.
இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் தாரை வடிவமான தாமரை சின்னமும் வெற்றிக்கு உதவி செய்கிறது.
கால புருஷ லக்னமான மேஷத்திற்கு விருச்சகம் எட்டாவது வீடாகும். எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம். பெண்ணிற்கு
மாங்கல்ய ஸ்தானம் எனப்படும். உடலில் கழிவு உறுப்புகளைக் குறிக்கும் இடம். இந்த நட்சத்திரத்தில் விவாகம், ருது சாந்தி, சாந்தி முகூர்த்தம்,கர்ப்பதானம் செய்யலாம். முதன் முதலில் அரைஞான் கட்டலாம்..
கிரகப்பிரவேசம் செய்வதற்கு கிரக ஆரம்பம் செய்வதற்கு உகந்த நாளாகும்.
இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் தொல்லை குறையும். அபிச்சார தோஷங்கள் விலகும் ஆயுதம் பயில ஆயுதப் பிரயோகம் செய்யவும் உகந்த நாளாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் பைரவரை வழிபட்டு புதிய முயற்சிகளைத் துவங்கலாம்.
நட்சத்திர பட்சி: வானம்பாடி
யோகம்: சித்தி
நவரத்தினம் : நீலம்
உடல் உறுப்பு:வயிறு
திசை: மேற்கு
பஞ்சபூதம்: நெருப்பு
அதிதேவதை: லட்சுமி
நட்சத்திர மிருகம்: பெண் மான்
நட்சத்திர வடிவம்: குடை, தாமரை
சம்பத்து தாரை : கேட்டை, ரேவதி, ஆயில்யம்
சேம தாரை : பூராடம், பரணி, பூரம்
சாதக தாரை: திருவோணம், ரோகிணி, அஸ்தம்
பரம மிக்ர தாரை: விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் உள்ள மகாலட்சுமியை வழிபட செல்வச் செழிப்பு மிகுதியாகும்.
நம்முடன் வாழ்ந்து மறைந்த மகான் ஸ்ரீ காஞ்சி மகானை அனுசம் நட்சத்திரத்தில் வழிபட்டால் பிறவிப் பயன் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும் சாதக தாரையான 6-வது நட்சத்திர நாளில் குடை தானம் வழங்குவது மேன்மையான பலன் தரும்.
செல்: 98652 20406