- நமது நாக்கே இனிப்பாக மாறி அமைந்து இனிப்பைக் காட்டுகிறது.
- இரண்டு நண்பர்கள் ஒரு மடாலயத்துக்கு சென்றனர்.
"ஞானம் அடைந்த பிறகுதான் வாழவே ஆரம்பிக்கிறோம்" என்றார் நிசர்க தத்த மகராஜ் என்ற ஞானி.
"ஞானம் என்று எதுவுமே கிடையாது!" என்று கூறிவிட்டார் ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற ஞானி.
இவற்றில் எதுதான் உண்மை?
உண்மையில் இருவருடைய கருத்துகளும் சரியானவையே!
இதனைத் தெளிவுபடுத்த, ஞானம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்பதையும் நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.
ஆன்மிக சாஸ்திரங்களில் மனோ லயம் மற்றும் மனோ நாசம் என இரண்டு விதமான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நாம் எதையுமே சாப்பிடாமல் இருக்கும்போது நமது நாக்கு என்ன சுவையோடு இருக்கும்?
அது எதனையும் காட்டாது சுவையற்று இருக்கும்.
இப்போது நாம் நமது நாக்கின் மீது இனிப்பையோ அல்லது கசப்பையோ வைத்திடுவோமேயானால் என்ன ஆகும்?
நமது நாக்கே இனிப்பாக மாறி அமைந்து இனிப்பைக் காட்டுகிறது. அது போல் கசப்பாக மாறி அமைந்து கசப்பைக் காட்டுகிறது.
இவ்வாறுதான் நமது மனமும் செயல்படுகிறது.
தெருவில் நண்பர் வந்து கொண்டிருக்கிறார். அவரை நண்பர் என்று எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
நம்முடைய மனதே ஒரு விநாடி நண்பராக வடிவெடுத்து நண்பரைப் புரிந்து கொள்கிறது.
இப்படி நாம் எதனைப் புரிந்து கொள்வதானாலும் நம் மனம் அதுவாகவே வடிவெடுத்துதான் புரிந்து கொள்கிறோம்.
மனம் இவ்வாறு வடிவெடுப்பதை மனோ லயம் என்று கூறுகிறோம்.
ஸ்ரீ பகவத்
தெருவில் வாகனம் ஒன்றும் வருகிறது. அந்த வாகனத்தை வாகனம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நமது மனம் நண்பராக வடிவெடுத்ததில் இருந்து விடுபட்டால் மட்டுமே அது புதிய வடிவத்துக்குச் செல்லமுடியும். எடுத்த வடிவத்தில் இருந்து விடுபடுவதை மனோ நாசம் என்று கூறுகிறோம்.
லயம் மட்டுமே அனுபவமாக இருக்கிறது. நாசம் என்பது அனுபவம் அல்ல. அனுபவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமே
லயம் சிறந்ததா அல்லது லயத்திலிருந்து விடுபடுவது சிறந்ததா?
இரண்டு நண்பர்கள் ஒரு மடாலயத்துக்கு சென்றனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் மடாலயத்தின் தலைவர் அவர்களிடம், "உங்களுக்கு குடிப்பதற்கு என்ன வேண்டும்? பழச்சாறுகள் எவையாவது வழங்கவா அல்லது மடாலயத்தின் சிறந்த பானத்தை அருந்துகிறீர்களா?" என்று கேட்டார்.
நண்பர்கள் யோசித்தனர். 'நாம் சாப்பிடாத பழச்சாறுகளா? இன்று அந்த சிறந்த பானத்தை தான் குடித்து பார்ப்போமே'.
இப்படி யோசித்த அவர்கள், மடாலயத்தின் சிறந்த பானத்தையே வழங்கும் படி கேட்டுக் கொண்டார்கள்.
இதுதான் மடாலயத்தின் சிறந்த பானம் என்று கூறி, அவர்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் வழங்கப்பட்டது.
'தண்ணீர் எனக் கூறி இருந்தால் பழச்சாறுகளைக் கேட்டிருக்கலாம்.
மடாலயத்தின் சிறந்த பானம் என்று கூறி நம்மை ஏமாற்றி விட்டார்கள்' என்று நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
மறுநாள் காலை உணவின் போதும் மடாலயத்தின் தலைவர் அவர்களிடம்,
"குடிப்பதற்கு பழச்சாறுகள் எவையாவது வழங்கவா அல்லது மடாலயத்தின் சிறந்த பானத்தையே வழங்கவா?" என்று கேட்டார்.
சுதாரித்துக் கொண்ட நண்பர்களும் சாமர்த்தியமாக, " மடாலயத்தின் சிறந்த பானத்தை நேற்றே சாப்பிட்டுப் பார்த்துவிட்டோம். இனிமேல் பழச்சாறுகளே போதும் சுவாமி!"
என்று கூறினார்கள்.
அவர்களுக்கு பழச்சாறுகள் வழங்கப்பட்டன. நண்பர்களும் அருந்தி மகிழ்ந்தனர். அதன்பிறகு அந்த நண்பர்கள் தங்கியிருந்த அத்தனை நாட்களிலும், தண்ணீரை மட்டும் அவர்களுடைய கண்களிலேயே காட்டவில்லை.
எவ்வளவு தாகமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு பழச்சாறுகள் மட்டுமே வழங்கப்பட்டன.
ஒரு வாரத்துக்குப் பிறகு மடாலயத்தின் தலைவர் மீண்டும் அவர்களிடம், "இன்று குடிப்பதற்கு பழச்சாறுகள் எவையாவது வழங்கவா அல்லது மடாலயத்தின் சிறந்த பானத்தையே வழங்கவா?" என்று
கேட்டார்.
நண்பர்கள் இருவரும் ஒரு சேர,
"மடாலயத்தின் சிறந்த பானமே எங்களுக்குப் போதும் சுவாமி!" என்று கூறினார்கள்.
பழச்சாறுகளில் சுவையையும் இருக்கிறது ; சத்துக்களும் உள்ளன. ஆனால் தண்ணீரில் அப்படி என்னதான் விசேடம் உள்ளது?
இவ்வாறுதான் மனோ லயங்களும் மனோ நாசமும் அமைந்துள்ளன. மனோ லயங்கள் அனைத்தும் வித விதமான பழச்சாறுகளைப் போன்றவையே.
நாம் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களும் மனோ லயங்களே. அத்தனை துன்பங்களும் மனோ லயங்களே.
நீங்கள் ஒரு வீட்டில் வசித்து வருகிறீர்கள். ஒரு வருடம் கழித்துப் பார்த்தாலும் அந்த வீடு அப்படியே தான் இருக்கும்.
இயற்கையின் நியதிப்படி வீட்டுச் சுவர்களில் உள்ள ஒவ்வொரு அணுவும், கனந்தோறும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் வெளிப்படையாகத் தெரியாது.
இன்று நாம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம். மீண்டும் நாம் இரண்டு நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம்.
நாம் எவரும் அடுத்தவரிடத்தில் பெரிய மாற்றம் எதனையும் காணமுடியாது.
ஆனாலும் நம் ஒவ்வொருவரின் உடலும் கணத்துக்கு கணம் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.
வீட்டுச் சுவர்களை விட, உடலின் மாற்றத்தை சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும்.
இது போல் நம்முடைய மன இயக்கமும் கணத்துக்கு கணம் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.
நம்முடைய மனம் கனந்தோறும் மாறிக் கொண்டிருப்பதை நமக்கு நாமே கூட உணர்ந்து கொள்ள முடியும்.
நம்முடைய மனதைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு விநாடியும் புதிய உணர்வுகளும், புதிய நினைவுகளுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நமது மன இயக்கத்தின் வேகமானது மின்னல் வேகத்தில் உள்ளது.
ஒளியின் வேகம் என்னவென்று நமக்குத் தெரியும். விநாடிக்கு சுமார் இரண்டு லட்சம் கிலோ மீட்டர்.
அதனால் அது ஒவ்வொரு விநாடியும் புத்தம் புதியதாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி நம்முடைய மனம் கணத்துக்கு கணம் புத்தம் புதியதாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலைக்குப் பெயர் தான் விடுதலை அல்லது முக்தி அல்லது மோட்சம் ஆகும்.
இந்த விடுதலையை ஒருவர் அடைந்திட அவர் என்ன செய்ய வேண்டும்?
எதுவுமே செய்யத் தேவையில்லை. மனதின் இயற்கையான நிலையே விடுதலைதான்.
மனோ நாசம் என்பதும், விநாடிக்கு விநாடி புதிது புதிதாக இருக்கும் விடுதலை என்பதும் ஒன்றே.
மனித வாழ்வின் - ஆன்மிக வாழ்வின் உன்னதமான உயர்நிலையே, இந்த விடுதலை தான். இந்த முக்தி தான்.
ஆனால் அதுவோ மிகவும் சர்வசாதாரணமாக உள்ளது. - இயற்கையாகவே உள்ளது.
இயற்கையாக இருக்கும் இந்த விடுதலையின் மகத்துவம் ஏன் நமக்குப் புரியவில்லை? அரிதினும் அரிதாக இருக்கும் இந்த முக்தி நிலை எப்படி நமக்கே தெரியாமல் நம்முடனேயே இருந்து வருகிறது?
அதற்குக் காரணம் நம்முடைய மனோ லயங்கள் மட்டுமே.
நம்முடைய மன அனுபவங்கள் அனைத்தும் மனோ லயங்களே.
நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும், மன அமைதியும் மிகவும் பிடித்திருக்கிறது.
அவை இரண்டுமே மனோ லயங்கள் தாம்.
பயம், வருத்தம் போன்றவை நமக்குப் பிடிக்காது. அவை இரண்டுமே மனோ லயங்கள் தாம்.
நமக்குப் பிடித்தமான அனுபவங்கள் ஏற்படும் போது அவற்றை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறோம்.
அது போல் நமக்குப் பிடிக்காத அனுபவங்கள் ஏற்படும் போது அவற்றை அப்புறப்படுத்தப் போராடி விடுகிறோம்.
இதனால் நம்முடைய மனது இரண்டு பகுதிகளாகி விடுகின்றது.
மனதின் ஒரு பகுதி நம்முடைய அனுபவமாக இருக்கிறது. அதனை நெறிப் படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றிடும் அம்சம் நமது மனதின் இன்னொரு பகுதியாக உள்ளது.
இப்படி நம் மனது இரண்டு பகுதிகளாக இருந்து செயல்படும் காரணத்தினால் மனோலயம் மட்டுமே முக்கியத்துவம் பெற்று விடுகிறது. இதனால் மனோ நாசம் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. விடுதலை புறக்கணிக்கப்பட்டு விடுகிறது.
மன அனுபவங்களைத் தேர்ந்தெடுப்பது தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்.
மன அனுபவங்களைத் தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்யத் தேவையில்லை என்று கண்டுபிடிப்பது மட்டுமே ஞானம் ஆகும்.
ஞானம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு புரிதல் மட்டுமே.
அனுபவங்களைக் கட்டுப்படுத்தாத நிலையில், மன அனுபவங்கள் யாவும் தடையற்ற ஆறாக ஓடுகின்றன.
இதுதான் விடுதலை. இதுதான் முக்தி.
தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532