- சிறிது நேரத்தில் காப்பியுடன் வந்தா சீதா.
- தங்கராசுவின் வீட்டில் அவனது மனைவி லட்சுமி கேட்டாள்.
"தங்கராசு அண்ணன் நாலு தடவ போன் பண்ணிட்டாரு. நீங்க போனை சார்ஜ்ல போட்டுட்டு அப்படி எங்க தான் போயிருந்தீங்க?" கேட்டாள் சீதா.
"அப்படியே காலாறப் போயிருந்தேன். இப்ப என்ன வேணுமா அவனுக்கு? என்று எரிச்சலோடு சோபாவில் அமர்ந்தான் தண்டாயுதபாணி.
"ஏன் அவர் எதுக்கு போன் பண்ணுவாருன்னு உங்களுக்குத் தெரியாதா?" சீதாவும் எகிறினாள்.
"தெரியும், சும்மா பணம் பணம்னு கேட்டா எங்கப் போவேன்? மனுசன கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விடமாட்டேங்கறான். போய் சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா போ" என்று விரட்டினான்.
"ஆமா இப்ப டென்ஷனாகி என்ன பிரயோசனம்? தங்கராசு அண்ணாகிட்ட பணம் வாங்கும்போது இனிச்சுதாக்கும்"
"இங்கப் பாரு சீதா, நானே டென்ஷனா இருக்கேன். இப்ப அந்தக் கடங்காரனப் பத்திப் பேசாத போயிடு"
"என்னமோ பண்ணித் தொலைங்க இனிமே எங்கப் போனாலும் அந்தப் பாழாப்போன செல்போனையும் கூடவே எடுத்துக்கிட்டுப் போயிடுங்க சொல்லிட்டேன். அது இங்க இருக்கவும் தானே என்ன கத்துது, எதுக்கு கத்துதுன்னு பார்க்க வேண்டி இருக்கு?" என்று அவனை மேலும் எரிச்சலூட்டினாள்.
"ஐயோ சாமி, போய் காபி போட்டு எடுத்துட்டு வரியா?" என்று பலமாகக் கத்தினான்.
சிறிது நேரத்தில் காப்பியுடன் வந்தா சீதா.
சோபாவில் சாய்ந்து கண்களை மூடி இருந்தவனைத் தட்டி எழுப்பி காபியை நீட்டிக்கொண்டே, "இங்க பாருங்க இனிமே அந்த தங்கராசுக் கிட்ட பணம் எதுவும் நீங்க வாங்கக்கூடாது. ஒழுங்கா வாங்கிய அம்பதாயிரத்தை திருப்பிக் கொடுத்துடுங்க" என்றாள்.
செந்தில்குமார் அமிர்தலிங்கம்
காபியை வாங்கியவன், "என்னடி புரியாம பேசிகிட்டு இருக்க? நான் என்ன தண்ணி அடிக்கவா அவங்கிட்ட கடன் வாங்கினேன்? நம்ம பொண்ணுங்கள ஸ்கூல்ல சேக்கத்தானே வாங்குனேன்? சரி வியாபாரம் நல்லாப் போகுதே எப்படியும் கொடுத்திடலாம்னு வாங்கினேன். ஆனா வியாபாரம் டல்லடிக்குது. அதான் தர முடியல. நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்? "என்றான்.
"அது சரி நல்லா இருக்குது நியாயம். அவரென்ன அவர் பணத்தையாக் கொடுத்தார்? பாவம், அவரே கடன் பட்டு கஷ்டப்பட்டுகிட்டு கிடக்குறாரு. நீங்க அவர்கிட்ட போய் கால்ல விழுந்தா? நண்பனாச்சே இப்படி கதறுறானேன்னு இரக்கப்பட்டு வட்டிக்குக் கடன் வாங்கிக் கொடுத்தாரு. இப்ப நாம கட்ட வேண்டிய வட்டியையும் அவரே கட்டிக்கிட்டு இருக்காரு. பாவமில்ல?"
"என்னடி? திடீர்னு அவனுக்கு வக்காலத்து வாங்குற. நாம ஏற்கனவே கந்துவட்டிகாரன் ஒருத்தங்கிட்ட பதினஞ்சாயிரம் வாங்கினோமே? அவன் நேத்து என் சட்டையை பிடிச்சி கேட்காத குறையா கேட்டுட்டான். "
நான் அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியாம இருக்கேன். நீ என்னமோ அந்த தங்கராசுப் பயலப்பத்தி பேசிகிட்டு இருக்க? "
"அப்ப அந்த தங்கராசுக்கு என்னதான் பண்ண போறீங்க?"
"இரு நான் அவனுக்குப் போன் போட்டு உன்கிட்ட தரேன். நீயே பேசு ஒரு பதினஞ்சாயிரம் யாருகிட்டயாச்சும் வாங்கி தரச்சொல்லு. அவன்கிட்ட வாங்கித் தான் கந்துவட்டிக்காரன் கடனை அடைக்கலாம்னு இருக்கேன்."
"ஐயோ என்னால முடியாது. தங்கராசு நான் கேட்டதும் கொடுத்துடுவாரா என்ன? அவரே, 'வட்டி கட்ட முடியல சீக்கிரம் நான் வாங்கிக் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்க' ன்னு கேட்டுகிட்டு இருக்காரு ஆரேழு மாசமா."
"அதான்டீ நானும் சொல்றேன். அந்த தங்கராச விட்டா நமக்கு வேற இளிச்சாவாயன் கிடைக்க மாட்டான். நீ எப்படி அவன் கிட்ட பேசுறனா? 'ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு. அதுக்கு சாமான்கள் ரெடி பண்ணனும்னா இப்ப அவசரமா ஒரு பதினஞ்சாயிரம் தேவை இருக்கு. அதை கொடுத்தீங்கன்னா பத்தே நாள்ல உங்கக்கிட்ட வாங்கின எல்லா பணத்தையும் வட்டியோட திருப்பி கொடுத்துவிடுவோம். என்னய நம்பி கொடுங்க. இந்த ஆர்டர் மட்டும் இல்லாம போச்சுன்னா அப்புறம் உங்களுக்கு எங்களால பணமே கொடுக்க முடியாம போயிடும்' அப்படின்னு பேசுடி. அவன் இளகுன மனசுக்காரன் பட்டுன்னு விழுந்துடுவான்.
உடனே யாரு கைல கால்லயாச்சும் விழுந்து பணத்த ரெடி பண்ணி நம்ம அக்கவுண்ட்ல போட்டுடுவான். அப்புறம் நம்ம கிட்ட வழக்கம் போல கெஞ்சிக்கிட்டே கிடப்பான்" என்று சிரித்தான் தண்டாயுதபாணி.
"என்னால முடியாது" என்ற அவளை மல்லுக்கட்டி சம்மதிக்க வைத்தான். அவளும் தங்கராசுவிடம் அதேபோல் பேசினாள். தங்கராசும் மனம் இளகினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் தண்டாயுதபாணியின் வங்கிக் கணக்கில் பதினஞ்சாயிரம் ரூபாய் வந்து விழுந்தது.
சில நாட்கள் கழிந்து இருந்தன. தங்கராசுவின் வீட்டில் அவனது மனைவி லட்சுமி கேட்டாள்.
"என்னங்க அந்த தண்டாயுதபாணி பணம் திருப்பி கொடுத்துட்டாரா? இல்லையா?" கொஞ்சம் கோபமாகவேக் கேட்டாள்.
நல்லவேளை இவளுக்கு அம்பதாயிரம் நாம கொடுத்தது தான் தெரியும். அதுக்கப்புறம் பதினஞ்சாயிரம் கொடுத்தது தெரியாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தவர் லட்சுமியிடம் திரும்பி,
"எப்பக் கேட்டாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லிட்டு இருக்காரு. என்னாலயும் அவருகிட்ட அலைய முடியல லட்சுமி. என்ன பண்றது பாவம் ரெண்டு பொம்பள புள்ளைய வெச்சுகிட்டு கஷ்டப்படுறாரு."
"நாம என்ன மாடமாளிகையிலயா வாழுறோம்?. நம்ம கஷ்டத்தை யாருகிட்டப் போய் அழறது? "
"சரி விடு லட்சுமி, அவருக்கு ஒரு நல்ல வழி பொறந்து கைல பணம் புரண்டுச்சின்னா நமக்குத் தர வேண்டியத தந்துடுவாரு" என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு வெளியில் கிளம்பினார் தங்கராசு.
"எங்க கிளம்பிட்டீங்க?"
"கடைத்தெரு வரைக்கும் போயிட்டு வரேன்" என்று தனது இருசக்கர வாகனத்தை கிளப்பினார். எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் வந்த லாரி மோதியதில் தங்கராசுவின் தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரைவிட்டார்.
விபரம் அறிந்த தண்டாயுதபாணிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கடனை திருப்பிக் கேட்க ஆளில்லை என்று உள்ளூர மகிழ்ச்சி உண்டானது.
இறப்புக்குப் போய் அழுது புரண்டுவிட்டு வந்து வீட்டில் நிம்மதியாகத் தலைமுழுகினான்.
ஒரு மாதம் கழிந்திருந்தது. சீதா ஆரம்பித்தாள்.
"என்னங்க பாவம் அவரு. அவர் கொடுத்த பணத்தை அவரோட மனைவி கிட்டத் திருப்பிக் கொடுத்துடலாம்"
"ஏன்டீ தொணதொணங்குற? அவனோட பொண்டாட்டிக்கு நாம பணம் வாங்குன விஷயமேத் தெரியாது" என்று வில்லத்தனமாக சிரித்தான்.
"அவர் எப்படியும் சொல்லி இருப்பாருங்க. வேணும்னா முழுசா கொடுக்க வேணாம். சும்மா ஒரு பத்தாயிரம் கொண்டு போய் கொடுத்து கணக்கு நேராயிட்டதுன்னு சொல்லிட்டு வந்துருவோம். வாங்க நானும் வரேன்"
"என்ன சீதா நீ?" என்று யோசித்தவன், "சரி பத்தாயிரம் தான் தருவேன். அதுக்கு மேல ஒரு பைசா தரமாட்டேன்" என்று கிளம்பினான்.
லட்சுமி வீட்டில் இருந்தாள்.
தங்கராசுவின் புகைப்படத்திற்கு மாலையும், பொட்டும் வைக்கப்பட்டிருந்தது.
"அம்மாடி லட்சுமி, உன் புருஷன் கிட்ட நான் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன்மா. அத வட்டியோட திருப்பிக் கொடுத்திடலாம்னு வந்தேன்" என்று பவ்யாமாகத் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்து நீட்டினான்.
அதை வாங்காமல் தங்கராசுவின் புகைப்படத்திற்கு கீழே மேசையில் இருந்த ஒரு டைரியை எடுத்துப் புரட்டினாள் லட்சுமி.
அதைப் பார்த்த இவர்கள், "எல்லாத்தையும் தெளிவா எழுதி வச்சிருப்பான் போலிருக்கே" என்று அதிர்ச்சியடைந்தார்கள்.
புரட்டிய பக்கத்தோடு வந்து டைரியை தண்டாயுதபாணியிடம் நீட்டினாள் லட்சுமி.
அதில் தங்கராசு எழுதியிருந்தவை,
"தண்டாயுதபாணியிடம் பணத்தை திருப்பி வாங்க வேண்டாம். நம்மிடம் இருக்கும் நகைகளை விற்று நாம் வாங்கிய கடன்களை அடைத்துவிடலாம். அவன் குழந்தைகளுக்காகத்தானே வாங்கினான்.
நம் பிள்ளைகளுக்கு செலவு செய்ய மாட்டோமா? அவர்களும் நம் பிள்ளைகள் போலத்தானே? கணக்கு நேர்'' என்று எழுதியிருந்தார்.
வாசித்த இருவருக்கும் தலை சுற்றியது.