- பகை அரசர்களோ அல்லது பகை வேந்தர்களோ என்னவரை அணுகுதல் என்பது அருமைப் பாடுடைத்து என்பதைப் பெருமையுடன் கூறுவேன்.
- இத்துணை சிறப்பு வாய்ந்த மலையில்தான் தமிழ் மாமுனி அகத்தியச் சித்தர் தவம் புரிகிறார்!
திடீரென்று சாலினியின் முகத்திலும், நடவடிக்கையிலும் பெரும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருந்ததை கவனித்தவர்கள் ஆச்சரியத்தில் மௌனமானார்கள். அமைதியாக அந்தக் கல்லறையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், என்ன நினைத்தாளோ திடீரென அதை நெருங்கிச் சென்று,
"அன்புச் செல்லமே... அருமை மகளே இங்குதான் இருக்கிறாயா கண்மணி", என்று ஆரம்பித்தவளின் குரலும், மொழியும், அங்க அசைவுகளும்கூட முற்றிலுமாக மாறியிருந்தன. கண்களை மூடிக்கொண்டு அவள் நின்றிருந்த தோரணை வேறொரு உலகில் சஞ்சரிப்பவள் போலவே தன்னையறியாமல் பேச ஆரம்பித்தாள்.
"என்ன சொன்னீர்கள் உங்கள் நாட்டின் முதல் அரசி அயோத்தியிலிருந்து வந்தவள் என்றா? தவறு. தவறு. எங்கள் அன்பு மகள் செம்பவளம் தங்கத் தமிழ் பெண்ணல்லவா? புரியாமல் பேசுகிறீர்களா? சரி நானே சொல்கிறேன்" என்று ஆரம்பித்தவளின் அந்த வித்தியாசமான உரையை, அசாதாரண உடல் மொழியுடன், கண்கள் அகல, தெளிந்த நீரோடையான அவள் பேச்சைக் கேட்க ஊரே கூடி விட்டாலும், ஊடகம் வரை செய்திகள் விரைவாகப் பரவி அனைத்து ஊடகத்தாரும் சூழ்ந்துவிட அந்த இடமே முற்றிலும் அமைதியாகி, சாலினியின் பேச்சு மட்டுமே உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளானாலும் உண்மையை ஒருநாளும் மறைத்து வைக்க முடியாது. என்றாவது ஒரு நாள் அது பருத்திப்பூ போல வெடித்து சிதறிக்கொண்டு வெளியே வந்துவிடும் என்ற உண்மையை அனைவரும் ஆதாரங்களுடன் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்த அற்புதமான தருணம் அது!
முற்பிறவி நினைவு வந்த சாலினி என்ற அந்த இளம் பெண், பொற்பூங்கோதை என்ற ஒரு தாயாக, ஆய்நாட்டு அரசியாக மாறி 2050 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்!
பொற்பூங்கோதையாக மாறிய சாலினி "கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரன் எனும், ஆய் நாட்டின் சிற்றரசன், பொதிய மலையின் தலைவன், கொங்கு நாட்டின் கவிர மலைக்குக் காவலன், வேளிர் குடித் தலைவன், முடியுடை வேந்தருக்குப் பெண் கொடுக்கும் தகுதி வாய்ந்த தலை மகனின் தர்ம பத்தினி நான். பொற்பூங்கோதை எனது பெயர்.
கல்வி கேள்விகளிற் சிறந்தவராய், வில் வாள் பயிற்சிகள் மிகுதியும் பெற்றுப் பெரியோர்களைப் பணிந்து, எளியவர்களைப் பேணி நாடே போற்ற இனிது வாழும் நல்லிதயம் படைத்தவர். ஆய் வம்சத்தின் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்.
தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் எங்கள் ஆய் நாட்டின் பெருமை என்றால் அது உலக வணிகத்தைக் கிழக்கிலும் மேற்கிலும் இணைக்கும் முக்கியப் புள்ளியாக அமைந்திருப்பதுதான். ஆய் அண்டிரனால் உருவாக்கப்பட்ட தனி நாடாக சிற்றரசு அமைப்புடன் குடியாட்சியாகச் செயல்பட்டு வரும் கொங்கு நாடு அவர்தம் அரசாளுமையில் வணிகம் தொடங்கி புதிய கண்டுபிடிப்புகள் வழியே செல்வம் கொழிக்கும் நாடாக உயர்ந்துள்ளது.
ஆய்அண்டிரன் உழுதுண்ணும் வேளாளர், உழுவித்துண்ணும் வேளாளர் எனப் பாகுபடுத்திக் கூறப்படும் வேளாண் மரபில் உழுவித்துண்ணும் சிறப்புமிக்க வேளாளர் மரபினர். வேளாளர்கட்குரிய தனியுரிமைப் பெயரான, 'வேள்' என்னும் பட்டப்பெயரைப் பெற்று ஆய் வேள் என்றும் வேள் ஆய் என்றும் அன்போடு அழைக்கப்படுபவர்.
பாண்டிய நாட்டில் பெருமைக்கோர் உறைவிடமானதும், அகத்தியர் வாழும் அழகிய இடமுமான பொதிகை மலைக்கும், அதன் அண்மியதான ஆய்குடிக்கும் தலைவர் இவர்தான். சேர சோழ பாண்டியர்கட்கு முறையே பனை, அத்தி, வேம்பு மாலைகள் அடையாளமாக அமைந்திருப்பனபோல, இவருக்குச் சுரபுன்னை மாலை அடையாளப் பூவாகும்.
பகை அரசர்களோ அல்லது பகை வேந்தர்களோ என்னவரை அணுகுதல் என்பது அருமைப் பாடுடைத்து என்பதைப் பெருமையுடன் கூறுவேன். கொங்கு நாட்டவரோடு பொருது அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்தவர்.
கொடையிலும் மிகச் சிறந்தவரானதால், புலவர் மகிழ்ந்து போற்றிப்பாடும் புகழினைப் பெற்றவர். புலவர்கட்கு வரையாது கொடுக்கும் வள்ளலாய் திகழ்பவர். தன்னையடைந்த பாணர்கட்கும், இரவலர்கட்கும் யானைகளைக் கணக்கின்றி ஈந்து கொண்டிருப்பவர்.
பவளசங்கரி, 63743 81820
எம் தலைவனுக்கு உரிமையான பொதிகை மலையும், அதற்கு அண்மையதான ஆய்குடியும் புலவர்களால் சிறப்புடன் வர்ணிக்கப்படுவன.
எங்கள் பொதிய மலையில் வாழும் குரங்குகள் பரிசிலர்கள் கட்டிவைத்த முழாக்களைப் பலவின் பழங்களோ என எண்ணி, அவற்றினைத் தொட்டமாத்திரத்தில் அவை ஓசையை எழுப்ப, அவ்வோசைக்கு மாறாக எதிர் ஓசையினை எழுப்பும் அன்னச்சேவல். உடலையும் மனதையும் இதமாக்கும் குளிர்த் தென்றல் காற்றும் பேரமைதியும், பொன்னென மின்னும் நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என அழகின் உச்சம் பெற்ற எங்கள் பொதிய மலை. அதுமட்டுமா ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், வண்ண வண்ணப் பூச்சிகள் என பிரமிக்கவைக்கும் இயற்கைச் செல்வங்கள் நிறைந்த மலை.
இத்துணை சிறப்பு வாய்ந்த மலையில்தான் தமிழ் மாமுனி அகத்தியச் சித்தர் தவம் புரிகிறார்!
கொளுத்தும் தீக்கங்குகளாகத் தோன்றிய இவ்வுலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண்ணும், கல்லும் மட்டுமின்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்கள் வாழும் பொதிய மலை!
அசம்பு மலை, அகத்தியர் மலை எனும் பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாட்டுக் காட்டும் அழகில் மையல் கொள்வீர்கள். சந்தன மரமும், செங்காந்தள் மலரும் அதிகம் விளையும் மலை!
காணிகள் வாழும் சோலை வனமும், பாணதீர்த்தமும், யானை சூழுலகும், குளிர் மேகத் தாலாட்டும், வழுக்குப் பாறைகளும், சித்தர்களின் வாழ்க்கை இரகசியங்களும் என கண்கொள்ளாக் காட்சிகளுக்குக் குறையேதுமில்லாத பூலோகக் கைலாயமல்லவோ!
தென் பொதிகையில் வற்றாத சீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம் சுனையும், அச்சுறுத்தும் சூறைக்காற்றும் உண்டு. நெடிதுயர்ந்த அம்மலையின் உச்சியில் சென்றால் அகத்திய மாமுனியைக் காணலாம்!
இன்னுமொரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். அகத்திய மாமுனியை தரிசனம் பெற வேண்டி பொதிகைக்குப் புறப்பட்ட பிரம்மச்சாரி ஒருவர் எம் ஆய் மன்னனிடம் தானமாகப் பெற்று வந்த மிகுந்த அளவிலான சிறுசிறு தானியங்கள் போன்ற பொன் மணிகளை, களவு கொடுக்காமல் இருக்க தனக்கு நம்பிக்கைக்குரிய, வழியில் இருந்த ஒரு ஆலயத்தின் குருக்களிடம் பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டு மலயம் புறப்பட்டார்.
அகத்திய முனிவரைக் கண்ட பின்பு, இந்த பொன் மணிகள் நிறைந்த மூட்டைகளை நல்ல முறையில் செலவழிக்கும் முறைமையும் அறிந்து கொண்டு வந்து இவரிடம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அவற்றை ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியாகக் கிளம்பி வந்தார்.
சில்லறைக்காகப் பயன்படுத்தும் இம்மாதிரிப் பொன்மணிகளைத்தான் எங்கள் அரசில் பெரும்பாலும் தானமாகக் கொடுப்பார்கள்.
பசி, தூக்கம் ஏதுமின்றி, காடும், மலையும் கடந்து வந்த களைப்பில் மயங்கி விழத் போனவரை தாங்கிப் பிடித்து ஆதரவாகப் பற்றியது ஒரு கரம். வயோதிகர் வடிவில் வந்த அவர் வேறு யாருமல்ல. அகத்திய மாமுனியேதான் வேறு வடிவில் வந்து காப்பாற்றியுள்ளார் என்று அவருக்குப் புரிய நேரமானது. அதற்குள் அந்த வயோதிகரும், சித்தம் போக்கு, சிவன் போக்கு என்று அலையும் அந்த முனிவரை எங்கு போய்த் தேடப்போகிறாய், திரும்பிப் போய் வேலையைப் பார் மகனே, என்றார்.
ஆனாலும் அகத்திய முனிவரைக் காணாமல் நான் திரும்பிப் போகமாட்டேன் என்று உறுதியாக இருந்தவர் முன் அகத்தியர் உடனே சுய உருவில் தோன்றி ஆசிர்வதித்தார்.
அவர் மீதிருந்த நல்ல நம்பிக்கையில் அவருக்கு ஒரு முக்கியமானப் பணியும் அளித்தார். அதாவது, அருகில் இருக்கும் தாமிரபரணி கரையில் பசு ஒன்று வந்து நிற்கும். அந்த இடத்தில் ஆற்றுக்கு அணை கட்டி, அதிலிருந்து ஒரு கால்வாய் வெட்டி, நிற்கிற பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டால் அது ஓட ஆரம்பிக்கும். அப்படி அது ஓடுகிற வழியை அடையாளம் வைத்துக் கொண்டு கால்வாய் வெட்டிக் கொண்டு போக வேண்டும் என்றும், வழியில் ஆங்காங்கு மடையும், வடிகால்களும் அமைக்க வேண்டும் என்றும், பசு படுத்துக் கொள்ளும் இடங்களில் ஏரி தோண்டவும், பசு அவர் பார்வையிலிருந்து மறையும் அந்த குறிப்பிட்ட இடத்தில் கால்வாயை முடித்து விடவும் வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மனிதர்கள், பிராணிகள் என அனைவருக்கும் தாகம் தீரவும், உடல் அழுக்கும், அசதியும் தீரவும், பயிர்கள் பசுமையாக விளைந்து பசியாற்றவும் பயன்படப் போகும் என்பதால் உன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும், நீயும் சொர்கம் சென்று சேர்வாய் என்று அருள் புரிந்தார் அகத்திய மாமுனி.
இப்படித்தான் அகத்தியர் காவிரியையும், தாமிரபரணியையும் கொடுத்து நீர் வளம் பெருக்கி, மக்கள் நலம் காத்து வருகிறார்".
செம்பவளம் எனும் தங்கள் அரசி ஹியோ ஹவாங் ஓக் அம்மையின் நற்குடிப் பிறப்பு பற்றி அறியும் நல்வாய்ப்பு என்றே அனைவரையும் எண்ண வைத்த உறுதியான பேச்சு தடையின்றித் தொடர்ந்தது.
(தொடரும்)