சிறப்புக் கட்டுரைகள்

மகளிர் மருத்துவம்- தாம்பத்திய உறவு வேண்டாம்... குழந்தைபேறு வேண்டும்...!

Published On 2025-03-05 15:03 IST   |   Update On 2025-03-05 15:03:00 IST
  • திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகளை கடந்த காலங்களில் இருந்தே நாங்கள் பார்த்து வருகிறோம்
  • இன்றும் இந்த வகையான தாம்பத்திய உறவு கொள்ளாமை என்பது வளரும் நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று பல ஆய்வுகள் சொல்லி இருக்கிறது.

பெண்கள், குறிப்பாக தம்பதியினர் பலர் தற்போது எதிர்நோக்குகிற ஒரு முக்கிய பிரச்சினை தாம்பத்திய உறவில் சிக்கல். டாக்டர், எங்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என்று சிலர் சிகிச்சைக்காக வருவார்கள்.

இன்னொரு தரப்பினர், எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிவிட்டது, ஐ.வி.எப். செய்தோம் தோல்வி அடைந்து விட்டது, எனவே மீண்டும் ஐ.வி.எப். செய்யுங்கள் என்பார்கள். அவர்களை பரிசோதித்து பார்த்தால், தாம்பத்திய உறவிலேயே ஈடுபட்டிருக்க மாட்டார்கள். அவர்களிடம் இதுபற்றி கேட்டால் நாங்கள் இதுவரை தாம்பத்திய உறவே வைக்கவில்லை என்பார்கள்.

அடுத்து மூன்றாவது ஒரு தரப்பினர், டாக்டர் எங்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வமே இல்லை. ஆனால் எங்களுக்கு எப்படியாவது ஒரு குழந்தை வேண்டும். எங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுத்தி கொடுங்கள் என்று கேட்பார்கள். இது போன்ற 3 விதமான பிரச்சினைகளுடன் பலர் மருத்துவ ஆலோசனைக்கு வருகிறார்கள்.

 

தாம்பத்திய உறவு இல்லாமையால் பாதிக்கப்படும் தம்பதிகள்:

இதைவிட மிக முக்கியமான விஷயம், இன்னும் சிலர் டாக்டர், நாங்கள் தீவிரமாக காதலித்து தான் திருமணம் செய்தோம். 8 வருடம் முதம் 10 வருடம் வரை காதலித்தோம், அதன்பிறகு திருமணம் செய்து கொண்டோம், ஆனால் இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை என்பார்கள். அவர்களை பரிசோதித்து பார்த்தால் உறவுகொண்டிருக்கவே மாட்டார்கள்.

இந்த மாதிரி பலரும் பலவித பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியத்துக்கு அடிப்படை தாம்பத்திய உறவு. ஆனால் அடிப்படையிலேயே கணவன், மனைவி பலர் தாம்பத்திய உறவு கொள்வதில்லை. திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகளை கடந்த காலங்களில் இருந்தே நாங்கள் பார்த்து வருகிறோம். ஆனால் இப்போது இதுபோன்ற பிரச்சினைகள் இன்னும் அதிகமாக காணப்படுகிறது.

இன்னும் ஒரு சிலர் இதற்கு ஒருபடி மேலே போய், டாக்டர் எங்களுக்கு தாம்பத்திய உறவு வேண்டாம், ஆனால் எங்களுக்கு குழந்தை வேண்டும், ஐயுஐ (கருப்பையக கருவூட்டல்) செய்கிறீர்களா அல்லது ஐ.வி.எப். (இன் விட்ரோ கருத்தரித்தல்) செய்கிறீர்களா என்று சிகிச்சையையும் தேர்ந்தெடுத்து விடுவார்கள். இப்படி கேட்கும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

 

இவை அனைத்தையும் பார்க்கும்போது தாம்பத்திய உறவு இல்லாமை என்பது ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி எழுகிறது. ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 22 வருடம் ஆகிறது. ஆனால் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் ரொம்ப நல்ல, அன்பான தம்பதி. தாம்பத்திய உறவு இல்லாததால் அவர்களுக்கு குழந்தை இல்லை. எங்களிடம் சிகிச்சைக்கு வந்த அவர்கள், முட்டையை தானமாக பெற்று ஐ.வி.எப். செய்யுங்கள் என்றனர். அந்த பெண்ணுக்கு மெனோபாசே வந்து விட்டது.

இந்த மாதிரியான பலவிதமான விஷயங்களோடு குழந்தையின்மை சிகிச்சைக்காக பலர் வருகிறார்கள். அவர்கள் இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவே கொண்டிருக்க மாட்டார்கள். தாம்பத்திய உறவு இல்லாமை என்பது தம்பதியினரிடையே இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

தாம்பத்திய உறவு இல்லாமைக்கான காரணங்கள்:

கடந்த 2023-ம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வின் முடிவில் கொடுக்கப்பட்ட தகவலின்படி, தாம்பத்திய உறவு இல்லாமைக்கு 2 முக்கியமான காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முதலாவது பொதுவான காரணம் என்று எடுத்துகொண்டால் ஆண்களை பொருத்தவரைக்கும் ஆண்மை எழுச்சியில் குறைபாடுகள். அதாவது இது விறைப்புத்தன்மை செயலிழப்பாக இருக்கலாம் அல்லது விந்து முந்துதல் பிரச்சினையாக இருக்கலாம்.

பெண்களை பொருத்தவரைக்கும் வஜினிஸ்மஸ். இது பாலியல் உறவின்போது பெண்களுக்கு தன்னிச்சையாக பெண்ணுறுப்பு இறுக்கம் அடைவதாகும். இதனால் தாம்பத்திய உறவு கொள்வதில் சிக்கல் ஏற்படும். இந்த இரண்டும் தான் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

இன்றும் இந்த வகையான தாம்பத்திய உறவு கொள்ளாமை என்பது வளரும் நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று பல ஆய்வுகள் சொல்லி இருக்கிறது. அதாவது இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்த பிரச்சினை அதிகம். இதுவே வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகளில் தாம்பத்திய உறவு கொள்ளாமை என்பது மிகவும் குறைவாக இருக்கிறது.

தாம்பத்திய உறவு குறைகிறது, கூடுகிறது என்பது இதில் பிரச்சினை இல்லை. ஆனால் இது ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன? இதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்.

ஆண்களை பொருத்தவரைக்கும், தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருப்பது என்பது மன ரீதியான விறைப்புத்தன்மை இல்லாமையாக இருக்கலாம். தன்னால் செயல்பட முடியாதோ என்ற மனரீதியான கவலையாக இருக்கலாம். அதனால் தாம்பத்திய உறவு கொள்வதில் அவர்களுக்கு தடை, பயம், குழப்பம் ஏற்படலாம். பல நேரங்களில் இதைப்பற்றி தெளிவான ஒரு புரிதல் இல்லாததும் ஒரு காரணமாகும்.

ஆண்களுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்சினைகள்:

தாம்பத்திய உறவு பற்றிய சரியான புரிதல் இல்லாததால், பல நேரங்களில் உறவு கொள்ள முடியாத நிலையில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள், ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள், நல்ல தம்பதியாக இருப்பார்கள், ஆனால் அவர்களுக்குள் பாலியல் உறவு மட்டும் நடந்திருக்காது. இந்த மாதிரியான மன ரீதியான பிரச்சினைகளால் உறவு கொள்ள முடியாத ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

ஆண்கள் இப்படி இருந்தால், பெண்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பல நேரங்களில் இதுபோன்று பெண்களுக்கும் இதைப்பற்றி ஒரு தெளிவான புரிதல் இல்லாததால், அவர்கள் தங்கள் கணவரிடம் தாம்பத்திய உறவை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் சந்தோஷமாக இருப்பார்கள். தாம்பத்திய உறவு மட்டும் அவர்களுக்குள் இருக்காது என்கிற நிலையில் நிறைய பெண்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

பல நேரங்களில் பெண்கள் இதை ஒரு குறையாக கருதும் போது கூட அவர்களின் குடும்ப சூழ்நிலையையும், சமுதாய ரீதியான விஷயங்களையும் பார்த்து, இதை வெளியில் சொல்ல முடியாமல் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்கிற பெண்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இன்றைக்கும் என்னிடம் வருகிற குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினரில் கிட்டத்தட்ட 22 சதவீதமான பெண்களுக்கு இந்த தாம்பத்திய உறவு இல்லாமை என்பது ரொம்ப பொதுவாக இருக்கிறது. இதில் நாங்கள் அந்த தம்பதியினரிடம் குழந்தையின்மை பிரச்சினை, பாலியல் உறவு பிரச்சினை ஆகிய 2 விஷயங்களையும் பார்க்கிறோம்.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

ஒருவரையொருவர் கஷ்டப்படுத்த விரும்பாத தம்பதிகள்:

இதுபோன்ற பெண்களெல்லாம் நிறைய நேரங்களில் என்ன சொல்வார்கள் என்றால், 'பரவாயில்லை டாக்டர், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம், நல்ல தம்பதிகளாக இருக்கிறோம், நல்ல நண்பர்களாக இருக்கிறோம், ஒரு குழந்தை மட்டும் வந்துவிட்டால் எங்கள் வாழ்க்கைக்கு போதும். தாம்பத்திய உறவு பற்றி ஒன்றுமே இல்லை' என்பார்கள்.

இதுபோன்ற தம்பதிகளுக்குள் பலவிதமான விஷயங்கள் இருக்கும். தாம்பத்திய உறவு இல்லாமையை சரி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையே இல்லாதது ஒரு விஷயம். தங்களது இல்வாழ்க்கை துணையை இதில் கஷ்டப்படுத்துகிறோம் அல்லது அவர்களை காயப்படுத்துகிறோம் என்பது ஒரு மன ரீதியான விஷயம்.

உதாரணத்துக்கு ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை செயலிழப்பு காணப்பட்டால், அவரது மனைவியால் தனது கணவரை குறைசொல்லியோ அல்லது குற்றப்படுத்தியோ, அதனை பற்றி பேசி, பிரச்சினையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் வேண்டாம் என்று நினைத்து அவர்களுக்குள் சுமூகமாக இருப்பார்கள்.

இதேபோல் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் வஜினிஸ்மஸ் எனப்படும் தன்னிச்சையான இறுக்கம் காணப்பட்டால் உறவு கொள்ள முடியாது. அவரது கணவர், மனைவியை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்து நல்ல தம்பதியாக இருப்போம் என்பார்கள். இருவரும் அன்புடன் இருப்பார்கள், ஒருவருக்கொருவர் நேசிப்பார்கள், பாலியல் உறவு மட்டும் வேண்டாம் என்பார்கள். பாலியல் உறவு மட்டும் வாழ்க்கை இல்லை டாக்டர் என்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் நான் சொல்கிற ஒரு விஷயம், இதுபோன்ற பிரச்சினைகளால் ஏற்படும் தாம்பத்திய உறவு இல்லாமையை முழுமையாக சரி செய்து குழந்தை பாக்கியம் பெற முடியும். அதை சரி செய்வது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

Tags:    

Similar News