சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்... உல்லாச பயணத்துக்கு வேட்டு

Published On 2025-02-03 22:37 IST   |   Update On 2025-02-03 22:37:00 IST
  • ஓய்வு இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்ததால் மே மாதம் மட்டும் 10 நாட்கள் ஓய்வு எடுப்பேன்.
  • மே மாதத்தை தேர்வு செய்ததற்கு மற்றொரு காரணம்.

'டிரீம்ஸ்'

என்னை வைத்து அந்த படத்தை எடுக்க வேண்டும் என்பது மலையாள பட உலகின் டிரீம் (கனவு). அந்த கனவை நிறைவேற்ற நானே நடித்தேன்.

ஆனாலும் என்னுடைய கனவு அப்போது வேறு விதமாக இருந்தது. அதாவது மே மாதத்தில் கால்ஷீட் கேட்கிறார்கள் எப்படி கொடுப்பது?.

அதாவது எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. வருடம் முழுவதும் ஓய்வு இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்ததால் மே மாதம் மட்டும் 10 நாட்கள் ஓய்வு எடுப்பேன். அந்த நாட்களில் அப்பா அம்மாவோடு வெளிநாடு சுற்றுலா சென்று விடுவேன்.

அதற்கு மே மாதத்தை தேர்வு செய்ததற்கு மற்றொரு காரணம். அந்த காலகட்டம் நமக்கு கோடை காலமாக இருக்கும். வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும் வசதியாக இருக்கும் என்பதால் அந்த நாட்களை தேர்வு செய்வேன். அப்படித்தான் படங்களுக்கு கால்ஷீட்டை கொடுத்து 10 நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராக இருந்தேன்.

டிரீம்ஸ் படத்தில் சுரேஷ்கோபி ஜோடி ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடிக்க வேண்டி இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதியும் கொடுத்து விட்டார்கள். எனவே குறிப்பிட்ட நட்களுக்குள் அதில் நடித்து கொடுக்க அணுகினார்கள். நான் அந்த நாட்களில் முடியாது என்று கூறி விட்டேன்.

ஆனாலும் சில நாட்கள் கழித்து அந்த பட தயாரிப்பாளர் என்னை தேடி வந்தார். 'மேடம், உங்களை தவிர வேறு யாரையும் இந்த பாத்திரத்துக்கு எங்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. பிளீஸ் எப்படியாவது சில நாட்கள் தாருங்கள் என்றார்.


நான் வாய்ப்பே இல்லை என்றதும் கண்கலங்கி அழுது விட்டார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் அவரது வருத்தத்தை வெளியே காட்டி விட்டார். ஆனால் நான் மனதுக்குள் அழுதேன். இந்த 10 நாள்தான் ஓய்வு கிடைக்கும். அதை கூட ஒழுங்காக அனுபவிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் நானும் அழாத குறைதான்.

சூழ்நிலையை பார்த்து அம்மா பந்தை என் பக்கம் தள்ளிவிட்டார். தயாரிப்பாளரை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனாலும் நான் உன்னை வற்புறுத்தவில்லை. நீ என்ன சொல்கிறாயோ அது தான் முடிவு என்றார். நான் வேறு வழியில்லாமல் 3 நாட்கள் வேண்டுமானால் தருகிறேன் என்றேன். அதை கேட்டதும் தயாரிப்பாளருக்கு ஏக சந்தோசம். ஆனால் எனக்கு விடுமுறை நாட்களில் 3 நாட்கள் பறிபோய்விட்டதே என்ற கவலை.

சென்னையில் வாஹினி ஸ்டுடியோவில் காட்சிகள் படமாக்கப்பட்டன. சுரேஷ் கோபியுடன் ஆடிய டூயட் பாடலான 'மணிமுத்து தாவணி பந்தல்...' பாடலை ஜேசுதாஸ், சுஜாதா பாடி இருந்தார்கள். மலையாளத்தில் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

முடியாது என்று தவிர்க்க நினைத்த படம் எனக்கு மிகப்பெரிய பெயரை தேடித்தந்தது. நான் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து கொடுத்து விட்டு திட்டமிட்டபடி டூர் கிளம்பி விட்டேன். திட்டமிட்டதை விட குறைவான நாட்களே உல்லாச பயணம். 10 நாட்களில் இத்தாலியில் உள்ள 3 நகரங்களை பார்க்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 3 நாட்கள் குறைந்தால் மிலன் நகரை மட்டும் பார்க்க முடியாமல் ஆகி விட்டது.

ஆனாலும் உற்சாக பயணமாகவே அமைந்தது. ஊர் திரும்பியதும் வழக்கம் போல் தீவிர படப்பிடிப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று 3 மொழிகளிலும் படங்கள் கையில் இருந்தன. இதனால் உட்கார்ந்து பேசக்கூட நேரம் இருக்காது.

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருந்தாலும் குடும்பத்தில் அப்பா-அம்மாவுக்கு பிள்ளைதானே. குறிப்பிட்ட வயதில் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கத்தானே எல்லா பெற்றோர்களும் ஆசைப்படுவார்கள்.


இதில் மீனா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வீட்டில் பலமுறை திருமண பேச்சை எடுத்த போதெல்லாம் 'சும்மா இரும்மா,

அதுக் கெல்லாம் உட்கார்ந்து பேச எனக்கு நேரமில்லை. ஆளை விடு' என்று நழுவி வந்தேன்.

ஆனால் 2008-ம் ஆண்டுகளில் ரொம்ப தீவிரமாகவே மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் இறங்கி விட்டார்கள். அவர்கள் ஒரு பக்கம் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தாலும் நான் படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தேன்.

மாப்பிள்ளை பட்டியலில் பலர் வந்திருக்கிறார்கள். ஆனால் தன் பொண்ணு மீனாவுக்கு தகுந்த மாப்பிள்ளை யார் என்பதை அம்மாவும், அப்பாவும் தேடி இருக்கிறார்கள்.

வயது, குணம், குடும்ப பின்னணி எல்லாம் ஓ.கே.வாக இருக்கும்.

ஆனால் ஜாதகம் பொருந்தியிருக்காது. இப்படி ஏதாவது ஒன்று சரியில்லை என்று பலரை நிராகரித்த நிலையில் 'அந்த ஒரு' வரன் மட்டும் அம்மா-அப்பாவின் பார்வையில் மட்டுமல்ல இதயத்திலும் இடம் பிடித்து இருந்தார். அவர்களுக்கு பிடித்தாலும் நான் ஓ.கே. சொல்ல வேண்டும் அல்லவா...? மாப்பிள்ளை பற்றிய விபரங்களை என்னிடம் கொண்டு வந்தார்கள். 'நீயே பார்த்து முடிவு செய்யேம்மா...' என்றேன். நான்!

ஏய், உன் வாழ்க்கை, உனக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்கும். நீயும் பார்த்து முடிவு செய்யணும்'-அம்மா. அதற்கு மேல் அம்மாவிடம் எதுவும் பேச முடிய வில்லை. நான் என்ன முடி வெடுத்தேன்...?

என் மனம் கவர்ந்தாரா அந்த மணாளன்?

அடுத்த வாரம் சொல்கிறேன்...!

(தொடரும்...)

Tags:    

Similar News

ஞான மலர்வு