அருணகிரிநாதருக்கு காட்சியளித்த முருகர்!
- தம் வேலால் அருணகிரியார் நாவிலே ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்தார்.
- தமிழ்த்தொண்டும் தவத்தொண்டும் செய்துவந்த அருணகிரியார் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று பாடல்கள் புனைந்து முருகக் கடவுளை வழிபட்டு வந்தார்.
முருகனிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றோர் மூவர் மட்டுமே! முதலாமவர் அகத்தியர், இரண்டாமவர் அருணகிரிநாதர், மூன்றாமவர் பாம்பன் சுவாமிகள், இவர்கள் மூவர் தவிர வேறு யாருக்கும் அந்த மகாபாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை. மகான்கள், ஞானிகள் பலர் முருகனைத் தொழுதிருக்கலாம். அவர்தம் காட்சியினையும் பார்த்திருக்கலாம். அடியார்களாகவும், அருளாளர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் நேரடி உபதேசம் பெற்றது இம்மூவர் மட்டுமே!
அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வணிகர் குலத்தில் பிறந்தார். தந்தை திருவெண்காடர். தாயார் முத்தம்மை.
அருணகிரிக்கு ஆதி என்றொரு மூத்த சகோதரி இருந்தார். அருணகிரியின் தந்தை சிறுவயதிலேயே துறவு பூண்டு சென்று விட்டார். அதனால் அவரை அன்போடு வளர்த்து வந்தாள் அன்னை முத்தம்மை. அருணகிரிக்கு இளவயதிலேயே நல்ல அறிவாற்றலும், அரிய நினைவாற்றலும், கவித்திறனும் இருந்தன. அவர் திண்ணைப் பள்ளியில் படித்துவரும் காலத்தில் திடீரெனத் தாயார் முத்தம்மை காலமானார். தந்தை, தாய் இருவரையும் இழந்து வருந்திய அருணகிரியைத் தாய்போல் இருந்து அவரது சகோதரி ஆதி வளர்த்து வந்தார்.
ஆனால் இளமை மிடுக்காலும், செல்வச் செருக்கினாலும், தீய நண்பர்களின் தொடர்பாலும் பரத்தையரை நாடிச்செல்ல ஆரம்பித்தார்.
கண்டிக்க யாருமில்லை. சகோதரியின் அறிவுரை காதில் ஏறவில்லை. நாளடைவில் உடல்நலம் சீர்குலைந்தது. நோய் தாக்கியது. நோய் முற்றிய நிலையிலும் காம வேட்கை தணியவில்லை. பரத்தையர் இவரை ஒதுக்கினர். இவரைத் தவிர்ப்பதற்காக மிக அதிகப் பொருள் கேட்டனர். செல்வம் குன்றியதால் அருணகிரியாரின் கையில் பணமில்லை.
இளமை வேட்கையால் தவித்த அவர், பரத்தையரிடம் செல்வதற்காக சகோதரியிடம் பொருள் கேட்டார். வறுமையின் பிடியில் இருந்த சகோதரியோ நொந்துபோய், தன்னிடம் பணமில்லை என்றும் நானும் ஒரு பெண்தான்' என்றும் கூறினார். அந்தச் சொல் தீயாய் அருணகிரியின் உள்ளத்தைச் சுட்டது. ஆசை விட்டது. அகம் தெளிந்தது. உடல் தளர்ந்தது. ஆனாலும் குற்றச்செயல் முள்ளாய் மனதை உறுத்த, செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஒரு கோபுரத்தின் மேலேறிக் கீழே குதித்தார். அப்போது இவரது முன்வினைப் பயனால் முதியவர் ரூபத்தில் அங்கே தோன்றிய முருகன். அருணகிரியைத் தன் கையில் தாங்கினார். உடல் நோயினை நீக்கினார். முருகன் காட்சி தந்து அருணகிரியின் மனவருத்தம் போக்கினார்.
முருகனின் காட்சி கண்டு மகிழ்ந்த அருணகிரி அழுது புலம்பி தவித்தார். அருணகிரியின் நிலை கண்டு இரங்கிய முருகப் பெருமான் தம் வேலால் அருணகிரியார் நாவிலே 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்தார். அதோடு ஞான உபதேசம் அளித்தார். அருணகிரி ஆனந்த அருள் வெள்ளத்தில் குளித்தார்.
பின் அருணகிரியின் தாயார் பெயரான 'முத்து' என்பதையே முதல் வாக்கியமாகக் கொண்டு தம்மைப் பாடும்படி 'முத்தைத் தரு' என முதல் சொல்லை எடுத்துக் கொடுத்தார் முருகப்பெருமான்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்.. என்று தொடங்கி பாடினார்.
அதுமுதல் பரவசநிலையில் திளைத்தார் அருணகிரி. திருவண்ணாமலை ஆலயத்தின் கம்பத்து இளையனார் சந்நிதியில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். தவத்தில் இருந்து மீண்ட வேளைகளில் சத்தமாகப் பாடல்களை மனமுருகிப் பாடினார். விரைவிலேயே அருணகிரிக்கு ஞானம் கைவரப் பெற்றது. உடல் பொன்போல் ஒளி வீசிற்று. முருகன் மீது எண்ணற்ற பாடல்களைப் பாடினார். அவரைத் தரிசிக்க பக்தர் கூட்டம் பெருகியது. ஆனாலும் அருணகிரி எல்லோரையும் தவிர்த்து எப்போதும் தவத்திலேயே ஆழ்ந்திருந்தார். இடையிலே ஒற்றை ஆடை தவிர்த்து வேறேதும் அணியாதவராய், பசித்தபோது மட்டும் ஒரு கவளம் உணவு உட்கொண்டு வாழ்க்கை நடத்தினார். இதனால் அருணகிரியின் பெருமை நாடெங்கும் பரவியது.
தமிழ்த்தொண்டும் தவத்தொண்டும் செய்துவந்த அருணகிரியார் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று பாடல்கள் புனைந்து முருகக் கடவுளை வழிபட்டு வந்தார். பின்னர் முருகப்பெருமான் அருணகிரிநாதரை வயலூர் வருமாறு உத்தரவிட்டார்.
வயலூரில் பொய்யாக் கணபதி முன் "கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழைப் பாடித் துதித்து, முருகனையும் பாடிவிட்டு அங்கிருந்து திருச்சி, மதுரை, முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு திருப்பரங்குன்றம் வந்தார். பிறகு அங்கு இருந்து திருச்செந்தூருக்குப் புறப்பட்டார். காடு அடர்ந்திருந்ததால் வழி தெரியவில்லை. முருகனை உருகி வேண்டினார். அவர் முன் மயில் ஒன்று பறந்து வந்து பாதையைக் காட்டியது. இன்றும் மதுரை செல்லும் வழியில் மயில்களைக் காணலாம்.
திருச்செந்தூரைக் கண்டார். கயிலாயத்தைக் கண்டது போல மகிழ்ந்தார். கயிலை மலையனைய செந்தில் என்று திருப்புகழ் பாடினார். முருகனின் நடனக் காட்சியைக் காண விரும்பிப் பாடினார். அவர் வேண்டுகோளை ஏற்ற முருகன் நடனம் ஆடிக் காட்டினார்.
இன்றும் பெருவிழாவின் ஏழாம் திருவிழா அன்று சிவப்புச் சாத்தி ஆறுமுகப் பெருருமான் எழுந்தருளும் போது, சப்பரத்தின் பின்புறத்தை நோக்கினால் நடராசர் கோலத்திலே முருகன் காட்சி தருவதைக் காணலாம்.
திருச்செந்தூரில் வழிபாடுகளை முடித்த பிறகு பழனி வந்து முருகவேலைத் துதிக்க முருகன் அவருக்கு ஜெபமாலையைத் தந்து அருள்புரிந்தார். சுவாமிமலையில் அவருடைய தமக்கை ஆதியம்மையார் அவரைக் கண்டு வணங்கி முருகனடியைச் சேர வேண்டினார். அருணகிரியார் முருகப்பெருமானைத் துதிக்க முருகன் காட்சி தந்து ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். மீண்டும் வயலூர் வந்த அருணகிரிநாதர் கனவில் முருகன் தோன்றி விராலிமலைக்கு வரும்படி பணித்தார்.
அந்த இரவில் அவர் விராலிமலைக்கு நடந்து சென்றார். நடுவில் வழி தெரியாமல் தவிக்க முருகப்பெருமான் வேடன் வடிவத்தில் வந்து அருணகிரியாரை விராலிமலையில் சேர்த்து காட்சி தந்து அட்டமாசித்திகளையும் அளித்து அருள் புரிந்தார். திருச்செந்தூரில் வில்லிபுத்தூராரை வாதில் வென்றார். அவருடன் போட்டியிட்டபோது பாடிய நூல் "கந்தரந்தாதி". பல தலங்களைத் தரிசனம் செய்துக் கொண்டு திருவண்ணாமலையை அடைந்தார்.
பின்னர் அருணகிரியார் வடநாடு சென்று பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு அரித்துவாரை அடைந்தபோது தவசீலர் ஒருவர் அவரைப் பற்றி விசாரித்தார். அருணகிரியாரும் தம்மைப் பற்றிக் கூற, அதற்கு அந்த தவசீலர் தாமே அவரது தந்தை என்று கூறி தமது உயிரை விட்டார். தம்மை நல்ல நிலையில் பார்க்கவே தமது தந்தையார் இத்தனைக் காலம் உயிரோடு இருந்தார் என்று கருதி அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இதற்கிடையே அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை மங்கியது.
அங்கு வந்து சேர்ந்த சம்பந்தாண்டான், அருணகிரியாரை வெல்ல வேண்டும் என்று கருதி மன்னனிடம், அருணகிரியார் பாரிஜாத மலர் கொண்டு வந்தால் கண்நோய் தீரும் என்று கூறினான். திருவண்ணாமலை திரும்பிய அருணகிரியாரிடம் மன்னன் தனது கருத்தைத் தெரிவிக்க, அருணகிரியார் தமது திருமேனியை கோயிலின் பேய்க்கோபுரத்தில் வைத்து விட்டு கிளி உருவில் விண்ணுலகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னனுக்குப் பார்வை பெற்றுத் தந்தார். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அருணகிரியார் "கந்தரனுபூதி" பாடினார்.
இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனு பூதிப் பாடல் வரிகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாக வெளியிட்டுள்ளது.
அருணகிரியார் விண்ணுலகம் சென்றபோது, சம்பந்தாண்டான் அவருடைய உடலை எடுத்து கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் புதைத்துவிட்டு ஓடிவிட்டான். விஷயமறிந்த மன்னன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான். கிளி உருவில் இருந்த அருணகிரியார் தனது பழைய உருவைக் காட்டி அருள்புரிந்து, ஆனி மாதம், பவுர்ணமி நாளில், மூல நட்சத்திரத்தன்று கந்தவேலின் திருவடிகளை அடைந்தார்.
நாளடைவில் இறைவனோடு இரண்டறக் கலந்து, அத்வைத நிலையாகிய சாயுஜ்ய நிலையை அடைந்தவுடன், கோவிலில் மேலைப் பிரகாரத்தில் அடக்கம் செய்து சிறிய கோயிலும் அமைத்தான் மன்னன் பிரபுடதேவ ராயன். அதில் அருணகிரி நாதரின் கல் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்தச் சமாதிக் கோயில் இன்றும் உள்ளது. கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழு கூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவை இவர் பாடிய பிற பாடல்களின் தொகுப்பு. அவர் பாடிய 1327 பாடல்களும் "திருப்புகழ்" என்று வழங்கப்படுகிறது.
திருச்செந்தூர் தலத்தில் மட்டும் அவர் 83 பாடல்கள் பாடினார். அவை ஒவ்வொன்றும் அற்புதம் நிகழ்த்துபவை. அதுபற்றி அடுத்த வாரம் காணலாம்.