சிறப்புக் கட்டுரைகள்

உடலில் ஏற்படும் வலிகள் - காரணிகள்

Published On 2025-03-03 15:00 IST   |   Update On 2025-03-03 15:00:00 IST
  • பாத எரிச்சல்- பொதுவில் நீரிழிவு நோயாளிகள், நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் பாத எரிச்சல் பிரச்சினைப் பற்றி குறிப்பிடுவர்.
  • இரவில் நட்சத்திரங்களை சிறிது நேரம் பார்த்தபடி இருந்துள்ளீர்களா?

உடல் உறுப்புகளே உடலின் பாதிப்புத் தன்மையை உணர்த்தும், அறிகுறிகளாய் வெளிப்படுத்தும். இவைகளை ஒருவர் கவனித்து மருத்துவரிடம் உடனடியாக சென்று விட்டால் பாதிப்புகளில் இருந்து மீண்டு விடலாம். அவ்வகையில் பாதங்கள் கூறும் அறிகுறிகளைப் பார்ப்போம்.

* பாத விரல்கள் சில்லென இருந்தால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கலாம். அதிக புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் இவைகள் காாரணமாகவும் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கலாம். கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு பாதிப்பினால் நரம்புகள் பாதிப்பும் ஏற்பட்டு இருக்கலாம். அதன் காரணமாக பாதங்கள் பாதிப்பு-சில்லென இருக்கலாம். இதற்கு தைராய்டு குறைபாடு, ரத்த சோகை போன்றவை காரணமாக இருக்கலாம். மருத்துவர் ஆய்வு செய்து தேவைக்கேற்ப சிகிச்சை அளிப்பார்.

* சிகப்பு, வெள்ளை, நீல பாத விரல்கள்- இதனை ரெனாட்ஸ் நோய் பாதிப்பு என்பர். திடீரென ரத்த குழாய்கள் சுருங்குவதன் காரணமாக இவ்வாறு ஏற்படலாம். ஸ்ட்ரெஸ், சீதோஷ்ண மாற்றம் காரணமாக இவ்வாறு ஏற்படலாம். மெபாய்ட் பிரச்சினை, தைராய்டு பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம்.

* பாத வலி- நாள் முழுவதும் நின்றால் பாத வலி இருக்கலாம். ஆனால் உயர் குதிகால் செருப்பு, ஷூ, இறுக்கமான காலணிகளும் காரணமாக இருக்கலாம். ஏதேனும் எலும்பில் சிறிய மெல்லிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம். பலவீனமாக எலும்புகள், எலும்பு தேய்மானம், எலும்பு கரைதல் காரணமாக இருக்கலாம்.

* குதிகால் வலி- இந்த வலி வீக்கத்திற்கான சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கின்றன. காலையில் எழுந்து காலை கீழே வைத்தவுடன் 'சுளீர்' என்ற வலி இருக்கும். ஆர்த்ரைட்டிஸ், அதிக உடற்பயிற்சி, முறையற்ற ஷூ போன்றவையும் காரணம் ஆகின்றன. குதிகால் எலும்பின் கீழ் வளர்ச்சி, கிருமி, எலும்பு முறிவு, கட்டி ஆகியவையும் காரணமாக இருக்கக் கூடும்.

* பாதத்தினை இழுத்தபடி நடத்தல்- பல நேரங்களில் பாதம் சற்று வளைந்து இழுத்தபடி நடப்பது முதல் அறிகுறியாகக் கூட இருக்கலாம். நடையில் மாற்றம் தெரியலாம். நரம்பு பாதிப்பினால் ஏற்பட்டிருக்கலாம். சுமார் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சர்க்கரை நோய் பாதிப்பென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நரம்பு பாதிப்பு கிருமி, வைட்டமின் குறைபாடு, அதிக மது ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் இவ்வாறு பாதத்தினை இழுத்து நடப்பது மூளை, தண்டு வடம், தசைகள் பாதிப்பினாலும் ஏற்படலாம்.

* பாத வீக்கம்- பொதுவில் வெகுநேரம் நிற்பது, அதிக நேரம் காலை தொங்க விட்டபடி பயணம் செய்வது. இவைகளின் காரணமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து பாத வீக்கம் என இருப்பது கண்டிப்பாக மருத்துவர் கவனம் பெற வேண்டியது ஆகும். ரத்த ஓட்டம் சீராய் இல்லாமல் இருந்து நிணநீர் பிரச்சினை, ரத்த உறைவு கட்டி, சிறுநீரகம் முறையாய் செயல்படாது இருப்பது தைராய்டு குறைபாடு இவைகளும் பாத வீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

* பாத எரிச்சல்- பொதுவில் நீரிழிவு நோயாளிகள், நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் பாத எரிச்சல் பிரச்சினைப் பற்றி குறிப்பிடுவர். வைட்டமின் பி குறைபாடு, சிறுநீரக பாதிப்பு, சீரான ரத்த ஓட்டம் இன்மை, தைராய்டு குறைபாடு போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

* ஆற தாமதமாகும் பாத புண்கள்- பொதுவில் சர்க்கரை நோய் கட்டுப்படாது இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். ரத்த ஓட்டம் சீராக இல்லாவிடினும் இத்தகு பாதிப்புகள் ஏற்படலாம்.

* கட்டை விரலில் வலி- திடீரென கட்டை விரலில் வலி, சிவத்தல், வீக்கம் இவை 'கவுட்' என்ற காரணமாக இருக்கலாம். எலும்பு தேய்மானம், தசை நார்களில் பாதிப்பு, விளையாட்டு வீரர்கள் என்ற காரணங்களும் உண்டு.

* பாதத்தின் மற்ற சிறு விரல்களில் வலி- இது பாதத்தின் அடியில் தடித்த டிஷ்யூ காரணமாக ஏற்படலாம். அடி, அழுத்தம் இவை காரணமாக இருக்கலாம். இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும்.

* பாத அரிப்பு, தோல் உரிதல் போன்றவை பூஞ்சை கிருமிகளின் பாதிப்பால் ஏற்படலாம். தொற்றினால் ஏற்படலாம். சோரியாசிஸ் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

* வளைந்த விரல்கள்- சர்க்கரை நோய், மது, நரம்பு பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

* பாத விரல்களின் நகரங்கள்- பூஞ்சை பாதிப்பு மஞ்சள் நிறம், அடர்ந்த நகம் போன்ற பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கலாம். நிணநீர் மண்டல பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, தோல் பாதிப்பு போன்றவையும் காரணம் ஆகலாம்.

* ஸ்பூன் போன்று வளைந்த நகங்கள்- அடிபடுதல், ரசாயனங்கள், இரும்பு சத்து குறைபாடு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

* வெள்ளை நகங்கள்- நகங்களில் அடிபடுதல், உடலில் பாதிப்பு, சில சமயங்களில் கல்லீரல் பாதிப்பு, இருதயம், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகளை குறிப்பிடுவது விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மட்டும்தான். சுய முடிவும், சுய சிகிச்சையும் கண்டிப்பாக கூடாது. மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும். இது போன்று பாதத்தில் ஏற்படும் மாறுதல்கள் நம்மை கவனம் கொள்ள செய்கின்றன என்பதனை உணர வேண்டும்.

சில விஷயங்களை, வாழ்க்கையில் ஒரு முறையாவது செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏதோ ஒன்றின் மீது இருக்கும். அது சிறியதோ, பெரியதோ ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துதல் இருக்கும். ஆனால் நம்மால் செய்யக்கூடிய சில விஷயங்களை எளிதில் செய்திருக்கின்றோமா? அதில் கிடைக்கும் ஒரு மன மகிழ்ச்சியினை அடைந்திருக்கின்றோமா?

இதனை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன்.

* சூரிய உதயத்தினை உதயமாகும் நேரத்தில் தனியே அமர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா?

* ஒரு முறையாவது சாலை வழி பயணமாக தனியாக பயணித்து (முடிந்தால் பஸ்சில்) பார்த்து இருக்கிறீர்களா?

* தனியாக அமர்ந்து ஒரு நல்ல சினிமாவினை பார்த்து இருக்கின்றீர்களா?

* பீச் சென்று (பகல், காலை அல்லது மாலை பொழுதில்) அலைகளின் ஓசையை உற்று கேட்டு இருக்கின்றீர்களா?

* தனிமையில் யாருடனும் போனில் பேசாமல், போன் பார்க்காமல், டி.வி. பார்க்காமல் உணவினை பார்த்து, சுவைத்து, மென்று சாப்பிட்டு இருக்கின்றீர்களா? உண்மையில் இப்படிதான் உணவு உண்ண வேண்டும்.

* உலக நடப்புகளில் இருந்து சற்று நேரம் உங்களை தனித்து பிரிந்து இருந்திருக்கின்றீர்களா?

* புதிதாக இதனை நான் கற்றேன் என்று உங்களால் எதனையாவது சொல்ல முடியுமா?

* உங்கள் எண்ணங்களை எழுதி வைத்து இருக்கின்றீர்களா?

* ஏதேனும் ஒரு புத்தகம் கீழே வைக்க முடியாமல் நாள் முழுவதும் உங்களை படிக்க வைத்துள்ளதா?

* நீங்களே ஏதாவது புதுமையாய் சமைத்து பார்த்திருக்கின்றீர்களா?

* மியூசியம் சென்று பார்த்து இருக்கின்றீர்களா?

* இரவில் நட்சத்திரங்களை சிறிது நேரம் பார்த்தபடி இருந்துள்ளீர்களா?

* யோகா- முயற்சியாவது செய்து இருக்கின்றீர்களா?

* கதை எழுதி இருக்கின்றீர்களா?

* புத்தக கடையில் ஆழ்ந்து மூழ்கி இருந்திருக்கின்றீர்களா?

* யாருக்கெல்லாம் நன்றி உடையவராய் இருக்க வேண்டும்? என்று சிந்தித்து இருக்கின்றீர்களா?

இதெல்லாம் இல்லையா? என்ன வாழ்க்கை வாழ்ந்துள்ளோம். இன்றே சரி செய்ய ஆரம்பிப்போமே.

'புகை பிடிப்பதனை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்' என மருத்துவர்களும், அரசாங்கமும் தொடர்ந்து வலியுறுத்திதான் வருகின்றன. ஆனாலும் இதனை தொடர்ந்து அன்றாடம் வலியுறுத்த வேண்டிதான் உள்ளது. இந்த வலியுறுத்தலின் அவசியத்தினை மீண்டும் பார்ப்போம்.

* புகை பிடித்தல் புற்றுநோய் பாதிப்பின் அபாயத்தினை உடலின் எந்த பகுதியிலும் ஏற்படுத்தலாம்.

* மாரடைப்பு, இருதய நோய் பாதிப்பு அபாயம் கூடுகின்றது.

* சொரியாசிஸ் எனப்படும் பாதிப்பு கூடுகின்றது.

* நீரிழிவு பிரிவு 2 பாதிப்பு அதிகரிக்கலாம்.

* எலும்பு தேய்மானம் கூடுகின்றது.

* மன நலம் பாதிக்கப்படுகின்றது.

* கண் பார்வை மங்குதல், பார்வை இழத்தல் கூட ஏற்படுகின்றது.

* ஈறுகள் பாதிப்பு அடைகின்றது.

* நுரையீரல் குணப்படுத்த முடியாத அளவு கூட பாதிப்பிற்கு உள்ளாகலாம்.

* புண்கள், காயங்கள் ஆற தாமதம் ஆகின்றது.

மிக அதிக காலம் புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பாதிப்பு காட்டும் அறிகுறிகளாக இருமல், ரத்தம் வெளி வருதல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் கரகரப்பான சப்தம், மூச்சு வாங்குவதில் சிரமம் போன்றவை இருக்கும் வாய்ப்புகள் அதிகம். பல நேரங்களில் ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் இல்லாமலே இருக்கலாம்.

புகை பிடிப்பது ஆரம்ப காலமோ அல்லது எப்பொழுதாக இருந்தாலும் உடனடியாக விட்டு விடுங்கள். இதன் மூலம் அநேக உடல்நல நன்மைகளைப் பெற முடியும்.

புகை பிடிப்பது என்பது மட்டுமல்ல பல பெரிய பாதிப்புகளும் அறிகுறிகள் காட்டத்தான் செய்கின்றன. நாம்தான் அவற்றினை சற்று அக்கறை கொண்டு கவனிக்க வேண்டும். காரணமின்றி உடல் எடை குறைந்து வந்தால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை அவசியம்.

* தொடர்ந்து சோர்வாக இருந்தால் இருதய நோய், ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா? என மருத்துவர் பரிசோதிப்பார்.

* அடிக்கடி தலைவலி என்றால் உயர் ரத்த அழுத்தம், மைக்ரேன், மூளையில் கட்டி, உடலில் நீர் வறட்சி ஆகியவை கவனிக்கப்பட வேண்டும்.

* மூச்சு வாங்குவது, நுரையீரல் பிரச்சினை, இருதய பாதிப்பு இவைகளை பரிசோதிக்க வேண்டும்.

* வெளிப் போக்கில் ரத்தம் இருப்பது

* நெஞ்சு வலி

* மரத்த கை, கால்கள்

* விடாத இருமல், குரல் மாற்றம்

* கட்டிகள், வீக்கம்

* சரும மாற்றம், மச்சத்தில் மாற்றம்

இவை அனைத்துமே உடனடி கவனிப்பு பெற வேண்டியவை.

* வைட்டமின் பி12- நாம் வைட்டமின்கள் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிகின்றோம். சில வைட்டமின்கள் நம் கவனத்தில் ஆழப் பதிந்து விட்டது என்றே சொல்லலாம். வைட்டமின் பி பிரிவுகள், ஏ, சி என அனைத்தினைப் பற்றியும் சிறிதளவாவது அறிந்து வைத்துள்ளோம். அவ்வகையில் வைட்டமின் பி12 பற்றி நம் கவனத்தில் மீண்டும் கூர்மை செய்து கொள்வோம்.

வைட்டமின் பி12 நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால் இது சற்று கூடுதலாகவே தேவைப்படுகின்றது. இது சேகரித்து வைக்கக் கூடிய பிரிவு அல்ல. சற்று கூடுதலாக இருப்பின் சிறுநீரில் வெளியேறும். அன்றாடம் இதனை சிலர் எடுத்துக் கொள்வார்கள். உடலில் இதன் அளவு கூடும்போது

* சரும பாதிப்பு, தலைவலி, சோர்வு, சதை பிடிப்பு, வயிற்று பிரட்டல், வாந்தி, முறையற்ற இருதய துடிப்பு போன்றவை இருக்கும். ஆனால் இந்த பாதிப்புகள் சற்று அரிதாக இருக்கலாம். சிலருக்கு இதன் அதிக அளவு பாதிப்பாக சிறுநீரக, கல்லீரல் பாதிப்புகள் இருக்கலாம்.

ஆனால் இதன் குறைாடு மனச்சோர்வு, தைராய்டு குறைபாடு, கவனம் செலுத்த இயலாமை, பலவீனம், மரத்து போகுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ரத்த சோகை, பிறவி குறைபாடு கூட ஏற்படலாம்.

* மீன், அசைவம், முட்டை, பால், சத்து மாத்திரை இவைகளின் மூலம் இதனை மருத்துவர் செய்வார். வாய், நாக்கில் புண், ஊசி குத்துவது போன்ற உணர்வு, பார்வை கோளாறுகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை மூலம் இதனை அறிய முற்பட வேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கும் என்பதால் கவனம் தேவை. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம் இவை இரண்டும் சீராய் இயங்க பி12 அவசியம்.

உடல் ஓயாது இயங்குகின்றது. குறைபாடுகளை கூறுகின்றது. அதனை அன்றாடம் சில நிமிடங்கள் கவனம் கொடுத்தாலே ஆரோக்கியம் நிலைத்து இருக்கும்.

Tags:    

Similar News