சிறப்புக் கட்டுரைகள்

உண்மையான ஆன்மிகம்!

Published On 2025-02-22 13:50 IST   |   Update On 2025-02-22 13:50:00 IST
  • மனிதர்களுக்காகத் தான் ஆன்மிகமே தவிர ஆன்மிகத்திற்காக மனிதர்கள் அல்ல.
  • உண்மையிலேயே சேலை தேவைப்படுகிற ஓர் ஏழைப் பெண்ணுக்கும் சேலை வாங்கித் தருவோம் என்ற எண்ணம் ஏன் நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை?

எது உண்மையான ஆன்மிகம் என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் விரதங்களும் நோன்புகளும் முக்கியம்தான். மனத்தைச் செம்மைப்படுத்த அவையெல்லாம் உதவக்கூடும்தான்.

என்றாலும் அவற்றை விட முக்கியமானது ஒன்று உண்டு. அதுதான் மனிதாபிமானம். சக மனிதர்மேல் அன்பு கொண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதே உண்மையான ஆன்மிகம்.

இந்த உண்மையை உயர்நிலை ஆன்மிகவாதிகளின் வாழ்வில் இடம் பெற்றிருக்கும் சம்பவங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

மகாசுவாமிகள் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காக நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்கோ தொலைதூரத்திலிருந்து காஞ்சிபுரம் வந்திருந்தார்கள்.

ஆனால் என்ன சிக்கல் என்றால், அவர்கள் பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த அந்த நாள், பரமாச்சாரியாரின் மவுன விரத நாள். பொதுவாக தாம் மவுன விரதம் இருக்கும் நாளில் அவர் கண்டிப்பாக யாருடனும் எதுவும் பேச மாட்டார்.

எனினும் மாணவர்கள் தரிசனத்திற்கு வந்திருக்கும் விவரத்தை அவருக்குத் தெரிவிக்காமல் இருப்பது சரியல்லவே? அவ்விவரம் அவரிடம் சொல்லப்பட்டது. வந்திருந்த மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கணம் தயக்கமே இல்லாமல், `அழைத்து வாருங்கள் அத்தனை மாணவர்களையும்!` எனக் கணீரென்று குரல் கொடுத்தார் பரமாச்சாரியார்!

தம்மை தரிசிக்க வந்த மாணவர்களிடம் அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியே அன்பாகப் பேசி அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

மடத்திலிருந்த சிப்பந்திகள் திகைத்தார்கள். யாருக்காகவும் துறக்காத மவுனத்தை அன்று அவர் அந்தக் குறிப்பிட்ட மாணவர்களுக்காகத் துறந்தது ஏன் எனக் கேட்டார்கள். பரமாச்சாரியார் கனிவோடு பதில் சொன்னார்:

`வந்திருந்த மாணவர்கள் அனைவரும் பார்வையற்றோர் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள். அவர்களுக்கு தரிசனம் என்பது கண்ணால் பார்ப்பதல்ல. காதால் கேட்பது. அவர்களிடம் பேசி அவர்களை சந்தோஷப்படுத்துவதை விட என் மவுன விரதம் முக்கியமல்ல!`

அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தைப் பரமாச்சாரியார் அன்று அவ்விதம் தெரிவித்தார். மனிதர்களுக்காகத் தான் ஆன்மிகமே தவிர ஆன்மிகத்திற்காக மனிதர்கள் அல்ல, மனிதநேயமே மிக உயர்ந்த ஆன்மிக நெறி என்பதைத் தம் நடவடிக்கையால் மிக அழகாக போதித்துவிட்டார் மகாசுவாமிகள்!

 

ராமலிங்க வள்ளலார் மாபெரும் சித்தர் ஆயிற்றே? பற்பல அற்புதங்களை நிகழ்த்திய மெய்ஞ்ஞானி அல்லவா அவர்?

அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஓர் அன்பர் குறுக்கிட்டு அவரிடம் ஓர் இரும்புக் கம்பியைக் கொடுத்தார். அதைத் தங்கமாக்கித் தருமாறு வேண்டினார்.

வள்ளலார் அவரைப் பார்த்துக் கலகலவென்று நகைத்தார். அவர் இரும்புக் கம்பியின் ஒரு முனையைப் பிடிக்க வள்ளலார் இன்னொரு முனையைப் பிடித்தார்.

அடுத்த கணம் நடந்தது அந்த அற்புதம்! வள்ளலார் தொட்ட இடத்திலிருந்து பாதிக் கம்பி உடனே தங்கமாக மாறி ஒளி வீசத் தொடங்கியது. ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் அந்த அன்பர்.

பின் அந்த இரும்புக் கம்பியை மாற்றிப் பிடித்தார் வள்ளலார். என்ன வியப்பு! உடன் மீதிப் பகுதியும் பொன்னாக மாறியது. இப்போது முழு இரும்புக் கம்பியுமே தங்கக் கம்பியாய் மாறியிருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சி தான் வந்தவரை திகைப்பில் ஆழ்த்தியது. இந்தத் தங்கத்தால் என்ன பயன், இந்தத் தங்கம் இறைநிலையை அடைய உதவுமா என்று சொல்லி, தங்கக் கம்பியை அருகேயிருந்த கிணற்றில் வீசிவிட்டுச் சலனமே இல்லாமல் தொடர்ந்து நடந்தார் வள்ளல் பெருமான்.

காமினி - காஞ்சனம் (காமம் - தங்கம்) இரண்டு ஆசைகளையும் துறந்துவிடுங்கள் எனத் தன் பேச்சுக்களில் தொடர்ந்து முழங்கி வந்தார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். பணத்தை ஒரு கையிலும் மண்ணை ஒரு கையிலும் வைத்துக்கொண்டு பணம் மண், மண் பணம் என்று மறுபடி மறுபடி சொல்லி இரண்டையுமே கங்கையில் தூக்கிப் போட்டவர் அல்லவா பொருட்பற்று அறவே இல்லாதிருந்த பரமஹம்சர்!

ராமலிங்க வள்ளலாரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் போதித்த தங்கமான கருத்தை நாம் பின்பற்றுகிறோமா? தங்கத்தின் மேலும் பொருளின் மேலும் உள்ள ஆசையைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு அத்தகைய ஆசைகளிலிருந்து மீள்வதுதான் ஆன்மிக முன்னேற்றத்துக்கான வழி என்பதைப் புரிந்துகொள்கிறோமா?

சுமங்கலிப் பிரார்த்தனை என்றொரு சடங்கு பல குடும்பங்களில் நடக்கிறது. அப்போது அத்தைக்கும் நாத்தனாருக்கும் இவர்களைப் போன்ற உறவினர்களுக்கும் சேலை வாங்கித் தரும் சம்பிரதாயம் உள்ளது. அந்த வழக்கம் நல்லதுதான். அது குடும்பத்தின் நல்லுறவுக்குப் பயன்படும். எனவே அதைச் செய்ய வேண்டியதுதான். ஆனால் அன்று உண்மையிலேயே சேலை தேவைப்படுகிற ஓர் ஏழைப் பெண்ணுக்கும் சேலை வாங்கித் தருவோம் என்ற எண்ணம் ஏன் நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை?

தேவைப்படுகிறவர்களுக்குச் சேலை கொடுங்கள் என்பதுதானே திரெளபதிக்குச் சேலை கொடுத்த கண்ணன் போதிக்கும் உபதேசம்?

மானங்காக்கப் புடவை கொடுத்த கடவுளை வழிபடும் தேசத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.

வழிபடுவது ஒன்று, வாழ்க்கை நெறி இன்னொன்றா? அப்படியானால் அந்த வழிபாட்டின் பயன்தான் என்ன?

மதுரையில் ஓர் ஏழைத் தமிழ்ப் பெண் கிழிந்த ஒற்றைச் சேலையோடு உடலை மறைக்கப்பட்ட சிரமத்தைப் பார்த்தார் மகாத்மா காந்தி. எல்லா இந்தியர்களுக்கும் ஆடை கிடைக்கும்வரை நான் மேலாடை தரிக்கப் போவதில்லை என முடிவெடுத்தார்.

அவருடையது ஆன்மிகமா? இல்லை நம்முடையது ஆன்மிகமா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

ராவண வதம் முடிந்து புஷ்பக விமானத்தில் அயோத்திக்குப் போகும் தருணத்தில், பரத்வாஜ மகரிஷியின் கோரிக்கையை ஏற்று அவர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தங்கினான் ராமபிரான்.

ராமனுக்கும் ராமனோடு வந்துள்ள அத்தனை பேருக்கும் விருந்தளிப்பதாகச் சொன்னார் பரத்வாஜர். அவர் குரலில் சற்றே கர்வத்தின் சாயல்!

அதை உணர்ந்த ராமன் அவர்மேல் பரிவு கொண்டான். செருக்கில்லாது வாழ்வதே உண்மையான ஆன்மிக வாழ்வு என்பதை அவருக்கு உணர்த்த விரும்பினான்.

தன் தவச் சக்தியால் அனைவருக்கும் உணவு அளிக்க வாழை இலைகளை பரத்வாஜர் உண்டாக்கினார். எல்லோருக்கும் வாழை இலைகள் வந்து சேர்ந்தன. ஆனால் அனுமனுக்கு வாழை இலை வந்து சேரவில்லை.

எத்தனையோ முயன்றும் ஆஞ்சநேயனுக்கான வாழையிலையை அவரால் கொண்டுவர இயலவில்லை. கர்வத்தின் காரணமாக அவர் தவச்சக்தி ஓர் எல்லையில் நின்று விட்டது!

இது ராமன் தனக்களித்த படிப்பினை என உணர்ந்துகொண்ட முனிவர், ராமனைக் கையெடுத்துக் கும்பிட்டு நிலைமையைச் சீராக்க வேண்டினார்.

ராமன் தனக்கான வாழையிலையில், அனுமனைத் தன் எதிரே அமரச் சொன்னான். வானர இனத்து அனுமனோடு ஒரே இலையில் விருந்துண்டான் ராமன்.

அப்போது ராமன் மோதிர விரலால் வாழையிலை நடுவே கிழித்த கோடுதான் பின்னால் வாழையிலைக் காம்பாயிற்று என்கிறது அபூர்வ ராமாயணக் கதை.

தனக்கு உதவிய அணிலின் முதுகில் தடவி அணிலுக்கு மூன்று கோடுகளை அளித்துப் பெருமை சேர்த்த ராமன் இப்போது வாழையிலைக்கு நடுக்காம்பு கொடுத்து அனுமனுக்கும் பெருமை சேர்த்து விட்டான்.

தன் பக்தனான விலங்கினத்தைச் சேர்ந்த அனுமனோடு ஒரே இலையில் சாப்பிடுவதில் ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த ராமனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வேடன் குகனையும் சகோதரனாக்கிக் கொண்ட மனம் அல்லவா ராமன் மனம்?

நாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனைப் போற்றுவோம். வேடன் கண்ணப்பனைக் கொண்டாடுவோம். வள்ளிக் குறத்தியை வழிபடுவோம். ஆனால் தேநீர்க் கடைகளில் தனி அலுமினிய தம்ளர் கலாசாரத்தை மட்டும் விட்டுவிட மாட்டோம் என்றால் அது எப்படிச் சரியான ஆன்மீகமாகும்?

 

திருப்பூர் கிருஷ்ணன்

பெண் தெய்வமான கலைவாணியைக் கல்விக் கடவுளாய்த் துதிப்போம். ஆனால் பெண்களுக்குக் கல்வி உரிமையை மறுப்போம் என்றால் அது எப்படிச் சரியாகும்?

மகாகவி பாரதியாரே சகோதரி நிவேதிதையின் அறிவுரைக்குப் பின் தானே மனம் மாறினார்? `கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும் காணீர்!` என்று அவர் பாடியது நிவேதிதையைச் சந்தித்த பின் தானே?

தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமுமே ஆன்மிகத்தின் அடிப்படை என்ற எண்ணம் மக்களிடையே உறுதிப்பட வேண்டியது அவசியம்.

தான் வாங்குகிற லஞ்சப் பணத்தில் ஒரு பங்கைக் கோயில் உண்டியலில் போட்டுக் குற்ற உணர்ச்சிக்கு வடிகால் தேடுவது ஆன்மிகம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கலாகாது என்று உணர்த்தாத ஆன்மிகம், உண்மையான ஆன்மிகமாக எப்படி இருக்க முடியும்?

தனிமனித, சமூக ஒழுக்கங்களை வலியுறுத்துகிற, மனிதாபிமானத்தைக் கொண்டாடுகிற, தீண்டாமையை எதிர்க்கிற, அனைவரையும் சமம் என்று கருதுகிற ஆன்மிகமே இன்றைய தேவை.

அத்தகைய ஆன்மிகம் நாட்டில் என்றைக்குத் தழைக்கும் என எல்லாத் தெய்வங்களும் ஆலயங்களில் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வங்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டியது நம் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தால் உண்மையான ஆன்மிகம் தழைக்கும்.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News