ஐ.வி.எப். சிகிச்சை பெற்றும் கருத்தரிப்பில் தோல்வியா?
- ஐ.வி.எப். சிகிச்சை ஏற்கனவே தோல்வி அடைந்து, இப்போது மீண்டும் ஐ.வி.எப். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் கையில் எந்தவித அறிக்கையும் இருக்காது.
- 100க்கு 100 சதவீதம் குழந்தை பேறு என்பதை ஒரே முறையில் கொடுக்க முடியும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது.
குழந்தையின்மை சிகிச்சையில் இன்று நாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம். குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் நிறைய பெண்கள் கேட்கும் விஷயம்... டாக்டர், எனக்கு 2 முறை ஐ.வி.எப். செய்தும் தோல்வி அடைந்து விட்டது. அந்த மையத்தில் ஒரு ஐ.வி.எப். செய்தேன், இந்த மையத்தில் ஒரு ஐ.வி.எப். செய்தேன், இப்போது உங்களிடம் ஐ.வி.எப். சிகிச்சைக்காக வந்திருக்கிறேன் என்பார்கள்.
இன்று என்னிடம் வரும் நோயாளிகளில் பலர் ஏற்கனவே 2 முறை ஐ.வி.எப். தோல்வி, 3 முறை ஐ.வி.எப். தோல்வி, கருமுட்டைகளை தானமாக வாங்கியும் ஐ.வி.எப். செய்து தோல்வி அடைந்து விட்டது என்கிற பிரச்சினைகளோடு கவலையுடன் வரும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகம்.
தோல்வி அடைந்தவர்களுக்கு ஐ.வி.எப். சிகிச்சை அளிப்பது மிகப்பெரிய சவால்:
கடந்த 3 வருடங்களாக நாங்கள் எதிர்நோக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை, ஐ.வி.எப். தோல்வி அடைந்த பிறகு பலர் எங்களிடம் சிகிச்சைக்கு வருவதுதான். அவர்களுக்கு நாம் எப்படி சிகிச்சை அளிக்கப்போகிறோம் என்பது எங்களுக்கு ஒரு பெரிய சவால். பல நேரங்களில் எதனால் ஐ.வி.எப். தோல்வி அடைந்துவிட்டது என்று கேட்டால், ஒருமுறை அல்லது 2 முறை நல்ல கருவை எடுத்தோ அல்லது கருவின் தரமே தெரியாமலோ ஐ.வி.எப். செய்தோம். ஆனால் தோல்வி அடைந்து விட்டது என்கிற காரணத்தோடு நிறைய பேர் வருகிறார்கள்.
தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் இம்பிளான்டேஷன் (5 நாள் கரு) மூலம் தோல்வியா அல்லது கரு முட்டைகளின் மூலம் தோல்வியா அல்லது கருத்தரித்தலில் குறைகள் இருக்கிறதா அல்லது விந்தணுக்களில் குறை உள்ளதா என்று கேட்டால், இதற்கான காரணம் தொடர்பான எந்த வித விளக்கமும் அவர்களிடம் இருப்பதில்லை.
எல்லோரும் சொல்கிற பொதுவான விஷயம், அந்த மையத்தில் ஐ.வி.எப். செய்தேன். 3 முறை பரிமாற்றம் செய்தனர். ஆனாலும் தோல்வியில் முடிந்தது என்றுதான் சொல்வார்களே தவிர, யாரிடமும் முறையான அறிக்கை இருப்பதில்லை. அந்த அறிக்கையை சும்மா ஏனோ தானோ என்று கொடுத்து விடுவார்கள். மோசமான தரமுள்ள முட்டை, மோசமான தரமுள்ள கரு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த மோசமான தரம் ஏன் வருகிறது என்பது தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஐ.வி.எப். வெற்றி பெறுவதற்கான விஷயங்கள்:
இப்போது நான் ஒரு பெண்ணுக்கு ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கிறேன் என்றால், அதில் எவ்வளவு வெற்றி இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அவரது வயது, ஹார்மோன் அளவு, முட்டைகளின் எண்ணிக்கை, அவரது கணவரின் விந்தணுக்கள், அவரது உடல் ரீதியான விஷயங்கள் ஆகியவற்றை வைத்து அதை அறிந்து கொள்வேன். இந்த விஷயங்கள் தான் ஒரு ஐ.வி.எப். வெற்றியை குறிக்கிறது.
இவை அனைத்தையும் சீராக வைத்திருந்து, ஒரு குறிப்பிட்ட சதவீதம் வெற்றி கிடைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கிறோம் என்றால், அந்த எதிர்பார்த்த சதவீதம் வெற்றி வருகிறதா என்பது தான் என்னை நானே பரிசோதித்துக் கொள்வதற்கான முக்கியமான விஷயமாக கருதுகிறேன்.
ஏனென்றால் எங்களை நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு ஐ.வி.எப். சிகிச்சையில் ஒரு நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புகிற விஷயம். அப்படியென்றால் அதற்கான வழிமுறைகள், சீரான செயல்பாடுகள், சீரான திட்டங்கள், அதற்கான சிறந்த கட்டமைப்பு ஆகியவை இருந்தால் தான் இது சாத்தியமாகும்.
ஐ.வி.எப். சிகிச்சை ஏற்கனவே தோல்வி அடைந்து, இப்போது மீண்டும் ஐ.வி.எப். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் கையில் எந்தவித அறிக்கையும் இருக்காது. ஒருவேளை அறிக்கை இருந்தால் என்ன ஊசி கொடுத்தார்கள் என்பது இருக்காது.
ஏனென்றால் ஒரு இயல்பான பெண்ணுக்கு கூட, முட்டை வளர்ச்சிக்கான முறையான தூண்டுதல் ஊசி கொடுக்கவில்லை, என்றால் பல நேரங்களில் மாறுபாடு வரும். பல நேர ங்களில் அவர்களுக்கு உகந்த அளவில் தூண்டுதல் ஊசி கொடுக்கவில்லை என்றாலும் இதுபோன்ற நிலைமை வரும். எனவே இந்த விஷயத்தில் திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம்.
ஐ.வி.எப். தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும்:
ஒரு முறை ஐ.வி.எப். தோல்வி அடைந்தவர்களுக்கு அடுத்த முறை செயற்கை கருத்தரிப்பு செய்ய மருத்துவர் முற்படும்போது, முக்கியமாக என்னென்ன காரணங்களால் ஏற்கனவே குறை ஏற்பட்டது, என்னென்ன காரணங்களால் ஐ.வி.எப். தோல்வி அடைந்தது என்பதை முறையாக ஆராய வேண்டும். அதன் மூலம் அடிப்படையான விஷயங்களில் நம்மால் முடிந்த அளவுக்கு சரி செய்ய வேண்டும்.
அதற்காக வயதை நம்மால் மாற்ற முடியாது. 35 வயது என்றால் 35 வயது தான். 35 வயதில் கருத்தரிக்கும் திறன் எவ்வளவோ அந்த அளவுக்கு தான் கருத்தரிக்கும் திறன் இருக்கும். இவர்களுக்கு 100க்கு 100 சதவீதம் குழந்தை பேறு என்பதை ஒரே முறையில் கொடுக்க முடியும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் அடுத்தடுத்து தொடர்ச்சியான முறையில் சிகிச்சை அளிக்கும்போது அவர்களுக்கு குழந்தைபேறு கொடுக்க முடியும். இந்த வகையில் தான் நாம் அவர்களை அணுகவே முடியும்.
ஐ.வி.எப். சிகிச்சை பற்றிய தவறான கருத்து:
ஐ.வி.எப். சிகிச்சைக்கு வரும் நிறைய பெண்களிடம் தவறான கருத்து ஒன்று உள்ளது. டாக்டர், ஐ.வி.எப். சிகிச்சையில் முதல் முறையிலேயே எனக்கு 100 சதவீத வெற்றியை கொடுத்து விடுங்கள் என்பார்கள். ஆனால் 100க்கு 100 சதவீதம் வெற்றியை முதல் தடவையில் கொடுப்பதற்கான விஷயங்கள் என்பது சாத்தியம் அல்ல. முதல் முறையிலேயே 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்று யாராவது கூறினால் அதை நீங்கள் நம்ப தேவையில்லை.
ஏனென்றால் இன்றும் உலக அளவில் இருக்கும் நவீன முறைகளில் சிறப்பான சிகிச்சையாக, அதாவது கருவை பரிசோதித்து விட்டு, கர்ப்பப்பையை பரிசோதனை செய்து விட்டு, அதற்கான எல்லா காரணங்களையும் பார்த்துவிட்டு சிறந்த முறையில் ஐ.வி.எப். சிகிச்சை அளித்தால் கூட அதற்கான வெற்றி விகிதம் என்பது 50 முதல் 55 சதவீதம் தான் இருக்கும்.
உலக அளவில் இதுபற்றி விஷயம் தெரிந்த எல்லா அறிவியல் அறிஞர்களும் இந்த அளவை சொன்னால் தான், சரி என்று புரிந்து கொள்வார்கள். 100 சதவீதம், 80 சதவீதம் வெற்றி என்று சொன்னால் கண்டிப்பாக விஷயம் தெரிந்தவர்களுக்கு அது தவறானது என்பது தெரியும்.
அந்த வகையில் உங்களுடைய கருத்தரிக்கும் திறன் இந்த பக்குவத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம். திரும்பத் திரும்ப ஐ.வி.எப். சிகிச்சையில் தோல்வி என்று எங்களிடம் சில பெண்கள் வரும் போது அவர்களிடம் மனக்கவலைகள் மற்றும் வருத்தங்கள் நிறையவே இருக்கிறது.
எனவே நீங்கள் ஐ.வி.எப். சிகிச்சை பெற நினைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், நீங்கள் சிகிச்சைக்கு செல்லும் கருத்தரிப்பு மையங்களில் உள்ள மருத்துவரின் நிபுணத்துவம், அவருடைய முந்தைய அனுபவங்கள், அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள ஐ.வி.எப். சிகிச்சைகளின் வெற்றி விகிதம், அவர்களுடைய அணுகுமுறை, சிகிச்சை மையங்களின் கட்டமைப்பு, அவர்கள் செய்யும் அனைத்து சிகிச்சைகளின் தரம் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
அப்படிப்பட்ட மையங்களில் சிகிச்சைக்கு சென்றால் அங்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகளின் எல்லா மருத்துவ அறிக்கைகளும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு என்னென்ன பரிசோதனை செய்கிறார்களோ அந்த அறிக்கை உங்களிடம் இருக்கும்.
இதுபோன்ற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளுடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையில்லாத பரிசோதனையை திரும்ப செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதுவே ஒரு விஷயத்தில் தெளிவு இல்லாமல் இருந்தால் அந்த பரிசோதனையை மீண்டும் எடுத்து பிரச்சினைகளை சரி செய்து அதன் பிறகு ஐ.வி.எப். செய்யும்போது வெற்றி விகிதம் அதிகமாகும்.
ஐ.வி.எப். சிகிச்சை ஏன் தோல்வி அடைகிறது என்பதற்காக சில முக்கியமான விஷயங்களை பார்க்க வேண்டும். அது என்னென்ன விஷயங்கள், அந்த விஷயங்களை எப்படி சரிசெய்து ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுவது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.