- வாழை நடவு செய்து, அதை நல்ல முறையில் வளர்ப்பதற்குக்கூட எவ்வளவோ பக்குவம் தேவைப்படுகிறது.
- அவள் முகத்தில் எப்போதும் விரக்தியின் நிழல் படர்ந்திருக்கும்.
'சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன. துக்ககரமான குடும்பங்களோ வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன'.
-டால்ஸ்டாய்
இன்றைய சமூகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. திசை தெரியாமல் தாறுமாறாய் ஓடுவதுபோல் இருக்கிறது. அன்றாடம் கேள்விப்படுகின்ற விஷயங்கள் நம்மைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்கின்றன.
தொழில்நுட்ப வசதிகள் பெருகி இருக்கின்றன; கூடவே ஆபத்துகளும் பெருகி வருகின்றன. வசதிகளும் வாய்ப்புகளும் மானுடத்திற்கு எதிரானவையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வழிப்பறி, வன்புணர்வு, கொலை, கொள்ளை ஆகிய கொடூரச் செய்திகள் வராத நாளே இல்லை. இப்படியெல்லாம் நடப்பதற்கு என்ன காரணம்? வக்கிர எண்ணங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. மனிதாபிமானமற்ற செயல்கள் தாராளமாய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழில் நிறுவனங்கள் எனப் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்ற பிள்ளைகளும் பெரியவர்களும் பத்திரமாக வீடு திரும்புவதே பெரிய விஷயம்தான். இச்சூழ்நிலையில், பாதுகாப்பிற்கு என்ன வழி? குடும்பக் கட்டமைப்பைப் பலப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. ஏனெனில், சீரான குடும்பக் கட்டமைப்புதான், ஒவ்வொருவருக்கும் நம்பகமான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்.
குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் இணக்கமான நட்புறவை வளர்த்துக் கொள்வது மிக அவசியம். அப்படியானால்தான், பிள்ளைகள் ஒளிவு மறைவின்றி எல்லா விஷயங்களையும் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள். பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும், பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதற்கும் இந்த இணக்கம் பெற்றோர்களுக்குப் பெரிதும் உதவும்.
வாழை நடவு செய்து, அதை நல்ல முறையில் வளர்ப்பதற்குக்கூட எவ்வளவோ பக்குவம் தேவைப்படுகிறது.
மழைக்காலங்களில் வெள்ளத்தில் வாழை மரங்கள் மூழ்கும் அபாயம் அதிகம். இரண்டு நாட்களுக்குமேல் முழுமையாக நீரில் மூழ்கியிருந்தால், மரங்கள் அழிந்துவிடும். எனவே, அத்தகைய பகுதிகளில் ஆழமான வேர்ப்பிடிப்புகளைக் கொண்டு உயரமாக வளரக்கூடிய செடிகளை நட வேண்டும் என்கிறார்கள்.
வாழை மரங்கள் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஈரப்பதத்திலும், முடிந்தவரை நிலையான ஈரப்பதத்திலும் சிறப்பாக வளருமாம். நடவு செய்வதற்குமுன் களைகளை அகற்றிவிட வேண்டும்.
நடவு செய்த உடனேயே கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக வைக்க வேண்டும். வாழை மரங்கள் வளர்ந்து செழித்து, நல்ல மகசூலைத் தருவதற்கு இத்தனை விஷயங்கள் மிக முக்கியம்.
வாழை மரத்துக்கே அப்படியெனில், பிள்ளைகளின் நல்வாழ்விற்கு? பெற்றோரின் அரவணைப்பும் ஆலோசனைகளுமே பிள்ளைகளுக்குப் பலம். சில குடும்பங்களில் அந்தப் பிணைப்பு இல்லாததால், பிள்ளைகளின் வாழ்க்கை வழிதவறிப் போய்விடுகின்றது.
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓர் இளம்பெண் 'இங்கிலீஷ் காப்பி ரைட்ட'ராகப் பணியில் சேர்ந்தாள். நான் கிரியேடிவ் கன்சல்டன்ட்டாக இருக்கும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. எனவே, வாரத்திற்கு இரண்டு முறையாவது அங்கு சென்று வருவேன்.
அவள் ஓர் அழகிய தமிழ்ப்பெண். ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி. மென்மையாகப் பேசுவாள். விளம்பரக் கலையின் நுணுக்கங்கள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் என்னிடம் கேட்பாள். மிக நாகரிகமாகப் பழகக்கூடியவள்.
ஒருமுறை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, தனது 'லெதர் பேக்'கில் இருந்து சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்தாள். எவ்வித சங்கோஜமுமின்றி, சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடி, என்னிடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினாள்.
'வேண்டாம்' என்றேன்.
'ஏன், பழக்கமில்லையா?' என்றாள்.
'பழகிப் பார்த்து விட்டுட்டேன்' என்றேன்.
முகத்தைப் பக்கவாட்டில் திருப்பி, புகையை ஸ்டைலாக ஊதியபடி தலையை அசைத்தாள்.
'உனக்கு எதுக்கு இந்தப் பழக்கம்?' என்று நான் கேட்டதும், பட்டென்று என்னைப் பார்த்து, 'இது என்னோட விருப்பம். நான் யாரையும் கெடுக்கலையே' என்றாள். நானும் விடவில்லை.
'இது உன்னோட உடம்புக்குக் கேடுதானே'.
'அதைப்பற்றி நான் கவலைப்படல'.
'பேரன்ட்சுக்கு தெரியுமா?'
'தெரியிறதுக்கு வாய்ப்பில்ல... தெரிஞ்சாலும் அவங்க கவலைப்படப் போறதில்ல'.
'ஏன்...?'
'அவங்க பிரிஞ்சிட்டாங்க'.
'வெரி சாரி'.
'எதுக்கு சாரி. ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகல. எப்பவும் சண்டைதான். நான் ஒரே பொண்ணு. வீட்ல நிம்மதியே இருக்காது'.
'கேட்கிறதுக்கே கஷ்டமா இருக்கு'.
'பேரன்ட்ஸ் லவ் எனக்கு கிடைச்சதே இல்ல. நான் ரொம்பவே அழுது முடிச்சிட்டேன். இப்ப என் மனசு கல்லாயிடுச்சி. கல்யாணம் பண்ணிக்கிற ஆசையும் இல்ல. எனக்குன்னு ஒரு தனி உலகம். லோன்லி லைப்' என்று அவள் சொன்னபோது அவளின் கண்கள் பனித்திருந்தன.
என் மனதிற்குள் மிகப்பெரிய பாரத்தையே இறக்கி வைத்ததுபோல் இருந்தது. அதன்பிறகு, அங்கு நான் செல்லும்போதெல்லாம் அவளை ஊக்கப்படுத்துவதற்கும், வாழ்வின் உன்னதங்களை அவள் விளங்கிக் கொள்வதற்கும் அவளுடன் நிறைய பேசுவேன். அமைதியாகக் கேட்பாள். ஆனால், அவற்றைச் சிந்தித்துச் செயல்படுத்துவதற்கான மனநிலையில் அவள் இருந்ததில்லை என்பதை நான் அறிவேன்.
எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவாள். ஆனால், அவள் முகத்தில் எப்போதும் விரக்தியின் நிழல் படர்ந்திருக்கும்.
சில மாதங்களுக்குப்பின், கூடுதல் சம்பளத்தில் வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னாள். நல்ல வாய்ப்பு வரும்போது, அதைப் பற்றிக் கொள்வதுதான் வாழ்வை அடுத்த நிலைக்கு நகர்த்திச் செல்லும் என்றேன். விடைபெற்றுச் சென்றாள்.
அன்றாடப் பணிகள், பரபரப்பான வாழ்க்கை ஓட்டம் ஆகியவற்றில், அவளைப் பற்றிய நினைவு எனக்கு இல்லாமற் போய்விட்டது. ஒவ்வொரு நாளின் செய்திகளும், சந்திப்புகளும் நம் மனதை நிரப்பிவிடுகின்றன. புதிய புதிய விஷயங்கள் பழைய விஷயங்களை மனதின் அடிவாரத்திற்கு ஆழ்த்திவிடுகின்றன.
சில வருடங்கள் ஓடி மறைந்தன.
ஒருநாள் காலையில் வழக்கம்போல் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு செய்தி என் உச்சந்தலையை இரண்டாக வெட்டிப் பிளந்தது.
ஒரு அபார்ட்மென்டின் இருபத்து நான்காவது மாடியில் இருந்து, ஓர் இளம்பெண் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட செய்தியில், அவளின் படம் இணைத்து வெளியிடப்பட்டிருந்தது. பூமி அதிர்வதுபோல் என் உள்ளம் அதிர்ந்தது. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காத தனிமையின் விரக்தியில், அவள் தற்கொலை செய்து கொண்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவளின் பரிதாப முடிவு, ஒரு பயங்கரமான கனவுபோல் எனக்குத் தோன்றியது. பாசப் பிணைப்பற்றக் குடும்பங்களுக்கு இது ஒரு பாடம்.
பெற்றோரின் அன்புதான் பிள்ளைகளின் மனதை பலப்படுத்தும். அவர்களின் அரவணைப்புதான் மிகச்சிறந்த பாதுகாப்பின் உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்தும். தாயின் மடியில் விளையாடும் குழந்தை, அதைவிடப் பேரின்பமாக வேறெதையும் எண்ணுவதில்லை. தந்தையின் தோளில் சாய்ந்து கொள்ளும்போது, அதைவிட நம்பகமான புகலிடமாக வேறெதையும் பிள்ளை கருதுவதில்லை.
குடும்பம் என்ற அமைப்பே, அன்பின் வழியில் ஆரோக்கியமான உறவைக் கட்டி எழுப்புவதற்காகத்தான். அதன்மூலம்தான் குடும்பத்தின் மேன்மையை நிலைநாட்ட முடியும். பிள்ளைகளின் இனிய நண்பர்களாகப் பெற்றோர் விளங்குவதும், உயர்ந்த பண்புகளில் பிள்ளைகள் சிறந்தோங்குவதும் எத்தனை பெரிய பாக்கியம்!
சில குடும்பங்களில் பெற்றோர் அதை உணர்வதில்லை. அவர்கள் போடும் சண்டை களில், பிள்ளைகளின் நிம்மதி பறிபோவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் அபாயகரமானவை.
சிறுவயதில் என்னுடன் படித்த நண்பன் ஒருவனை, பல வருடம் கழித்துத் தற்செயலாக நான் காண நேர்ந்தது.
சட்டை அணியாமல் முழங்கால் அளவு கால்சட்டை அணிந்திருந்தான். மெலிந்த தேகம். தன் இரண்டு தோள்கள் மீதும் இரண்டு பிளாஸ்டிக் குடங்கள் நிறைய தண்ணீரைச் சுமந்து சென்று, ஒரு மிகச்சிறிய ஹோட்டலின் முகப்பில் இருந்த தொட்டியில் ஊற்றிவிட்டுத் திரும்பியபோது என்னைப் பார்த்தான்.
மிகுந்த வருத்தத்துடன் விசாரித்தேன். தாயார் இறந்து போனார். தந்தையார் இன்னொரு திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமையைத் தாங்க முடியவில்லை. அவளின் பேச்சைக் கேட்டு, தந்தையும் இவனை அடித்துத் துரத்த, வீட்டை விட்டு ஓடி வந்தவன். ஆதரவின்றிக் கூலி வேலை செய்து கொண்டிருந்தான். படிப்பும் பாழாய்ப் போனது. வாழ்க்கையோ நடுத்தெருவில் நின்றது.
கவிஞர் தியாரூ, 9940056332
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுவதே இல்லை. எப்போதும் சலிப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ரம்மியமான சூழல் இல்லாத குடும்பங்களில் மகிழ்ச்சி இருக்காது. மகிழ்ச்சி இல்லாத குடும்பங்களில் ஆரோக்கியம் இருக்காது. எனவே, குடும்ப நல்லிணக்கம் மிக மிக அவசியம்.
நல்லிணக்கம் என்பது, எந்தவித வாதங்களும் இல்லாத நிலை என்று அர்த்தமல்ல; கருத்து வேறுபாடுகளை ஆக்கப்பூர்வமான முறையில் அணுகுவது. தவறு செய்கின்ற போதும், அன்பின் அரவணைப்பில் திருத்துவது. ஒருவருக்கொருவர் உறுதுணை என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துவது. ஒற்றுமையையும் நேசத்தையும் வளர்ப்பது!
இன்றைய நவீன உலகில் பல்வேறு சவால்கள். கல்விச்சாலை தொடங்கி பணித்தளங்கள் வரையில் பல பிரச்சினைகள்; ஒவ்வொருவருக்கும் மன அழுத்தங்கள். இவற்றை எல்லாம் சரிசெய்து, மன அழுத்தங்களை நீக்கி மகிழ்ச்சியை மலரச் செய்வதற்கு குடும்ப அமைப்பினால் மட்டுமே முடியும்.
குடும்பம் என்றால் ஏதோ பெயரளவிலான ஒரு கட்டமைப்பு அல்ல. அது உறவுகளின் கூட்டாட்சி. அன்பு, ஆசை, கருணை, மகிழ்ச்சி என எல்லா இன்பங்களும் உலவுகின்ற மன்றம். தியாகம், தவம், வரம் - எல்லாமே குடும்பம்தான்.
போதைப் பொருட்களும், தீய தொடர்புகளுக்கான வாய்ப்புகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில், குடும்ப ஐக்கியத்தை வலுப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சம்பாத்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள், வாழ்வின் சந்தோஷத்தை இழந்துவிடுகிறார்கள். சந்தோஷத்தையே சம்பத்தாகக் கருதுபவர்கள், குடும்பத்தை அன்பின் ஆலயமாகப் பார்க்கிறார்கள். குடும்பம் என்பது எந்திரங்களால் ஆனதல்ல; உள்ளங்களால் ஆனது. இல்லம் என்பது கட்டிடம் அல்ல; இன்பத்தின் ஊற்று.
பெற்றோர் ஒருமித்த கருத்துடன் இயங்கும் குடும்பங்களில், பிள்ளைகள் மகிழ்ந்திருப்பார்கள்; ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறுவார்கள். நல்ல சமுதாயம் தழைத்தோங்கும்.