சிறப்புக் கட்டுரைகள்

முற்பிறவியின் தாக்கம்

Published On 2025-02-12 14:49 IST   |   Update On 2025-02-12 14:49:00 IST
  • மறு பிறவி பற்றிய செய்திகளை புராணங்கள் மட்டுமன்றி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்களும் சொல்கின்றன.
  • சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.

மறு பிறவி பற்றிய செய்திகளை புராணங்கள் மட்டுமன்றி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்களும் சொல்கின்றன. அறிவியல் ஆய்வுகளும் மறுபிறப்பைப் பற்றி சில ஆச்சரியமூட்டும் தகவல்களைக் கொடுத்துள்ளன.

'2500 ஆண்டுகளுக்குப் பின் மைத்ரேஜன் என்ற பெயரில் மீண்டும் பிறப்பேன்' என்றார் புத்தர்.

"முற்பிறவியில் நீங்கள் எதுவாக இருந்தீர்கள் என்பதை அறிந்து கொண்டால் தற்போதைய உங்கள் வாழ்க்கை சிக்கலாகிவிடும். சென்ற பிறவியின் விருப்பு வெறுப்புகளை தாங்க வேண்டி வரும் அது உங்களது வாழ்க்கை முறையே மாற்றிவிடும்" என்கிறார் ஓஷோ.

இப்படியெல்லாம் யார் என்ன சொல்லி வைத்திருந்தாலும் நடக்க வேண்டியது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மிகவும் முற்போக்குச் சிந்தனை உள்ளவள்தான் சாலினி. மூட நம்பிக்கைகளைக் கண்டு எள்ளி நகையாடுபவள்தான். ஆனால் அனைத்தும் அவள் கட்டுப்பாட்டையும் மீறி அல்லவா நடக்கிறது.

இன்றளவும் உலகளாவிய அளவில் மறு பிறவி பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. மனிதன் இறக்கிறான். இறந்த பின் ஆவி நிலை அடைகின்றான். அவன் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப சொர்கத்தையோ, நரகத்தையோ அடைகிறான். அவற்றில் சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.

தத்துவ ஞானி சாக்ரடீசு மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார். மரணத்திற்குப் பின் ஆன்மா ஹேடஸ் என்ற சூட்சும உலகிற்குச் சென்று பல நதிகளைக் கடக்கும். பின் பல்வேறு அனுபவங்களைப் பெற்று மறுபிறவி எடுக்கும் என்று குறிப்பிடுகிறார்.

காரணம் அறியாமல் சிலரை வெறுப்பது, காரணம் புரியாமல் சிலரை விரும்புவது எல்லாம் முற்பிறப்பின் விளைவே என்றும் கூறப்படுகிறது.

CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலில் ஆய்வாளர் DOLORES CANNON என்பவர் இறந்து போன ஆவிகளுடன் பேசுபவர். அவர் முற்பிறவிச் செயல்களும் மணங்களும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவுபெற்று, அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன. மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனையும் மீறி, அவனுடைய விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான் என்கிறார். இதே நிலைதான் சாலினிக்கும் ஏற்பட்டது. அவள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து வெகு தொலைவிற்கு வந்துவிட்டாள்.

முற்பிறவி பற்றி பல ஆய்வாளர்கள் பல்வேறு தகவல்களைக் கூறினாலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரான கனடாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மரு. இயான் இசுடீவன்சன், உலகெங்கும் பயணம் மேற்கொண்டு முற்பிறவி நினைவுகள் வந்ததாகக் கூறப்படுபவர்களை நேரில் சென்று சந்தித்து, அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள் குறித்தும் ஆராய்ந்து இறுதியாக சிலருக்கு மட்டும் முற்பிறவி நினைவுகள் ஏற்படுவது உண்மையே என்றும் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இவருடைய ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். பல உளவியல் மருத்துவர்களும்கூட நம்ப முடியாத பல செய்திகளை பதிவு செய்து கொண்டுதான் வருகின்றனர். இவ்வளவு பீடிகையும் எதற்கு என்று கேட்டீர்களானால், அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களே அவற்றை விளங்கச் செய்யும்.

ஆங்கில வரலாற்றாசிரியர் ஹுல்பெர்ட் கூற்றுப்படி கயா அரசு கொரியாவுக்கு வெளியில் இருந்து உள் நுழைந்த சிறந்த வாழ்வியல் மற்றும் அரசாளுமையில் சிறந்த ஒரு குழுவால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதையும், தென் கொரியாவின் கயா அரசு பற்றிய வரலாற்றாய்வுக்கு ஆய்வாளர்களுக்கு அதிகம் அறிமுகமான ஆவணமாகவும் உள்ள சாம்குக் யுசா பற்றியும், தங்கள் நாட்டை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய மார்க்கோபோலோவின் பயணத் தொகுப்பு பற்றியும் விரிவான விளக்கம் அளித்தார் யாங்க்.

"எங்கள் நாடு இன்று உலக அரங்கில் தொழில்நுட்பம், சமூக வளர்ச்சி எனும் அனைத்திலும் முன்னணியில் இருப்பதற்கான முக்கிய காரணம் என்றால் அது ஈராயிரம் ஆண்டுக்கு முன்னால் எங்கள் சுரோ மன்னனின் புதுமணப் பெண்ணாக, 16 வயதில் அடியெடுத்து வைத்து, பட்டத்து அரசியாக 157 ஆண்டுகள் வாழ்ந்து தாம் புகுந்த மண்ணை வானளாவ உயர்த்திவிட்டுச் சென்றுள்ளதால்தான் என்றே எம் மக்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். எங்கள் முன்னேற்றப்பாதையின் வித்திட்ட அந்த தெய்வப் பெண் இன்று எங்கள் குலதெய்வமாகவே இருக்கிறார். 1ஆம் நூற்றாண்டில் வெகு தொலைவு கடல் கடந்து வந்தபோது கயா என்ற ஒரு சிறிய பகுதியின் தலைவனாக மட்டுமே இருந்த சுரோவை மணம் புரிந்து அவனை பேரரசனாக உருவாக்கியதோடு எங்கள் நாட்டையும் செல்வ வளமிக்க சுவர்க பூமியாக மாற்றியிருக்கிறார். கலப்புத் திருமணம் செய்து கொண்ட முதல் பெண்ணரசி என்ற பெருமையைப் பெற்றவர், எங்கள் நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திட்டவராகி மக்கள் மனதில் நீங்காததொரு இடத்தைப் பிடித்துவிட்டார்" என்று உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தார்.

 

பவளசங்கரி, 63743 81820

கொரிய அரசி ஹியோ ஹவாங் ஓக் பற்றிய செய்திகளை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த சாலினி ஒரு கட்டத்தில் உடலெல்லாம் முறுக்கிக் கொள்ள வித்தியாசமாகக் காணப்பட்டாள். அருகில் இருந்த ஆந்திரப் பெண் அவள் தோற்றத்தைப் பார்த்து அப்படியே உறைந்து நின்றாள்.

"என்ன ஆயிற்று இவளுக்கு? என்று சிந்தித்தவாறு சாலினியின் அருகில் சென்று,

"ஏதும் உடல் நலக்குறைவாக உள்ளதா? குளிர்பானம் ஏதாவது அருந்துகிறீர்களா? தண்ணீர் கொண்டு வரச்சொல்லவா?" என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து மற்றவர்களும் என்னவோ, ஏதோ என்று அவளருகில் வந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவள் முகத்திலும், கண் பார்வையிலும் வெளிப்படையான மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருந்தன. மிக அமைதியான தோற்றமும், நிதானமாகப் பேசும் இயல்பும் கொண்ட சாலினி முற்றிலும் எதிர்மறையாக, அதிகாரத் தோரணையுடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்ததோடு, அதே தோரணையில் பேசவும் தயாராக ஆரம்பித்திருந்தாள்.

இதை ஏதும் அறியாத கொரிய ஆய்வாளர் யாங்க் மிகவும் ஆர்வமாக, உணர்வுப்பூர்வமான ஒரு நிலையில் தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தவர், அரசி தொடர்பான மேலும் ஒரு சம்பவத்தை விளக்கினார்.

"கொரிய ஆய்வாளர் கிம் என்பவர் எங்கள் நாட்டின் பெரும்பாலான மஞ்சள் நிற மனிதர்களிடையே தான் மட்டும் கருமை நிறமாக இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும் என்று தங்கள் பரம்பரையின் வேரைத் தேடிக் கொண்டிருக்கையில் தங்கள் நாட்டின் வரலாற்றின் முக்கியமான ஆவணமாக இருக்கும், 'சாம்குக்யுசா' என்ற தொன்மம் பற்றி அறிகிறார். தங்கள் மூதாதையர் ஒரு அயலக இளவரசியின் கொரிய இனக்கலப்பால் இருக்குமோ என்ற யூகத்துடன் தன் தேடலைத் தொடங்குகிறார்.

இதன் அடிப்படையில், தொல்லியல் அறிஞர் கிம் தன்னுடைய மூதாதையரைத் தேடி பல பகுதிகளுக்குப் பயணம் செய்கிறார். கொரிய அரசியின் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருந்த இரட்டை மீன் சின்னம் ஒரு அசைக்க முடியாத ஆதாரம் என்ற நம்பிக்கையில், அயோத்தியில் காணும் இடமெல்லாம இரட்டை மீன்கள் சின்னங்களாக வடித்திருப்பதாகக் குறிப்பிடுவதைக் கூடுதல் ஆதாரமாகக் கருதினார். கொரிய தொலைக்காட்சிக்கான தொல்லியல் தொடருக்காக அவர் பாகிசுத்தான் வடமேற்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தை இந்த தேடுதலுக்குப் பயன்படுத்திக் கொண்டவர் முதலில் மொகஞ்சதாரோ சென்று இரட்டை மீன் தொடர்பான தொல்பொருள் ஆதாரங்களைத் தேடினார். எதுவும் கிட்டாத நிலையில் அவரின் அடுத்த நகர்வு பாகிசுத்தானாக அமைந்தது. பாகிசுத்தான் பெசாவர் நகருக்குச் சென்ற அவருக்கு இரட்டை மீன் சின்னம் அனைத்து வாகனங்களிலும், ஓட்டுநர்களின் தலையணியிலும் இருப்பதைக் கண்டார். ஆயினும் பாகிசுத்தான் அறிஞர்கள் இரட்டை மீன் சின்னம் உள்ள அரச குடும்பம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

அடுத்த அனுமானம் அந்த இளவரசி தன்னுடைய நாடு ஆயுத்தா என்று கூறியதாக உள்ள குறிப்பு. அதன் அடிப்படையில் அறிஞர் கிம் தாய்லாந்து சென்று பின்னர் அங்கிருந்து அயோத்தியா சென்று அங்கே இருந்த மீன் சின்னத்தையும் அங்கு வாழ்ந்த அரச குடும்பத்தையும் இணைத்து கொரிய அரசி அயோத்தியாவின் இளவரசி என்ற முடிவுக்கு வந்தார். இருப்பினும் அதில் முழுமையான உடன்பாடு அற்றவராக இரட்டை மீன் சின்னம் தொடர்பான மர்ம முடிச்சு தொடர்வதாகவே குறிப்பிட்டுள்ளார்", என்று அந்த ஆய்வாளர் பேசி முடித்த அடுத்த நொடியில் அங்கு ஒரு பிரளயமே நடந்தது போன்ற சூழல் உருவானது.

சாலினியின் தோற்றமும், குரலும், நடவடிக்கையும் முற்றிலுமாக மாறியிருந்தது. "ஹ..ஹ..ஹா" என்ற அவளுடைய சிரிப்பு இடியென முழங்கியதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் அமைதியானார்கள். ஒரு சில நொடிகள் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே நின்றிருந்தார்கள்.

சாலினியோ, சிரித்து முடித்தவள், "ஏன் இத்துணைக் குழப்பங்கள்? உங்கள் தெய்வப் பெண் எங்கிருந்து எப்படி வந்தாள் என்பதுதானே உங்கள் ஐயப்பாடு? சொல்கிறேன், கேளுங்கள். அதற்குத்தானே மீண்டும் வந்திருக்கிறேன்" என்று தெளிவாக பேச ஆரம்பித்ததும், அங்கு மயான அமைதி நிலவியது. இதற்குள் செய்தி பரவ ஆரம்பிக்க, ஆய்வாளர்களும், பொது மக்களும், பத்திரிக்கையாளர்களும் குழும ஆரம்பித்திருந்தனர். அவள் அப்படி என்ன சொல்லப் போகிறாள் என்ற பேரார்வத்துடன் காத்திருந்தனர் அனைவரும்!

(தொடரும்)

Tags:    

Similar News