தமிழ்த் தாத்தா - ஏடுதேடி நடந்தவர்!
- இம்மை மறுமை என இரண்டு பயன்களையும் ஒருசேரத் தரக்கூடியது தமிழ் மட்டும்தான்.
- உ.வே.சா.வுக்குத் தெரிந்த சுவடிகளின் இலக்கியப் பெருமை அவர்களுக்குத் தெரியவில்லை.
தமிழ்த் தாத்தா என்ற பேராளுமை பற்றி நமக்கு எழுத்தின் மூலம் நிறையச் சொன்னவர் ஒரு ஜகந்நாதன். அவர் வாகீச கலாநிதி எனப் பலராலும் போற்றப்பட்டவரும் தமிழ்த் தாத்தாவின் மாணாக்கருமான கி.வா.ஜகந்நாதன்.
தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழ்த் தாத்தா பற்றிப் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு திரையில் சொன்னவர் இன்னொரு ஜகந்நாதன். அவர் இயக்குநர் ஜகந்நாதன். (இயக்குநர் ஜகந்நாதனது தமிழ்த் தாத்தா தொடர் ஒளிப்பேழையாகவும் வந்துள்ளது.)
இந்த இரண்டு ஜகந்நாதன்களும் இப்போது மறைந்து விட்டார்கள். முன்னவர் மறைந்து ஆண்டு பல ஆயிற்று. அடுத்தவர் மறைந்தும் கொஞ்ச காலம் ஆகிவிட்டது.
இன்று `தமிழ் வாழ்க!` என உரத்து முழக்கமிடுபவர்களில் எத்தனை பேருக்குத் தமிழை உண்மையிலேயே வாழவைத்த தமிழ்த் தாத்தாவைப் பற்றித் தெரியும் என்று தெரியவில்லை.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என நமது தொன்மையான சங்க இலக்கியத்தை வானளாவப் போற்றுகிறோம். எங்கெங்கோ சிதறிக் கிடந்த சங்க இலக்கியத்தைத் தேடிக் கண்டுபிடித்து நமக்குத் தந்தவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் தான்.
உ.வே.சா.வை `தமிழ் வியாசர்` என மூதறிஞர் ராஜாஜி பாராட்டினார் என்ற குறிப்பு, உ.வே.சா. பெருமையைச் சொல்வதோடு கூட அவரைச் சரியாக இனங்கண்ட மூதறிஞர் ராஜாஜியின் பெருமையையும் சேர்த்தே சொல்கிறது!
உ.வே.சா. காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு ஆகிய சங்க நூல்கள் என்ற இலக்கியக் களஞ்சியத்தைப் பெயரளவிலேயே தெரிந்து கொண்டிருந்தனர் அக்காலப் பெரும்புலவர்கள்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் முழுமையாகத் தெரியாது. ஆனால், கோவலன் கதை என்கிற ஒரு நாடோடிக் கதையும், அதில் வரும் கண்ணகி, மாதவி என்ற முதன்மைப் பாத்திரங்களும் மட்டும் ஓரளவு தெரியும்.
இப்படியான சூழலில்தான் சாமிநாதன் என்ற இளைஞர் தாளாத தமிழ்க் காதல் காரணமாக நாடெங்கும் ஏடுதேடி நடக்கலானார். பின்னர் மெல்ல மெல்ல தமிழ்ச் சுவடிகளைத் தேடுவதும் படியெடுப்பதும் பதிப்பிப்பதும் மட்டுமே அவரது வாழ்க்கை என்றாயிற்று. தான் கொண்ட குறிக்கோளிலிருந்து இறுதிவரை விலகவில்லை அவர்.
தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரால்தான் இன்று ஒப்பற்ற தமிழ்ப் பொக்கிஷமான சங்க இலக்கியம் நமக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறது.
ஏடுகளில் எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பெருமையை ஏட்டை வைத்திருந்தவர்களில் பலர் அறியவில்லை. அவற்றை அடுப்பெரிக்க விறகாய்ப் பயன்படுத்தியவர்கள் உண்டு. வீட்டில் வைக்க இடமில்லை என்று ஓடும் நதிநீரில் ஓடவிட்டவர்கள் உண்டு.
ஓடோடிப் போய் அவற்றையெல்லாம் அழிவதற்குள் மீட்டுச் சேகரித்தார் உ.வே.சா. தூசிதட்டிப் படியெடுத்தார். இந்தப் பணியில் அவர் கண்ணும் உடல்நலமும் வீணாயிற்று. ஆனால் கருமமே கண்ணாய் இருந்த அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.
இன்று சங்க இலக்கியப் பெருமையை மேடைதோறும் முழங்குகிறோம். சங்க நூல்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம். உ.வே.சா. இல்லாவிட்டால் இவை எவையும் நிகழ்ந்திராது என்ற உண்மையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
சிறுவனாக இருந்த உ.வே.சா.விடம் அவர் தந்தை வேங்கட சுப்பையர் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார். உ.வே.சா. எதைப் படிக்க விரும்புகிறார்? வீடுபேறு தரும் சம்ஸ்கிருத மொழியையா, இல்லை உலகியல் வாழ்வில் உயரத்தைத் தரும் ஆங்கில மொழியையா? தன் மகன் சாமிநாதனின் கருத்தை அறிய ஆவலோடு காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தார் அவர்.
திருப்பூர் கிருஷ்ணன்
உ.வே.சா. தயக்கமே இல்லாமல் தெளிவாக பதில் சொன்னார்:
`ஆங்கிலம் இம்மைப் பயனைத் தரும். சம்ஸ்கிருதம் மறுமைப் பயனைத் தரும். நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இம்மை மறுமை என இரண்டு பயன்களையும் ஒருசேரத் தரக்கூடியது தமிழ் மட்டும்தான். நான் தமிழைப் படிக்க விரும்புகிறேன்!`
உ.வே.சா.வின் குரு தலபுராண வேந்தர் என அழைக்கப்பட்டவரும் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தவருமான தமிழறிஞர் மகாவித்வான் மீனட்சிசுந்தரம் பிள்ளை. அவரிடம் ஐந்து ஆண்டுகள் முறையாகத் தமிழ் கற்றுத் தமிழ் அறிஞரானார் உ.வே.சா.
தொடக்கத்தில் கும்பகோணம் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக இருந்து பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக மாறித் தமிழ் கற்பிக்கத் தொடங்கினார்.
ஏட்டுச் சுவடிக்காகப் பலர் வீட்டு வாயில்களில் போய் நின்றிருக்கிறார் அவர். அவர்களில் சிலர் அவரை உதாசீனம் செய்திருக்கிறார்கள். சுவடிகளை நெருப்பி லிட்டுப் பொசுக்கினாலும் பொசுக்குவோமே அன்றிச் சுவடியைத் தரமாட்டோம் என மறுத்திருக்கிறார்கள். சிலருக்கு வெந்நீர் காய்ச்ச விறகாகப் பயன்படும் சுவடியை இவர் எதற்குக் கேட்கிறார் என ஆச்சரியம். வைரப் பரிசோதகனுக்குத் தானே வைரத்தின் பெருமை தெரியும்? உ.வே.சா.வுக்குத் தெரிந்த சுவடிகளின் இலக்கியப் பெருமை அவர்களுக்குத் தெரியவில்லை.
அடுத்தவர் எளிதாய்ப் புரிந்து கொள்கிற மாதிரி, வகுத்தும் தொகுத்தும் பேசும் ஆற்றல் இயல்பாகவே உ.வே.சா.விடம் இருந்தது. பல சந்தர்ப்பங்களில் வாதிட்டு ஏட்டுச் சுவடியைப் பெற அவரது இந்த ஆற்றலே அவருக்கு உதவியிருக்கிறது.
சென்னையில் குண்டு வீசப்படலாம் என்ற நிலையில் சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்குச் சென்றார் தமிழ்த் தாத்தா. பின்னர் அவர் மகன் மூலமாக அவரது ஆய்வுக்கான ஏட்டுச்சுவடிகள் சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தன.
அவை மொத்தம் பத்து மாட்டு வண்டிகளில் வந்தன என்றால் உ.வே.சா. தமிழ்மொழி மேல் கொண்ட ஈடுபாட்டின் பரிமாணத்தை நாம் எடைபோட்டுக் கொள்ளலாம்.
அவர் தொண்ணூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களை முதன்முதலில் பதிப்பித்தார். மூவாயிரத்திற்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்திருந்தார்.
`அகரமுதலியைத் தயாரிக்க அஞ்சறைப் பெட்டி போன்று பல சதுரக் குழிகள் கொண்ட அமைப்பை உ.வே.சா. பயன்படுத்தினார். இப்படி தமக்குத் தாமே தமது ஆய்வுக்குத் தேவையான கருவிகளை உருவாக்கிக் கொண்டார். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனியொரு மனிதராகச் செய்தார். தமிழ்த் தாத்தா தன் வாழ்க்கைச் சரிதத்தை, "என் சரித்திரம்' என்ற பெயரில் 1940ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆனந்த விகடனில் தொடராக எழுதத் தொடங்கினார். அப்போது ஆனந்தவிகடனின் ஆசிரியராக இருந்த கல்கி மற்றும் டி.கே.சி. போன்ற அன்பர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளே அவரை "என் சரித்திரம்' எழுத வைத்தது.
1942 மே மாதம் வரையில் அச்சரிதம் வெளிவந்தது. தமிழின் தன் வரலாற்றுத் துறைக்கு மகுடம் சேர்க்கும் உன்னதப் படைப்பு அது. அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் மனப்பான்மை பற்றிப் பேசுவதோடு உ.வே.சா. ஏடு தேடுவதில் அடைந்த சிரமங்களையும் சேர்த்துப் பேசுகிறது அது.
மாபெரும் தமிழ்ப் பண்டிதரான அவர் பண்டிதர்களுக்கு மட்டுமே புரியும் கடின நடையில் எழுதியிருக்கலாம். ஆனால் பொதுமக்கள் அனைவருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் அந்த நூலை எழுதியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிகவும் விறுவிறுப்பான அந்த நூலை ஒரு நாவலை வாசிப்பது போல கீழே வைக்காமல் வாசித்து முடித்து விடலாம்
1855-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி பிறந்தவர் உ.வே.சா. 1952 ஏப்ரல் இருபத்தியெட்டாம் தேதி அகவை எண்பத்து ஏழில் முதுமை காரணமாகக் காலமானார். தமிழே வாழ்வாக வாழ்ந்த பெரிய பெருமை அவருடையது.
உ.வே.சா.வுக்கு தமிழ்த் தாத்தா என்ற பட்டமே பொருத்தம் என எழுதி அந்தப் பட்டத்திற்கான காரணங்களை நகைச்சுவையாகப் பட்டியலிடுகிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.
`1. அவ்வைப் பாட்டி என்பதுபோல், செய்திருக்கும் தொண்டால் தமிழ்த் தாத்தா... 2. எல்லா ஓலைச்சுவடிகளையும் காப்பாற்றியதால் தமிழ்த் தாதா. 3. மக்கள் உங்களிடம் தமிழ் தாத்தா எனக் கேட்கிறார்கள். 4. மகாம கோபாத்யாய போன்ற பட்டங்கள் வாயில் நுழையவே சிரமமாயிருக்க தமிழ்த் தாத்தா பட்டம் தங்களுடைய வசன நடையைப் போல் எளிதாயிருக்கிறது. முக்கியமாக அதனால்தான் தமிழ்த் தாத்தா!` என்று கல்கி முடிக்கும்போது நம் முகத்தில் முறுவல் படர்கிறது.
உ.வே.சா.வின் தளராத ஊக்கத்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, புறநானூறு, குறுந்தொகை போன்ற நூல்கள் ஓலைச் சுவடியில் இருந்து அச்சுப் பதிப்பாக வெளிவந்தன.
அவர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவராகத் திகழ்ந்தார் தொல்லியல் நிபுணரான ஐராவதம் மகாதேவன். சென்னை திருவான்மியூரில் உள்ள உ.வே.சா. நூலகத்தில் தமிழ்த் தாத்தாவின் சிலை நிறுவப்படவும் ஐராவதம் மகாதேவன் காரணமாக இருந்தார்.
உ.வே.சா. பதிப்பித்த குறுந்தொகை மறுபதிப்புக் காணவும் ஐராவதம் பொருளுதவி செய்தார். குறுந்தொகை வெளியிடப் பெருந்தொகை கொடுத்தவர் ஐராவதம் என சுந்தரமூர்த்தி போன்ற தமிழறிஞர்கள் அவரைப் பாராட்டினார்கள்.
"கண்ணுஞ் சடையாமல், கையுந் தளராமல்
உண்ணப் பசிஎழுவ(து) ஓராமல் -
எண்ணியெண்ணிச்
செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த
திருத்தொண்டுக்(கு)
இந்த நிலத்(து) உண்டோ இணை?'
என்று தமிழ்த் தாத்தாவைப் பற்றிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் அழகிய வெண்பா எழுதியுள்ளார்.
`பொதியமலைப் பிறந்த மொழி
வாழ்வறியும் காலமெலாம்
புலவோர் நெஞ்சின்
துதியறிவாய் அவர்நெஞ்சின்
வாழ்த்தறிவாய் இறப்பின்றித்
துலங்குவாயே!`
என அவரின் சமகாலத்தில் வாழ்ந்த மகாகவி பாரதி அவரை வாழ்த்திப் பாடியிருக்கிறார். மகாகவியின் வாழ்த்து உண்மைதான். தமிழ் உள்ள மட்டும் தமிழ்த் தாத்தா போற்றப்படுவார்.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com