- எல்லாவற்றையும் துறந்து துறவு வாழ்க்கையில் கணவனும் மனைவியும் அடியெடுத்து வைத்தனர்.
- உணவை மருந்தாக்கிக் கொண்டால், மருந்தைத் துறந்து மகிழ்ச்சியாய் வாழலாம்.
இல்லறம் மற்றும் துறவறத்தின் மேன்மைகளை அறிந்து கொள்வதற்காக ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.
எது நேர்மையான முறையில் திறமாகக் கையாளப்படுகிறதோ அதுவே அறம் என்று அழைக்கப்படும். மனத்தளவில் தூய்மையாக இருப்பது தொடங்கிப், பல்வேறு வாழ்வியல் ஒழுகலாறுகளில் நெறிபிறழாமல் வாழ்வது வரை அனைத்துமே அறம் சார்ந்தவைதாம். எழுத்தில் ஒரு நேர்மை இருந்தால் அது 'எழுத்து அறம்'; பேச்சில் ஒரு செம்மை இருந்தால் அது 'பேச்சு அறம்'; செயலில் ஒரு உண்மைத்துவம் இருந்தால் அது 'செயல் அறம்'.. இப்படி நேர்த்தியின் உச்சம் தொட்ட எல்லாச் செயல்களுமே அறம் சார்ந்தவையாகப் போற்றப்படும். நமது தமிழ் மரபில், ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பமாக வாழும் இல்வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையைத் துறந்து தனியராய் வாழும் துறவு வாழ்க்கையையும் இரண்டையுமே அறம் சார்ந்த நிலையில் வைத்து எண்ணுகிறோம். இல்லறம், துறவறம் ஆகிய எதிரெதிர் வாழ்முறை இரண்டிற்கும் பொதுமுறையாக அறம் வலியுறுத்தப்படுகிறது.
உலகில் எல்லாவகை இன்ப துன்பங்களுக்கும் ஆட்பட்டு, கணவன், மனைவி, மக்கள், சொத்து, சுகம், செல்வம், மகிழ்ச்சி என ஆண்டு அனுபவித்து, வீட்டோடு வாழ்ந்து, சமூகத்தோடு இணைந்து, வாழ்வாங்கு வாழ்வது இல்லறம் ஆகும். வாய்த்திருக்கும் உலகியல் இன்பங்கள் அத்தனையையும் துறந்தும் உலக வாழ்க்கையை வெறுத்தும் காடுகள் வனங்களுக்கு ஏகி, ஏகாந்தமாய்த் தனித்திருந்து, வாழ்க்கையின் உண்மை அர்த்தம் தேடித் துறவு வாழ்க்கை வாழ்வது துறவறம் ஆகும்.
இல்லற வாழ்க்கை எனப்படும் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்கிற வாழ்க்கை பெரும்பாலும் எல்லா உயிரினங்களுக்கும் இயல்பாய் உடலியல்ரீதியாய் அமைந்து காணப்படுவது ஆகும். இரை உண்பதிலும் இனவிருத்தி செய்வதிலும் அவை இணைந்தே இயங்குகின்றன என்றாலும் ஆறாவது அறிவுத்துணையோடு, குடும்பமாய், குடியாய், சமூகமாய், வாழையடி வாழையாய், தலைமுறை தலைமுறையாய் இயைந்து வாழும் வாழ்க்கைமுறை மனித இனத்திற்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. மனித இனம் மட்டுமே, அன்பு மற்றும் அறத்தின் வழிநின்று வாழ்க்கை நடத்துவதே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாக எண்ணிச் செயல்பட்டு வருகிறது. அதே போலத் துறவு வாழ்க்கை என்பது மனித இனத்திற்கேயுரிய பிரத்யேக வாழ்க்கை என்றாலும், அது மனித இனம் தவிர்ந்த வேறு எந்த உயிரினத்திற்கும் வாய்ப்பதில்லை; துறவில் தனித்து வாழ்வதும் அவற்றிற்குச் சாத்தியமுமில்லை.
ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கை நடத்தும்போதே, சில துறவற நெறிகளைக் கையாண்டு வாழ்வதால், இல்லறத்தார்க்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடுவதில்லை; வயோதிகப் பருவம் எட்டியபிறகோ அல்லது எட்டுகிற தறுவாயிலோ சில தம்பதியர் துறவியர்போல ஆகிக்கொண்டு குடும்பத்தில் சேர்ந்தேவாழும் நிலைகளையும் காணலாம். அனால், துறவு வாழ்க்கை என்பது தூய தவ வாழ்க்கை மற்றும் தொண்டு வாழ்க்கை என்று ஆனபிறகு அங்கு, பந்தபாசம் பார்க்கிற, உடலியல் இச்சைக்கு ஆட்படுகிற இல்லறத் தன்மைகளுக்குத் துளியளவும் இடம் கிடையாது. இல்லறத்தில் அழுந்தத் தோய்ந்தவர்கள் ஒருநாள் திடீரெனத் துறவியாகித் துறவறம் மேற்கொள்ளலாம்; ஆனால் துறவறம் மேற்கொண்டு வாழ்பவர்கள், இல்லறத்தில் ஈடுபடப் போகிறோமென்று திடீரென்று கிளம்பினால் சமூகம் அவர்களைப் போற்றிப் பாராட்டாது; அவர்களுக்கு அவச்சொல்லே மிஞ்சும். சுருங்கச் சொன்னால், இல்லறத்தில் துறவறம் சாத்தியம்!. துறவறத்தில் இல்லறம் கூடவே கூடாது.
ஒரு வைர வியாபாரி; இரவுபகல் பாராது உழைத்துப் பெருமளவில் சொத்துச் சேர்த்தார். திருமணமும் செய்துகொண்டார். பல்லாண்டுகாலம் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் இரவில் கணவனும் மனைவியும் அமர்ந்து தங்களது வாழ்க்கையைப் பற்றி ஆலோசனை செய்தனர். இவ்வளவுநாள் படாத பாடுபட்டுச் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்கக் குழந்தை வாரிசு இல்லை; இவ்வளவு செல்வம் இருந்து என்ன பயன்?. கணவன் மனைவியைப் பார்த்துச் சொன்னார், " எனக்கு இல்லற வாழ்க்கை அலுத்துவிட்டது; காவியைக் கட்டிக்கொண்டு சாமியாராகப் போய்விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்" என்றார். " அப்படியானால் இவ்வளவு நாளும் அயராது பாடுபட்டு நீங்கள் சேர்த்த செல்வங்களையெல்லாம் என்ன பன்னுவீர்கள்?" மனைவி கேட்டார்.
வைர வியாபாரி சொன்னார், " இதோ பீரோவில் இருக்கிற நகை, பணம், சொத்துப்பத்திரங்கள் அத்தனையையும் எடுத்து உனக்கு முன்னே வைக்கிறேன்!. உனக்கு என்னென்ன வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்!. மீதமிருந்தால் தர்மத்திற்கு எழுதி வைத்து விடுகிறேன்!. அப்படியே நான் சன்னியாசம் வாங்கிக்கொண்டு கிளம்பி விடுகிறேன்! நீ வசதியாக வாழ்!" என்று. " நீங்கள் துறவியாகக் கிளம்பியபின் எனக்குமட்டும் எதற்கு சொகுசு வாழ்க்கை?; நானும் உங்களுடனேயே துறவியாக வந்து விடுகிறேன்; சொத்துகள் அனைத்தையும் தர்மத்திற்கே எழுதி விடுங்கள்; இதோ இந்தத் தாலி உட்பட அனைத்தையும் துறந்து விடுகிறேன்!" என்று கூறித், தாலியைக் கழற்றப்போன மனைவியைத் தடுத்து நிறுத்தி, " அது நமக்குக் கல்யாணம் ஆனதன் அடையாளமாய் அப்படியே கழுத்தில் இருக்கட்டும்!. இனி நாம் எங்கு சென்றாலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய்ச் சேர்ந்தே செல்வோம் துறவு மனப்பான்மை மாறாமல்!" என்றார் வைர வியாபாரி.
சுந்தர ஆவுடையப்பன்
எல்லாவற்றையும் துறந்து துறவு வாழ்க்கையில் கணவனும் மனைவியும் அடியெடுத்து வைத்தனர். ஊர் ஊராகக், கோயில் கோயிலாக நடந்தனர்; கிடைத்த உணவை உண்டனர்; வாய்த்த இடத்தில் உறங்கினர். இன்பமும் துன்பமும் அவர்களுக்கு ஒன்றுபோலவே தோன்றத் தொடங்கின. ஊர்ப்புற வாழ்க்கையை விட்டு ஒதுங்கி, இனிக் காடுகளுக்குள் சென்று வாழலாம் என்று முடிவெடுத்து மலைப் பகுதியை நோக்கி நடந்தனர். அப்போதும்கூட கணவன், மனைவியிடம், "இனிமேல் தான் காட்டில் துறவுவாழ்க்கை கடினமானதாக இருக்கும்; இப்போதும்கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை; நீ ஊருக்குள் திரும்பிப் போய்விடு; போய் உன் வாழ்க்கையை நீ மகிழ்ச்சியாக வாழ்ந்துகொள்!" என்று ஆலோசனை கூறினார். அதற்கு மனைவி, "நான் துறவுவாழ்க்கை வாழ்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். காட்டுக்குள் செல்லுங்கள்; நான் பின்தொடர்ந்து வருகிறேன்" என்றார்.
காட்டுப்பகுதிக்குள் நுழைந்த கணவன், தனது காலடியில் ஒரு விலைமதிக்க முடியாத மணி கிடப்பதைப் பார்த்துவிட்டார். கீழே குனிந்து மணியை எடுத்தால், அதை மனைவி பார்த்துவிட்டால், உலகியல் ஆசை அவருக்கு மீண்டும் வந்துவிடுமே! என்று அஞ்சி, அந்த மணியின்மீது ஒரு காலை வைத்து மிதித்து நின்றுகொண்டு மனைவியைக் கடந்து போகச் சொன்னார். " நீங்கள் ஏன் அப்படி நிற்கிறீர்கள்?" என்று மனைவி கேட்டுவிட்டார். " அது ஒன்றுமில்லை!. விலைமதிக்க முடியாத மணி ஒன்று கீழே கிடக்கிறது; அது உன் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மறைத்து மிதித்துக்கொண்டு நிற்கிறேன்!" என்றார் கணவர். " துறவு மேற்கொண்டு இவ்வளவு காலத்திற்குப் பின்னுமா உங்களுக்கு மணிக்கும் மண்ணாங்கட்டிக்கும் வேறுபாடு தெரிகிறது? எனக்கு எல்லாமே மண்ணாங்கட்டிகளாகத்தான் தெரிகிறது!" என்று கூறிக்கொண்டே கடந்து சென்றார் மனைவி. ஆம்! பொருள்களைத் துறப்பதுமட்டுமல்ல: பொருள்களின் பெயர்களையும் துறப்பதே துறவு.
துன்பங்களே மனிதர்களைத் துறவிகள் ஆக்குகின்றன; மனித வாழ்க்கையில் நேரும் துன்பங்களையும் துயரங்களையும் கண்ட சித்தார்த்தன் புத்தனானதும் இப்படித்தான். ஆயினும் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இன்பநிலை எய்துவதற்கு எல்லா மனிதர்க்கும் எளிய வழி துறவியாகப் போவதுதான் என்கிற முடிவுக்கும் வந்து விடக்கூடாது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் துறவுநிலையும் ஆசிரமங்களும் பெருநிறுவனத்தன்மையில் இயங்கத் தொடங்கியிருக்கும் சூழலில், முற்றும் துறந்து துறவுவாழ்க்கை வாழ்வதைப் பழங்கால நிலைகளோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. அன்றைய துறவுநிலையில் மனித வாடையற்ற வனாந்தரங்களில் தவவாழ்க்கை வாழ்ந்து மறைந்துபோன தவமுனிவர்களும் உண்டு; ஆன்மீகத் திருத்தலங்களில் மக்களோடு மக்களாய், வினாக்களோடு தவம்புரிந்து வாழ்வியல் விடைகளைத் தெரிந்துகொண்டு, மக்களிடம் பகிர்ந்து கொண்ட ரமண மகரிஷிகளும் உண்டு. ஆனால் இல்லற வாழ்வில் ஈடுபாட்டோடு இணைந்திருக்கும் இன்றைய மனிதனுக்குத் துறவு வாழ்வின் தத்துவங்களும் நலம் கூட்டுவனவாகவே மாறியிருக்கின்றன.
அறிவியல் வேறு! ஆன்மீகம் வேறு! வாழ்வியல் வேறு! தத்துவம் வேறு! என்று தனித்திருந்த காலத்தையெல்லாம் கடந்து. இன்று எவரும் எதைப்பற்றியும் பேசக்கூடிய இணைய உலகில் இணைந்திருக்கிறோம். இமயமலையின் தவக்காட்சிகள், இப்போது அதே நேரத்தில், நேரலையில் தனுஷ்கோடியில் உள்ளவர் கண்களுக்கு தத்ரூபமாக விரிகின்றன. உணர்வு நிலையில் மட்டுமே இடங்கள் வெவ்வேறு என்கிற புரிதல் புலப்படுகிறது.
பொருள்களோடு வாழ்ந்தாலும் அந்தப் பொருள்களின்மீது பற்றுகள் இன்றி வாழ்வதே இல்லறத்தில் துறவு ஆகும். நோயற்ற வாழ்வு வாழ விரும்புவோர் உணவு முதற்கொண்டு எவ்வெவற்றில் துறவு மனப்பான்மை கைக்கொள்ள வேண்டும் எனபதைப் புரிந்துகொள்ள வேண்டும். உணவை மருந்தாக்கிக் கொண்டால், மருந்தைத் துறந்து மகிழ்ச்சியாய் வாழலாம். ஒத்துக்கொள்கிற உணவை மறுத்து மறுத்துச் சாப்பிட்டால் இல்லற வாழ்விலும் தவசியைப்போல தூய உடம்போடு வாழலாம்.
திருவள்ளுவர் துறவு என்கிற அதிகாரத்தைத் துறவிகளுக்காக மட்டுமே படைக்கவில்லை; பெரும்பான்மையும் இல்லறத்தார்க்காகவே பல நெறிகளை வகுத்துக்காட்டுகிறார். பொருள்களினால்தான் நமக்குத் துன்பங்கள் உண்டாகின்றன; அவை இருந்தாலும் துன்பம்! காக்க வேண்டுமே என்று!; இல்லாவிட்டாலும் துன்பம்! சேர்க்க வேண்டுமே என்று!. பொருள்களோடு வாழ்ந்தாலும் அவற்றின்மீது பற்று வைக்காமல் அவற்றைப் பயன்படுத்திமட்டும் வாழக் கற்றுக்கொண்டால் எப்போதும் துன்பமில்லை.
நம்மிடம் இல்லாத பொருள்களை வெறுப்பது என்பது 'சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்' என்கிற கதையைப் போன்றதுதான். இருக்கும்போதே அவற்றோடு துறவு மனப்பான்மையோடு இருப்பது; அதுவே உண்மைத் துறவு. இதைத்தான் வள்ளுவர் 'வேண்டின் உண்டாகத் துறக்க!' என்கிறார். எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவதல்ல இல்லறம்!. தேவையானவற்றிற்காக ஆசைப்படுவது! அவற்றை அடைவதற்கு நியாயமான வழிகளில் கடமையாற்றுவது; பெற்ற பொருளையும் செல்வத்தையும் தமக்கென ஆசைப்பட்டு வைத்துக் கொள்ளாமல் தேவைப்படும் மனிதர்க்கு ஒரு துறவியைப்போலப் பகிர்ந்து கொடுப்பதுமாகும்.
பற்றில்லாத வாழ்க்கை அனைவரையும் சமமாகப் பார்க்கும் பரோபகாரப் பார்வை ஆகும்; இன்றைய ஒவ்வொரு இல்லறத்தார்க்கும் தேவைப்படும் துறவறப்பார்வையும் அதுவே ஆகும்.
தொடர்புக்கு 9443190098