null
- கதவைத் திறந்து கொண்டு அவர் ஞானியாக வெளியே வந்தார்.
- ஞானம் என்றால் என்ன என்பதை அவரும் கண்டு கொண்டார்.
பக்தி வழியில் இறைவனை வணங்குவதும், நமக்கு வேண்டியவைகளை எல்லாம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதும் சிறந்தவைகளாக போற்றப்படுகின்றன.
இவையெல்லாம் பக்தி மார்க்கத்தின் ஆரம்பகால அணுகுமுறையாகக் கருதப்படுகின்றன. அதன்பிறகு பக்தியும் பிரார்த்தனையும் இரண்டாம் பட்சமாகக் கருதப்படுகின்றன.
அதன்பிறகு, எல்லாம் அவன் செயல், அவனன்றி அணுவும் அசையாது, அவன் ஆட்டுவிக்கிறான், நான் ஆடுகிறேன் என்ற சரணாகதி அணுகுமுறை தான் முக்கியம் ஆகிவிடுகிறது.
பக்தனும் ஞானியும் சரணாகதி அம்சத்தில் ஒன்றாகி விடுகின்றனர்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி பார்த்தோம். அவர் எப்படி ஞானம் அடைந்தார் என்பதையும் பார்த்துவிடுவோம்.
ஜே.கே. எனும் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம் உண்டு. அவர் பிற்காலத்தில் உலகத்துக்கே வழி காட்டும் உலக போதகராக வருவார் என்று அவர் குழந்தையாக இருந்த போதே கூறப்பட்டது.
அவருக்குத் தேவையான பயிற்சிகளைக் கொடுத்து அவரை உருவாக்கும் நோக்கில், அன்னி பெசண்ட் அம்மையார் அவரையும் அவரது தம்பி நித்யாவையும் தத்து எடுத்து வளர்த்தார். ஜே.கே. ஆன்மிக பயிற்சிகள் பலவற்றை கற்றுக் கொண்டார். பரவச நிலைகள் பலவற்றை அடைந்தார். தியானத்தின் மூலம் தன்னை மறந்த சமாதி நிலை அனுபவங்கள் எல்லாம் அவருக்குக் கிடைத்தன.
நோய்களை குணமாக்கும் ஆற்றல் கூட அவருக்கு ஏற்பட்டது.
ஆனாலும் ஞானம் மட்டும் அவருக்கு ஏற்படவில்லை. அதனைத் தேடி தான் அவரும் காத்திருந்தார் .
அந்நிலையில் அவர்கள் பங்குவகித்த தியாசாபிகல் சொசைட்டியின் சர்வதேச மாநாடு ஒன்று சென்னையில் நடைபெற இருந்தது.
இங்கிலாந்தில் இருந்து அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் முக்கியஸ்தர்கள் மாநாட்டுக்காக கப்பலில் புறப்பட்டார்கள்.
அவர்கள் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்தார்கள். அந்நேரம் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் நித்யா சுகவீனமாக படுக்கையில் இருந்தார். அவரை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கிருஷ்ணமூர்த்திக்கு இருந்தது.
அனைவரும் தீர்க்கதரிசனத்தின் உதவியை நாடினார்கள்.
தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறியது:
" கிருஷ்ண மூர்த்தி உலக போதகராக வருவார். அவருக்கு பன்னிரண்டு சீடர்கள் இருப்பார்கள். அவர்களுள் பிரதம சீடராக இருக்கப் போவது இந்த நித்யா தான்."
தீர்க்கதரிசனத்தை நம்பிய அவர்கள்
ஜே.கே.யுடன் கப்பலில் புறப்பட்டார்கள். கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது,
"நித்யா சீரியஸ்" என்று தந்தி வந்தது.
பயணம் செய்தவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறினர். அந்த நிலையில் அடுத்த தந்தி வந்தது, நித்யா இறந்து விட்டார் என்று.
ஜே.கே. நிலைகுலைந்து போனார். குடும்பத்தை விட்டு வெளியே வந்த அவருக்கு, நித்யா மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்து வந்தார் .
அவரே போய்விட்ட பிறகு வாழ்வதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது.
தீர்க்கதரிசனமும் ஏமாற்றிவிட்டது.
அவர் கப்பலில் உள்ள அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்து விட்டார்.
மனவேதனை அவரை அழுத்திக்கொண்டு இருக்கும் அந்த நிலையில் அவர் என்ன செய்வார்?
தியானத்தின் மூலம் உலகை மறந்து சமாதி நிலைக்குப் போகமுடியும். ஆனால் அவர் அத்தகைய முயற்சிகள் எவற்றிலும் ஈடுபடாமல் அவர் தனது மனவருத்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டார்.
அவருடைய மன இயக்கத்தை மாற்றி அமைக்கும் எந்தவொரு முயற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. நிர்வாகம் செய்யப்படாத அவருடைய மனது, சுதந்திரமாக இயங்கியது. அன்றுதான் அவர் முதன் முதலாக விடுதலையுற்ற மனதைக் கண்டு கொண்டார்.
கதவைத் திறந்து கொண்டு அவர் ஞானியாக வெளியே வந்தார்.
மகான் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. தற்செயலாக அவருடைய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
அவர் தனது குருநாதரிடம் தியானங்களைக் கற்று அவற்றை பயிற்சி செய்து வந்திருக்கிறார். தியானத்தின் வழியாக பல்வேறு ஆன்மிக அனுபவங்கள் அவருக்குக் கிடைத்துள்ளன. பிராணயாமம் செய்ததின் விளைவாக கவிதை எழுதக் கூடிய ஆற்றல் கிடைத்திருக்கிறது என்றும் கவிதைக்கும் பிராணயாமத்துக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை என்றும் கூறுகிறார்.
தொடர்ந்து ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்கள் அவருக்கு ஒரு சலிப்பையே ஏற்படுத்திவிட்டது.
அதனால் அவர் ஒரு வருடமாக எந்தப் பயிற்சியிலும் ஈடுபடாமல் சும்மாவே இருந்து விட்டார். அந்நிலையில் திடீரென அவருக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் எந்தப் பயிற்சியையும் செய்திருக்கவில்லை. அந்நிலையில் இத்தகையதொரு மாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்று தெரியவில்லை.
தன்னுடைய குருநாதர்தான் தமது தெய்வீக ஆற்றலின் மூலமாக தனக்கு இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக எண்ணிக் கொண்டார்.
அது பற்றி அவர் தனது குருநாதரிடம் கேட்டார்.
அவரும் இவருக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அரவிந்தரும் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி விளக்கமாகக் கூறினார். அதனைப் புரிந்து கொண்ட அந்த குருநாதரும், "நீ அடைந்திருக்கும் இந்த நிலையை நானே இன்னும் அடைந்திருக்க வில்லை. அதனைத்தான் நானுமே இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். நானே அடைந்திராத ஒரு நிலையை நான் எப்படி அப்பா உனக்கு தானமாக கொடுக்க முடியும்?" என்று கேட்டார்.
அரவிந்தரும், "அப்படியானால் அந்த பராசக்தி தான் எனக்கு இந்த பாக்கியத்தை வழங்கியிருக்கிறார்" என அதனை முடித்துக் கொண்டார்.
நான் சேலம் வந்திருந்த புதிதில், நம்மை சந்திக்க வந்திருந்த அன்பர்களில் சிலர் கேரளா சுவாமி என்ற ஒருவரைப் பற்றி கூறினார்கள்.
இளம் வயதுள்ள அவர், பிராணயாமம் செய்தால் ஞானம் அடைந்து விடலாம் என எண்ணியிருந்திருக்கிறார்.
எவருடைய தொந்தரவும் இல்லாமல் பிராணயாமம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், தண்ணீர் இல்லாமல் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றினுள் இரண்டு வருடகாலம் உட்கார்ந்து பிராணயாமம் செய்திருக்கிறார்.
அவர் எதிர்பார்த்த ஞானம் அவருக்குக் கிடைக்கவில்லை.
கிணற்றை விட்டு வெளியே வந்து விட்டார். ரிஷிகேஷ் புறப்பட்டுச் சென்று அங்குள்ள மடங்களில் இருக்கும் குருநாதர்களையெல்லாம் சந்தித்தார். பல்வேறு பயிற்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டார்.
எந்தவொரு பயிற்சியின் மூலமாகவும் அவர் எதிர்பார்த்த ஞானம் அவருக்குக் கிடைத்த பாடில்லை.
ஞானத்தை அடையாமல் அவருக்கு வாழவும் பிடிக்கவில்லை. ஞானம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? இப்படி ஓர் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட இந்த வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்.
அப்படி முடிவெடுத்த அவர் அங்கிருந்த மலை பாறை ஒன்றின் மீது அப்படியே படுத்துக் கொண்டார். நல்ல வெயில். "உயிர் போகும் வரை இந்த இடத்தை விட்டு அசையக்கூடாது. இப்படியே படுத்து உயிரை விட்டுவிட வேண்டும்" என எண்ணி அப்படியே படுத்துக் கொண்டார்.
இப்போது அவருக்கு தன்னுடைய மனதை நிர்வாகம் செய்து அதனை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சி ஏதாவது இருக்குமா?
அவர் தனது மன இயக்கத்தை எதுவுமே செய்யாமல் அதன் போக்கில் அப்படியே விட்டு விட்டார்.
நிர்வாகம் செய்யப்படாத அவருடைய மனது விடுதலையுற்று இயங்க ஆரம்பித்தது.
தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை அவரும் புரிந்து கொண்டார். அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம் என்ற திருப்தியோடு ஊருக்குத் திரும்பினார்.
அவரைப் பற்றி கடைசியாகக் கிடைத்த தகவல் என்னவென்றால், "இரண்டு வருடங்கள் அந்த கிணற்றினுள் இருந்து பிராணயாமம் செய்ததன் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று பிராணயாமத்துக்கும் அதற்கும் முடிச்சு போட்டு பலருக்கும் பிராணயாமத்தையே கற்பித்து வருகிறார் என்பதையே.
இதனைப் போன்றே இன்னும் ஒருவருக்கு இத்தகைய சம்பவம் ஏற்பட்டுள்ளது . அவர் ராமகிருஷ்ண மடத்தில் சந்நியாசியாக இருந்து வந்தார். ஆன்மிக அனுஷ்டானங்கள் அனைத்தையும் முறையாக செய்து வந்தார். ஆன்மிக சாஸ்திரங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தார்.
ஆனாலும் அவர் தேடிக் கொண்டிருந்த ஞானம் கிடைத்தபாடில்லை. மடத்தில் இருந்து பிரிந்து சென்ற சந்நியாசி ஒருவர் தனியாக மடாலயம் ஒன்றை ஆரம்பித்தார்.
இவரும் அவருடன் சேர்ந்து கொண்டு ஆன்ம சாதனைகளில் ஈடுபட்டார். எதுவும் கிடைக்கவில்லை.
மனம் உடைந்த நிலையில் அங்கிருந்தும் வெளியேவந்து இன்னும் ஒரு சகசந்நியாசி வீட்டுக்குச் சென்று அவரிடம் புலம்பினார்:
"சாஸ்திரங்களைப் படித்ததெல்லாம் வேஸ்ட்; தியானங்கள் பண்ணியதெல்லாம் வேஸ்ட். இருபது வருடங்கள் வீணாகப் போய்விட்டன. எவையுமே பயன்படவில்லை."
நிம்மதியற்ற மனநிலையில் அங்கே தங்கியிருந்தார். இப்போது, தன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத் தோடு பயிற்சி முயற்சிகளில் ஈடுபடுவாறா?
தன்னுடைய மன இயக்கத்தை நிர்வாகம் செய்வதை அப்படியே விட்டு விட்டார்.
அவருடைய மனம் அதன் போக்கில் செயல்பட ஆரம்பித்தது. ஞானம் என்றால் என்ன என்பதை அவரும் கண்டு கொண்டார்.
தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532