சிறப்புக் கட்டுரைகள்

மக்களிடையே சமூக-சமய புரட்சி ஏற்படுத்திய வைகுண்டர்!

Published On 2025-02-15 14:34 IST   |   Update On 2025-02-15 14:34:00 IST
  • நெல்லை மாவட்டத்தில் மறவர், நம்பியார், வெள்ளாளர், யாதவர், ஆதிதிராவிடர், நாடார் என பலபிரிவினரும் நிழல்தாங்கல்கள் கொண்டுள்ளனர்.
  • அய்யாவை வழிபடும் மக்கள் தர்மம் அளிப்பதனை வழிபாட்டில் ஓர் முக்கிய நெறியாக கொண்டுள்ளனர்.

இன்று தமிழ்நாடு மட்டுமன்றி கேரளாவிலும் பல பகுதிகளில் அய்யாவைகுண்டரின் நிழல்தாங்கல்கள் பரந்து காணப்படுகின்றன. எனினும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தான் நிழல்தாங்கல்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குமரி மாவட்டத்தில் நிழல்தாங்கல்கள் இல்லாத இந்து சமயத்தினர் வாழும் கிராமத்தினை பார்ப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. நாடார் சமூகத்தவர் மட்டுமின்றி, வெள்ளாளர், நாயர், செட்டியார், வண்ணார், நாவிதர், பறையர், பள்ளர், அளவர், தச்சர், பணிக்கர் என அனைத்து சமூகத்தவர்களும் நிழல்தாங்கல்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

கரம்பவிளை, சுந்தரபுரம், நரிக்குளம், கொட்டாரம், வாரியூர், மணலோடை, மூக்கரைக்கல், இடையன்விளை போன்ற கிராமங்களில் இன்று இயங்கி வரும் நிழல்தாங்கல்கள் இதனை உறுதி செய்கின்றன. மேலும் அகஸ்தீஸ்வரம், லீபுரம், பஞ்சலிங்கபுரம், சுண்டன்பரப்பு, குண்டல், முகிலன் குடியிருப்பு, சந்தையடி, பெரியவிளை, கல்விளை, பாலப்பள்ளம், புத்தளம், பெருவிளை, லாயம், ஆரல்வாய்மொழி வீயென்னூர் என நிழல்தாங்கல்கள் செயல்படும் கிராமங்களின் பெயர்ப்பட்டியலை கூறினால் பக்கங்கள் மிகுதியாகும்.

 

நெல்லை மாவட்டத்தில் மறவர், நம்பியார், வெள்ளாளர், யாதவர், ஆதிதிராவிடர், நாடார் என பலபிரிவினரும் நிழல்தாங்கல்கள் கொண்டுள்ளனர். வள்ளியூர், நாங்குனேரி, ஏரல், கடையம், ஆலங்குளம், உடன்குடி, அழகிவிளை, கூடங்குளம், பணக்குடி, போலையர்புரம், களக்காடு, கயத்தாறு, கோவில்பட்டி, தூத்துக்குடி, புளியம்பட்டி, முக்கூடல், கீழக்கட்டளை, சிறுமணச்சி, மேலமங்கலக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் தாங்கல்கள் பரந்துக் காணப்படுகின்றன. இவை தவிர, ராமநாதபுரம், மதுரை, திருச்சி முதலிய மாவட்டங்களிலும் நிழல் தாங்கல்கள் உருவாகியிருக்கின்றன.

1934-ம் ஆண்டு சிவகாசியில் திருத்தங்கல் நெடுஞ்சாலையில் முத்தப்ப நாடார், மாடசுவாமி பிள்ளை ஆகியோர் முயற்சியால் நிழல்தாங்கல் நிறுவப்பட்டதுடன் கிணறு, சோலை ஏற்படுத்தி தாங்கல் சிறப்புற நடைபெற்றிடவும் வகை செய்தனர். இன்று இத்தாங்கல் மேலும் சீரமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

கேரள மாநிலத்தில் நாயர், பணிக்கர், குறுப்பு, காணிக்காரர் என பல பிரிவினரும் தாங்கல்கள் அமைத்துள்ளனர். கரமனை, கோட்டக்கல், செங்கனூர், பாலராமபுரம், இடிச்சக்க பலாமூடு, பீர்மேடு, மூணாறு, நெய்யாற்றங்கரை, பாறசாலை எனபல இடங்களிலும் தாங்கல்கள் காணப்படுகின்றன. இங்ஙனம் நிழல்தாங்கல்களின் துரித வளர்ச்சியானது சுவாமிகளின் இயக்கம், மக்கள் மத்தியில் பெற்ற ஆதரவை உறுதி செய்கின்றது. சுவாமிகளின் கொள்கை விளக்கக்கூடங்களாக உருவெடுத்தாலும் இத்தாங்கல்கள் அந்தந்தப்பகுதியில் வாழும் மக்களின் வழிபாட்டுக்கூடங்களாகவும், தர்ம பரிபாலன இல்லங்களாகவும் விளங்குகின்றன. தாங்கல்களின் பெருக்கம் சுவாமிகளின் போதனைகளை மக்களிடம் முறைப்படியாக எடுத்துச் செல்லவும், சமுதாயத்தில் ஒரு விழிப்பு நிலையை ஏற்படுத்தவும் வகை செய்துள்ளது. அவரது சீர்திருத்தத்தின் தாக்குதலால் அவர் மறைந்த சில ஆண்டுகளில் மக்கள் புரட்சியாக உருவெடுத்து வெற்றியும் கண்டது.

சுவாமிகள் தனது அன்பர்களிடம் கலியை அழிக்க 'தன்மானத்தை' ஆயுதமாக ஏந்துமாறு முழக்கமிட்டார். நாடார் சமூகப்பெண்களை தோள்சேலை அணிந்து கொள்ள ஊக்கப்படுத்தினார். மாதர்தம் நலன் பேணுவதே நமது தலையாய கடமை என்று மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தார். அவர் எழுப்பிய தன்மான உணர்வு அவர் ஊட்டிய ஆண்மை நெறி மக்களை சிந்திக்க வைத்தது; மக்களின் இழிநிலை அகற்ற வெகுண்டெழச் செய்தது. சுவாமிகள் மூட்டிய புரட்சிக் கனல் அவர் மறைந்த சில ஆண்டுகளுக்குள் எரிமலையாக வெடித்தது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் பிராமணர்களின் ஆதிக்கத்துட்பட்ட கோயில்களுள் செல்ல உரிமை மறுக்கப்பட்ட நிலையில் தங்கள் காணிக்கை பொருட்களைக்கூட நேரடியாக அளிக்க அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வெளியே தூரத்தில் நின்று தான் காணிக்கை செலுத்த வேண்டியதாயிற்று. உதாரணமாக, சுசீந்தரம் தாணுமாலையன் கோயிலுள் அனுமதி மறுக்கப்பட்ட நாடார், ஈழவர், பறையர், புலையர் போன்ற சமூகத்தவர்கள் கோயிலில் இருந்து ஒரு பர்லாங் தூரத்திற்கப்பால் நின்றே வழிபட வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் காலடிபட்டுவிட்டாலே கோயில் தெருக்கள் கூட தீட்டுப்பட்டு விட்டதாக கருதப்பட்டது. திருவிழா காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக தெரு நுழைவாயில்களில் திரைகள் (தெரு மறச்சான்கள்) போடப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் கூட அந்நாட்களில் அனுமதி மறுக்கப்பட்டனர்.

வைகுண்ட சுவாமிகள் பிராமணர்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட கோயில்களில் வழிபாடு செய்திட எவ்வித விருப்பமும் இல்லாதவராய் இருந்த போதிலும் அவரது சமூக சமய சீர்திருத்த இயக்கம் 'சமத்துவம்' நோக்கி மக்களை விரைந்தோட செய்தது. அதன் விளைவாக ஆலயங்களிலும் ஓங்கு சாதியினருக்கு இணையாக வழிபடுவதற்கு தங்களுக்கும் உரிமை உண்டு என்பதில் நாடார் சமூகத்தவர் உறுதியாக இருந்தனர். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் ஆலய நுழைவு போராட்டங்கள் பரவலாக தோன்றலாயின. வைகுண்ட சுவாமிகள் நடத்திய சீர்திருத்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-சமய வாழ்க்கையில் அரிய பல மாற்றங்களை ஏற்படுத்தியது. சமுதாயத்தில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு தாழ்வு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த சாதியில் இருந்து தோன்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற பிரதிநிதியாக செயல்பட்டு செயல்பட்டு அவர்கள் நல்வாழ்விற்காக ஆளும் வர்க்கத்தையும், அதிகார மேட்டுக் குடியினரையும் எதிர்த்து குரல் எழுப்பி தென் இந்திய சீர்திருத்த இயக்க வரலாற்றில் சுவாமிகள் ஒரு சமூக புரட்சியாளராக இடம் பெறுகின்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய முன்னேற்றத்திற்காக சுவாமிகள் ஆற்றிய பணிகள், மக்கள் மத்தியில் அவரை அய்யா என போற்றிடச் செய்ததுடன், வணக்கத்திற்குரிய அவதார புருஷராகவும் மாற்றின. எனினும் திருமாலின் அவதாரம், கிருஷ்ண அவதாரம் போலல்லாமல், "என்னினும் பெரியோனீங்கள் யான் உங்கள்தனிலும் மேலான்" என்ற அடிப்படையில் சுவாமிகள் பாமர மக்களுடன் இணைந்தே செயல்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புராண கால அவதாரங்களை போன்று மக்களிடமிருந்து ெவகுதூரம் விலகி கடவுள் என்ற முத்திரையில் தனித்தே நிற்காமல் சுவாமிகள் அனைத்து மக்கள் தம் குடும்பத்துள் ஒருவராய்-தந்தையாய் விளங்கி நிற்கிறார். அய்யாவை வழிபடும் மக்கள் தர்மம் அளிப்பதனை வழிபாட்டில் ஓர் முக்கிய நெறியாக கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News