- முருகன் சன்னதி மட்டுமா, மலை மேலேயே சிறிது தூரத்தில் முருகனின் அன்னை பத்ரகாளி அம்மன் சன்னதியும் உண்டு.
- உழவுத்தொழில் செழிக்க வேண்டி, தோரணமலை முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று வருண பூஜை நிகழ்த்தப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தோரணமலைக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தொலைவிலிருந்து பார்த்தால் இந்த மலை ஒரு யானை படுத்திருப்பதைப் போலவே தோற்றம் காட்டும்.
யானைக்குத் தமிழில் வாரணம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆயிரம் யானைகள் புடைசூழ வலம்வந்த நாரணன் நம்பி பற்றி ஆண்டாள் தனது நாச்சியார் திருமொழியில் சொல்லும்போது `வாரணம் ஆயிரம் சூழ வலம்வந்து` என்கிறாள்.
ஆக வாரணமலை என இது அழைக்கப்பட்டு, பின் அது மருவித் தோரணமலை ஆகியிருக்கலாம்.
இந்த மலையின் தென்புறத்தில் ஓடுகிறது ராம நதி. வடபுறத்தில் ஓடுகிறது ஜம்பு நதி. இந்த இரு நதிகளும் தோரணம் கட்டியதைப் போல் மலையைச் சுற்றி ஓடுவதாலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
தோரணமலைக்குச் செல்லும் பாதை பிரியும் இடத்தில், அழகிய ஒரு தோரண வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்திலேயே வல்லப விநாயகர், முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சப்த கன்னியர் போன்ற தெய்வங்களுக்கான சன்னிதிகள் உள்ளன.
1193 படிகள் உள்ள மலை இது. மலை உச்சியில் உள்ள குகைக்கோயிலில் முருகன் கிழக்குத் திசை நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறான். சுமார் ஒரு மணிநேரம் படிப்படியாக ஏறி மேலே சென்று குன்றில் வாழும் குமரனை மனமுருகிக் கும்பிட்டால், நாம் நம் வாழ்விலும் படிப்படியாக மேலே வர முருகன் அருள் புரிவான்.
முருகன் சன்னதி மட்டுமா, மலை மேலேயே சிறிது தூரத்தில் முருகனின் அன்னை பத்ரகாளி அம்மன் சன்னதியும் உண்டு.
மலைமேல் நடந்து செல்லும்போது ஏற்படும் களைப்புத் தீரச் சற்று இளைப்பாறத் தோன்றகிறதா? அதற்கு வசதியாக ஆங்காங்கே ஆறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், அவரது முதன்மைச் சீடரான தேரையர், திருப்புகழ் பாடிய அருணகிரியார், சஷ்டி கவசம் அருளிய பாலன் தேவராயன், தமிழ் மூதாட்டி அவ்வையார், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் என ஆறுபேர் பெயர்களில் அமைந்துள்ள மண்டபங்களில் சற்றே இளைப்பாறி நாம் ஆறுதல் அடையலாம்.
மலையேறிச் செல்பவர்கள் கந்தக் கடவுளை உளமார தரிசித்து இருட்டுவதற்குள் திரும்பி வர வேண்டும் என்பதால் மாலை மூன்று மணிக்குமேல் மலைமேல் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
சிவன் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடைபெற்றபோது முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கு சென்று விட்டார்கள். அதனால் வட பகுதி கனத்தால் தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. அதைச் சமன்செய்ய வேண்டுமே?
அகத்தியரைத் தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தார் சிவபெருமான். அதன்படி நடந்து பொதிகை மலைக்கு வந்து உலகைச் சமன் செய்தார் அகத்தியர்.
வந்த வழியில் அவரைக் கவர்ந்தது, மாலையென இருநதிகள் தன்னைச் சுற்றி ஓட எழிலோவியமாய்க் காட்சி தந்த தோரணமலை. தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் சித்த மருத்துவரும் கூட அல்லவா? எண்ணற்ற மூலிகைச் செடிகளைக் கொண்ட தோரணமலை அவரைக் கவர்ந்ததில் வியப்பில்லையே? அங்கேயே தங்கிவிட்டார் அகத்தியர்.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் வழிகாட்டுதலின்படி, தோரணமலையில் ஒரு மூலிகைச் சாலை அமைத்து மருத்துவ ஆய்வு மேற்கொண்டார் அகத்தியர். பின்னாளில் அவருடன் வந்து இணைந்துகொண்டார் அகத்தியரின் முதன்மைச் சிடரான தேரையர்.
தேரையரின் இயற்பெயர் ராமதேவர் என்பது. அகத்தியர், தம் சீடர் ராமதேவரின் உதவியோடு காசிவர்மன் என்ற மன்னனுக்கு முதல் மண்டையோட்டு அறுவைச் சிகிச்சை நிகழ்த்தியது இந்த மலையில்தான் என்று சொல்லப்படுகிறது.
கொட்டாவி விடும்போதோ அல்லது எவ்விதமோ சிறிய தேரைக்குஞ்சு ஒன்று மன்னன் மூளைக்குச் சென்றுவிட்டது. அது புரளும்போதெல்லாம் தாளாத வலியில் துடித்தான் மன்னன் காசிவர்மன்.
அவனுக்குத் தோரணமலை மூலிகைகளால் மயக்கம் வரவழைத்து, அவன் கபாலத்தைத் தட்டித் திறந்தார் அகத்தியர். உள்ளே தேரை தென்பட்டது.
அதை மூளையின் நரம்புகள் அறுபடாமல் எவ்விதம் எடுப்பது என அகத்தியர் திகைத்தபோது, சிறுவன் ராமதேவன் கபாலத்தின் அருகே வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து அதை விரலால் சலசலக்கச் செய்தான். அந்த ஒலிகேட்டுத் தேரை நீர்ப்பாத்திரத்தில் குதித்து வெளியேறியது.
பின்னர் திறந்த கபாலத்தைத் தோரணமலை மூலிகைகளைக் கொண்டே மறுபடி ஒட்ட வைத்தார் அகத்தியர். தேரையை வெளியேற்ற யுக்தி செய்த ராமதேவன் பின்னர் தேரையர் என அழைக்கப்படலானான்.
ஆக சித்த மருத்துவத் துறை இன்று மலையென உயர்ந்து நிற்கக் காரணம் அகத்தியர் என்கிற சித்தர். அவர் வாழ்ந்த இடமே தோரணமலை. அகத்தியரின் சீடரான தேரையர் இந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
காலப்போக்கில் இந்த மலை யாராலும் அறியப்படாமலும் வழிபாடில்லாமலும் இருந்தது. 1930-ல் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற அன்பரின் கனவில் ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டு கையில் வேலோடு மயில் வாகனத்தில் அருட்பிரகாசம் விளங்கத் தோன்றினான் முருகன். `தோரணமலை உச்சியில் ஒரு சுனையில் கவனிப்பார் இன்றிக் கிடக்கிறேனே? என்னை எடுத்து வழிபடு!` என்று ஆணையிட்டான்.
திடுக்கிட்டுக் கண்விழித்த பெருமாள், தான் கண்ட கனவுக் காட்சியிலேயே நெடுநேரம் தோய்ந்திருந்தார். அந்தக் கனவில் சொல்லப்பட்ட செய்தி உண்மைதானா என்றறிய அவர் மனத்தில் ஆவல் பிறந்தது. அதிகாலையில் தன் வேலையாட்களோடு மலை உச்சிக்குப் புறப்பட்டார்.
என்ன ஆச்சரியம்! மலையில் ஒரு சுனை இருந்தது. அது கனவில் கண்ட அதே சுனை! அப்படியானால் கனவு மெய்ப்படும். சுனையில் கட்டாயம் முருக விக்கிரகம் அகப்படும்.
நம்பிக்கையோடு சுனை நீரில் தேடச் சொன்னார் பெருமாள். வேலையாட்கள் சுனையில் பாய்ந்து நீருக்குள் மூழ்கித் தேடலானார்கள்.
சரவணப் பொய்கையில் உதித்த முருகன் அன்று அந்தச் சுனையிலும் உதித்தான். கையில் தட்டுப்பட்ட முருகன் கற்சிலையைக் கவனமாக எடுத்துவந்த வேலையாட்கள் அதைச் சுனைக் கரையில் வைத்துப் பரவசத்தோடு கீழே விழுந்து வணங்கினார்கள். தங்கள் எசமான் கண்ட கனவு நனவானது பற்றி அவர்கள் ஆனந்தத்தில் திளைத்தார்கள்.
சுனைக்கரையில் வெயிலிலும் மழையிலும் முருகன் வாடலாமா? சுற்றுமுற்றும் பார்த்த பெருமாள் அருகே ஒரு குகை தென்பட்டதைக் கண்டார். முருகனை மார்போடு அணைத்து எடுத்துக் கொண்டு குகைக்குள் சென்று கிழக்கு முகமாக முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்தார். முருகப் பெருமான் மகிழ்ச்சியோடு அங்கே நிலைகொண்டான்.
செய்தியறிந்து வியந்து மலையருகே உள்ள முத்துமாலை புரத்தைச் சேர்ந்த மக்களெல்லாம் வந்தார்கள். குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் தங்கள் ஊரின் அருகேயுள்ள குன்றிலும் குடியிருக்க வந்துவிட்டானே? மக்கள் பக்தியுடன் முருகனை தரிசித்து வழிபடலானார்கள்.
மெல்ல மெல்ல அக்கம்பக்கம் உள்ள மக்கள் மனத்திலெல்லாம் அந்த முருகன் ஆட்சி செய்யத் தொடங்கினான். ஆலயம் வளரத் தொடங்கியது.
முருகனைக் கண்டெடுத்த பெருமாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிவழியாக தோரணமலை முருகனை வழிபடத் தொடங்கினார்கள். அவர்களே அந்தக் கோவிலை நிர்வாகம் செய்தார்கள்.
தோரணமலை முருகன் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் அந்தக் கோயிலை நிர்மாணித்த பெருமாளின் வழிவந்த ஆதி நாராயணன் ஆவார். 55 ஆண்டுகள் தோரணமலை முருகனுக்குத் தொண்டு செய்த கே.ஆதிநாராயணன் தோரணமலை அடிவாரத்தில்தான் தங்கியிருந்தார்.
அவர் தங்கியிருந்த அறை தற்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் நாலாயிரம் நூல்களைக் கொண்ட நூலகமாக இயங்கி வருகிறது. கே. ஆதிநாராயணன், சந்திரலீலா தம்பதி வாழ்ந்த முத்துமாலைபுரம் கிராமத்து வீடு மாணவ மாணவியர்க்கான மாலை நேரக் கட்டணமில்லாப் படிப்பகமாக இயங்குகிறது.
ஆலயத்தைத் தற்போது நிர்வகித்து வரும் அன்பர் செண்பகராமன், பெருமாளின் வழித்தோன்றல்தான்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றும், உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றும் சொல்கிறது வள்ளுவம். `உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்` என்கிறார் மகாகவி பாரதியார்.
உழவுத்தொழில் செழிக்க வேண்டி, தோரணமலை முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று வருண பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருண பூஜையின்போது பற்பல அன்பர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்து கொள்கிறார்கள்.
திருவண்ணாமலை கிரிவலம் போல் இங்கும் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. கிரிவலத்திலும் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு பயனடைகிறார்கள்.
தோரணமலை முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தன்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்வு நடத்தப்படுகிறது. அதைக் காணக் கண்கோடி வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் அமைந்து உள்ளது தோரணமலை. தென்காசியிலிருந்து கடையம், அம்பாசமுத்திரம், பாபநாசம், நாகர்கோயில் செல்லும் பேருந்துகள் தோரணமலை வழியாகச் செல்கின்றன. (தோரணமலை தொடர்பான விவரங்களுக்கு: 99657 62002, 76959 62002)
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com