சிறப்புக் கட்டுரைகள்

இனி நான் தான் நிஜ ஹீரோ!

Published On 2025-02-17 23:39 IST   |   Update On 2025-02-17 23:39:00 IST
  • திருப்பதியில் திருமணம் முடிந்து சென்னை திரும்பினோம்.
  • அம்மா வீட்டில் எந்த பொறுப்பையும் நான் ஏற்றது கிடையாது.

அந்த இனிய நாளும் வந்தது.

ஆம். ஜூலை 12, 2009 திருப்பதி திருமலையில் வைத்து திருமணம்.

உறவினர்கள், விருந்தினர்கள், நண்பர்கள் என்று திரண்டு இருந்தவர்களால் மண்டபம் களைகட்டியிருந்தது. பட்டு சேலை கட்டி மணப்பெண் அலங்காரத்தில் நான்.

அந்த காட்சியும், அந்த அலங்காரமும் எனக்கு புதுமையாக தெரியவில்லை. காரணம், இதேபோல் எத்தனை மணமேடையை பார்த்திருக்கிறேன்? எத்தனை மணமேடையில் மணமகளாக இருந்திருக்கிறேன்? அதே போல்தான் இதுவும். எனக்கு ஷூட்டிங் போன்ற உணர்வு தான் வந்தது.

மணமகள் அறையில் இருந்து வெளியேறி அரங்கத்துக்குள் மேடையை நோக்கி நடந்து சென்ற போது வேறு எந்த உணர்வும் வரவில்லை.

எல்லோரையும் பார்த்து ஹாய்... ஹாய்... என்று கை காட்டியபடியே சென்றேன். பறக்கும் முத்தங்களை கூட வாரி விட்டேன்.

மேடையில் ஏறியதும் தான் ஒரு விதமான உணர்வு என்னை சூழ்ந்து ஆட்டி படைத்தது. மேடையில் புரோகிதர், கழுத்தில் மாலையுடன் வித்யாசாகர், ஓம குண்டம், அங்கு நின்று கொண்டிருந்த இரு வீட்டு உறவினர்களின் கூட்டம் ஆகியவற்றை பார்த்ததும் தான் அய்யய்யோ இது ஒரிஜினல் திருமணம்.

நமக்குத்தான் இன்று திருமணம்? ஷூட்டிங்போல் நினைத்து விட்டோமே என்று மனதுக்குள் நினைத்ததும் வெட்கம் வந்து என்னை சூழ்ந்தது. மணமகன் வீட்டார் நம்மை பற்றி என்ன நினைத்து இருப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் என் மனதில் ஓடியது.

மேடையில் ஏறி அவர் அருகில் அமர்ந்ததுமே அவரிடம் 'ஷீட்டிங் வந்தது போல் வந்து விட்டேன். தப்பா நினைச்சிருப்பாங்களோ' என்றேன்.

அதை கேட்டதும் சிரித்துக்கொண்டே 'வெரிகுட்... அப்போ இனி நான் தான் நிஜ ஹீரோ...' என்றார். அதை கேட்டதும் ஏதோ சொல்ல மனம் நினைத்தது வெட்கம் தடுத்து விட்டது.

திருமண காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் எப்படி அமர்ந்திருக்க வேண்டும்? எப்படி வெட்கப்பட வேண்டும்? ஓரக் கண்ணால் மாப்பிள்ளையை எப்படி பார்க்க வேண்டும்? என்று சொல்லித் தருவதை கேட்டு நடிப்பேன்.

ஆனால் அன்று எல்லாம் தானாக வந்தது. அது தான் நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடு. என்றுமே நிழல் நிழல் தான்!

நிஜம் நிஜம் தான்! அதை நினைத்தபோது எனக்கே என்னை பார்த்து சிரிப்பு வந்தது.

திருப்பதியில் திருமணம் முடிந்து சென்னை திரும்பினோம்.

சென்னையில் அடையாறில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

மொத்த திரை உலகமும் திரண்டு வந்து வாழ்த்தியது மனதில் பெருமையாக இருந்தது. மணவிழா என்றால் போட்டோ ஷூட்தானே முக்கியம். முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு வரும், வரும் போதெல்லாம் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்கள். எனக்கு அதில் எந்த சலிப்பும் தெரியவில்லை. சளைக்காமல் போஸ் கொடுத்து கொண்டிருந்தேன்.

ஆனால் சாகர்தான் இன்னும் எவ்வளவு நேரம் நிற்கனும்... இன்னும் நிற்கணுமா? என்று அடிக்கடி என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தார். நான் தான் அவரை சமாளித்து கொண்டிருந்தேன். போட்டோ எடுப்பதையெல்லாம் அவர் விரும்பமாட்டார். திருமணம் முடிந்த பிறகும் அதே குணம் தான் அவரிடம் இருந்தது.

திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவியாக அதாவது குடும்பத்தலைவி என்ற அந்தஸ்தோடு பெங்களூருவில் அவர் வீட்டில் குடியேறினேன்.

எங்களுக்குள் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. எங்கள் வீட்டில் நான் ஒரே பெண் மட்டும் தான். உறவுகளாக இருப்பது அம்மா மற்றும் அப்பா வழி சொந்தக்காரர்கள் தான்.

அதேபோல் அவர் வீட்டிலும் அவர் ஒருவர் மட்டும் தான். மற்றபடி அவரது அம்மா மற்றும் அப்பா வழி உறவினர்கள் தான். திருமண வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்பது எல்லோரையும் போல்தான் எனக்கும் இருந்தது. ஆனால் எனக்கு குடும்ப பொறுப்புகள் தான் புதுசு.

அம்மா வீட்டில் எந்த பொறுப்பையும் நான் ஏற்றது கிடையாது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது முதல் வரவு-செலவுகளை பார்ப்பது வரை எல்லாமும் அப்பா-அம்மா தான். நான் ஒரு ரிமோட் போல் இயங்கி கொண்டிருந்தேன்.

முதல் முறையாக எனது தலையில் பொறுப்பு என்ற சுமை வைக்கப்பட்டது. எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அந்த பயத்தையும் போக் கியது சாகர்தான்.

பிறந்த வீட்டில் அப்பாவும், அம்மாவும் என்னை குழந்தையாக வளர்த்தார்கள். புகுந்த வீட்டில் சாகர் என்னை குழந்தை போல் தாங்கி வளர்த்தார். கவனித்துக் கொண்டார். அதனால் தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி என்னால் வளர முடிந்தது.

அது ஒரு வசந்த காலம்...

அந்த மறக்க முடியாத இனிமையான தருணங்களை அடுத்த வாரம் பகிர வருகிறேன்...

(தொடரும்...)

Tags:    

Similar News